கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்த கருண்!

Monday, December 19, 2016

யார் இந்த கருண் நாயர்? மொஹாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கியவர். அந்தப் போட்டியிலும், அதற்கடுத்து நடந்த மும்பை டெஸ்ட் போட்டியிலும் அவர் பெரிதாகச் சோபிக்கவில்லை. ஆனாலும், அவர் மீதான நம்பிக்கையை கேப்டன் கோஹ்லியும் பயிற்சியாளர் கும்ப்ளேவும் கைவிடவில்லை.

அதன் பலனாக, சென்னையில் நடைபெற்றுவரும் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் களம் கண்டிருக்கிறார் கருண். இன்று காலையில் கன்னி சதம் கண்டு, அணியையும் ரசிகர்களையும் ஒருசேர மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கிறார். 

கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட கலாதரன் - பிரேமா தம்பதியரின் மகன் கருண். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர். கர்நாடகாவில் வளர்ந்தவர். இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மெல்ல தலையெடுத்துவரும் இளைய தலைமுறை இளைஞர்களில் ஒருவர். அதற்குக் காரணமாக விளங்கும் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர். 

ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2013ம் ஆண்டு நுழைந்தவர் கருண் நாயர். அடுத்த ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பாகக் களமிறங்கியபோதுதான், கருணின் திறமை சற்று மேம்பட்டது. அங்குதான், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் மற்றும் டிராவிட்டின் அறிமுகமும் கிடைத்தது. அதன்பிறகு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பெரிதாகத் தனது திறமையை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், ஐ.பி.எல். அணி நிர்வாகங்களின் பார்வை அவர் மீதிருந்து விலகவில்லை. இடைப்பட்ட காலத்தில், ரஞ்சி போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்தார். இதனால்தான், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் கருண். 

இதன் தொடர்ச்சியாகத்தான், கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் களம் கண்டார்; யார் கவனிப்பையும் பெறாத அளவில் ஸ்கோர் எடுத்தார். கோஹ்லி மற்றும் சக அணியினரின் அற்புதமான ஆட்டத்தின் காரணமாக, அந்த வேளையில் கருண் மீது காட்டமான விமர்சனப் பார்வை ஏதும் விழவில்லை. ஆனால், தொடர்ந்து மூன்றாவது டெஸ்டில் களமிறங்கிய கருண், தற்போது 200 ரன் கடந்து விளையாடி வருகிறார். சரியாகச் சொல்வதானால், அஜிங்கிய ரஹானேவின் இடத்தில் விளையாடி வருகிறார் கருண். இதன் மூலம், இந்திய கேப்டன் விராத் கோஹ்லியின் நன்மதிப்பை பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். காரணம், அடுத்த பத்தாண்டுகளுக்கான நம்பர் 1 டெஸ்ட் அணியைத் தயார் செய்து வருகிறார் கோஹ்லி. அதில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் கருணுக்கு இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது சென்னை டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது ஆட்டம். 

இந்தப் போட்டியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஜெயந்த் யாதவ், கே.எல்.ராகுல், இஷாந்த்சர்மா என்று பல வீரர்களை சுழற்சி முறையில் தான் பயன்படுத்தி வருகிறார் கோஹ்லி. அந்த நிலைமை கருணுக்கும் ஏற்படலாம். ‘ஆடும் லெவனில் எல்லோருமே சோபிக்க வேண்டும்’ என்கிற கோஹ்லியின் பரீட்சார்த்த முயற்சி இதன் பின்னிருக்கிறது. அதனால், கருண் கவலைகொள்ளத் தேவையில்லை.

கருண், அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தயாராக வேண்டும். ஏற்கனவே ஜிம்பாப்வேயில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் இருந்தாலும், உங்களது இடத்தை உறுதிசெய்ய வேண்டிய தருணம் இது. வரும் ஜனவரியில், இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடுவதன் மூலம் அந்த வாய்ப்பு கிடைக்கலாம். கிடைத்த வாய்ப்பை இதேபோலக் கெட்டியாகப் பிடியுங்கள்; பின்னிப் பெடலெடுத்துவிடுங்கள் கருண்..!!

பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles