ஈகோவை கழட்டி வெச்சிட்டு வொர்க் பண்ணணும் - ‘உள்குத்து’ பற்றி பேசும் இயக்குநர் கார்த்திக் ராஜு

Friday, July 29, 2016

“எங்கப்பா ராஜு, மதுரை காமராஜர் பல்கலைகழகத்துல என்.எஸ்.எஸ் டிப்பார்ட்மென்ட் டைரக்டரா இருந்தாரு. தன்னோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களையெல்லாம், சின்னச் சின்ன கதைகளா எழுதியிருக்காரு. அதுல ஒரு கதை, ஸ்கூல்ல மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான நட்பைப் பேசும். அந்தக் கதைதான், ‘திருடன் போலீஸ்’ படத்துக்கான இன்ஸ்பிரேஷன்” என்று நம் கண்களைப் பார்த்து கூர்மையாகப் பேசுகிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு. கிராஃபிக்ஸில் இருந்து செல்லுலாய்டுக்கு மாறியவர் இவர். கோலிவுட் தயாரிப்பாளர்களின் கவனப்பட்டியலில் இடம் பிடித்துள்ளவரிடம் பேசியபோது...
 

“பொதுவா, சினிமா மேல எல்லாருக்கும் ஒரு கிரேஸ் இருக்கும். என்னதான் அமெரிக்காவுல பெரிய சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருந்தாலும், ரஜினி சார் படம்னா தியேட்டர்ல டிக்கெட்டை கிழிச்சிப்போட்டு சந்தோஷமாயிடுவோம் இல்லையா! அப்படித்தான், சினிமா மேல எனக்கும் ஆர்வம் வந்துச்சு. 1998ல் பென்டாபோர் நிறுவனத்துல, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்ல என்னோட கெரியரை ஆரம்பிச்சேன். முதல் படம், ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’. அப்புறம் ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘தசாவதாரம்’, ‘சந்திரமுகி’, ‘அந்நியன்’, ‘சச்சின்’, ‘போக்கிரி’ எனப் பெரும்பாலான படங்களுக்கு வேலை செஞ்சிருக்கேன்.

 

அந்த நேரங்கள்ல, சி.ஜி வேலைக்காக ஷுட்டிங் ஸ்பாட்டுக்குப் போவோம். டபுள் ஆக்ஷன் ரோல்ல ஒருத்தர் நடிக்கணும்னா, அதுக்காக எப்படி ஷுட் பண்ணணும் என்பதை நாங்கதான் சொல்லித் தர வேண்டியிருக்கும். அப்பதான் கிராஃபிக்ஸ் பண்ணும்போது, கட் அண்ட் பேஸ்ட் ஈஸியா இருக்கும். அப்படி தொடர்ச்சியா படப்பிடிப்புத் தளத்துக்குப் போக ஆரம்பிச்சதும், சினிமா மேல ஈர்ப்பு வந்துடுச்சு. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்ல வேலைபார்த்துக்கிட்டே, நைட்ல சுஜாதா எழுதின ‘திரைக்கதை வசனம் எழுதுவது எப்படி?’ புத்தகத்தை படிச்சிக்கிட்டு இருப்பேன். அப்புறம் அதுல சொன்னமாதிரி திரைக்கதைகள் எழுதிப் பார்த்தேன். அப்படித்தான் டைரக்டராகவும் ப்ரொமோஷன் பெற்றேன். 

 

பொதுவா நம்ம வீடுகள்ல அம்மாவோட கஷ்டங்களையும் கண்ணீரையும் பார்த்திருக்கோம். ஆனா, அப்பாவோட கண்ணீரை யாராவது பார்த்திருக்கோமா? அப்படி, அப்பாக்களோட கண்ணீர் பக்கங்களைத் திரையில சொல்லணும்னு நினைச்ச படம்தான் ‘திருடன் போலீஸ்’. அப்பாவை விரும்பாத பையனுக்கு, அவரோட வேலை கிடைச்சா, அவரோட பிரச்னைகள் புரிய வந்தா, அவரை நேசிப்பான்கிற அவுட்லைனோட, திரைக்கதையை எழுதினேன். இது என்னோட அப்பாவோட வாழ்க்கைதான். அதுல என்னோட சில பகுதிகளும் இருக்கு! 

 

‘திருடன் போலீஸ்’ படத்தை ஒரு கான்ஸ்டபிள் வாழ்க்கையை மையமாவெச்சுதான் எழுதினேன். காலையில, அவசரமா நாம ஆபிஃஸுக்கு ஓடிக்கிட்டு இருப்போம். அவசரத்துல தலையில ஹெல்மெட்கூட இல்லாம பைக் ஓட்டுவோம். வழியில போலீஸைப் பார்த்தா ஜெர்க் அடிச்சு, இடது வலது பக்கமா வண்டியைத் திருப்புவோம். ஆனா அவங்களைப் பார்த்தீங்கன்னா, உச்சிவெயில்ல கால்கடுக்க நின்னுக்கிட்டு
இருப்பாங்க. அவங்க வாழ்க்கையிலும் ஆயிரம் பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கும். எதையும் வெளிக்காட்டிக்காம வாழ்ந்திட்டு இருப்பாங்க. 

 

அப்படியான ஒரு கான்ஸ்டபிள் வாழ்க்கையைக் காட்டணும்னு நினைச்சபோது, முதல்ல மனசுல வந்து நின்னது தினேஷ்தான். ‘அட்டக்கத்தி’ படத்துல நடிச்சதிலிருந்தே, எனக்கு அவரைப் பிடிக்கும். தயாரிப்பாளர்கிட்டே சொன்னபோது, அவங்களும் சம்மதிச்சாங்க. தினேஷ்கூட வொர்க் பண்றது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். ஒண்ணுக்கு நாலுவாட்டி தன்னோட பாத்திரத்தை நல்லா உள்வாங்கிட்டு நடிப்பாரு. அஞ்சாறு ஆப்ஷன் கொடுத்து, ஸ்பாட்டுல நடிச்சுக் காட்டுவாரு. அப்படித்தான் அவர்கிட்டே அடுத்த கதையையும் சொன்னேன். ‘பண்ணலாமே பிரதர்...’னு சொன்னாரு. அதுதான், இப்போ ‘உள்குத்து’ படமா உருவாகியிருக்கு! 

 

பொதுவா, எல்லோரும் பேசுற வார்த்தைதான் உள்குத்து. முன்னால ஒண்ணு பேசிக்கிட்டே பின்னால குத்தறதுதான். அதை மையமாவெச்சுதான் கதையை எழுதியிருக்கிறேன். அடுத்த காட்சி என்னன்னு தீர்மானிக்க முடியாத மாதிரி, திரைக்கதை அமைச்சிருக்கேன். நாகர்கோவில் பக்கத்துல முட்டம் என்கிற கிராமத்தைக் கதைக்களமா தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். இந்தப் படத்துல தினேஷ், நந்திதா காம்பினேஷன் நல்லா வந்திருக்கு.

 

படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடிதான், ஃபோன்லயே நந்திதாகிட்ட கதையைச் சொன்னேன். கேட்டுட்டு ஒ.கே சொன்னவங்க, பூஜை அன்னிக்குத்தான் வந்தாங்க. ஷுட்டிங் அப்போ எல்லோர்கிட்டேயும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா, எந்த ஈகோவும் இல்லாமப் பழகினாங்க. கேரவன்ல இல்லாம, எப்போதும் ஸ்பாட்டுலேயே இருப்பாங்க. இந்தப் படத்துல அவங்களோட பங்களிப்பு ரொம்ப முக்கியமானது! 

 

‘உள்குத்து’ படத்துல வேலைபார்த்திருக்கிற எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுமே, இந்தப் படத்தோட வெற்றிக்கு உதவியிருக்காங்க. குறிப்பா, ‘ஃபோர் ஃபிரேம்ஸ்’ உதயகுமாரைப் பற்றி சொல்லணும். ஒரு படத்துல ரொம்ப முக்கியமான விஷயம்... மிக்ஸிங். அதைப் பற்றி, இங்கே யாரும் பேசவே மாட்டேங்கிறோம். டப்பிங், சவுண்ட் எஃபெக்ட்ஸ், மியூசிக் என ஒவ்வொன்றையும் வேறவேற இடத்திலே பண்றோம். எல்லாத்தையும் சரியான அளவுல சேர்க்கிற இடம் மிக்சிங்தான். அந்த ஏரியாதான், சினிமாவுல ஃபைனல் அவுட்புட் வர்ற இடம். ரொம்ப கேர்ஃபுல்லா இருக்க வேண்டிய ஏரியா. 

 

“இந்த இடத்துல மியூசிக் இல்லாம சைலன்ட்டா விட்டா நல்லாயிருக்குமே...”னு உதயகுமார் சொல்லுவாரு. அப்படி அவர் சொல்ற இடங்கள், நாம மறுக்க முடியாத அளவுக்குச் சரியா இருக்கும். அந்த வகையில, ‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ரெண்டு படத்திலேயும் அவரோட வழிகாட்டுதல் நல்லா இருந்துச்சு. ஒரு டைரக்டர் தன்னோட ஈகோவை கழட்டிவெச்சிட்டு வேலை பார்க்கணும்ங்கிறதை, உதயகுமார் சாரோடு பழகும்போதுதான் புரிஞ்சுக்கிடடேன். அது சரி, சினிமா என்பதே டீம் வொர்க்தானே!” சொல்லிவிட்டு, நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார் கார்த்திக் ராஜூ! 

அடுத்தது

Related Articles