ரஜினியுடன் நடிக்க வேண்டும்! அமீர்கான் விருப்பம்! 

Thursday, December 22, 2016

'தாரே ஜமீன் பார்', '3 இடியட்ஸ்', 'பிகே' போன்ற திரைப்படங்கள், மொழி என்ற ஒன்றைத் தாண்டி எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளையடித்தது. அது மட்டுமின்றி, உலகம் முழுவதுமிருக்கும் திரை ஆளுமைகளின் கவனத்தை அதிகளவில் ஈர்த்த பெருமை இந்த திரைப்படங்களுக்கு உண்டு. இவை அனைத்திற்கும் ஆணி வேராக இருந்தவர் -  அமீர்கான். 

தற்போது அமீர் தயாரித்து நடித்திருக்கும் தங்கல் திரைப்படம், தமிழில் 'யுத்தம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நாளை (டிசம்பர் 23-ஆம் தேதி) வெளியாகிறது. யுடிவி மோஷன் பிச்சர்ஸ் வெளியிடும்  'யுத்தம்' (தங்கல்) திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் நிதேஷ் திவாரி. இதனை வரவேற்க, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

அமீர்கான், சாக்‌ஷி தன்வர், பாத்திமா சனா ஷாயிக், சான்யா மல்ஹோத்ரா, சாய்ரா வசிம், சுஹானி பட்னாகர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தலைசிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் சேட்டு, இசையமைப்பாளர் பிரீத்தம் மற்றும் படத்தொகுப்பாளர் பல்லு சலுஜா உள்ளிட்டோர் பணியாற்றி இருப்பது, 'யுத்தம்' (தங்கல்)  திரைப்படத்தை மேலும் சிறப்புக்குரியதாக்கி இருக்கிறது. 

இப்படம் குறித்து நடிகர் அமீர்கான் பேசும்போது, 

"அன்பிலும், அரவணைப்பிலும் உருவாகி இருக்கிறது எங்களின்  'யுத்தம்'. ஆண், பெண் இருவருமே சமம் என்பது தான் படத்தின் கரு. நம் இந்திய நாட்டில் ஏராளமான, திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஈடு இணையாக, எந்தவிதத்திலும் குறைவின்றி விளையாட்டு வீராங்கனைகள் உதயமாக வேண்டும்; உதயமாவார்கள். விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை, 'யுத்தம்' போன்ற திரைப்படங்கள் அவர்களின் உள்ளத்தில் விதைக்கும். 'தாரே ஜமீன் பார்', 3 இடியட்ஸ்' போன்ற தரமான திரைப்படங்களின் வரிசையில்  'யுத்தம்' (தங்கல்)  திரைப்படமும் இடம்பெறும்!

 

இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்த இந்தப் பெண்களோடு இணைந்து பணியாற்றியது, எனக்கு புதுவித அனுபவம். அவர்களிடம் இருந்து, நான் ஏராளமானவற்றை கற்றுக்கொண்டேன் என்பது தான் உண்மை. இளம் வயதில் இந்த பெண்கள் நடிப்பில் சோபிப்பதைப் பார்க்கும்போது, என்னுடைய 27 வருட அனுபவம்  சிறியதாகி விடுகிறது. என்னுடைய மகள் 'அய்ரா' ஒரு கால்பந்து வீராங்கனை என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. என் மகள் நடிப்பில் ஆர்வம் கொண்டு, திரையுலகில் கால் பதித்தால், நான் மேலும் மகிழ்ச்சி அடைவேன்!

 

ஒரு திரைப்படத்தின் கதையைக் கேட்கும்பொழுது, எப்பவுமே ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பேன். அப்போது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். நடிப்பிற்கு மொழி அவசியமில்லை. எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பது என் அபிப்ராயம். தமிழில் ரஜினிகாந்த் சாருடனும், தெலுங்கில் சிரஞ்சீவி சாருடனும் நடிக்க எனக்கு ஆசை!" என்றார்.

அடுத்த ஹிட் காம்பினேஷன் ரெடி..?!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles