தமன் இசையில் அனிருத்தின் ‘ரங்கு ரக்கர’!

Wednesday, December 21, 2016

ஒரு ஹீரோ வேறொரு ஹீரோவின் படத்தில் பாடுவது, இசையமைப்பது, இயக்குவது என்று வித்தியாசமான காம்பினேஷன் அவ்வப்போது தமிழ்சினிமாவில் நிகழும். அது ரசிகர்களின் கவனிப்பையும் பெறும். தற்போது அந்த ட்ரெண்ட் உச்சத்தில் இருக்கிறது. இதன் விளைவாக, ஒரு இசையமைப்பாளர் வேறொரு இசையமைப்பாளரின் இசையில் பாடுவதும் சில மாதங்களாகவே பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில், எஸ்.எஸ்.தமனுடன் கைகோர்த்திருக்கிறார் அனிருத். 

இந்த ஆண்டு, பி.வாசு இயக்கிய ‘சிவலிங்கா’ என்ற கன்னட திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவராஜ்குமார், வேதிகா நடித்துள்ள இப்படம், தமிழிலும் அதே பெயரில் தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடித்துவரும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இதன் பர்ஸ்ட்லுக் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. 

’சிவலிங்கா’ படத்திற்கு இசையமைக்கிறார் எஸ்.எஸ். தமன். இப்படத்திற்காக, பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள ஒரு பாடலை, தமன் இசையில் பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். ’ரங்கு ரக்கர’ என்று தொடங்கும் இந்தப்பாடல் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று, இப்போதே சத்தியம் செய்கின்றனர் நெட்டிசன்கள். 

டி.இமான், சந்தோஷ் நாராயணன், நிவாஸ் பிரசன்னா, விஷால் சந்திரசேகர், ஏ.ஆர்.ரஹ்மான் என்று எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வருகிறார் அனிருத். அவரது இசையமைப்பைப் போலவே, அவர் பாடும் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில், ‘ரங்கு ரக்கர’வும் விரைவில் இடம்பெறலாம்!

- ஜென்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles