சிரிக்கவும் சிந்திக்கவும் வேண்டுமா? ‘ஜாலி எல்.எல்.பி. 2’ பாருங்க!

Monday, December 19, 2016

மருந்தை சர்க்கரைப்பாகுடன் கலந்து கொடுத்தால், எந்த ஒரு நோயாளியும் முகம் சுளிக்காமல் சுவைப்பர். இந்த உண்மையை அடிப்படையாக வைத்து, அவ்வப்போது பாலிவுட்டில் அற்புதமான சினிமாக்கள் வெளியாகும். அந்த வகையில், இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் பாணியில் ‘ஜாலி எல்.எல்.பி.’ என்ற படத்தைத் தந்தவர் சுபாஷ் கபூர்.

இந்த படம்தான், உதயநிதி ஸ்டாலின் நடிக்க ‘மனிதன்’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. தற்போது, அதே கலயத்தில் புதிய கள்ளை நிரப்பித் தர வந்திருக்கிறார் சுபாஷ். அதாகப்பட்டது, ‘ஜாலி எல்.எல்.பி.’யின் 2ம் பாகத்தை இயக்கியிருக்கிறார் மனிதர். 

’நியாயம் வேண்டும், கிடைக்குமா?’, உலகின் ஏதாவதொரு பகுதியில் எப்போதும் இந்தக் கேள்வி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கான பதில் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, இங்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் அநியாயம் தோன்றிய காலம் முதலே நடந்து வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஜாலியாக ஒரு படத்தை இயக்கினார் பாலிவுட்டைச் சேர்ந்த சுபாஷ் கபூர். அதுதான் ஜாலி எல்.எல்.பி. திரைப்படம்.

’முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படத்தில் சர்க்யூட்டாக வருவாரே, அதே அர்ஷத் வர்சிதான் இதன் நாயகன். இந்தப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடந்தபோது, உப்புமாப்படம் ரேஞ்சுக்கே பீல் செய்தது பாலிவுட் உலகம். ஆனால், அவர்களது கணிப்புகளை தூள்தூளாக்கினார் சுபாஷ். யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒட்டுமொத்த பாராட்டைக் குவித்தது ஜாலி எல்.எல்.பி. திரைப்படம். 

கண்ணாடி அணிந்த நீதிபதி அமர்ந்திருக்க, அவரது எதிரே இரண்டு வழக்கறிஞர்கள் நின்றுகொண்டு ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்று பேசியதைத்தான் நாம் சினிமாக்களில் கண்டிருக்கிறோம். இல்லையென்றால், நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் செண்டிமெண்டை பிழியப்பிழியத் தரும் சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். அதனால் காயப்பட்ட நம் மனதைச் சாந்தப்படுத்த, நீதிமன்ற வளாகத்தில் உலாவும் யதார்த்தத்தைப் பிரதிபலித்தார் சுபாஷ். 

’நீதிமன்றத்தில் ஒரு வழக்கையாவது எடுத்து நடத்திவிட மாட்டோமா’ என்று துடிக்கும் ஒரு இளம் வழக்கறிஞனின் வாழ்வைச் சொன்னது, அவனது கனவைச் சொன்னது. எது நியாயம் என்பதை, அந்த பாத்திரத்தின் வழியாக ரசிகர்களுக்குக் கடத்தியது. அதே வேலையை மீண்டுமொரு செய்ய வருகிறது ‘ஜாலி எல்.எல்.பி. 2’. இந்தப்படத்தில் ஜாலி வக்கீலாக அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் அக்‌ஷய்குமார். காமெடி, ஆக்‌ஷனில் கெட்டிக்காரரான இவர், கடந்த ஆண்டு வெளியான ஏர்லிப்ட், ரஸ்டம் போன்ற படங்களில் யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருப்பார். எனவே, இந்தப்படத்திலும் அவர் அதகளப்படுத்துவார் என்ற எதிர்பார்க்கின்றனர் பாலிவுட் ரசிகர்கள். 

ஜாலி எல்.எல்.பி.யின் முதல் பாகத்தில் பொமன் இரானி வில்லனாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் அன்னுகபூர் வில்லனாக வருகிறார். கூடவே சவுரப் சுக்லா, ஹ்யூமா குரேஷி என்று நடிப்புப்பட்டாளமே இந்தப்படத்தில் இருக்கிறது. வரும் பிப்ரவரியில் வெளியாகும் இந்தப்படத்தின் ட்ரெய்லர், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பொழுதுபோக்காக மட்டும் இராமல் கொஞ்சம் புத்தியையும் உரச வேண்டியது ஒரு சிறந்த படைப்பின் வேலை. அந்த வரிசையில், ‘ஜாலி எல்.எல்.பி. 2’ நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்று நம்பலாம். 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles