மந்திராலயம் - நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி - சுபா (காஷ்யபன்)

Friday, September 1, 2017

நிறைந்த மனதுடனும், நெஞ்சில் நிம்மதியுடனும் பிருந்தாவன வளாகத்தை விட்டு வெளிப்பட்டோம். அடுத்து நவபிருந்தாவன தரிசனம்தான் என்றாலும் மந்திராலயத்திலேயே நாம் தரிசிக்க வேண்டிய இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. ஒன்று ஸ்ரீ ராகவேந்திரர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீ வேங்கடாஜலபதி ஆலயம்.  மற்றொன்று பஞ்சமுகி ஆஞ்சநேயர் ஆலயம்.

வேங்கடாஜலபதி ஆலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது. இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து  செல்ல வேண்டும். மந்திராலயத்தில் யாரைக் கேட்டாலும் வழி காட்டுவார்கள். ஊர் மக்கள் காட்டிய பாதையில் நடந்தோம். மேடு பள்ளங்கள் நிறைந்த மண் சாலைகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் சாணி நீர் தெளித்து கோலம் போட்டிருந்தார்கள். சில வீட்டு வாசல்களில் பாத்திரம் கழுவினார்கள். துணி துவைத்தார்கள். சில வீட்டு வாசல்களில் தளைகளில் மாடுகள் கட்டப்பட்டிருந்தன. ஆடுகள் சுதந்திரமாகத் தழைகளை மேய்ந்து கொண்டிருந்தன. அச்சு அசலான ஆந்திர கிராமம் ஒன்றின் தெருக்களினூடே ஒரு வித்தியாசமான அனுபவம். 

பத்து நிமிடத்துக்குள் ஆலயத்தை அடைந்து விட்டோம். சின்னஞ்சிறு ஆலயம். சன்னிதி பூட்டப்பட்டிருந்தாலும், திறந்திருந்தாலும் வேங்கடாஜலபதியை தரிசிக்கலாம். சன்னிதியில் எரிந்த திருவிளக்கின் தங்க வெளிச்சத்தில் வேங்கடாஜபதி தேஜசுடன் காட்சி அருளினார். ஊர் மக்கள் பிருந்தாவன தரிசனத்துக்குச் செல்கிறார்களோ இல்லையோ வேங்கடாஜலபதி தரிசனத்துக்குத் தவறாமல் வருகிறார்கள். 

தீர்த்தம், சடாரி, துளசிப்பிரசாதம் சகிதம் வேங்கடாஜலபதி தரிசனத்தை முடித்துக் கொண்டோம். 

அடுத்து நாம் தரிசிக்க இருப்பது பஞ்சமுகி ஆஞ்சநேயர் ஆலயம். மந்திராலயத்திலிருந்து சுமார் இருபத்தோரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பஞ்சமுகி ஆலயத்துக்கு அரசுப் பேருந்துகள் செல்கின்றன. தவிர ஆட்டோவிலும், காரிலும் செல்லலாம்.  ஆனால் நாங்கள் சென்ற சமயத்தில் துங்கபத்ரா நதியின் மீது போடப்பட்டிருந்த பாலம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் பேருந்துகளோ, ஆட்டோக்களோ, கார்களோ பாலத்தின் மீது செல்ல இயலாத சூழ்நிலை. 

‘அடடா… அப்படியெனில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லவே முடியாதா’ என்ற ஏக்கம் எங்கள் நெஞ்சில் கிளர்ந்து எழுந்த வேளையில் ஊர்க்காரர் ஒருவர், ‘பரிசலில் துங்காவைக் கடந்தால், எதிர்க்கரையில் இருந்து ஆட்டோவில் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வரலாம்’ என்று நல்வாக்கு அருளினார். அவர் வார்த்தையை தெய்வ வாக்காகக் கொண்டு துங்கபத்ரா நதிக்கரைக்குச் சென்று அங்கே காத்திருந்த பரிசலில் அமர்ந்தோம். பரிசல் சுழன்று சுழன்று எதிர்க்கரையை நோக்கிப் பயணப்பட்டது.  பரிசல்காரர் போட்ட கோல் ஓரு சில சந்தர்ப்பங்களில் முழுக்க, முழுக்க தண்ணீரில் மூழ்கியது. சிற்சில சமயங்களில் ஓரடி, இரண்டடி கூட தண்ணீருக்குள் மூழ்காமல் எதிலோ மோதிக்கொண்டு எதிர்த்து எழும்பியது.   

“நீரோட்டத்தில் அங்கங்கே பாறைகள் இருக்கும்…” என்றார் பரிசல்காரர். அவர் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபிப்பது போல நதி நெடுக ஆங்காங்கே பாறைகள் தலை நீட்டிக் கொண்டிருந்தன. “இது என்ன விளையாட்டு? தண்ணீரில் இப்படியா தட்டாமாலை சுற்றிக் கொண்டு போவது? நடந்தே நதியைக் கடந்திருக்கலாம் போலிருக்கிறதே…” என்று எங்களுடன் வந்த ஓவியர் ஜெ.பி. சொல்லி வாயை மூடியிருக்கமாட்டார். “அங்கங்கே தண்ணீர் முப்பது அடி, நாற்பது அடி ஆழம்… அது மட்டுமில்லை… அவ்வப்போது முதலைகள் வேறு வாய் பிளந்து கொண்டு அலையும்….” என்று பரிசல்காரர் உலகக் கிண்டல் அத்தனையும் கலந்து கிண்டலே இல்லாத ஒரு தொனியில் கூறினார். அதன் பிறகு நாங்கள் ஏன் வாய் திறக்கிறோம்? ஆற்றின் மறுகரையை அடைவதற்கு முன் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் ஆற்றிய மகிமைகள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோமா?

ராகவேந்திரர் மகிமை - 1

மகோன்னத வாழ்வை அளித்த மண்!

ஒன்றுக்கும் உதவாத மனிதர்களை, மண்ணுக்கு சமம் என்று குறை கூறுவது வழக்கம். தான் வாழ்ந்த விதத்தால் மிருத்திகை எனப்படும் மண்ணுக்கும், மக்கள் அனைவரும் வணங்கும் மகத்தான இடத்தை அளித்தவர் ராகவேந்திரர். அவர் மண்ணுலகை வலம் வந்த காலத்திலும், இன்றும், ஏன் என்றுமே ராகவேந்திர பக்தர்களுக்கு மிருத்திகை என்னும் மண்ணானது குரு ராகவேந்திரரின் பிரசாதம்தான்!

அவர் கை பட்ட மண் செய்த மகோன்னத லீலை ஒன்று இதோ!

மடத்தில் ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் சிஷ்யனாக வந்து சேர்ந்தான். பண்டிதர்கள் வரிசையில் சேர்க்க முடியாவிட்டாலும், பண்பாளனாகவும், குரு பக்தியில் தோய்ந்த தொண்டனாகவும் அவன் விளங்கினான். கல்விக்கான பருவம் முடிந்ததும், அவனது தாய் தந்தையர் அவனுக்கு மணம் செய்ய ஏற்ற பெண்ணைத் தேடினார்கள். ஏழைக்கு யார் தன் மகளை மணமுடித்துத் தருவார்கள்? அதனால் சிஷ்யன் குருவுக்குப் பணிவிடைகள் செய்தவாறே காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். 

எல்லாம் தெரிந்த மகானுக்கு இந்த விவரங்கள் தெரியாதா? கார்மேகம் போன்ற அவரது கருணை, சிஷ்யனின் பொறுமையையும், குருபக்தியையும் கண்டு அவன் மீது மழையாகப் பொழிய தக்க தருணத்துக்காகக் காத்திருந்தது. எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் பிரதி உபகாரம் செய்யாமல் பலனை மட்டும் சன்யாசிகள் அனுபவிப்பது இல்லை. அதே விதமாக ஆற்றிலும், குளத்திலும் குளிக்கச் செல்லும் துறவிகள் நீராடி முடித்து விட்டு, கரையேறும் போது, நீர் நிலையில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வந்து வெளியில் சேர்ப்பது வழக்கம்.   

ஒரு நாள் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ராகவேந்திரர், நீராடுவதற்குத் தனக்கு உதவிய சிஷ்யனிடம், அதே மண்ணை ஒரு பிடி அள்ளித் தந்து 'இதை எடுத்துக் கொண்டு போய் விவாகம் செய்து வாழ்வாயாக' என ஆசீர்வாதம் செய்தார். குரு தந்த மண்ணை மாபெரும் பாக்கியமாக எண்ணி, பயபக்தியுடன் அதை ஒரு துணியில் முடிந்து, தலையில் வைத்துக் கொண்டு, சொந்த ஊருக்கு சிஷ்யர் பயணமானார். நெடும் தொலைவு பயணத்துக்குப் பிறகு ஒரு நகரத்தை அடைந்தார். களைப்பு காரணமாக ஒரு வீட்டின் திண்ணையில் கண்ணயர்ந்தவர் நடுநிசியில் பேரரவம் கேட்டு விழித்தார்.

ஒரு பிரம்மராக்ஷசன் அந்த வீட்டிற்குள் செல்ல முயன்று, அது முடியாமல் போராடிக் கொண்டிருந்தான். பிரம்மராக்ஷசனை உள்ளே செல்ல முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது கோபாக்னியாக ஒரு வேலி. சிஷ்யரின் மூட்டையிலிருந்த ராகவேந்திரரின் பிரசாதமான மண்தான் அது! ராக்ஷசனை வீட்டுக்குள் செல்லாமல் தடுத்த அதே மண்தான், அதை அழிக்கவும் வல்ல மாற்று மருந்து என்று சிஷ்யருக்குத் தோன்றியது. குரு ராகவேந்திரரை மனதில் தியானித்தபடி, அவரது திருநாமத்தை நெஞ்சில் நிறுத்தி பிரசாத மண்ணை, சிஷ்யர் பூதத்தின் மேல் வீச, அது பிரம்ம ராக்ஷசனை பஸ்பமாக்கியது. 

பூதத்தை எரித்த அந்த அக்னியிலிருந்து, சாபவிமோசனம் பெற்ற தேவன் ஒருவன் திவ்ய மங்கள உருவத்துடன் தோன்றினான். சிஷ்யருக்கு ஆசிகள் பலவற்றுடன் அளவிட முடியாத பொன்னையும், பொருளையும் தந்து தன் இருப்பிடம் சேர்ந்தான்.

அந்த வீட்டின் சொந்தக்காரர் ஓர் அந்தணர். இந்த காட்சிகளைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டில் பிறந்த பல சிசுக்களை பிரம்ம ராக்ஷசன் இதுவரை தின்று முடித்திருந்தான். இன்றும் நிகழ இருந்த பிரசவத்திலிருந்து குழந்தையைத் தின்பதற்காகவே அந்த பூதம் அங்கு வந்தது. பூதம் மடிந்து, சுகப் பிரசவத்தில் தனக்கு வாரிசும் கிடைக்க, அதற்குக் காரணமாக விளங்கிய மிருத்திகை மற்றும் ராகவேந்திரரின் அருளை அவர் போற்றினார். தன் குறைகளைத் தீர்த்த சிஷ்யருக்குத் தன் சகோதரியை மணம் முடித்து வைத்தார். ராகவேந்திரர் கையால் கொடுத்த மண் சீடருக்குப் பொன்னையும், பொருளையும், வாழ்க்கைத் துணையாகப் பெண்ணையும் தேடித் தந்தது.

குரு ராகவேந்திரரை நம்பியவருக்கு, வாழ்வில் ஒரு நாளும் இடர் என்பதே இல்லை! 

ராகவேந்திரர் மகிமை - 2

கவிதை நடையில் பேசிய காவித் துணி

ராகவேந்திரரின் திருக்கரத்தால் தீண்டப்பட்ட மண் எவ்வளவு மகிமை வாய்ந்ததோ, அதே போல் அவர் அணிந்த ஆடைகளும் மகிமை வாய்ந்தவையே!

ராகவேந்திரர் மத்வமட பீடத்தை அலங்கரித்து, மக்களின் மனத்துயர் நீங்க நல்லுபதேசங்கள் செய்து கொண்டிருந்த வேளை. அவரது பெருமை நாடெங்கிலும் உள்ள கற்றோரையும் மற்றோரையும் அவர் பால் ஈர்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வடநாட்டில் மூன்று அந்தணர்கள் வாழ்ந்து வந்தார்கள். கல்வி, கேள்விகளில் சிறந்த அவர்களுக்குத் தங்கள் புலமை மீதும், ஞானத்தின் மீதும் ஆணவம் மிகுந்திருந்தது. அதனால் பேசும் போது கூட வடமொழியில் பேசி வந்தார்கள்.  

ஒரு சமயம் ராகவேந்திரரின் அருமை, பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை தரிசிக்க குடந்தை மடம் நாடி வந்தார்கள். வெகு தூரம் பயணம் செய்த களைப்பு நீங்க, காவிரியில் குளித்து விட்டு, ராகவேந்திரரைக் காண்பது எப்படி என்பது பற்றி தங்களுக்குள் வட மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  சற்றுத் தொலைவில், சலவைத் தொழிலாளி ஒருவன் மடத்தின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் வழக்கு மொழியில் பேச, அவர்களது ஆணவம் இடம் கொடுக்க வில்லை.

ஆனால் அவனோ, அந்தணர்கள் வடமொழியில் பேசியதைக் கேட்டு அவர்களை விடச் சுத்தமான வடமொழியில் அவர்களுக்கு வேண்டிய விவரங்களை அளித்தான். ஒரு தமிழ்நாட்டு கிராமத்து இளைஞன் பேசிய வடமொழி வார்த்தைகளினால் அந்தணர்கள் வியப்படைந்தார்கள். நேரம் சற்று சென்றதும், அதே சலவைத் தொழிலாளியிடம் அவர்கள் வேறு சில விவரங்கள் கேட்க, அவர்கள் பேசிய வடமொழி அவனுக்குப் புரியவில்லை. பதிலும் கூறவில்லை.  சிறிது நேரம் மட்டும் அவன் வடமொழியில் பேசியது எப்படி என்ற சந்தேகத்துடன் அவர்கள் மடத்தை அடைந்தார்கள்.

ஸ்ரீமடத்தை அடைந்து, அங்கே பலரிடம் பேசி தங்கள் சந்தேகத்தைக் கேட்ட போதுதான் அவர்களுக்கு அதன் காரணம் புலப்பட்டது.  வடமொழி தெரியாத அந்த சலவைத் தொழிலாளி மூலம் பேசியது, அவன் அப்போது துவைத்துக் கொண்டிருந்த ராகவேந்திரரின் ஆடைகள்தான் என்பதும், ராகவேந்திரரின் ஆடைகளைத் துவைத்து முடித்ததும் அவனுக்கு வடமொழி தொடர்பும் போய்விட்டது என்று புலப்பட்டது. உயிரற்ற ஜடப் பொருள்களான காவித் துணிகளும், அவரது அருளால் ககனத்து மொழிகளில் எல்லாம் கவிதை நடையில் பேசும் என்பது கண் கூடாகியதும், அந்தணர்கள் ராகவேந்திரரின் அளப்பரிய பெருமையை உணர்ந்தார்கள்.

ராகவேந்திரர் மகிமை – 3

மரணத்தைத் திருத்தினார்

ஸ்ரீ ராகவேந்திரர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பல இடங்களில் இறந்தவர்களையும் கூட உயிர்ப்பித்திருக்கிறார். கிரீடகிரி என்னும் கிராமத்தில் அவர் நிகழ்த்திய அற்புதம், இறைவனுக்கு அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்று உலகுக்கு எடுத்துச் சொன்னது. கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான பூஜையும், அதன்பின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக மாம்பழச் சாறு ஒரு அண்டா நிறைய நிரப்பப்பட்டிருந்தது.

விளையாடிக் கொண்டிருந்த அந்த வீட்டுக் குழந்தை, மாம்பழச் சாறு நிரம்பியிருந்த அண்டாவுக்குள் எட்டிப் பார்க்க முனைந்து, தடுமாறி அண்டாவினுள் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் தத்தளித்து மூழ்கி விட்டது. அத்தனை பேரும் ஸ்ரீ ராகவேந்திரர் செய்யும் மூலராமரின் பூஜையிலிருந்து விழிகளை அகற்ற இயலாமல் ஈடுபட்டிருந்தனர். சமையலறையில் நடந்த விபரீதம் அவர்கள் யாருக்குமே தெரியாது! குழந்தை மூழ்கிய அதே நேரம் ஸ்ரீ ராகவேந்திரர் பூஜைக்கு வைத்திருந்த கமண்டலத்தில் ஒரு வண்டு விழுந்து விட்டது. பூஜைக்கு வேறு தீர்த்தம் கேட்டுப் பெற்ற ஸ்ரீ ராகவேந்திரர், உள்ளே நடந்ததை அறிந்து கொண்டு விட்டார்.

பூஜை முடிந்தது. பிரசாதங்கள் வழங்கும் நேரம் வந்தது. குழந்தையை அழைத்து வரச் சொன்னார். அவர் பாதங்களில் விழச் சொல்வதற்காக குழந்தையைத் தேடிப் போன பெற்றோர், குழந்தை அண்டாவுக்குள் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். துடித்தனர். ‘குழந்தை இறந்து விட்டதே!’ என்ற கலக்கத்தை விடவும் விஷயம் தெரிந்தால் யாரும் உணவருந்தாமல் போய் விடுவார்களே என்ற கலக்கம் அதிகமாக வருத்தியது. குழந்தையை அப்படியே ஒரு துணியில் சுற்றி ஓரமாக வைத்தனர். பொங்கும் துக்கத்தை நெஞ்சில் புதைத்தனர். விருந்து முடியும் வரை அதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாமென அந்தப் பெற்றோர் முடிவு செய்தனர்.

விடுவாரா குரு மகான்! குழந்தையை அழைத்து வரச் சொல்லிப் பல முறை கூறினார். பெற்றோர் தாங்க முடியாமல் உண்மையை உரைத்து அவர் காலடியில் விழுந்து கதறினர். குழந்தையைக் கொண்டு வந்து அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.  ஸ்ரீ ராகவேந்திரர் தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரைக் குழந்தையின் மீது தெளித்தார். கண்மூடிப் பிரார்த்தித்தார். அதிசயம் நிகழ்ந்தது! அடங்கியிருந்த குழந்தையின் உடலில் அசைவு! நின்று போன இதயம் மீண்டும் இயங்கத் துவங்கியது! குழந்தை துள்ளி எழுந்தது! கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்! கிராமத் தலைவரும், அவரது மனைவியும் ராகவேந்திரர் பாதங்களில் விழுந்து நன்றியில் கதறினார்கள்.

'தெய்வ அம்சமே ஆனாலும், மனித வடிவெடுத்து உலகை வலம் வருபவர்களால் இவை சாத்தியமாகக் கூடுமா?' என்ற கேள்வி எழுகிறது. தெய்வ அருளின் பெருமைகளை அவ்வப்போது மக்களுக்கு உணர்த்தவும், அவர்களுக்கு தெய்வ நம்பிக்கை ஊட்டவுமே, இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக ஸ்ரீ ராகவேந்திரரே கூறியுள்ளார். மகான் ஆற்றிய இன்னொரு அற்புதத்தைப் பேசலாம் என்று பார்த்தால் அதற்குள் மறு கரை வந்து விட்டதே!  

பரிசலில் இருந்து இறங்கிக் கரை ஏறினோம்.  பஞ்சமுகிக்கு அழைத்துச் செல்ல அங்கே காத்திருந்த ஓர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். 

(பயணம் தொடரும்)                        

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles