மந்திராலயம் நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி! சுபா (காஷ்யபன்)

Sunday, October 15, 2017

‘நவபிருந்தாவனங்கள் அமைந்திருக்கும் பாறைத் திட்டில்தான் பிரஹலாதர் தவம் செய்திருக்கிறாரா? அப்படியானால் பிரஹலாதர் உண்மையிலேயே வாழ்ந்திருக்கிறாரா? அது வெறும் புராணக்கதை மட்டும் இல்லையா? பிரஹலாதருடைய காலம் எது? நவபிருந்தாவனங்கள் அங்கே அமைந்த காலம் எது?’ என்று சரமாரியாகக் கேள்விகள் நெஞ்சைக் குடையத் தொடங்கின.

பரசுராம் அந்தப் புராண நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார்: “முன்னொரு காலத்தில், அரக்கன் ஹிரண்யாட்சன் பிடியில் அகப்பட்டு, கடலுக்கடியில் அமிழ்ந்து போயிருந்தது பூமி. வராகமூர்த்தியாக அவதாரமெடுத்த விஷ்ணு, ஹிரண்யாட்சனை வீழ்த்தி பூமித்தாயை மீட்டெடுத்தார். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், வராக பர்வதம் என்ற மலைப்பகுதியிலிருந்து உற்பத்தியாகும் துங்காவும், பத்ராவும், வராகமூர்த்தியின் கோரைப் பற்களிலிருந்து பெருகும் புண்ணிய நதிகளாகக் கருதப்படுகின்றன.   

ஹிரண்யாட்சன் கொல்லப்பட்டதால் வெகுண்டெழுந்த அவன் சகோதரன் அரக்கன் ஹிரண்யகசிபு உலகைக் கொடுமைப்படுத்தத் தொடங்க, அவனது மகனும், விஷ்ணு பக்தனுமான பிரஹலாதனின் வேண்டுகோளை ஏற்று மனித-மிருக வடிவமான நரசிம்ம அவதாரம் எடுத்த திருமால், ஹிரண்யனை வதைத்து மக்களைக் காத்து அருளினார்.

அரக்கனின் கொடுமையிலிருந்து உலகம் தப்பித்தது. என்றாலும், தன் காரணமாகவே தந்தையின் மரணம் நிகழ்ந்தது என்ற குற்ற உணர்வு பிரஹலாதரை வாட்டத் தொடங்கியது. இந்தப் பாவத்திலிருந்து விடுபட, இறைவனின் ஆணைப்படி, பூவுலகிற்கு வந்து. யாகங்கள் வளர்த்து, தவம் செய்யத் தொடங்கினார், பிரஹலாதர்.

எண்ணங்கள் சிதறாமல், இறைவன் மீது நிலைபெற்ற மனதுடன், எந்த இடையூறும் இன்றி அமைதியாய்த் தவம் இயற்றுவதற்கு பிரஹலாதர் தேர்ந்தெடுத்த இடம், தற்போது நவபிருந்தாவனங்களும் உள்ள அதே தீவுத் திட்டுதான் என்கின்றன புராணங்கள்.

இவ்வாறு, வராக அவதாரத்துடன் தொடர்புடைய புண்ணிய துங்கபத்ரா நதியின் நடுவே, மஹான் பிரஹலாதர் தவமிருந்த தீவுத் திட்டில், பலப்பல யுகங்களாக புனிதத் தன்மையுடன் விளங்கும் இந்தப் புண்ணியத் தலத்தில், இயற்கையுடன் இணைந்த அமைதியான சூழலில், ஒன்பது மஹான்களின் நவபிருந்தாவனங்களும் அமைந்துள்ளன.      

‘நவ பிருந்தாவனம் என்றால் என்ன?’  'நவம்' என்பது 'ஒன்பது' என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். 'பிருந்தாவனம் என்றால், யமுனை நதிக்கரையில் அமைந்து, கண்ணன் வாழ்ந்து, லீலைகள் புரிந்த இடம் மட்டுமல்ல என்பது நமக்குத் தெரியும்.

அதாவது, உலகம் உய்வதற்காக மண்ணுலகில் தோன்றி, நல்ல நெறிமுறைகளை போதித்து மக்களுக்கு வழிகாட்டி, உதாரண புருஷர்களாக வாழ்ந்து மறைந்த மகான்கள் நல்லடக்கம் செய்யப்படும் புனிதமான சமாதித் தலமும் 'பிருந்தாவனம்' என்று அழைக்கப்படுகிறது

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த, ஒன்பது மஹான்களின் புனித உடல்கள் இவ்விடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அவை ஒன்பது சமாதிக் கோயில்களாக, அதாவது 'நவ பிருந்தாவன'ங்களாகத் திகழ்கின்றன. இந்த சமாதிகள் துளசி மாடங்களைப்  போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்களால் பக்தியுடன் வழிபடப்பட்டு வருகின்றன.

இந்த ஒன்பது மஹான்களும் யார் என்று தெரிந்து கொள்வோமா?

பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மத்வாசார்யர் என்ற மஹான், 'த்வைதம்' என்ற கொள்கையை தன் ஞானத்தால் உணர்ந்து, உலகிற்கு அறிவித்தார். தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை ஓரத்தில், கர்நாடக மாநிலத்தின்  உடுப்பிக்கு அருகில் பிறந்த ஸ்ரீ மத்வாச்சார்யர், பாரதமெங்கும் யாத்திரை சென்று தனது சித்தாந்தத்தை பரவச் செய்தார்!

இவரது வழியைப் பின்பற்றுபவர்கள், மத்வ மதத்தினர் எனப்பட்டனர். இந்த மதத்தைச் சேர்ந்த ஒன்பது துறவிகளின் சமாதிகள் அமைந்திருக்கும் இடம் தான், நவபிருந்தாவனம்!

மத்வருக்குப் பின், வழி வழியாக பல்வேறு மஹான்களும், துறவிகளும், அந்த மதத்தில் தோன்றி, மக்களுக்கு நல்வழி காட்டி வந்துள்ளனர். இந்த வழியில் வந்தவர்தான், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். மந்த்ராலயத்தில், அவரது பிருந்தாவனத்தை தரிசித்து விட்டுதான் நாம் ஆனேகுந்தியை வந்தடைந்திருக்கிறோம்.

நவபிருந்தாவனத்தில் சமாதி கொண்டுள்ள ஒன்பது மத்வ மத மஹான்களும், ஸ்ரீ மத்வாசார்யருக்கும், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது, கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரையிலான முன்னூறு ஆண்டு காலத்தில் வாழ்ந்து, பிருந்தாவனப் பிரவேசம் செய்தவர்கள்!

நவபிருந்தாவனத் திட்டில் சமாதி கொண்டுள்ள மஹான்கள் அனைவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர். பல்வேறு இடங்களில் பிறந்து, வளர்ந்து, புனித வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆனால், இவ்விடத்தில்தான் சமாதி கொண்டு பிருந்தாவனம் புக வேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்தப் பகுதிக்கு வந்து, ஆன்மீகத் தொண்டாற்றினர். இறுதியில் இங்கேயே இறைவனடி சேர்ந்து, அவர்களது விருப்பப்படியே, இந்த நதித் திட்டில் அடக்கம் ஆயினர்.

மஹான்கள் இவ்வளவு பேர் தங்களது இறுதி இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்த இவ்விடம், பெரும் மகிமை பொருந்திய ஒன்று என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது அல்லவா? இந்த இடத்தில்தான் பிரஹலாதர் யாகங்கள் வளர்த்து, தவம் புரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை இப்போது தெளிவாக விளங்குகிறது அல்லவா?

‘நவபிருந்தாவனங்களும் மிகச் சரியாக எங்கே அமைந்திருக்கின்றன?’ என்று நம் மனதில் எழும் கேள்விக்கான பதிலில், ‘அட’ என்ற ஆச்சரியத்தை அளிக்கும் சுவையான புராணப் பின்னணியும், அட்டகாசமான வரலாற்றுப் பின்னணியும் இரண்டறக் கலந்துள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகிப் பெருகும் துங்கா மற்றும் பத்ரா என்ற இரு நதிகள், கர்நாடகத்தில் ஷிமோகா நகருக்கு அருகே, கூடலி என்ற இடத்தில் சங்கமித்து, துங்கபத்ரா என்ற பெருநதியாகப் பாய்கின்றன.

கர்நாடக மாநிலத்தின் மத்தியப் பகுதியில், ஹோஸ்பெட் நகரை ஒட்டி  துங்கபத்ரா கல, கலத்தும், சலசலத்தும் செல்கிறது. துங்கபத்ராவின் வட கரையில் உள்ள ஆனேகுந்தி பகுதிதான், நம் இராமாயண இதிகாசத்தில் விவரிக்கப்பட்டுள்ள, ஹனுமார், வாலி, சுக்ரீவன் போன்ற வானர வீரர்கள் வாழ்ந்து, தழைத்து, சாகசங்கள் பல செய்து வந்த கிஷ்கிந்தை ஆகும்.

அதே பகுதியில், நதியின் தென்கரையில், கட்டிட மற்றும் சிற்பக்கலைச் சிறப்புக்கும், அக்கால மக்களின் செல்வச் செழிப்புக்கும், பண்பட்ட வாழ்க்கை முறைக்கும் பெயர் போன, உலகப்புகழ் பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரான ஹம்பி மாநகரம் அமைந்துள்ளது.

இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே, துங்கபத்ரா ஆற்றின் மத்தியில், பெரும் பாறைகளாலான மலைகளுக்கும், பச்சைப் பசேல் தாவரங்களுக்கும் நடுவே, சுழித்து ஓடும் நீரோட்டத்துக்கு இடையே அமைந்துள்ள சிறிய தீவுப் பகுதியில், சற்றே மேடான அகன்ற கருங்கல் பாறைத்திட்டில், மிக ஆச்சரியமாக அமைந்துள்ளது, வழிபாட்டுக்குரிய, புண்ணியத் தலமான, 'ஸ்ரீ நவபிருந்தாவனம்!

எழில் கொஞ்சும் இயற்கை அழகுடன் திகழும் நவபிருந்தாவனம், எவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் தலம்!

மஹான்களின் காலத்துக்குப் பின், அவர்களது பூத உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் தான் இந்த பிருந்தாவனங்கள் என்றாலும், இவை அனைத்தும் ஜீவனுடைய அதாவது உயிரோட்டமுள்ள சமாதிக் கோயில்கள் என்பது தான் இவற்றுக்குள்ள பெரும் மகத்துவமாகும்!

அதாவது, இம்மண்ணுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, தாங்கள் சுமந்து கொண்டிருந்த உடலைத் துறந்த பின்னரும், அவை அடக்கம் செய்யப்பட்ட இடங்களில், அரூபமாக அதாவது பிறரது கண்ணுக்குத் தெரியாமல் இந்த மஹான்கள் இன்னும் உயிர் சக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை! இதைப் பலரும் இங்கு அனுபவத்தில் உணர்ந்து வருகின்றனர்.

இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் ஆன்மீகப் பெரியோர்களை நேரடியாக அணுகி, வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்களை நாம் பெறுவது போல, சமாதிக் கோயில்களான நவபிருந்தாவனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மஹான்களை அணுகி, நமது மனக்குறைகளிலிருந்து நாம் கண்டிப்பாக விடுதலை பெறலாம். பக்தியுடனும், நம்பிக்கையுடனும் அணுகி, மனதார பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்களுக்கு இந்த மஹான்கள் இன்றளவும் அருள்பாலித்து வருகின்றனர்.

டணார், டணார் என கண்டாமணியின் இசை ரீங்காரம் காதில் பாய்ந்தது. பரசுராம் பேசுவதை நிறுத்திவிட்டுக் கண் மூடி வணங்கி விட்டு, “ராகவேந்திர சுவாமி மடத்தில் ஆரத்தி வைபவம் நிகழ இருக்கிறது. தரிசித்து விட்டு வாருங்கள். இரவு உணவு தயாராகி விடும். சாப்பிட்டுத் தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். காலையில் நவபிருந்தாவன தரிசனத்துக்குச் செல்லலாம்..” என்றார்.

புறப்பட்டோம்.  ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்துக்குச் செல்லும் வழியெங்கும் மணியோசையின் ரீங்காரம். ஊதுபத்திகளின் சுகந்த மணம் வீதியை நிறைத்திருந்தது. ஆனேகுந்தியே பக்திமயமாகக் காட்சி அளித்தது. மடத்தின் உள்ளே ஆனேகுந்தியின் மக்களும், நவபிருந்தாவன தரிசனத்துக்கு வந்த பக்தர்களும் குழுமியிருக்க ஆரத்தி வைபவம் வெகு கோலாகலமாக நிகழ்ந்தது.

தரிசனம் முடிந்து வெளியே வந்தோம். எங்கிருந்தோ உற்சாகமான இசை கசிந்து, காற்றில் அலை, அலையாய் மிதந்து வந்தது!. தெருவில் மக்கள் அந்த இசையை நோக்கி மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதோர் உணர்வுடன், உற்சாகத்துடன் சென்று கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்த சிலர், “ஹவா மஹால்.. ஹவா மஹாலுக்கு வாருங்கள்.. அங்கே நிகழப் போகும் நிகழ்ச்சியைப் பார்த்தால் ஆனேகுந்திக்கு வந்தது ஆயுளுக்கும் மறக்காது..” என்றார்.

“ஹவா மஹாலா? அது எங்கே இருக்கிறது? அப்படி என்ன நடக்கப் போகிறது அங்கே?”- மக்களுடன் இணைந்து ஹவா மஹாலை நோக்கி நாங்களும் விரைவாக நடந்தோம்.

(பயணம் தொடரும்)

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles