மந்திராலயம் நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி! - சுபா (காஷ்யபன்)

Wednesday, November 1, 2017

ஹவா மஹால் என்பது ஆனேகுந்தியில் இருக்கும் ஒரு பழைய அரண்மனை. அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாளிகை முகப்பில் தீப்பந்தங்கள் சில நட்டு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து எண்ணெய்ப்புகை சுருள் சுருளாக மேலேறிக்கொண்டிருந்தது.உள்ளே நுழைபவர்கள் முகங்களில் நெருப்பின் வெளிச்சம் உருக்கப்பட்ட பத்தரை மாற்றுத் தங்கக் குழம்பாய் ஒளிர்கிறது.

ஒரு பிரம்மாண்டமான திறந்த வெளி முற்றத்தின் மையத்தில் தீ வளர்க்கப்பட்டு அவற்றைச் சுற்றி இளைஞர்களும், இளம் பெண்களும் இசைக்கேற்ப நடனமாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகம் பார்வையாளர்கள் அனைவரையும் தொற்றுகிறது. இந்தச் சிறிய கிராமத்தில் இவ்வளவு இளைஞர்களும், இளம் கன்னியர்களும் எப்படித் திரண்டார்கள்?  

இந்த மாளிகையில் அவ்வப்போது சாரணர்கள், என்.சி.சி. குழுவினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் வந்து தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு தங்குபவர்கள், ஆனேகுந்தியின் எளிய வாழ்க்கை முறையை அனுபவிக்கிறார்கள். கிஷ்கிந்தா, ஹம்பி பகுதிகளுக்குச் சென்று நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். மாலை வேளைகளில் திறந்த வெளி முற்றத்தில் பான் பயர் ( ) என்னும் நன்னெருப்பு வளர்த்து அதைச் சுற்றிலும் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். நாங்கள் ஆனேகுந்திக்குச் சென்ற நேரம் ஓர் இராணுவப் பள்ளியில் இருந்து மாணவ மாணவியர் வந்திருந்தார்கள். அதை ஒட்டி மாலை வேளைகளை ஆனே குந்தி கிராமமே கொண்டாடிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

சற்று நேரம் கழித்து விடுதிக்குத் திரும்பினோம். அரை இருட்டுப் பாதையில் சுவர்க்கோழிகள் ஒய்யாரமாய் ரீங்காரமிட்டன. சாண வாசம், வைக்கோல் வாசம், முந்திரி ஓடுகள் எரியும் வாசம் என்று கிராமத்து நறுமணம் நாசியைத் தழுவின. அந்த வாசத்துக்கு வயிற்றுப்பசியைத் தூண்டிவிடும் சக்தி இருக்கும் போல. வயிற்றில் கப, கபவென பசி. விடுதியில் சுடச்சுட ஃபுல்காக்களும், தோசைகளும் காத்திருந்தன. சாப்பிட்டோம். அறை சென்றடைந்தோம்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்தோம். காற்றில் இதமான குளிர்.

குளித்தோம். நவ பிருந்தாவன வழிபாட்டுக்குச் செல்பவர்கள் மேல் சட்டையின்றி, இடுப்பில் வேஷ்டி மட்டும் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று பரசுராம் அவர்கள் கூறியிருந்ததால் அவ்வாறே உடுத்திக் கொண்டோம். பெண்கள் புடவை அணிந்து செல்லலாம். இளம் பெண்கள் பாவாடை, தாவணி எனும் பாரம்பரிய உடையில் செல்வது நலம்.

ஆறு மணிக்கெல்லாம் ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தை அடைந்து விட்டோம். அங்கிருந்துதான் நவபிருந்தான ஆராதனைக்கு அர்ச்சகர்கள் புறப்படுவார்கள் என்பதால் அவர்களோடு இணைந்து சென்று அவர்களுடனேயே திரும்பி வந்து விடலாம் என்று பரசுராம் அறிவுறுத்தியிருந்தார். அரை மணி நேரம் கழித்து அர்ச்சகர்களோடு இணைந்து படகுத்துறையை நோக்கி நடந்தோம். துங்கபத்ரா நதியின் வடகரையில் உள்ள ஆனேகுந்தி படகுத்துறையிலிருந்து, படகுகள் மூலம், நதியின் நடுவே இருக்கும் நவபிருந்தாவனத் தீவுப்பகுதிக்குச் செல்லலாம்.  அந்தப் பயணம் மிஞ்சிப் போனால் பதினைந்து நிமிடங்கள்தான் எடுத்துக் கொள்ளும்.

நீண்டு வளைந்து செல்லும் துங்கபத்ரா, அதன் இரு கரைகளிலும் பரவிக் கிடக்கும் பெரும் பாறைக் கற்கள், பச்சைத் தாவரங்கள், ஆற்றின் இடையே ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைகள், இவற்றினூடே சுழித்து ஓடும் நீரோட்டம், தண்ணீரின் நடுவிலேயே எழுப்பப்பட்டுள்ள அறுபத்து நான்கு கால் மண்டபம், பிரமாண்ட பாறைகளையே உடலாகக் கொண்டு, பெரு மலையாய் கண்ணெதிரே எழுந்து நிற்கும் தாரா பர்வதம் என இயற்கைக் காட்சிகள் நெஞ்சை அள்ளுகின்றன.

இவற்றையெல்லாம் ரசித்தவாறே தீவை அடைந்து, அங்கிருக்கும் படகுத் துறையில் இறங்கி, பாறைத்திட்டில் சற்றே நடந்து, நவபிருந்தாவன வளாகத்தை அடைந்தோம். வளாகத்தைச் சூழ்ந்துள்ள சிறிய சுற்றுச்சுவர். கோபுரமோ, கதவுகளோ இல்லாத எளிய நுழைவாயில். உள்ளே நுழைந்ததும், எதிரே, திறந்த வெளியில், சமதரையில், நவபிருந்தாவனம் என்ற ஒன்பது புண்ணிய சமாதிக் கோயில்கள் அருள் காட்சி அளிக்கின்றன.

கருங்கல்லால் எழுப்பப்பட்ட துளசி மாடங்களைப் போன்ற தோற்றத்தில், சிறிதும், பெரிதுமாக, பல்வேறு அளவுகளில் அவை வளாகம் முழுவதும் பரவியுள்ளன. புனிதமான, அடர் பச்சை துளசிச் செடிகள் அவற்றின் மேற்பகுதிகளை அலங்கரிக்கின்றன. பிருந்தாவனங்களின் எளிய தோற்றமே, அவற்றின் புனிதத் தன்மையை பறைசாற்றுகின்றன. கண்மூடி, கரம் குவித்து, தியானிக்க வைக்கின்றன.

வளாகத்தின் மத்தியில், முன்புறம் தூண்களுடன் கம்பீரமாகவும், பிருந்தாவனங்கள் அனைத்துக்கும் நடுநாயகமாகவும் அமைந்துள்ளது, மஹான் ஸ்ரீ வியாசராஜரின் பிருந்தாவனம். மற்ற எட்டு பிருந்தாவனங்களும், வியாசராஜ பிருந்தாவனத்தை மையமாக வைத்தே, அதைச் சுற்றிலும், அதாவது அதற்கு இடப்புறமாகவும், வலப்புறமாகவும், பின்புறமாகவும் அமைந்துள்ளன. வளாகத்தில் நுழைந்தவுடன் வலது புறம், சில படிகள் ஏறி அடையக்கூடிய மேடான பகுதியில், ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயரின் சிறிய சந்நிதிகள் உள்ளன.

ஆதிசேஷப் படுக்கையில் சயனித்திருக்கும் அரங்கனையும், அவர் பாதம் பற்றியபடி அருகே நிற்கும் சிற்பச்சிறப்பு மிக்க தேவியின் அழகிய உருவத்தையும், நேர் எதிரே இருக்கும் முதல் சந்நிதியில் தரிசிக்கலாம்.

இதற்கு இடது புறம் உள்ள ஆஞ்சநேயரின் சந்நிதியில், வலது கையை ஓங்கியவாறும், இடது கையில் சௌகந்திகா புஷ்பத்தை ஏந்தியவாறும், நீண்ட வால் தலையைச் சுற்றிலும் வளைந்திருக்க, ராவண புத்திரன் அக்ஷயகுமாரனைக் கால்களின் கீழே இட்டு வதம் செய்யும் கோலத்தில், ஆஞ்சநேயர், ஸ்ரீ ஜாக்ரதை ஆஞ்சநேயர் என்ற பெயருடன் எழுந்தருளி இருக்கிறார். வியாசராஜரின் பிருந்தாவனத்துக்கு நேர் எதிரே ஹனுமாரின் மற்றொரு சந்நிதி அமைந்துள்ளது. தூண்கள் தாங்கும் முன்மண்டபத்துடன் கூடிய இந்த சந்நிதியில் ஆஞ்சநேயர், 'அவதாரத்ரய ஹனுமான்’ என்ற அபூர்வப் பெயருடன் காட்சி தருகிறார்.

கால்களைக் குத்திட்டு அமர்ந்து, பருமனான புஜங்களுடன், இரு கைகளில் ஓலைச் சுவடிகளை ஏந்தியவாறு எழுந்தருளியிருக்கிறார், அவதார த்ரய ஹனுமான். 'த்ரய' என்ற வடமொழிச் சொல்லுக்கு, மூன்று என்ற பொருள். 'அவதார த்ரய' என்ற பெயருக்கு, மூன்று அவதாரங்களின் கலவை என்ற அர்த்தம். வாயுபகவான் த்ரேதா யுகத்தில் ஹனுமாராக அவதாரம் எடுத்தார். அடுத்து த்வாபர யுகத்தில் பீமனாகவும், கலியுகத்தில் மத்வாசார்யராகவும் அவதரித்தார். இந்த மூன்று அவதாரங்கள் இணைந்து தோற்றமளிப்பவரே, ஸ்ரீ அவதாரத்ரய ஹனுமான்.

முகம் அனுமனைக் குறிக்கிறது; பருத்த புஜங்களும், பின்னால் இருக்கும் கதையும் பீமனைக் குறிக்கின்றன; கையில் உள்ள சுவடிகள், பெரும் பண்டிதரான ஸ்ரீ மத்வாசார்யரைக் குறிக்கின்றன. அனுமனுக்குப் பின்னால், அதே கருவறையில், ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியும் எழுந்தருளியுள்ளார்.

மஹான்களின் ஒன்பது பிருந்தாவனங்களுடன், ஸ்ரீ ரங்கநாதர், ஜாக்ரதை ஆஞ்சநேயர் மற்றும் அவதாரத்ரய ஹனுமான் ஆகியோரும், நவபிருந்தாவன வளாகத்தில் நமக்கு அருள்பாலிக்கின்றனர். நவபிருந்தாவன வழிபாடு என்பது எளிமையான ஒன்று. இங்கு 'செய்தே ஆகவேண்டும்' என நிர்ணயிக்கப்பட்ட சடங்குகளோ, வழிபாட்டு முறைகளோ எதுவும் இல்லை! இங்கு வந்து வழிபடத் தேவையானவை  பக்தி, நம்பிக்கை, உள்ளத் தூய்மை, உடல் தூய்மை இவ்வளவு தான்!

இப்பகுதி, புண்ணிய துங்கபத்ரா நதியின் நடுவிலேயே அமைந்திருப்பதால், நவபிருந்தாவனத் திட்டுக்கு வந்து சேர்ந்ததும், முடிந்தவர்கள் நதியில் நீராடலாம். இயலாதவர்கள், அதன் புனித நீரை தலையில் தெளித்துக் கொள்ளலாம். தங்கும் இடத்திலோ அல்லது நதியிலோ நீராடி முடித்து, துவைத்து உலர்த்திய ஆடைகளை அணிந்து கொண்டு, பக்தியுடன் நவபிருந்தாவனத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஆடவர்கள் வேஷ்டி அணிந்து கொண்டு, சட்டை அணியாமல், அங்கவஸ்திரம் என்னும் மேல்துண்டைப் போர்த்திக்கொண்டு செல்லவேண்டும்.

நவபிருந்தாவனத்தில், பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் அல்லது பிரார்த்தனை நிறைவேறியவர்கள், ஸ்ரீரங்கநாதர், ஜாக்ரதை ஆஞ்சநேயர், அவதாரத்ரய ஹனுமார் மற்றும் ஒன்பது பிருந்தாவனங்கள் ஆகியவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபத்தை, அதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் ஏற்றி வைத்து வழிபடலாம். இதே போல, அவதாரத்ரய ஹனுமானுக்கு சிறிய வெள்ளை வஸ்திரமும், ஒன்பது பிருந்தாவனங்களுக்கு, பெரிய அளவில் வஸ்திரங்களும் சாற்றலாம். பிருந்தாவன மஹான்கள் துறவிகள் ஆதலால், பிருந்தாவனங்களுக்கு காவி நிற வஸ்திரங்களைச் சாற்றலாம்.

தீபங்களை ஏற்றுபவர்கள் தாங்களே அவற்றை உரிய இடங்களில் ஏற்றலாம். வஸ்திரங்களை அணிவிக்க விரும்புபவர்கள், அவற்றை அர்ச்சகர்களிடம் முன்னதாகவே கொடுத்து விடுவது நல்லது.  பின்னர், நவபிருந்தாவனங்களை பிரதட்சணம் செய்யலாம். ரங்கநாதர், ஜாக்ரதை ஆஞ்சநேயர், அவதாரத்ரய ஹனுமான் ஆகியோருக்காக ஒவ்வொரு முறை வலம் வந்த பின், ஒன்பது பிருந்தாவனங்களுக்காக, ஒன்பது முறையோ அல்லது, பதினெட்டு, இருபத்து ஏழு, முப்பத்தாறு என ஒன்பதின் மடங்கிலோ வலம் வரலாம்.

இங்கு சமாதி கொண்டுள்ள மகான்கள், அவரவர்கள் பிருந்தாவனங்களில் இன்றும் ஜீவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'நவபிருந்தாவனங்கள் உயிர் உள்ளவை ஆகவே தொடக் கூடாது' என்று நுழைவாயிலிலேயே தெளிவாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணம் கொண்டும், பிருந்தாவனங்களுக்கு அருகே செல்வதோ அவற்றைத் தொடுவதோ, கண்டிப்பாகக் கூடாது. இதனால் கடும் பாவத்துக்கு ஆளாவோம்!       

ஒன்பது பிருந்தாவனங்களைச் சுற்றிலும், மஞ்சள் நிறத்தில் கோடு ஒன்று வரையப்பட்டுள்ளது. இதற்கு வெளிப்புறமாகத்தான் பிரதட்சணம் செய்ய வேண்டும். இதைத் தாண்டி கண்டிப்பாக உள்ளே செல்லக்கூடாது.

‘பத்மநாபம் கவீந்த்ரம் ச வாகீசம் வ்யாஸராஜஹம்

ரகுவர்யம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் ததைவ ச

ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம் நவ பிருந்தாவனம் பஜே!’

என்று, அங்கே சுற்றுச் சுவரில், கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள நவபிருந்தாவன மஹான்களுக்கான த்யான ஸ்லோகத்தை மெதுவாக உச்சரித்தவாறு, நவபிருந்தாவனங்களை வலம் வந்து வழிபடலாம். இவை தவிர, அர்ச்சகர்கள் செய்யும் பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனைகளையும் தரிசிக்கலாம்.

(பயணம் தொடரும்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles