கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! - 24

Wednesday, March 1, 2017

ஆசிரமத்துக்குள் வரச்சொல்லி அசோக மரங்கள் தலையாட்டி அழைக்கின்றன. நுழைந்ததும், வேப்பமரங்களின் ஆரோக்கியமான காற்று அணைக்கிறது. காந்தியின் சத்தியசேதிகளை எடுத்துச் செல்வது போல் அணில்கள் இங்குமங்குமாக சுதந்திரமாக ஓடுகின்றன. கிளிகள், குருவிகள், மைனாக்கள், புறாக்கள் என்று பறவைகள் வெகு சந்தோஷமாகப் பறந்து திரிகின்றன. 

முதலில் நம் கவனத்தைக் கவர்வது காந்தியைப் பற்றிய கண்காட்சி. 

புகைப்படங்கள், ஓவியங்கள், மகாத்மா கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் ஆகியவற்றைப் பார்க்க பார்க்க, அவை எல்லாம் தேசத்தின் கறைபடாத நாட்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. அருகிலேயே காந்தி எழுதிய, காந்தி பற்றிய புத்தகங்கள் விற்பனை செய்யும் கடை.

அடுத்து மகாத்மாவும் கஸ்தூரிபாவும் வாழ்ந்த ஹிருதயகுஞ்ச் என்ற குடில். ஆசிரமத்துக்கே இதயமாக விளங்கிய குடில் என்பதால், இதற்கு இந்தப் பெயர். 
குடிலின் வாயிலில் ஒரு முதியவர் அமர்ந்து சிறு கை ராட்டினத்தில் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார். அதை வியப்புடன் கவனிக்கும் சிறுவர்களை அன்போடு அருகே அழைக்கிறார். 

"இது தான் காந்தித் தாத்தா பயன்படுத்திய ராட்டினம். எங்கே, இந்த ராட்டினத்தை நீ சுற்றினால் நூல் வருகிறதா பார்ப்போம்"

குழந்தைகள் ஆவலுடன் ராட்டினத்தைச் சுற்றுகிறார்கள். பஞ்சுருண்டை நூலாகி நீளும் போது அவர்கள் கண்களில் சந்தோஷம் கொப்பளிக்கிறது. குட்டிக் குட்டி காந்திகளைப் பார்ப்பது போல் முதியவர் கண்களில் நெகிழ்ச்சி. இந்த அனுபவம் குழந்தைகளின் நினைவிலிருக்கும் வரை காந்தியின் எளிமை அவர்கள் நினைவில் பதிந்திருக்கும்.

குடிலில் நுழைந்தவுடன் அதன் எளிமை தாக்குகிறது. நினைத்திருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கக் கூடிய மகாத்மாவும், கஸ்தூரிபாவும் கைத்தறி உடைகளோடு எளிய வாழ்க்கை வாழ்ந்த அடையாளங்களைப் பார்வையிடும் போது கண்கள் தாமாகவே நனைகின்றன. காந்தியின் அறை பட்சிகளின் இன்னிசைக்கிடையே இன்று மோனத்தவம் புரிகிறது. மெல்லிய மெத்தை, திண்டு, குட்டையான எழுது மேஜை, இராட்டை, ஊன்று கோல்.

தேசியத் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் காந்தியை இங்கே வந்து தான் சந்தித்தார்கள். இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் இங்கேதான் கருத்தரித்தன. 

"என் வீடு சுவர்களால் அடைக்கப்பட்டிருக்கக் கூடாது. உலகின் அனைத்து கலாச்சாரங்களும் சுதந்திரமாக நுழைய வழி விட்டு ஜன்னல்களும் கதவுகளும் திறந்தே இருக்க வேண்டும்" என்று காந்தி விரும்பிய வண்ணம் அவர் அறையில் காற்றோட்டமும் வெளிச்சமும் நிரம்பியிருக்கின்றன. 
  
காந்தியின் அறையை ஒட்டி அன்னை கஸ்தூரிபாவின் அறை.  இரு ஜன்னல்களைத் தவிர சொல்லிக் கொள்ள இங்கு  வேறு எதுவுமில்லை. அடுத்து சமையல் சதுரம். ஒரு திறந்தவெளி முற்றம். காந்தியின் குடிலை அடுத்து ஒரு சின்னக் குடில். காந்தியால் கவரப்பட்ட வினோபா பாவே வாழ்ந்த குடில். உண்மைக்கு வினோபா பாவே அளித்த மரியாதையைக் கண்டு சத்யாகிரஹி என்ற பெயருக்கு அவரே உரித்தானவர் என்று காந்தி மனதாரச் சொல்லியிருக்கிறார். 

அதே குடிலுக்கு மீரா குடில் என்றொரு பெயரும் உண்டு. காந்தி பற்றி அறிந்து கொண்ட மேடலின் ஸ்லேட் (Madalin Slate) என்ற பெண் காந்தியத்தால் மிகவும் கவரப்பட்டார். காந்தியின் சிஷ்யையாக, வினோபா பாவே வாழ்ந்து விட்டுச் சென்ற இதே குடிலில் தங்கி இருந்தார். அவருடைய விசுவாசம் கண்டு அவருக்கு மீரா என்று காந்தி பெயர் சூட்டினார்.

இதனை அடுத்து இருக்கும் குடிலுக்கு நந்தினி என்ற அழகான பெயர். இந்த எளிமையான வீட்டில் ராஜேந்திர பிரசாத், நேரு, ராஜாஜி. கான் அப்துல் கபார்கான் போன்ற தலைவர்கள் ஆசிரமத்தின் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். 

சபர்மதி நதிக்கரை ஓரம் ஒரு திறந்த வெளி மணல் சதுரம். பிரார்த்தனை பூமி. இங்கு தான் பல சமயங்களில் காந்தி தன் கொள்கைகளை அறிவித்திருக்கிறார். 
"என் வாழ்வே உங்களுக்கு நான் விடுக்கும் செய்தி" என்று மகாத்மா விளையாட்டுக்குச் சொல்லவில்லை. உண்மையிலேயே அதை நிரூபித்துவிட்டுத் தான் இப்பூமியிலிருந்து விடைபெற்றார் என்பதை இங்கே உணரலாம். 

காந்தி வாழ்ந்த பூமியைத் தொட்டுத் தழுவிச் செல்கிற பெருமையோடு, சபர்மதி நதி ஆசிரமத்தின் அஸ்திவாரத்தை ஈரம் பண்ணிக்கொண்டு ஓடுகிறது. 
வாழ்நாளில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தரிசிக்க வேண்டிய தலங்களில் சபர்மதி ஆசிரமும் ஒன்று. ஆசிரமம் காலை எட்டரை முதல் மாலை ஆறரை வரை பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கிறது. 

நிறைவான மனதுடன் மறுநாள் ரயிலில் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டோம்.  

சென்னை. ராஜஸ்தான் மாநிலத்துக்கே உரித்தான டை அண்ட் டை (Tie & Dye) புடைவையை வீட்டில் கொடுத்தோம். இருவரது மனைவியர் கண்களும் வியப்பில் விரிந்தன. அப்படி ஒரு வண்ண ரகளை அந்தப் புடைவைகள்! மறுநாளே அணிந்தார்கள். சூப்பராக இருந்தது. துவைக்காமல் எடுத்து வைத்தார்கள். நான்காவது முறை  அந்தப் புடவையைக் கட்டிய அன்றுதான் ..  அது நிகழ்ந்தது.

வெளியே சென்றிருந்தோம்.  அன்றைக்குப் பார்த்து அடை மழை. ஆட்டோக்காரன் எங்கள் வீடு இருந்த தெருவில் நுழைய முடியாமல் தெரு முனையிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டான். சாலையில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர்.  மின்சாரம் இல்லை. இருட்டில் தட்டுத் தடுமாறி, நடந்தோம். சில இடங்களில் பள்ளத்தில் கால் விட்டு ஏறக்குறைய தொடை வரை நனைந்து சுதாரித்து ஒரு வழியாக வீடு போய்ச் சேர்ந்தோம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் மின்சாரம் வந்தது. திடீரென்று "என் புடவையைத் தண்ணி முழுங்கிடுச்சி.. " என்று மனைவியின் கூச்சல்.

பார்த்தால் அந்த ராஜஸ்தான் ஸ்பெஷல் டை அண்ட் டை  புடவை மனைவியின் முழங்காலுக்கு மேல் ஏறியிருந்தது.  அதன் பின் அந்தப் புடைவை பக்கத்து வீட்டுச் சிறுமியின் சுடிதாருக்கு சல்வாராகத்தான் பயன்பட்டது. 

நிறைவு செய்வதற்கு முன்:

பஞ்ச துவாரகை தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்புபவர்களுக்குச் சில உதவிக் குறிப்புகள்!

நாங்கள் பஞ்சதுவாரகை தலங்களை எந்த வரிசையில் சென்று தரிசித்தோமோ, அதே வரிசையில் யாத்திரை மேற்கொள்ளும் வகையில் ஒரு பயணத்திட்டத்தை வகுத்துத் தருகிறோம்.

பஞ்சதுவாரகை தல யாத்திரை மேற்கொள்பவர்கள் அஹமதாபாதில் இருந்து யாத்திரையைத் தொடங்குவது நலம்.

சென்னையிலிருந்தோ, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலிருந்தோ, ரயில், விமானம் மற்றும் கார் மூலம் அஹமதாபாதை வந்தடைந்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அஹமதாபாதுக்குக் காலை ஒன்பது மணி, பத்து மணி அளவில் வந்து சேர்ந்தால், அன்றைய நாளை உபயோகமாகக் கழிக்க, சபர்மதி ஆசிரமம் மற்றும் சுவாமி நாராயண் ஆலயம் ஆகிய இரண்டுக்கும் சென்று வரலாம். மாலையில் அஹமதாபாத் கடைத்தெருக்களை வலம் வரலாம். ஷாப்பிங் செய்ய விரும்பினால் அதை முடித்துக் கொள்ளலாம். 

அஹமதாபாதில் குஜராத் சுற்றுலாத்துறையினரின் விடுதி உள்ளது. முன் கூட்டியே பதிவுசெய்து கொள்ளலாம். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம்  குஜராத் சுற்றுலாத்துறையினரின் விடுதிகளில் தங்குவது நல்லது. சில ஊர்களில் விடுதிகள் சற்றுப் பழசாகத் தெரியக்கூடும். ஆனால் அறைகள் எல்லாம் கைக்கு அடக்கமான வாடகையில் நன்றாகவே உள்ளன. சில ஊர்களில் ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் துறையினரின் விடுதிகளில் தங்க நேரிடும். அவை குஜராத் சுற்றுலாத் துறையினரின் விடுதிகளை விட மிக நன்றாக உள்ளன. 

ஒரு வேளை அஹமதாபாதுக்கு இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தால் நேராக விடுதிக்குச் சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு ஓய்வெடுப்பது நலம்.

 

முதல் நாள்:

மறுதினம் விடியற்காலை ஆறுமணிக்கெல்லாம் ஒரு கார் எடுத்துக் கொண்டு புறப்பட்டால் ஒன்பது மணிக்கு வீர்பூர் ஜலராம் பாப்பா ஆசிரமத்துக்குச் செல்லலாம். அங்கே அரை மணி நேரம். அங்கிருந்து ஜுனா காத். இங்கே தாமோதர் மற்றும் பவநாதர் ஆலய தரிசனத்துக்குப் பிறகு அசோகர் கல்வெட்டையும், அங்கிருக்கும் பழைய கோட்டையையும் காணலாம். பிற்பகல் உணவு ஜுனாகாதில்.  அங்கிருந்து புறப்பட்டால் மாலை ஆறு மணி சுமாருக்கு சோமநாதர் ஆலயத்துக்கு அருகில் இருக்கும் வேராவல் நகரத்தைச் சென்றடையலாம். வேராவலில் முன்கூட்டியே பதிவு செய்துகொண்டு விடுதியில் தங்கலாம். மாலையே சோமநாதர் ஆலயத்துக்குச் செல்லலாம். 

 

இரண்டாம் நாள்:

மறுநாள் விடியற்காலையில் புறப்பட்டு கிருஷ்ணர் காலில் அம்பு தைத்த பால் கா தீர்த்த, அவர் உயிரை விடுத்த தேஹோத் சர்க், மற்றும் வேட்டைக்காரன் நின்று அம்பு எய்திய இடமான பாணகங்கா ஆகிய மூன்று தலங்களுக்கும் சென்று தரிசித்து விட்டுப் புறப்பட்டால் பதினோரு மணி சுமாருக்கு போர்பந்தரை அடைந்து காந்தி வாழ்ந்த இல்லமான கீர்த்தி மஹாலையும், குசேலர் கோயிலையும் காணலாம். 

இங்கே பகல் உணவு. அங்கிருந்து புறப்பட்டு கடற்கரையோரமாகப் பயணித்து பிற்பகலில் ஹர்ஷித்தி மாதாவை தரிசிக்கலாம். மாலை ஆறுமணிக்கெல்லாம் துவாரகை. இங்கேயும் குஜராத் சுற்றுலாத் துறை விடுதியில் தங்கலாம். மாலை துவாரகை கிருஷ்ணனை தரிசித்துவிட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு ஓய்வு.  

 

மூன்றாம் நாள்:

விடியற் காலையில் புறப்பட்டு ருக்மணி தேவி ஆலய தரிசனம். அங்கிருந்து துறைமுகம் சென்று படகில் பயணம் செய்து பேட் துவாரகையில் கிருஷ்ணர் வாழ்ந்த இல்லக் கோயிலை தரிசிக்கலாம். அங்கிருந்து புறப்பட்டு படகில் துறைமுகம் வந்து சேர்ந்து நாகேசுவரம் சென்று நாகேசுவரனை தரிசித்துக் கொண்டு புறப்பட்டால் இரவு அஹமதாபாத் சுற்றுலா விடுதியை வந்தடையலாம். 

 

நான்காம் நாள்:

விடியற்காலை புறப்பட்டால் காலை எட்டு மணிக்கு டாகோரில் ரன்சோட்ராய் என்னும் பெயர் தாங்கிய கிருஷ்ண தரிசனம். அங்கிருந்து கிளம்பி முற்பகல் பதினோரு மணிக்கு ஷ்யாமளா என்னும் ஊரை அடைந்து ஷ்யாமளன் தரிசனம். பிற்பகல் ராஜஸ்தான் மாநிலத்தின் அழகான நகரமான உதய்பூரைச் சென்றடையலாம். ராஜஸ்தான் சுற்றுலாத் துறையினரின் விடுதியில் அறை. (சூப்பர் விடுதி) மதிய உணவு. அரண்மனைச் சுற்றுலா. தோழிகளின் நந்தவனம் மற்றும் சேத்தக் குதிரைச் சிலை இருக்கும் நந்தவனச் சுற்றுலா. இரவு ஓய்வு. 

 

ஐந்தாம் நாள்:

விடியற்காலை புறப்பாடு. ஏக்லிங்க் ஊரை அடைந்து அங்கிருக்கும் ஆலயத்தில் ஏக்லிங்க் தரிசனம். காலை ஒன்பது மணிக்கெல்லாம் நாத்-த்வாரா கிருஷ்ணர் ஆலய தரிசனம். மதிய உணவு முடித்துக்கொண்டு ஐந்தாவது பஞ்ச துவாரகை தலமான கங்க்ரோலியில் கிருஷ்ண தரிசனம். அங்கிருந்து புறப்பட்டால் ஆஜ்மீர் தர்கா. ஆஜ்மீர் தர்கா தரிசனம் முடியும்போது மாலையாகி விடும். 13 கி.மீ. பயணம் செய்தால் புஷ்கர். ராஜஸ்தான் சுற்றுலாத்துறையினரின் விடுதியில் அறை. (சூப்பரோ சூப்பர் விடுதி. சுமார் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு நட்சத்திர விடுதி போன்ற அறை.) 

மறுநாள் விடியற்காலை புஷ்கர் ஏரியில் நீராடல். பிரம்மா ஆலய தரிசனம். அங்கிருக்கும் மற்ற சில சிவாலய மற்றும் வைணவ ஆலயங்களை தரிசித்துக்கொண்டு புறப்பட்டால் முன்னிரவில் மவுன்ட் அபு. ராஜஸ்தான் சுற்றுலாத் துறையினரின் விடுதி. இரவு உணவுக்குப் பின் ஓய்வு.

 

ஆறாம் நாள்:

விடியற்காலை புறப்பட்டு மவுன்ட் அபு பள்ளத்தாக்கில் வசிஷ்டர் ஆலய தரிசனம். அடுத்து மேலேறி வந்து அற்புதாதேவி தரிசனம். பிற்பகலில் தில்வாரா ஜைன ஆலய தரிசனம். முன்மாலையில் நக்கி ஏரி சென்று இயற்கையின் வனப்பை அள்ளிப் பருகிவிட்டு ஒரு தேனீர். தேவைப்பட்டால் ஷாப்பிங். புறப்பட்டால் இரவு ஏழு மணிக்கு அம்பாஜி ஆலய தரிசனம். இரவு தனியார் விடுதியில் அறை. 

 

ஏழாம் நாள்:

காலை அருகில் இருக்கும் கப்பார் மலையில் மகாமாயா தரிசனம். அங்கிருந்து புறப்பட்டால் ராணிக் குளம் மற்றும் மொதேரா சூரிய ஆலய தரிசனம் முடித்துக்கொண்டு இரவு அஹமதாபாத் வந்தடையலாம். மறுநாள் சொந்த ஊரை நோக்கிப் பயணம்.

இது போன்ற ஒரு பயணத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமெனில் காரில் செல்வதே உசிதமானது. சொந்தக் கார் என்றால் தங்கும் விடுதிகளில் எல்லாம் முன்கூட்டியே அறைகளை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். குஜராத் சுற்றுலாத்துறையே பேக்கேஜ் டூர் நடத்துகிறது. அவர்களே இது போன்றதொரு பயணத்திட்டத்தை வகுத்து உங்களை அழைத்துச் செல்வார்கள். ஒரு நபருக்கு சுமார் முப்பதாயிரம் வரை செலவாகும். 

நாம் தனியாகக் காரில் பயணம் மேற்கொண்டாலும் பெட்ரோல், டிரைவர் சம்பளம், விடுதி வாடகை என்று இந்த அளவு செலவு ஆகிவிடும். மிஞ்சி மிஞ்சிப் போனால் தனி நபருக்கு ஐந்தாயிரம் வரை செலவு குறையலாம். ஆனால் அனைத்து ஏற்பாடுகளையும் நாமே செய்துகொள்ள வேண்டும். 

பேருந்துகளில் செல்லலாம். ஆனால் மொழி தெரியாத ஊரில் எந்த நேரத்துக்கு, எந்தப் பேருந்து எந்த வழியாக, எங்கே செல்கிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்வது கடினம். மேலும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக உட்காருவதற்குக் கூட இடம் கிடைக்காது. ஒரு வேளை ஆண்கள் தன்னந்தனியாகச் சென்றால் அவர்கள் அனைத்து கசப்பான அனுபவங்களையும் எதிர் கொள்ளும் மனநிலையோடு  இந்தச் சாகசச் சுற்றுலாவை மேற்கொள்ளலாம். 

பஞ்ச துவாரகை யாத்திரை என்பது ஆன்மிகமும் லௌகீகமும் கலந்ததொரு அருமையான சுற்றுலா. நாம் தனியாகக் காரை எடுத்துச் சென்றால் ஒவ்வொரு தலத்திலும் இரண்டிரண்டு நாட்கள் தங்கி ஒருமுறைக்கு இருமுறை, மும்முறை என்று ஆலயங்களுக்கு தரிசனம் செய்துவிட்டு மனநிறைவுடன் திரும்பலாம். 

இதுபோல் தங்கி பஞ்சதுவாரகை யாத்திரையை மேற்கொள்ள வேண்டுமெனில் குறைந்தபட்சம் இருபது நாட்களையாவது ஒதுக்குதல் அவசியம்.  

குஜராத் மாநிலம் முழக்க நாற்கர தங்க சாலைகள். அதனால் பயணம் சுகமாக இருக்கும்.  கோடையில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என்பதால் ஆகஸ்ட் தொடங்கி பிப்ரவரி வரை யாத்திரை மேற்கொள்ளலாம்.   

மக்கள் அன்பானவர்கள். இனிமையாகப் பேசுபவர்கள். உழைப்பாளிகள். குஜராத் மது அற்ற மாநிலம். குடிகாரர்களுடன் மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் நேரவே நேராது. 

தேனீர் ஐந்து ரூபாய், பத்து ரூபாய். ஹோட்டல்களிலும் உணவு வகைகளுக்கு அதிகம் விலை வைப்பதில்லை. குளிர்பானங்களைத் தவிர்த்து லஸ்ஸி குடிக்கலாம். எலுமிச்சைச் சாறு அருந்தலாம். குஜராத்தில் இருக்கும் நாட்களில் நம் ஊர் உணவு வகைகளைத் தேடக்கூடாது. இட்லி, தோசை, சாம்பார் சாதம், ரசம் சாதம் எல்லாம் கிடைக்காது. அருமையான சப்பாத்தி, தால், சமோசா, அவல் உப்புமா, பாஸ்மதி சாதம், தயிர், இனிப்பு வகைகள் எல்லாம் நியாயமான விலையில் கிடைக்கும். சின்னச் சின்னக் கடைகளில் எல்லாம் சுவையான ரொட்டி (சப்பாத்தி) தயாரித்து, நெய் தடவி விற்கிறார்கள்.  

குஜராத்தில் இருக்கும் நாட்கள் எல்லாம் அவர்களுடைய பாரம்பரிய உணவை உண்டு, அந்த ஊர் மக்களின் அன்பான உபசரிப்பை ஏற்று, ஆனந்தமாக சுற்றுலாவை அனுபவித்துவிட்டுத் திரும்பலாம். 

உங்கள் யாத்திரை இனிமையாக அமைய எங்களது வாழ்த்துக்கள்..!

பயணம் நிறைவடைந்தது... 

சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles