நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி!

Thursday, June 15, 2017

மந்திராலயம்

அது எதனால் என்று தெரியாது. ஆனால், விட்டில் பூச்சிக்கு விளக்கிடம் மாறாத ஈர்ப்பு இருப்பது போல சின்ன வயதிலிருந்தே மகான்கள் என்றால் ஒரு வசீகரம்!

ஆலயக் கருவறைகளில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருவுருவங்கள் எங்களை ஈர்த்ததை விட மகான்கள் ஈர்த்திருக்கிறார்கள். 
 
 

ராமகிருஷ்ணர், ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், மஹா பெரியவா, ராகவேந்திரர் போன்ற மகான்கள் அனைவருமே மனிதர்களாய்ப் பிறப்பெடுத்த தெய்வப்பிறவிகள். 
 
இவர்களுள் மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் மிகவும் ஸ்பெஷல். அவருடைய வரலாறு மிகவும் நெகிழ்ச்சியானது. மனதை உருக்குவது. அந்த மகான் நிரந்தரமாக எழுந்தருளி இருக்கும் மந்திராலயத்துக்குச் சென்று, என்றென்றும் உயிர்ப்புடன் திகழும் அவரது மகா சமாதியை விழுந்து வணங்கி அந்த மண்ணைத் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. 
 
வேலை, வேலை என்று பறந்து கொண்டிருந்தோம். ‘அப்புறம் போகலாம், அப்புறம் போகலாம்’ என்று மந்திராலயப் பயணத்தைத் தள்ளிப்   போட்டுக்கொண்டே இருந்தோம்.
 
திடீரென்று ஒரு நாள்…
 
திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவுக்கு ஒரு வேலையாக மோட்டார் பைக்கில் சென்றிருந்தோம்.  அந்தத் தெருவில் விரைந்து கொண்டிருந்த போது திடீரென்று ஓரிடத்தில் பைக் நின்றுவிட்டது. என்ன காரணம் என்றே தெரியவில்லை. உதைத்து, உதைத்துப் பார்த்தோம். ஸ்டார்ட்டர் முழு வேகத்தில் திரும்பி வந்து ஆடுசதையைப் பதம் பார்த்ததுதான் மிச்சம். எதனால் என்று புரியாமல் திகைத்துச் சுற்று முற்றும் பார்த்தோம். அங்கே மந்திராலய மகான் ராகவேந்திரரின் சன்னிதி இருந்தது. வியாழனுக்கு வியாழன் யாருக்கும் தெரியாமல் ரஜினி வந்து வணங்கிவிட்டுப் போகும் அதே சன்னிதி. பைக்கை அங்கேயே ஓரம் கட்டி விட்டு உள்ளே போனோம். அந்த மகானின் சன்னிதியில் நின்று வணங்கினோம். மிருத்திகை பிரசாதம் வழங்கினார்கள். 
 
வெளியே வந்தோம். பைக்கை உதைத்தோம். ஸ்டார்ட் ஆகிவிட்டது! இது என்ன அதிசயம். சற்று நேரத்துக்கு முன்பாக எவ்வளவு உதைத்தும் கிளம்பாத பைக் இப்போது மட்டும் எப்படிக் கிளம்பியது. 
 
திகைத்துப் போய் கோவிலை நோக்கினோம். பிளாட்ஃபாரத்தில் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு ராகவேந்திரர் கட் அவுட் கண்களில் பட்டது. ஸ்ரீ ராகவேந்திரர் எங்களைப் பார்த்து நமட்டுப் புன்னகை புரிந்த மாதிரி தோன்றியது. 
 
அவ்வளவுதான். மந்திராலயத்துக்குப் போயே ஆகவேண்டும் என்ற ஆவேச எண்ணம் எங்கள் நெஞ்சை ஆக்கிரமித்தது.  
 
அன்று இரவே மும்பை மெயிலில் ஏறிப் பயணப்பட்டு மந்திராலயம் செல்வது என்ற தீர்மானத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம். 
 
இரவு பத்து மணி. அப்போதுதான் விடிந்தது போல் ஸ்டேஷன் படு சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. 
 
சின்னக்குழந்தைகள் உற்சாகமாக ரயிலை நோக்கிச் சென்றார்கள். பிஸ்கட் பாக்கெட்டுகளும். சூடான பாலும் ஜோராக விற்பனை ஆகிக் கொண்டிருக்க, புதிதாக மணம் ஆகி புகுந்த வீட்டை நோக்கிப் புறப்பட்ட பெண், பிளாட்ஃபாரத்தில் நின்று பெண் மாலை, மாலையாய்க் கண்ணீர் வடித்தாள். 
 
ரயிலில் ஏறி, படுக்கையில் படுத்தோம். மனம், உடல் இரண்டும் பரபரத்தன.  இது நாள் வரை பலப் பல புத்தகங்களில் ஸ்ரீராகவேந்திரரைப் பற்றி வாசித்து அறிந்தவை எல்லாம் தட்டாமாலையாகச் சுற்றின. 
 
எப்பேர்ப்பட்ட பிறவி! அவர் வாழ்க்கையில்தான் என்னென்ன நிகழ்வுகள்! அந்தத் தெய்வப்பிறவி குடியிருக்கும் சமாதியை தரிசிக்கப் போகிறோம்!
 
ரயில் புறப்பட்டது. தூங்கிப் பொழுது விடிந்தால் மந்திராலயம்! கண்களை மூடினோம். தூக்கம் வரவில்லை. ஸ்ரீ ராகவேந்திரரின் வரலாறு வரி, வரியாக மனதில் ஓடத் தொடங்கியது.
ஆன்மிக மணம் கமழும் மகான்களின் அற்புதச் சரிதங்கள் நமக்கென வழங்கப்பட்டிருக்கும் வரங்கள். அவற்றை அறிந்து கொண்டால் நமக்கு அளப்பரிய நலம் பயக்கும்! நெறி தவறாத வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை உணர்த்தி நாம் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி வகுக்கும். 
 
அந்த அடிப்படையில், பூஜ்யஸ்ரீ ராகவேந்திரரின் உள்ளத்தை நெகிழச் செய்யும் உன்னதமான வாழ்க்கை வரலாறு நெஞ்சுக்கு நிம்மதியும், நினைவுக்கு நிறைவும், ஆன்மாவுக்கு ஆனந்தமும் அளிக்கும் மகத்தானதொரு பொக்கிஷம்! 
 
மந்திராலாய மகான்
பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
 
பிரம்ம லோகத்தில் நாள் தோறும் நடைபெறும் திருமாலின் விசேஷ ஆராதனைகளில், தேவலோகத்தின் நித்ய வாசிகளான தேவர்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்காக ஒரு தொண்டு புரிவதும் வழக்கம்.
 
சங்குகர்ணர் திருமாலின் பரமபக்தர். அவர் அனுதினமும் தமது கரத்தாலேயே பறித்துத் தொடுத்து வரும் மலர்கள் மகாவிஷ்ணுவின் வழிபாட்டுக்கு உகந்தவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. 
 
ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக, வழிபாட்டு நேரத்துக்கு சங்குகர்ணரால் மலர்கள் கொண்டு தர இயலவில்லை.
 
கால தாமதமாக வந்தவரை பிரம்மன் கடும் சினத்துடன் எதிர் கொண்டார். சிந்தையில் கவனமின்றி, காலம் கடந்து மலர்மாலையைக் கொண்டு வந்த சங்குகர்ணரை, சிந்தை அற்ற அரக்கர் குலத்தில் சென்று பிறக்குமாறு சபித்தார்.
 
தன் தவறை உணர்ந்து பணிந்த சங்குகர்ணரை வாழ்த்தினார் நான்முகன். 
எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் மகாவிஷ்ணுவின் பக்தனாகவும், அவனது பக்தர்களுக்கு குருவாகவும் விளங்குவதற்காகவே சங்குகர்ணருக்குக் கால தாமதம் ஏற்பட்டது என்றும், அதன் காரணமாகவே, தான் அவரை சபிக்க நேரிட்டது என்றும், அனைத்துமே தெய்வச் செயல் அன்றி வேறொன்றுமில்லை என்றும் விளக்கினார் நான்முகன்.   
 
பிரம்ம சாபத்தின் பயனாக சங்குகர்ணர் கிருத யுகத்தில் பிரகலாதனாக, அசுரச் சக்கரவர்த்தியான ஹிரண்யகசிபுவுக்கு மகனாக அவதரித்தார். 
 துவாபர யுகத்தில் சங்குகர்ணர் பாஹ்லீக மன்னராகப் பிறந்தார். திருமாலின் மீது தீராத பக்தி கொண்டிருந்த போதிலும், விதி வசத்தால் அவர் பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட நேரிட்டது. என்றும் கண்ணனின் நினைவுடன் இருந்த அவர், வாயு பகவானின் அம்சமாகத் தோன்றிய பீமன் கையால் மாண்டார். 
 
சங்குகர்ணர் கலியுகத்தில் வியாசராஜ தீர்த்தராக மூன்றாவது அவதாரம் எடுத்தார். மத்வாச்சாரியாரின் த்வைத சித்தாந்தத்தில் ஈடுபட்டு, அந்த வழியில் அவர் சிறந்த துறவியாக விளங்கினார்.  
 
வியாஸராஜருக்குப் பிறகு மத்வ பீடத்தைப் பல மகான்கள் அலங்கரித்தார்கள். 
இறைவனின் ஆணையை ஏற்று சங்குகர்ணர் அடுத்து ராகவேந்திரராகத் தோன்ற வேண்டிய நேரம் நெருங்கியது. 
 
தென் இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம்! 
 
கலை மற்றும் இலக்கியங்களுக்கு நல்லிடம் கிடைத்த விஜய நகரப் பேரரசின் அரசவையில், திம்மண்ண பட்டர் என்பார் ஆஸ்தான கலைஞராக இடம் பெற்றிருந்தார்.  
 
திம்மண்ண பட்டருக்கும், அவரது மனைவி கோபிகாம்பிகைக்கும், வேங்கடாம்பாள் என்ற பெண் குழந்தையும், குருராஜன் என்ற ஆண் மகவும் பிறந்தன. 
 
இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசு, அந்நியர் படையெடுப்பால் வீழ்ச்சி அடைந்தது. அத்துடன் அதைச் சார்ந்து வாழ்ந்த மக்களும் தங்கள் வாழ்வை இழந்தனர். திம்மண்ண பட்டர், மனைவியுடன் வாழ வழி தேடி தமிழகத்தில் புவனகிரி வந்தடைந்தார்.  
 
புவனகிரியில் கோபிகாம்பாள் கருவுற்றார். குழந்தை கருவில் வளர்ந்த போதே, அன்னையின் முகமும், உருவும் பொலிவு பெற்று ஒளிர்ந்தன. 
 
ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு, தமிழ் மன்மத வருடம், பங்குனி மாதம் சப்தமி திதியில், மிருகசீரிட நட்சத்திரத்தில், குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில், கௌதம கோத்திரத்தில் ஒரு தெய்வீகக் குழந்தை பிறந்தது. 
தனது முற்பிறவிகளில் தான் ஆற்றிய பணிகளின் தொடர்ச்சியாக, அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல சங்குகர்ணர் ராகவேந்திராகப் பிறவி எடுத்தார். 
 
திருப்பதி வேங்கடவனின் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அதற்குப் பெற்றோர் வேங்கடநாதன் எனத் திருநாமம் இட்டனர்.    
 
குழந்தைக்கு இரண்டு வயது முடிந்ததும் முதன் முதலாக அன்ன அமுதூட்டும் வைபவம் நடந்தது. தந்தையின் உதவியுடன் அக்ஷராப்பியாசமும் தொடங்கியது. சிறு வயதிலேயே வேங்கடநாதன் அறிவாற்றலில் சிறந்து விளங்கினான். 
 
திம்மண்ணாவின் குடும்பம் விஜயநகரப் பேரரசிலிருந்து தமிழகம் வந்து சேர்ந்து வெகு நாட்கள் ஆகி விட்டிருந்தன. சேமித்து வைத்திருந்த செல்வம் அனைத்தும் தீர்ந்தும் விட்டது. லௌகீக விஷயங்களில், திம்மண்ணா ஈடுபடாததால் வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டது. 
 
திக்கவற்றவர்க்கு தெய்வமும், தெய்வீகமான இடங்களும்தானே புகலிடங்கள்! திம்மண்ண பட்டர், மனைவி, குழந்தையுடன் கும்பகோணம் ஸ்ரீமடத்திற்கு வந்து சேர்ந்தார். 
 
கும்பகோணத்தில் இருந்த மடாதிபதிகளான ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரும், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரும் திம்மண்ண பட்டரை நன்கு அறிந்திருந்தார்கள். 
 
மேலும் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சுதீந்திரர் வேங்கடநாதனைப் பார்த்ததும் பரவசமானார். ‘இந்த அவதாரச் சிறுவனல்லவா தனக்குப் பின் மடத்தை நிர்வகிக்க வேண்டியவன்' என்று அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே உணரும் தீர்க்க தரிசனம் அவருக்கு இருந்தது. 
 
எனவே மடாதிபதிகள், திம்மண்ண பட்டரையும், அவரது குடும்பத்தாரையும் அன்புடன் வரவேற்று மடத்திலேயே தங்குவதற்கு உண்டான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார்கள்.
 
திம்மண்ண பட்டரும், மடத்தில், வேதாந்த சதஸுகளில் பங்கு பெற்றதோடு, தன் மகனையும் உடன் அழைத்துச் சென்றார்.  
 
மடாதிபதிகளான ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரின் அருள் கடாட்சமும், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் கருணை விழி ஆசிகளும் சிறுவன் மீது தீர்க்கமாகப் பட்டன. 
 
அந்தச் சமயத்தில் இறைவனின் திருவுளம் வேறாக இருந்தது. திம்மண்ண பட்டரின் காலம் முடிந்து, அவர் விண்ணுலகம் ஏகினார். குடும்பப் பொறுப்புகளைத் தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவரது மூத்த மகன் குருராஜன் ஏற்றுக் கொண்டார்.  
 
தன் மூத்த சகோதரர் குருராஜரையே தந்தை இடத்தில் வைத்து வேங்கடநாதர் வணங்க, குருராஜரும் சகோதரனைத் தன் மகன் போல் காத்து வந்தார். 
 
வேங்கடநாதரின் முன்னோர்கள், விஜயநகரப் பேரரசின் அரசவையை அலங்கரித்த ஆஸ்தான கலைஞர்கள். வழி, வழியாக அவரது குடும்பத்தினருக்கு இருந்த தனிச் சிறப்பு அவர்களது வீணை இசைக்கும் கலை. 
 
அந்த வீணா கான கலையைத் தமையன் குருராஜர் கற்றுத் தர, தம்பியும் கருத்துடன் கற்றுக் கொண்டார். வீணை மீட்டுவதில் வேங்கடநாதர் விற்பன்னரானார். வீணை இசை அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. 
 
நாட்கள் சென்றன. வேங்கடநாதருக்கு பிரம்மோபதேசம் செய்ய குருராஜர் எண்ணினார்.
 
ஆயிரத்து அறுநூற்று இரண்டாம் ஆண்டு, அவரது எட்டாவது வயதில் வேங்கட நாதருக்கு உபநயனத் திருவிழா நடைபெற்றது.  
 
வீணை இசைக்கக் கற்றுக் கொடுத்து, பிரம்மோபதேசத்தையும் செய்து வைத்த போதிலும், இளவல் வேங்கடநாதருக்கு முறைப்படி வித்தியாப்பியாசம் நடைபெற வேண்டுமென குருராஜர் விரும்பினார். 
 
குருகுல வாசத்துக்கு ஏற்ற இடமாக அவருக்குத் தோன்றியது, மதுரையிலிருந்த மகா பண்டிதரான லக்ஷ்மி நரசிம்மாச்சார்யாரின் இல்லம்.
 
ஆசிரியர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் வேங்கடநாதரின் மூத்த சகோதரி வேங்கடாம்பாளின் கணவர். 
 
சமஸ்கிருத இலக்கணங்கள், இலக்கியங்கள், சாத்திரங்கள், இதிகாச புராணங்கள், வேதங்கள், வேதாந்தம், தர்க்கம் ஆகிய அனைத்தையும் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யரிடம் கற்றார் வேங்கடநாதர்.
 
மதுரையில் தான் கற்க வேண்டியவற்றைக் கற்ற பின் வேங்கடநாதர், தமையனின் விருப்பப்படி புவனகிரி வந்து சேர்ந்தார். 
 
குடும்பப் பொறுப்புகளில் வேங்கடநாதன் ஈடுபட்டாலும், கும்பகோணம் மடத்தில் சுதீந்திரர் மூலராமருக்குச் செய்கின்ற பூஜைகளைப் போலவே, தானும் செய்ய வேண்டும் என்று விரும்பி மூலராமருக்குப் பூஜைகள் செய்து வந்தார்.
 
தம்பியின் கவனம் ஆன்மிகத்தில் அமிழ்ந்து போவதைக் கண்ணுற்ற குருராஜனின் இதயத்தில் சஞ்சலம் ஏற்பட்டது.
 
உலகில் பிறந்த உயிர்களுக்கு இல்லற சுகம் இயல்பானது. அந்த இல்லற வாழ்க்கை வேங்கடநாதனுக்கு இல்லாமல் போய் விடக் கூடாது என்று தமையன் குருராஜர் எண்ணினார். 
 
தந்தை இடத்தில் நின்று பிரம்மோபதேசம் செய்தது போலவே, சரியான வயதில் சகோதரனுக்குத் திருமணமும் செய்து வைக்க விரும்பினார் அவர். 
 
பக்தியிலும், ஆச்சாரத்திலும் அவ்வூரில் சிறந்து விளங்கியது ஒரு குடும்பத்தில் பிறந்த சரஸ்வதி என்னும் உத்தமியை வேங்கடநாதருக்குத் திருமணம் செய்து வைத்தார்.  
 
ராமனுக்கு வாய்த்த சீதை போல், வேங்கடநாதனுக்கு வாய்த்தாள் சரஸ்வதி. 
வேங்கடநாதர் லௌகீக வாழ்க்கையை ஏற்றார். 
 
வேதங்களைக் கற்பதில் காட்டிய துடிப்பை, குடும்பத்துக்கு வருவாய் தேடித் தருவதில் காட்டவில்லை வேங்கடநாதர். குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது. 
 
அந்தச் சமயத்தில், ஒரு திருமணத்தில் அந்தணர்களுக்கு அன்ன போஜனம் நடந்து கொண்டிருந்தது. 
 
வேங்கடநாதர் அங்கு உணவு உண்ணப் பந்தியில் அமர்ந்து இருந்தார். அவர் உடுத்தியிருந்த உடை, அவரது கோலம் ஆகியவற்றைக் கண்ட திருமண வீட்டினர் அவரைச் சற்று அலட்சியமாகவே நடத்தினார்கள். 
 
பந்தியில் அமர்ந்திருந்த அந்தணர்களோ, அவரைப் பந்தியில் உணவு உண்ண அனுமதிக்காததோடு, உழைத்து உண்ணுமாறு அவமரியாதையும் செய்தனர். 
அந்தக் கால கட்டங்களில், திருமணத்தில் உணவு உண்டவர்கள் உல்லாசமாகப் பூசிக்கொள்ள சந்தனம் அரைக்கப்பட்டு, வினியோகிக்கப்படும் வழக்கம் இருந்து வந்தது. 
 
வேங்கடநாதருக்குத் திருமண வீட்டினர் சந்தனம் அரைக்கும் பணியை நிர்ணயித்தார்கள். அவரும் முகம் சுளிக்காமல், சந்தனத்தைக் கல்லில் உரைத்து, அரைக்கும் வேலையில் ஈடுபட்டார். 
 
கை தன் பணியை இடையறாது செய்ய, வாய் வேதம் ஓத ஆரம்பித்தது. வேத பாராயணத்தின் ஒரு பகுதியாக அவர் அக்னி சூக்தத்தை மனனம் செய்யலானார். 
 
அக்னி சூக்தத்தின் மந்திர சக்தி சந்தனத்தில் ஏற, சந்தனம் நெருப்பாய்த் தகித்தது. அரைத்த சந்தனத்தைப் பூசிக் கொண்ட அந்தணர்களின் உடல் பற்றி எரிந்தது. 
 
தங்கள் குற்றத்தை உணர்ந்த அந்தணர்கள், வேங்கடநாதரின் கால்களில் வீழ்ந்து பணிந்தார்கள். அவரும் வர்ணசூக்தம் கூறியவாறு சந்தனம் அரைத்துத் தந்தார். அதைப் பூசிய பின்னர் அவர்களது உடல் எரிச்சல் தணிந்தது. 
 
வேங்கடநாதன் மானத்தையும், அவமானத்தையும் ஒன்றாகக் கருதும் பக்குவத்தை அப்போதே அடைந்திருந்தார்.  
 
அப்படிப்பட்டவரை அவமதித்தவர்கள் திருந்துவதற்காக, தெய்வமே தற்செயலாக அவரை அக்னி சூக்தம் உரைக்க வைத்தது. உருவம் கண்டு எள்ளி நகையாடுவது கூடாது என்ற பாடத்தை அந்தணர்களுக்கு, வேங்கடநாதன் மூலமாக தெய்வம் உலகுக்கு எடுத்து உரைத்தது.  
 
இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த போதிலும், நாட்கள் செல்லச் செல்ல, வேங்கடநாதரது மனம் ஞான மார்க்கத்தை நாடியது.
 
மனைவி மற்றும் தமையனின் அனுமதியுடன் கும்பகோணம் ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடாதிபதியாக வீற்றிருந்த சுதீந்திரர் வேங்கடநாதரை இன்முகத்துடன் வரவேற்றார். வேங்கடநாதரைத் தனது சிஷ்யர்களில் ஒருவராக ஆனந்தத்துடன் ஏற்றார்.  
ஸ்ரீமடத்தில் அந்தச் சமயத்தில் பல மாணாக்கர்கள் பாடம் படித்து வந்தார்கள். எனினும் வேங்கடநாதர் அளவுக்குத் தீவிரமாகப் பாடம் கேட்பவர் எவரும் இல்லை. 
 
ஒவ்வொரு நாளும் தான் கேட்ட பாடங்களில், தமக்கு எழும் சந்தேகங்களை, சுதீந்திரரிடம் கேட்டு அறிவார். விரைவிலேயே வேங்கடநாதர் குருவுக்கு ஆப்த சீடராக மாறினார்.  
 
மற்ற சீடர்களுக்கு இது சற்று பொறாமையை ஏற்படுத்தியது. வேங்கடநாதர் மேல் சிறு சிறு குற்றங்களை சொல்வதிலும், அவரை நையாண்டி செய்வதிலும் தங்கள் பொறாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 
 
இவ்வாறு அவர்கள் குறை சொல்வது சுதீந்திரரின் காதுகளையும் எட்டியது. இந்தச் சர்ச்சைக்கு முடிவு ஏற்பட வேண்டிய காலமும் வந்தது. 
 
மத்வாச்சாரியார் எழுதிய பாஷ்யத்துக்கு, ஜெயதீர்த்தர் எழுதிய விளக்க உரையான நியாய சுதா என்னும் நூலுக்கு, சுதீந்திரர் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். 
 
வேங்கடநாதர் ஆழ்ந்த கவனத்துடன் பாடக் குறிப்பு எடுத்து வந்தார். பாடம் மிகவும் கடினம் என்பதால் பல மாணாக்கர்களுக்குப் புரியவில்லை. சுதீந்திரர் அதை உணர்ந்து, 'பாடத்தை நாளை தொடரலாம்' என்று கூறி நிறுத்தினார்.
 
அன்று நள்ளிரவு. மறுநாள் மாணவர்களுக்கு இன்னும் எளிதாக எப்படி பாடத்தைப் புரியவைப்பது என்று யோசித்தவாறு மாணவர்கள் தங்கும் விடுதி வழியாக நடந்து வந்தார் சுதீந்திரர். 
 
விடுதியில் வேங்கடநாதனின் படுக்கை காலியாக இருந்தது. மற்ற எல்லா மாணவர்களும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வேங்கடநாதன் எங்கு போயிருப்பான் என்ற கவலையுடன் மடத்தை வலம் வந்தார் சுதீந்திரர்.
 
விடுதி அறைகளுக்கு வெளியே, நடுங்கும் குளிரில், சுருண்டு படுத்திருந்த வேங்கடநாதரைக் கண்டார். அது மட்டுமா? அவர் அருகே அப்போதுதான் அணைந்திருந்த விளக்கும், எழுத்தாணியும், சுவடிகள் பலவும் இருந்தன.
 
ஆர்வம் தாங்காமல் ஓலைச் சுவடிகளில் எழுதியிருந்தவற்றைப் படித்தவருக்கு வியப்புடன், பெருமிதமும், ஆனந்தமும் மிகுந்தது. காலையில் தான் நடத்திய கடினமான பாடத்திற்கு எளிமையான விளக்கங்கள் அந்தச் சுவடிகளில் இருந்தன.
 
சக மாணவர்களுக்குத் தூக்கம் கெடாமலும், அதே சமயம் தன் பணியும் நிற்காமலும் இருக்க, வெளியே வந்து இந்தச் சுவடிகளை அவர் எழுதியிருக்க வேண்டும் என்று உணர்ந்த சுதீந்திரருக்கு, வேங்கடநாதர் மேல் கருணை பொங்கியது.
 
குளிரில் படுத்திருந்த வேங்கடநாதரின் உடலின் மீது தன் காஷாய மேலாடையைப் போர்த்தி விட்டு இருப்பிடம் திரும்பினார். 
 
அசதியால் தன்னை மறந்து தூங்கி விட்ட வேங்கடநாதர் அதிகாலை எழுந்தார். குருநாதரின் மேலாடை உடலைப் போர்த்தியிருந்தது. ஆசிரியர் நடத்தும் பாடத்திற்கு தான் விளக்கம் எழுதினோமே என்றும், விடுதியை விட்டு வெளியே சென்று உறங்கினோமே என்றும், குற்ற உணர்வோடு விடுதிக்குத் திரும்பினார். காலை நியமங்களை முடித்துக் கொண்டு என்ன நடக்குமோ என்று அச்சத்துடன் வகுப்புக்குச் சென்றார். 
 
சுதீந்திரர், அவரை வெகுவாகப் பாராட்டியதோடு, வேங்கடநாதர் எழுதத் தொடங்கிய நூலுக்கு 'சுதா பரிமளம்' என்ற பெயரும் சூட்டினார். கூடவே அவருக்கு 'பரிமளாச்சார்யர்' என்ற பட்டத்தையும் வழங்கினார். 
 
குருவின் ஆசியாகக் கிடைத்த 'பரிமளாச்சார்' என்ற பட்டத்தை வேங்கடநாதர் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டார். 
 
(பயணம் தொடரும்)

-  சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles