நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி - 3

Friday, July 14, 2017

மந்திராலயம்

ஸ்ரீ ராகவேந்திரர் ஒரு சுபமுகூர்த்த நாளில் தன் குருநாதர் விஜயேந்திரரின் பிருந்தாவனத்தைப் பூஜிக்கும் பூஜகர்களைத் தேர்ந்தெடுத்தார். ஸ்ரீ மடத்தை நிர்வகிக்க சீடர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தார். 

அவருடைய இந்தச் செயல்கள் உடன் இருந்தவர்களுக்கு ஓர் உண்மையை எடுத்துரைத்தன. பகலில் வட்டமிடும் பறவை மாலையானதும், கூட்டுக்குத் திரும்புவது போல, மகானும் கூட்டுக்குத் திரும்பப் போகிறார், விரைவில் உடலைத் துறக்கப் போகிறார் என்பதே அது! 

ஒரு நாள் மடத்திற்கு மூன்று ஜோதிடர்கள் வந்தார்கள். ராகவேந்திரரின் ஜாதகத்தை அவர்கள் அலசி ஆராய்ந்தார்கள். ராகவேந்திரரின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் என்று முதலாமவரும், முன்னூறு ஆண்டுகள் என்று இரண்டாமவரும், எழுநூறு ஆண்டுகள் என மூன்றாமவரும் கூறினார்கள். 

மூவரும் ஜோதிட ஞானத்தில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் இல்லை. பின்னர் எப்படி மூன்று கணிப்புகள் என அங்கு பெரும் குழப்பம் நிலவியது.  

'நான் உடலுடன் இந்த உலகில் இருக்கப் போவது நூறு வருடங்கள். எனது நூல்கள் மூலம் இருக்கப் போவது முன்னூறு வருடங்கள். என் பிருந்தாவனத்தில் சூட்சும சரீரத்துடன் இருந்து பக்தர்களை அனுக்கிரகிக்கப் போவது எழுநூறு வருடங்கள். ஆகவே மூவருமே சரியாகத்தான் கணித்துள்ளார்கள்' என்று கூறி குழப்பத்தை ராகவேந்திரரே தீர்த்து வைத்தார். 

நாட்கள் சில சென்றன. ஒரு நாள் வகுப்பில் சீடர்களுக்குத் தத்துவ விளக்கம் அளித்துக் கொண்டிருந்த ராகவேந்திரர், திடீரென்று எழுந்து கை கூப்பி நின்றார். கண்களை மூடி தியானித்த அவர் கழுத்தில், வானிலிருந்து துளசி மாலை ஒன்று விழுந்தது. 

சீடர்கள் வானை நோக்கினார்கள். அங்கு தேவருலக புஷ்பக விமானத்தில் விண்ணுலகம் சென்று கொண்டிருந்த கிருஷ்ண த்வைபாயனர் என்னும் மகான், ராகவேந்திரரை ஆசீர்வதித்து, தன் இரண்டு விரல்களை மூன்று முறை காட்டிச் சென்றதைக் கண்டார்கள்.

அவர் காட்டிய முத்திரைக்குப் பொருள் என்ன என்று சீடர்களுக்குப் புரியவில்லை.  

தன் உடலை மறைக்க இன்னும் எத்தனை காலம் உள்ளது என கேட்க, த்வைபாயனர் ‘இன்னும் இரண்டு வருடம், இரண்டு மாதம், இரண்டு நாள்’ என மறுமொழி அளித்துச் சென்றதாக ராகவேந்திரரே சீடர்களுக்கு அதன் பொருளை விளக்கினார். தங்களது குருவின் கழுத்தில் விழுந்த அந்தத் துளசி மாலை, ககனத்தில் அவருக்கு விழுந்த அந்திம மாலை என்பதை உணர்ந்து அவர்கள் துயரமெய்தினார்கள். 

ஸ்ரீ ராகவேந்திரர் தமது குருநாதர்களான சுதீந்திரர் மற்றும் பத்மநாப தீர்த்தர் ஆகியோரது பிருந்தாவனங்களுக்கு உரிய வழிபாடுகள் செய்துவிட்டு, குடந்தையிலிருந்து  தனது பிருந்தாவனப் பிரவேச யாத்திரையைத் தொடங்கினார். இனி அவரது திருமுகத்தை எப்போதுமே தரிசிக்க இயலப் போவதில்லை என்பதை அறிந்த குடந்தை நகரமே திரண்டு வந்து கண்ணீருடனும், துயரத்துடனும், வலியுடனும் அவரை வழியனுப்பி வைத்தது.

பிருந்தாவனப் பிரவேசம் என்றால் என்ன? பிருந்தாவனம் என்றால் என்ன?

வைஷ்ணவத்தைச் சேர்ந்த மகான்கள், ஜீவமுக்தி அடைய அதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பர். அந்தப் பகுதியில் அவர் தியான நிலையில் அமர்ந்து கொள்வர். மகான் ஒருவர் தமது உடலைத் துறப்பதற்காக தாமே தேர்ந்தெடுத்த இடத்தில் அமைந்திருக்கும் குகையிலோ, அமைக்கப்படும் பள்ளத்திலோ தியானத்தில் அமர்வதே பிருந்தாவனப் பிரவேசம்!  
பின்னர் அந்த மகானின் திருவுடல் மூடப்படும். அந்த இடத்துக்கு மேல் துளசி மாடம் பொருத்தப்படும். அவ்வாறு மகானின் உடலை உள்ளிருத்திய இடமே பிருந்தாவனம் என்று அழைக்கப் பெறும். 

சைவத் துறவிகளின் ஜீவமுக்தியிடத்தின் மீது சிவலிங்கம் ஸ்தாபிக்கப்படும். இதற்கு அதிஷ்டானம் என்று பெயர்.

ராகவேந்திரர் ஆதோனி வந்தடைந்தார். அங்கு திவானாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த வெங்கண்ணா, குருவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார். திவான் வெங்கண்ணா மூலம் ராகவேந்திரரின் ஆதோனி வருகையை மாசூத் கான் அறிந்தார். எழுத்தறிவே அற்ற திவான் வெங்கண்ணா, ஸ்ரீ ராகவேந்திரரின் அருளால்தான் ஓலையைப் படித்து, அவருக்கு குழந்தை பிறந்த செய்தியைக் கூறினார் என்பதை திவான் மூலம் ஏற்கெனவே நவாப் மாசூத் கான் அறிந்திருந்தார். 

அது மட்டுமன்றி ஸ்ரீ ராகவேந்திரரின் மகத்துவங்கள் அனைத்தையும் தமது திவான் மூலம் கேட்டு அறிந்திருந்த போதிலும், நவாபுக்கு ராகவேந்திரர் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. இருந்தாலும் மகானாகப் போற்றப்படும் ராகவேந்திரரைக் காண அவர் உள்ளம் விழைந்தது. தான் வரப்போவதாக திவானிடமும் தெரிவித்தார். 

தரிசனத்துக்குப் புறப்பட இருந்த சமயத்தில் அவருக்கு குயுக்தியான ஓர் எண்ணம் உண்டாயிற்று. ‘ராகவேந்திரர் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவரா... இல்லையா? என்று சோதித்துப் பார்த்து விட்டால் என்ன?’ என்பதே அது! 

வெள்ளித் தட்டில் மாமிசத் துண்டங்களை வைத்து, பட்டுத்துணி கொண்டு போர்த்தி எடுத்துச் சென்று ராகவேந்திரரிடம் சமர்ப்பித்தார். 'இந்த எளிமையான காணிக்கையை உங்கள் மூலராமருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்'. ராகவேந்திரர் புன்னகைத்தார். 'உங்கள் விருப்பம் அதுவானால், அப்படியே செய்வோம்' என்றார். தட்டின் மீது தனது கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தைத் தெளித்து, பட்டுத் துணியை விலக்கினார். தட்டில் வைக்கப்பட்டிருந்த மாமிசத் துண்டங்கள், மலர்களாகவும், பழங்களாகவும் உருமாறியிருந்தன.

நவாப் மிரண்டு போனார். ராகவேந்திரரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார். 'மன்னிப்புக் கேட்ட கணமே செய்த தவறு மறைந்து விட்டது!' என்று அருளினார் ராகவேந்திரர். 'யார் எதை மூலராமருக்குக் காணிக்கையாக வழங்கினாலும் அது அவரால் உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்படும்' என விளக்கமும் அளித்தார்.

தன் சிற்றறிவினாலும், கர்வத்தாலும், மரியாதைக்கு உரியவருக்குச் செய்த அவமரியாதையை நினைத்து வருந்திய மாசூத் கான், ஸ்ரீ ராகவேந்திரரை தன்னுடைய ராஜ்யத்திலேயே நிரந்தரமாகத் தங்கி தனக்கும், குடிமக்களுக்கும் அருள் புரியுமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார். 

நவாப் மற்றும் திவானின் வற்புறுத்தலால் அரண்மனையில் ராகவேந்திரர் சில காலம் தங்கி இருந்து மூலராமருக்கான பூஜைகளைத் தவறாமல் செய்து வந்தார். ஒரு நாள் திவான் வெங்கண்ணா மூலம், ராகவேந்திரர், நவாப் மாசூத் கானிடம், கொஞ்சம் நிலத்தை தானமாக அளிக்குமாறு கேட்டார். 

நவாபும், குருவின் வேண்டுகோளைத் தனது பாக்கியமாகக் கருதினார். ராகவேந்திரரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். பின் திவானிடம் 'ஸ்ரீ ராகவேந்திரர் விரும்பும் நிலப்பகுதியை அவருக்கு வழங்கி, அவரது ஆசீர்வாதத்தை யாசியுங்கள்..' என்று பணிவுடன் கூறினார். திவான் வெங்கண்ணா, குருவின் பாதங்களைப் பணிந்து. விவரம் தெரிவித்தார்.

'துங்கபத்திராவின் கரையோரம் அமைந்திருக்கும் மாஞ்சாலா கிராமத்தை அளிக்கச் சொல்...' என்றார் ராகவேந்திரர். நவாபும், மாஞ்சாலா கிராமத்தை காணிக்கையாக அளித்தார்.  மாஞ்சாலா, மந்த்ராலயமாக மாறப் போகிறது என்று ராகவேந்திரருக்கு அன்றே தெரிந்து இருந்தது.

மாஞ்சாலா வந்தடைந்த ராகவேந்திரர் மாஞ்சாலம்மனை வணங்கினார். தொடர்ந்து அந்தக் கிராமத்துக்குக் காவலாக இருந்து அருளுமாறு வேண்டினார். சீடர்கள் புடைசூழக் கிராமத்துக்குள் நுழைந்தார். அங்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். 'என் பிறவிக்குக் காரணமாயிருந்த வேங்கடேசப் பெருமானுக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும்...' என்றார்.

வேலைகள் துரிதமாக நடந்தேறின. வேங்கடாசலபதிக்கு ஓர் ஆலயம் உருவானது. ராகவேந்திரர் வேங்கடேசனின் திருச்சிற்பத்தை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார். ஊர் மக்களுக்கோ, அழகான ஆலயம் அமைந்தில் மட்டற்ற மகிழ்ச்சி. ராகவேந்திரர் வந்து சேர்ந்தது முதல் அந்தப் பகுதியே பக்திக் கடலில் மூழ்கியது. 

ராகவேந்திரரின் தீவிர பக்தரான அப்பண்ணாச்சார்யர் என்னும் அந்தணர் அங்கு வேதம் பயில்வித்துக் கொண்டிருந்தார். அன்னை தன் அருமைக் குழந்தைக்கு செய்வது போல, அப்பண்ணச்சார்யர் தமக்குச் செய்த தன்னலமற்ற சேவையால் கவரப்பட்ட ராகவேந்திரர், பல நாட்கள் அவருடன் தங்கினார். அவர் அளித்த பாயசமும், பருப்புத் துவையலும் ராகவேந்திரருக்கு தினந்தோறும் பிரசாதமானது.  

அப்பண்ணாச்சார்யரின் வீட்டின் பின்புறம் இருந்த புற்றிலிருந்து சேஷதேவர் தினமும் பாம்பு ரூபத்தில் வந்து அவர் அளிக்கும் பாலை அருந்திப் போவதும் வழக்கமாகியது. அப்பண்ணச்சார்யரின் அன்புப் பிடியிலிருந்து விலகாமல் தான் பிருந்தாவனத்தில் பிரவேசிக்க முடியாது என்று உணர்ந்த ராகவேந்திரர், அவரை யாத்திரைக்கு அனுப்பினார். 

தன் காலத்துக்குப் பிறகு சாமான்ய மக்கள் அச்சப்படக் கூடாது என்று வீட்டின் பின்புறம் இருந்த புற்றையும் கலைத்து, தானும் அப்பண்ணாச்சார்யரின் இல்லத்திலிருந்து புறப்பட்டு மந்திராலயம் வந்தடைந்தார்.

அவர் மந்திராலயம் வந்ததும் பிருந்தாவனப் பிரவேசப் பணிகள் துரிதமடைந்தன. ஸ்ரீ மடத்தின் அடுத்த பீடாதிபதியாக ராகவேந்திரரின் பூர்வாசிரம தமையனின் பேரனான வெங்கண்ணாச்சார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தகுதி வாய்ந்த பண்டிதரான அவர் யோகீந்திர தீர்த்தர் என்ற பெயருடன் மடத்தின் பொறுப்புகளை ஏற்றார். 

பின்னர், ராகவேந்திரர், திவான் வெங்கண்ணாவை துங்கபத்திராவின் கரையோரம் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று 'இங்கே தோண்டிப் பார்...' என்றார். அந்த இடத்தில் தோண்டியதும், சற்று ஆழத்தில் ஒரு யாகக் குண்டம் தட்டுப்பட்டது. வெங்கண்ணா வியப்பெய்தினார். 'வெங்கண்ணா, கிருத யுகத்தில் பிரகலாதனாகப் பிறப்பெடுத்திருந்தேன். இங்கு பல யாகங்களைச் செய்து, நாராயணனின் திருவருளைப் பெற்றேன். 

'துவாபர யுகத்தில், தர்மர் அசுவமேத யாகம் செய்த போது யாகக் குதிரையை இங்கு அனுசால்வன் என்ற மன்னன் எதிர்த்தான். அனுசால்வனுடன் போர் புரிந்த அர்ச்சுனனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. 

'அனுசால்வனின் ரதம், யாகபூமி அமைந்த இந்தப் புனித மேட்டில் நின்று கொண்டிருப்பதை கிருஷ்ணர் கவனித்தார். அர்ச்சுனனை அவர் சற்றுப் பின்வாங்கச் சொல்ல, அனுசால்வனும் அர்ச்சுனனை நெருங்கும் விதமாக இந்த யாகபூமியை விட்டகன்று சென்று போரிட்டான். அர்ச்சுனன் வெற்றி பெற்றான். 

'எடுத்த காரியம் எதிலும் வெற்றி கிடைக்கும் புனித இடம் இது. எனது பிருந்தாவனம் இந்த இடத்தில் தான் அமைக்கப்பட வேண்டும். மாஞ்சாலா கிராமம் இனி ‘மந்த்ராலயம்’ என்று அழைக்கப்பெறும்..' ராகவேந்திரரின் முந்தைய அவதாரங்களைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி ஒருபுறம், அவர் பிருந்தாவனப் பிரதேசம் செய்யப் போகிறார் என்ற சேதி தந்த வேதனை மறுபுறம் வெங்கண்ணாவைத் தாக்கின!

வெங்கண்ணா அவரைப் பணிந்து, 'குருவே, நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?' என்று தழுதழுப்புடன் யாசித்தார். ‘மாஞ்சாலம்மனை தரிசித்த பின்பு நீ செய்ய வேண்டியது என்ன என்று கூறுகிறேன்’ என்று கூறிவிட்டு ஸ்ரீ ராகவேந்திரர் மாஞ்சாலம்மனை தரிசிக்கச் சென்றார். மாஞ்சாலம்மா மந்திராலயப் பிரதேசத்தின் காவல் தெய்வம் மட்டுமன்று. பிரகலாதரின் குல தெய்வமும் கூட! 

ராகவேந்திரர் அந்த அன்னையின் ஆலயத்துக்குச் சென்று அவளை தரிசித்து, 'உன் இடத்தில் எனக்கொரு இடம் தா!' என்று வேண்டினார். 
ஜகத்குருவின் பணிவாலும், பக்தியாலும் கட்டுண்டு மாஞ்சாலம்மா அவருக்குக் காட்சி அளித்தாள். 'ராகவேந்திரா! உன் பிருந்தாவனம் இங்கு அமைந்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் உன்னை நாடி இங்கு வருவார்கள். நான் குடி இருக்கும் இந்த ஆலயத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?' என்று அன்னை கேலியாக முறையிட்டாள்.
 
'அன்னையே! என்னை நாடி வரும் சீடர்களும், பக்தர்களும் மந்திராலயம் வந்ததும் உன்னை வணங்கிப் பின்னரே என்னைத் தேடி வரட்டும். உன் தரிசனம் கிட்டியவர்களுக்கே எனது அருள் கிட்டும்' என்று ராகவேந்திரர் அன்னையிடம் உறுதி கூறினார். 

மாஞ்சாலம்மா ஸ்ரீ ராகவேந்திரரை ஆசீர்வதித்தாள். அதன் பின்னர் ராகவேந்திரர் திவான் வெங்கண்ணாவிடம், 'மாதவரம் சென்று அங்கிருக்கும் பாறையை எடுத்துவர வேண்டும். அதில்தான் எனது பிருந்தாவனம் அமையப் போகிறது...' என்றார். மந்த்ராலயத்திலிருந்து ஆறு மைல் தூரத்தில் இருக்கும் மாதவரத்திலிருந்து அவ்வாறே பாறை கொண்டு வரப்பட்டு, குருநாதர் திருவுள்ளப்படி அழகிய கர்ப்பக்கிரகமும், பிருந்தாவனமும் அமைக்கப்பட்டது. 

ராகவேந்திரர் அந்த பிருந்தாவனத்தைப் பார்த்ததும், 'இதுவல்ல நான் குறிப்பிட்ட பாறை' என்றார். 'இது பின்னால் வரவிருக்கும் மடாதிபதிக்குப் பயன்படும். எனக்குத் தேவையானதை நானே தேர்ந்தெடுக்கிறேன்..' என்றார். மறுநாள் காலையில் பூஜைகள் முடித்து, ராகவேந்திரர் மாதவரத்துக்குப் பயணமானார். நதிக்கரையோரம் நடந்து, ஒரு குறிப்பிட்ட பாறையைத் தேர்ந்தெடுத்தார். கண்களை மூடி ஆனந்தித்தார்.

'இது சாதாரணப் பாறை அன்று. ஸ்ரீராமன் வனவாசத்தின் போது இந்தப் பாறையில் அமர்ந்து இளைப்பாறினான்..' என்றார். அப்புண்ணியப் பாறை மந்திராலயத்துக்குக் கொண்டு வரப்பட்டது. குருவின் வழிகாட்டுதல்படி, பாறையின் ஒரு பகுதி பிருந்தாவனம் அமைக்கவும், இன்னொரு பகுதி ஆஞ்சநேயரின் விக்கிரகம் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. 

தனது பிருந்தாவனத்தில் ஆயிரத்து இருநூறு சாளக்கிராமக் கற்கள் நிரப்பப்பட வேண்டும் என்று ராகவேந்திரர் விரும்பினார். வெங்கண்ணா, கண்டகி நதியிலிருந்து இந்த அரிய வகைக் கற்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். ராகவேந்திரர் தனது பிருந்தாவன பிரவேச தினத்தை அறிவித்தார். அது ஆங்கில ஆண்டு ஆயிரத்து அறுநூற்று எழுபத்தொன்று, ஆகஸ்ட் மாதம் பதினோராம் நாள். தமிழ் விரோதிக்ருது ஆண்டு, சிராவண மாதம், கிருஷ்ணபட்சம், த்விதீயை திதி!

தேதி குறித்ததும் பக்தர்கள் பெரும் துயரில் ஆழ்ந்தனர். ராகவேந்திரரோ இது தெய்வ சங்கல்பம் என ஆறுதல் கூறினார். ஆயிரத்து அறுநூற்று எழுபத்தொன்று, ஆகஸ்ட் மாதம் பதினோராம் நாள். பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்த ராகவேந்திரர் எப்போதும் போல நீராடி, நித்ய அனுஷ்டானங்களையும், ஜப, தியானங்களையும் செய்து முடித்தார். மூலராமருக்குச் செய்ய வேண்டிய ஆராதனைகளைச் செய்து முடித்தார்.

மூலராமருக்கு அவர் பூஜை செய்யும் அழகை இனிக் காண முடியாதே என்ற நினைப்பே கூடியிருந்தவர்களின் கண்களைக் கலங்கச் செய்தது. கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களும், மந்திராட்சதைப் பிரசாதமும் அளித்தார். பின்னர் வீணையை மீட்டியவாறே 'இந்து நனகே' என்ற பாடலைப் பாடலானார். தனக்கு இட்ட பணியை முடித்த பின்னும், தன்னை மீட்க வாராத காரணம் என்ன? என்ற கருத்துடன் அமைந்த உருக்கமான அந்தப் பாடலைக் கேட்ட பக்தர்களின் கண்கள் நீரால் நிறைந்தன. 

துங்கபத்திரா கரைபுரண்டு ஓடியது. ராகவேந்திரருக்காக, வருணதேவரும் குளிர்ச்சியான மழையைப் பொழிந்தார். பிரம்ம தண்டம், கமண்டலம், ஜபமாலை இவற்றுடன் பிருந்தாவனம் நோக்கிப் புறப்பட்டார். துளசி மாலை கழுத்தை அலங்கரிக்க, கண்கள் கருணை மழை பொழிய, உடல் திவ்ய தேஜசுடன் பிரகாசிக்க, குரு நடந்தார். அவரைக் கண்டதும் 'குரு ராகவேந்திரா' என்ற மந்திர ஒலி வானைப் பிளந்தது. ராகவேந்திரரின் வலது கரம் அபயம் அளித்தது, 

'குருவே, உங்களை தரிசிக்காமல் எப்படி பொழுது விடியும்? எங்களையெல்லாம் பிரிந்து போக உங்களுக்கு எப்படி மனது வந்தது?' என்று வெங்கண்ணா கதறினார்.

(பயணம் தொடரும்)

- சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles