நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி - 2

Friday, June 30, 2017

மந்திராலயம்

தன் ஆசிரியர் திருவாயால் பரிமளாச்சார் என்ற பட்டம் பெற்றதும், வேங்கடநாதரின் பெருமை குன்றின் மேல் வைத்த விளக்காக ஒளிர்ந்தது. கல்வியில் கரை கண்ட வேங்கடநாதர், கும்பகோணத்திலிருந்து புவனகிரி சென்றடைந்தார். அவரது மனைவி சரஸ்வதி, வேங்கடநாதரை ஆனந்தத்துடன் வரவேற்றாள்.  
 
 

இல்லறத்தில், நல்லறம் நடத்திய தம்பதியினருக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. லக்ஷ்மி நாராயணன் என்ற பெயருடன் அந்தக் குழந்தை வளர்ந்தது.  வேதங்களைக் கற்பதில் காட்டிய துடிப்பை, குடும்பத்துக்கு வருவாய் தேடித் தருவதில் காட்டவில்லை வேங்கடநாதர். தான் கற்றதைப் பிறருக்குக் கற்பிப்பதற்குக் காசு வாங்கக்கூடாது என்று பிடிவாதம் கொண்டிருந்தார். 
 
வறுமை என்னும் கொடிய நோய் குடும்பத்தைத் தீவிரமாகப் பற்றியது. விரதமாக இருந்த உபவாச தினங்கள், தினசரி வாழ்க்கையாக மாறின. வறுமையின் தீவிரம் குழந்தை லக்ஷ்மி நாராயணனையும் வாட்ட, மனைவி புகலிடமாக ஸ்ரீமடத்தை சென்று அடையலாம் என்று நினைவூட்டினாள்.
 
வேங்கடநாதர் குடும்பத்தை மீண்டும் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்றார். திரும்பி வந்த கன்றைக் கண்டு தாய்ப்பசு கொள்ளும் பரவசம் கொண்டார் சுதீந்திரர். மடத்தின் ஆதரவில் குடும்பம் ஆனந்தமாக நடந்தது. சுதீந்திரர் வயது முதிர்ந்து தள்ளாமையை எய்தினார். மத்வாச்சார்யர் முதல் பல ஆச்சார்யர்கள் தொடர்ந்து செய்த மூலராமர் பூஜை இடையறாது நடைபெற வேண்டும் என்ற எண்ணம் அவரை வருத்தியது.  தனித்திருந்த ஒரு சந்தர்ப்பத்தில் சுதீந்திரர் வேங்கடநாதரிடம் மெள்ளப் பேச்சைத் துவக்கினார்.
 
'வேங்கடநாதா, என்னை மூலராமன் தன்னருகில் அழைத்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது. எனக்குப் பின் மடத்தின் பொறுப்புக்களை முழுமையாக ஏற்று நிர்வகிக்க நீதான் சிறந்தவன்!'
 
வேங்கடநாதன் நடுங்கினார். கண்களில் நீர் கரை புரண்டது. 'என் மனைவி-மகனிடம் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவனாக அல்லவா வாழ்ந்து வருகிறேன்? பற்றற்ற சந்நியாசியாக மடத்தின் பொறுப்புகளை ஏற்கும் பக்குவம் எனக்கேது?' என்று வேங்கடநாதர் குருவின் வேண்டுகோளைத் தழு தழுத்த குரலில் மறுத்தார். வேங்கடநாதர் மறுத்தது கண்டு சுதீந்திரரின் மனம் வருந்தத்தான் செய்தது. இருந்தாலும் இல்லறத்தில் ஈடுபட்டு விட்ட வேங்கடநாதரை அதற்கு மேல் வற்புறுத்த, அவரது இதயம் இடம் கொடுக்கவில்லை. 
 
சுதீந்திரர், அடுத்ததொரு சீடரைத் தன் இளவலாகத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு ‘யாதவேந்திரர்’ என்று திருநாமகரணம் செய்து சந்நியாசம் வழங்கினார். யாதவேந்திரர் மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டார். திடீரென்று சுதீந்திரர் உடல்நலம் குன்றினார். மடத்துக்குத் திரும்பச் சொல்லி யாதவேந்திரருக்குச் சேதி அனுப்ப இயலாத தொலைவில் அவர் இருந்தார். 
 
‘எங்கே மூலராமருக்கான பூஜை தடைப்பட்டு விடுமோ?’ என்று சுதீந்திரர் கவலை கொண்டார். அவரது கனவில் மூலராமர் பிரத்தியட்சமானார். 'வேங்கடநாதனிடம் மீண்டும் துறவறம் பற்றி எடுத்துச் சொல். அவன்தான் உனக்குப் பின் எனக்கான பூஜைகளைச் செய்ய வல்லவன்...'
 
மூலராமரின் ஆணை கேட்டு சுதீந்திரர் நிம்மதி கொண்டார். விடிந்ததும் வேங்கடநாதனை அழைத்தார். கனவில் மூலராமர் இட்ட கட்டளை பற்றிச் சொன்னார். 'மகனுக்கு இன்னும் உபநயனம் கூடச் செய்விக்கவில்லை. ஒரு தந்தையின் கடமைகளிலிருந்து தவறிவிட்டு துறவறம் மேற்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை' என்று வேங்கடநாதன் இப்போதும் மறுத்தார். 
 
குருவிடம் மறுத்துவிட்டாலும் வேங்கடநாதனின் மனம் ‘குருவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே?’ என்று தவித்துத் துடித்தது. அன்றிரவு மனைவியும், மகனும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். வேங்கடநாதன் உறக்கம் வராமல் விழித்திருந்தார்.
 
திடீரென்று அறையில் கண்களைக் கூசச் செய்யும் ஓர் ஒளி வெள்ளம். சுகந்த மலர்களின் நறுமணம். தெய்விகமான இசையின் சுருதி. வேங்கடநாதன் பிரமித்து எழுந்து அமர்ந்தார். அவருக்கு எதிரில் கலைவாணி பிரத்தியட்சமாகி இருந்தாள். 'மகனே, உன்னை யார் என்று உணராமல் நீ தவிக்கிறாய். நீ சத்யலோகத்து சங்குகர்ணன். கிருத யுகத்தில் பிரகலாதன். துவாபர யுகத்தில் பாஹ்லீக மன்னன். கலியுகத்தில் வியாசராஜ தீர்த்தராக அவதரித்தாய். இப்போது இந்தப் பிறப்பு எடுத்துள்ளாய்! கல்வி, பக்தி இரண்டின் மேன்மையையும் உலகுக்கு எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்துவது உன் கடமை. நீ துறவறம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். தயங்காதே..'
 
கலைவாணியின் குரல் அவருள் புகுந்து, உயிர் நரம்புகளை மீட்டியது. குடும்பம், பற்று, பாசம் என்ற தளைகள் அக்கணமே அறுபட்டன. பரிபூரண ஞானம் நெஞ்சை நிரப்பியது. வேங்கடநாதர் மனம் தெளிந்தார். மறுநாள்! சுதீந்திரரைத் தேடிச் சென்று அவரது பாதங்களில் விழுந்தார். முந்தின இரவு கலைமகள் தன் முன் தோன்றி விவரித்ததை குருவிடம் பகிர்ந்து கொண்டார். மகனுக்கு உபநயனம் செய்வித்த பிறகு, சந்நியாசம் மேற்கொள்ளத் தயார் என்று பகர்ந்தார்.
 
நல்ல நாள் பார்த்து சிறப்பான முகூர்த்தத்தில் மகன் லட்சுமி நாராயணனுக்கு உபநயனம் செய்வித்தார். மகனையும், மனைவியையும் தன் அண்ணனுடன் அனுப்பி வைத்தார். தங்கள் இருவரையும் கணவன் பிரியத் துணிந்த காரணம் புரிந்தும், அதை வெளிப்படையாக ஏற்கும் பக்குவம் இன்றி, சரஸ்வதி வேதனை நிரம்பிய நெஞ்சத்துடன் புறப்பட்டாள்.
 
ஆயிரத்து அறுநூற்று இருபத்தோராம் ஆண்டு (1621). தமிழ் ருத்ரோத்காரி வருடம். வேங்கடநாதருக்கு, சந்நியாசம் வழங்க நாள் குறிக்கப்பட்டது. வேங்கடநாதன் தன் இல்லறத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ள வசதியாக, தஞ்சை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  வைகறைப் பொழுதில், வடவாறு நதிக்கரையில், ஆன்றோரும், சான்றோரும் கூடியிருந்தனர். வேங்கடநாதன் குளிர்ந்த நீரில் இறங்கினார். சந்நியாசத்துக்கு முன்னதாகச் செய்ய வேண்டிய சடங்குகளுக்குச் சந்தோஷமாக உடன்பட்டார். சிகை இழந்தார். குடும்பத்தின் மீதுள்ள பற்றினை இழப்பதாக உறுதி பூண்டார். தன் குருவின் முன்னிலையில், இல்லற உடை நீக்கிக் காவி உடுத்திக் கரையேறினார்.
 
வேங்கடநாதருக்குச் சந்நியாசம் அருளப்பட்டது. அவர் செவியில் மந்திரம் ஓதப்பட்டு, மங்கள தீர்த்தத்தில் குளிப்பாட்டப்பட்டார். புதிய இளம் துறவியை சுதீந்திரர் ஆசீர்வதித்து ‘ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்’ என்று நாமகரணம் செய்வித்தார். மடத்தின் அத்தனை பொறுப்புகளும் ராகவேந்திரர் வசம் ஒப்படைக்கப்பட்டன. மூலராமர் உட்பட மடத்தின் விக்கிரகங்களுக்குப் பூஜை செய்யும் உரிமை ராகவேந்திரருக்கு வழங்கப்பட்டது. 
 
வேங்கடநாதர் ராகவேந்திர தீர்த்தராகப் புதுப் பிறவி அடைந்து விட்டார். ஆனால் அவரது மனைவி, சரஸ்வதி?
 
வேங்கடநாதன் துறவறம் பூண்ட சேதி கிடைத்ததும் சரஸ்வதி நரக வேதனை கொண்டாள். வாழ்க்கையே சூன்யமாகத் தோன்றியது. மகனைப் பொறுப்பான உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, ராகவேந்திரரிடம் நியாயம் கேட்கும் பொருட்டு, தஞ்சையை நோக்கிப் பயணமானாள்.  ஆனால் அவரின் தூய்மையான துறவறத்துக்குக் களங்கம் போல் அவர் எதிரில் போய் நிற்பது பாவமில்லையா? சரஸ்வதி மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள். இயற்கையாக மரணம் சம்பவிக்காமையால், அவள் பிசாசாக உருக்கொண்டு அலைய நேரிட்டது. அவளது ஆவி ராகவேந்திரரின் முன் தோன்றி, வேதனையில் அழுது அரற்றியது.
 
ராகவேந்திரரோ இப்போது உலகத்துக்கே சொந்தமானவர். உலகத்தவர் அனைவரின் சங்கடங்களையும் நீக்கும் கருணையே வடிவான ஜகத்குரு, அஞ்ஞானியான பெண்ணை அலைய விடுவாரா?  
 
மந்திரப் பிரயோகத்துடன், தனது கமண்டல நீரை அவள் மீது தெளித்தார். கர்ம வினைகளிலிருந்து அவளை விடுவித்தார். அவளும் பிசாசு ரூபம் நீங்கி, பிறப்பு, இறப்பு அற்ற முக்தி நிலையை அடைந்தாள். தகுதியானவர் கையில் மடத்தின் பொறுப்பை விட்ட திருப்தியில் சுதீந்திரர் யாத்திரைக்குக் கிளம்பினார். ஆயிரத்து அறுநூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு அவர் ஆனேகுந்தியில் நவ பிருந்தாவன க்ஷேத்திரத்தில் பிருந்தாவனஸ்தர் ஆனார். 
 
ராகவேந்திரருக்கு மூத்தவரான யாதவேந்திரர் தன் இறுதிக் காலத்தை கிருஷ்ணா நதிக்கரையில் கழித்தார். முத்தர மலையில் தன் கடைசி சுவாசத்தை விடுவித்தார். ராகவேந்திரர் மடத்தின் பீடாதிபதியாக, தலைமைப் பொறுப்பை ஏற்றார். 
 
காலைக் கதிரவன் உதிப்பதற்கு முன்பாகவே ராகவேந்திரர் எழுந்திருப்பது வழக்கம். எழுந்த உடன் தெய்வங்களை வணங்குவார்.  அங்கிருந்து காவிரிக் கரைக்கு எழுந்தருளும் ராகவேந்திரர், புனித காவிரியில், சாஸ்திர முறைப்படி நீராடுவார். காயத்திரி மந்திர உச்சாடனையுடன், மடித் துணியை உடுத்திய பிறகு. கோபி சந்தனம் அணிந்து கொள்வார். மடத்துக்குத் திரும்புவார். குருகுலத்தின் மாணவர்களுக்கு அரிய விஷயங்களையும், எளிமையாகப் புரியும்படி எடுத்துரைப்பார்.  நண்பகலில் மூலராமருக்குப் பூஜைகள் செய்வார், அவர் பூஜை செய்யும் அழகைக் காண ஆசையுடன் மக்கள் கூடியிருப்பர். 
 
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு அட்சதையும், தீர்த்தமும் விநியோகிப்பார். அனைவருக்கும் வயிறார உணவு வழங்கி மகிழ்வார். மூலராமருக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தைத் தானும் பிக்ஷையாக ஏற்பார். 
 
உணவுக்குப் பின் அவருடைய எழுத்துப் பணி துவங்கும். கடினமான சுலோகங்களுக்கும் யாவர்க்கும் விளங்கும்படி விரிவுரை எழுதுவதை விரும்பிச் செய்வார். அந்தி வேளை ஸ்நானத்திற்கு பிறகு மூலராமருக்குப் பூஜை, தியானம். இரவு மீண்டும் எழுத்துப் பணி தொடரும். 
 
ஸ்ரீ மடம் அவர் காலத்தில் பல சிறப்புகள் பெற்று பக்தர்களின் அடைக்கலத் தலமாக விளங்கியது. துயரோடு வந்த பக்தர்கள், தங்கள் இடர் நீங்கிச் சென்றார்கள். கேள்விகளோடு வந்த பண்டிதர்கள் பதில் கிடைத்த திருப்தியுடன் திரும்பிச் சென்றார்கள். 
ஸ்ரீ மடத்தின் வழக்கப்படி, ராகவேந்திரர் பல திவ்ய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரையை மேற்கொண்டார். கல்விக்கு இணையாக, கடவுள் பக்தியும் மக்களிடம் பரப்பப்பட வேண்டும் என்று ராகவேந்திரர் கருதினார். 
 
ராகவேந்திரர் கல்லிடைக்குறிச்சிக்கு வந்திருந்தபோது ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஓர் ஏழை பிராமணன் அவர் பாதங்களில் விழுந்தான். 'ஒரு தவறு செய்தேன். அதனால் ஊரே என்னை ஒதுக்கி விட்டது. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் மக்கள் மன்னிக்கவில்லை!' என்று அழுதான். மகான் அவனைத் தன் பூஜையில் கலந்து கொள்ள அழைத்தார். ‘உலகமே போற்றும் ஒரு மகானுக்கு அருகில் அவன் அமர்வதா?’ என்று ஊர் மக்கள் கொதித்தெழுந்தனர். ராகவேந்திரர் தன் சங்கு தீர்த்தத்தை அவன் மீது தெளித்தார். அவன் பாவங்களைக் களைந்து விட்டதாகச் சொன்னார்.
 
'தவறு செய்தவன் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டால், அவனை மன்னிப்பதே பெருந்தன்மை!’ என்று சொல்லி, அவனை அந்த ஊர் மக்கள் ஏற்கச் செய்தார். மாளவி என்ற ஊரில் ஒரு கோயிலில் தங்கியிருந்த போது, கோயிலுக்கு வெளியே நின்று இரு விழிகள் அவரையே கண் கொட்டாமல் பார்த்தன. 'உள்ளே வா!' என்று அவனை அவர் அழைத்தார்.
 
'நான் தாழ்ந்த குடியில் பிறந்தவன். எனக்குக் கோயிலில் நுழைய அனுமதி கிடையாது' என்று தயங்கினான். 'உயிரில் உயர்வு-தாழ்வு என்ற வித்தியாசம் கிடையாது. உன்னைப் படைத்த கடவுளின் சந்நிதானத்திற்கு நீ வரக்கூடாது என்று எப்படித் தடுக்கலாம்? தாராளமாக வரலாம்!' என்று உள்ளே கூப்பிட்டார். 
 
அவர் பாதங்களில் விழுந்த அவனைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். அவன் உடல் சிலிர்த்தான். அவனுக்கு ஆசிகள் அளித்து அனுப்பினார். அவன் பெயர் கனகதாசன் என்றும், முற்பிறவிப் பயனே அவனை அவரிடம் கொண்டு சேர்த்தது என்றும் மகான், சீடர்களிடம் கூறினார். 
 
தீர்த்த யாத்திரையாக ராகவேந்திரர் ராமேஸ்வரம், மதுரை, திருவனந்தபுரம் 
உடுப்பி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். வட பாரதத்தின் முக்கியத் தலங்களான காசி, பிரயாகை, ரிஷிகேஷ், கோலாப்பூர், நாசிக், பீஜப்பூர் என்று பல இடங்களுக்கு விஜயம் செய்து, தென்கிழக்குத் திசை ஆதோனி நோக்கி பயணம் தொடர்ந்தார்.
 
ஆதோனிப் பயணம் ராகவேந்திரரின் சரித்திரத்தில் மிக முக்கியமான சில திருப்பங்களுக்குச் சாட்சியாக இருந்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள, அத்வைனி என்னும் ஆதோனிக்கு அருகில், ஒரு கிராமத்தில் வெங்கண்ணா என்ற அந்தணச் சிறுவன் வாழ்ந்து வந்தான். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவன், தாய் மாமன் வீட்டில், அவரது தயவில் வாழ்ந்து வந்தான். 
 
மாமன் அவனை எழுத்தறிவிக்கவோ, குருகுலம் அனுப்பவோ முயலவில்லை. அவனுக்கு உணவு அளிப்பதையே கடனாகக் கருதியதால். தினமும் அவனை மாடு மேய்க்கக் காட்டுக்கு அனுப்பி வந்தார்.  அந்தணனாகப் பிறந்தும் வேதம் ஓதாமல். எழுதப் படிக்கக் கூட தெரியாத மண்டூகமாக இருக்கும் தன் நிலை கண்டு வெங்கண்ணா அனுதினமும் அழுது வந்தான்.  ராகவேந்திரரின் மகத்துவத்தை அறிந்திருந்த அவன், அவரைக் காணாமலேயே அவரிடம் தீராத பக்தி செலுத்தி வந்தான். 
 
குரு அறியாத சீடனும் உண்டோ? தீர்த்த யாத்திரையின் போது ஒருநாள், ஆதோனியின் சுற்றுப்புறத்தில் இருந்த காட்டுப் பகுதிகளில் சீடர்கள் புடைசூழ ராகவேந்திரர் பிரவேசித்தார். வெங்கண்ணா மாடு மேய்க்கும் காட்டின் வழியாகக் கடந்து சென்றார். 
 
ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் வெங்கண்ணா. குருவைப் பார்த்ததும் அவர் பாதங்களில் விழுந்தான். 'ஐயா, பெற்றோர் இறந்த பிறகு மாமன் வீட்டினரால் வளர்க்கப்படுகிறேன். படிக்க வேண்டிய வயதில் என்னைப் பள்ளிக்கூடம் அனுப்பாமல் ஆடு மாடுகளை மேய்க்க மாமா அனுப்புகிறார்' என்று கதறினான். காலில் விழுந்து கதறிய சீடன் மீது கருணைக் கடலின் கடாட்சம் பட்டது. 'வெங்கண்ணா! காலம் வரும், உன் கவலை தீரும். அது வரை பொறுமையாக இரு. இதோ மந்திராட்சதை! மாபெரும் இடரில் நீ சிக்கும் சமயம் என்னை நினைத்து மந்திராட்சதையை உபயோகப்படுத்திக் கொள். உனக்கு என் ஆசிகள்.' 
 
குருவின் அருளை விட பெரிய தனம் எது? வெங்கண்ணா மந்திராட்சதையைப் பொன்னைவிட மதிப்பு மிக்கதாக நினைத்தான். பத்திரமாகத் தன் வசம் வைத்துக் கொண்டான். ஸ்ரீ ராகவேந்திர திருநாமத்தையே தியானம் செய்தபடி வெங்கண்ணா, வழக்கம் போல் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். 
 
ஒரு நாள் அந்த வனத்தின் வழியே ஆதோனியின் நவாப் சித்தி மாசூத் கான் சென்று கொண்டிருந்தார். சிறிது நேரம் ஓய்வு எடுக்க அவர் அமர்ந்த நேரம் அவருக்கு ஆதோனியிலிருந்து ஓலை ஒன்று வந்தது. அதைக் கொண்டு வந்த சேவகனும் சரி, நவாபும் சரி படித்தவர்கள் அல்ல. காட்டில் இருந்ததால் ஓலையைப் படித்துச் சொல்ல யாராவது கிடைப்பார்களா என்று தேடிய நவாபின் கண்களில் வெங்கண்ணா பட்டான். 
 
நெற்றியில் கோபி சந்தனமும், துவைத்துக் கட்டிய வேட்டியும், அந்தணர்க்குரிய முப்புரி நூலையும் கண்ட நவாப், ஓலையில் உள்ள விவரத்தைப் படித்துக் கூறுமாறு வெங்கண்ணாவுக்கு ஆணயிட்டார். வெட்கத்துடன் வெங்கண்ணா தான் ஏட்டறிவில்லாதவன் என்று கூற நவாபால் நம்ப முடியவில்லை. தன்னை அவமானப்படுத்தவே அவன் அவ்வாறு பொய் சொல்கிறான் என்று நினைத்தார். கடும் சினம் அவரை ஆட்கொண்டது. 
 
'ஓலையில் இருப்பதைப் படிக்கிறாயா? மரண தண்டனையை ஏற்கிறாயா?' 
 
வெங்கண்ணா நிலைகுலைந்தான். ‘துன்பம் வரும்போது என்னை நினை’ என்று ராகவேந்திரர் அருளிச் சென்றது அவன் நினைவில் பளிச்சிட்டது. மனதார குருநாதரைத் தொழுது கெஞ்சினான்.  ‘உன்னால் படிக்க முடியும். படி!’ என்று அவனுள் ஒரு குரல் ஒலித்தது. அவனுக்கு குருவின் மந்திராட்சதை நினைவுக்கு வந்தது. குருவின் திருநாமத்தை மனதில் நிறுத்தி மந்திராட்சதையைத் தன் தலையில் இட்டவாறு ஓலையைப் பிரித்தான். 
 
என்ன ஆச்சர்யம்! இதுவரை வெறும் குறியீடுகளாகத் தெரிந்த எழுத்துக்கள், இப்போது விளங்கின. ஓலையில் கண்ட எழுத்துகள் வெங்கண்ணாவின் வாயில் வார்த்தைகளாக வந்தன. அந்தச் செய்தி வெகுநாட்களாக பிள்ளைப் பேறு இல்லாத நவாபுக்குப் பிள்ளை பிறந்த செய்தி! 
 
அதைக் கூறிய வெங்கண்ணாவிற்கு நவாப் தக்க பரிசு அளித்ததுடன், அரச சபைக்கு அழைத்து திவான் பதவியும் அளித்தான். வெறும் வெங்கண்ணாவாக இருந்த அந்தணச் சிறுவன், ஆதோனியின் திவான் வெங்கண்ணாவாக மாறினார். அது மட்டுமா  குருவின் மீது அவர் கொண்ட பக்தி, குருவின் வரலாற்றில் அவருக்கு நீங்காத இடம் பெற்றுத் தந்தது.  
 
யாத்திரை முடிந்து கும்பகோணம் திரும்பிய ராகவேந்திரருக்கு, நகரமே திரண்டு விழாக் கோலத்துடன் வரவேற்பு அளித்தது. சில காலம் ஸ்ரீமடத்தில் தன் ஆன்மிகப் பணிகளைச் செவ்வனே செய்து வந்தார். தனது பூத உடலை மறைக்க வேண்டிய காலம் நெருங்குவதை உணர்ந்தார். அடுத்தடுத்து அவர் செய்த சில காரியங்கள் சுற்றியிருந்தவர்களுக்கு முதலில் குழப்பமாக இருந்தது.

(...பயணம் தொடரும்)

- சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles