கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! 22

Tuesday, January 31, 2017

அம்பாஜி ஆலயம்! வானளாவ வளர்ந்திருக்கும் கோபுரத்தின் உச்சியில் படபடக்கும் கொடியில் சூலமும், ஸ்வஸ்திக்கும் பதிக்கப்பட்டுள்ளன. 

பிரதான கோபுரத்தை ஒட்டி தேன்கூட்டைக் கவிழ்த்து நிறுத்தியது போல் இன்னொரு கோபுரம்!  ஏராளமான கலசங்களைக் கொண்ட இதன் கீழே விசாலமான மண்டபம். 

இந்த வெளி மண்டபம் சச்சார் சௌக் என்று அழைக்கப்படுகிறது. இங்கே மக்கள் டோலக், மேளம் ஆகியவற்றைக் கொட்டி பஜனை செய்கிறார்கள். ஏராளமான இளைஞர்களும் இளம் கன்னியர்களும் பஜனையில் உற்சாகமாகக் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அந்தக் காட்சியே நெஞ்சில் ஆனந்த அலைகளை அடுத்தடுத்து உருவாக்குகிறது. 

நவராத்திரி சமயங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி, இங்கு மேள தாளங்களுடன் கர்பா பாடல்களைப் பாடி அன்னையை மகிழ்விப்பது வழக்கம். 

சச்சார் சௌக்கைக் கடந்து உள்ளே நுழைந்தால் அரைக்கோள வடிவ விதானத்துடன் கூடிய அர்த்த மண்டபம். இதன் ஒவ்வொரு தூணிலும் வேலைப்பாடுகள் மிக்க அப்ஸர மங்கையரின் சிற்பங்கள். தொங்கும் நறுமலர் பூச்சரங்கள். 

இந்த மண்டபத்தின் முகப்பில், அன்னையின் வாகனமான சிம்மம் சிற்ப விக்கிரகமாகக் காட்சி அளிக்கிறது, இதனை மகளிர் குங்குமம் தூவி வழிபடுகிறார்கள். 

நேர் எதிரே தங்க வாசலுடன் கூடிய அன்னையின் கருவறை! வாசலின் இருபுறமும் கதைகள் தாங்கிய துவாரபாலகிகள்.

சந்நிதியில் ஆண்டாண்டு காலமாய் அகண்ட தீபம் ஒன்று அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் நெய் ஊற்றி வணங்குகிறார்கள். 

சிறிய கருவறையில் தனி உலோக மண்டபத்தில் அம்பாஜி யானை அம்பாரியில் அமர்ந்திருக்கிறாள். ஆறு இரட்டை தீபங்கள் தங்க வெளிச்சம் சிந்தி அன்னைக்கு அழகு சேர்க்கின்றன. 

அன்னை சிங்காரமான சின்ன முகத்துடனும், பெரிய கிரீடத்துடனும், காசுமாலைகளுடனும், புவியின் பூக்கள் அனைத்துடனும் எழுந்தருள வைக்கப்பட்டிருக்கிறாள். வலது திருக்கரம் ஆசீர்வதிக்கிறது. 

அம்பாஜியின் அலங்காரம் வேளைக்குத் தகுந்தாற்போல் மாறுகிறது. காலையில் குமரியாகவும், நண்பகலில் இளமை ததும்பும் பெண்ணாகவும் எழில் கோலம் கொள்ளும் அன்னை, மாலை வேலைகளில் சாந்தம் தவழும் ஞானமங்கையாகக் காட்சி தருகிறாள். 

தவிர அன்னை நவதுர்கைகளின் வடிவங்களில் ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்படுகிறாள். வாகனமும் சிம்மம், யானை, புலி என்று ஒவ்வொரு நாளும் மாறுகிறது. 

அன்னையின் வடிவை யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம். ஆனால் அப்பால் பிறையில் இருக்கும் யந்திரத்தை யாராலும் தரிசிக்க இயலாது. 

பிரதி மாதமும் எட்டாவது நாள் யந்திரத்துக்கு பூஜை நிகழ்கிறது. யந்திரத்தைக் கண்களால் பார்க்கக்கூடாது என்னும் நியதி இருப்பதால், அர்ச்சகர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு தான் பூஜை புரிகிறார்கள். பூஜையின் போது நவ சண்டி ஹோமம் வளர்க்கப்படுகிறது. 

அம்பாவின் சந்நிதிக்கு எதிரில் அர்த்த மண்டபத்தில் ஒரு எண்கோண அடைப்பில் சிவ தரிசனம். 

வெள்ளி நாகக்குடை. வெள்ளி ஆவுடையார். சின்ன லிங்கம். மேலே கலசம். ருத்ராட்ச சரங்கள் என வெகு அலங்காரமாக தரிசனம் தரும் பரமசிவனை மக்கள் நீரபிஷேகம் செய்து வணங்குகிறார்கள்.  

இந்தச் சந்நிதியின் எண்கோணத்தில் இருக்கும் மாடங்களில் ஆஞ்சநேயர், வேணுகோபாலன் ஆகியோர் எழுந்தருளியிருக்கிறார்கள். 

வலம் வரும்போது வெளிப்பிராகாரத்தில் கணபதி தரிசனத்துடன் ஆலய தரிசனம் நிறைவடைகிறது. 

அகிலத்தைக் காக்கும் சக்தியின் ஊற்றுக்கண் உள்ள இடத்தையே தொழுதுவிட்டு வந்த உவகையில் இதயம் விம்முகிறது. 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்             : அம்பாஜி
அன்னையின் திருநாமம்    : அம்பாஜி
எங்கே உள்ளது?                : குஜராத்தில்

எப்படிப் போவது?               : சென்னையிலிருந்து ஜோத்பூர் செல்லும் ரயிலில் சென்று அபுரோட் ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில்                                       இருக்கும் அம்பாஜிக்குப் பேருந்திலோ,  காரிலோ வரலாம்.     
எங்கே தங்குவது?                : அம்பாஜியில் தேவஸ்தான விடுதிகளும், 
                                                    தனியார் விடுதிகளும் ஏராளமாக உள்ளன.     
தரிசன நேரம்                      :  காலை 07.00 முதல் 11.30 வரை 
                                                   பகல்  12.30 முதல் 04.30 வரை
                                                    இரவு  07.30 முதல் 09.30 வரை

அம்பாவின் திருப்தியான தரிசனத்துக்குப் பிறகு ஆலய நடைபாதையில்  ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தோம். நரசீ மேத்தாவின் இன்னிசைப் பாடல்கள் அந்தப் பிரதேசத்தை நிறைத்திருந்தன. 

அம்பாஜி சிறிய ஊர். அம்பாவைத் தவிர ஊரில் வேறு சிறப்புகள் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. கடைத்தெருவை ஒருமுறை நடந்து அளந்து விட்டு இரவு உணவை (ஃபுல்கா, சப்ஜி, ஆலூ குழம்பு, மசாலா பால்) முடித்துக்கொண்டு, கெஞ்சிய கண்களை சமாதானப்படுத்த தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். படுக்கையில் விழுந்தோம்.

மறுநாள் அதிகாலையில் அஹமதாபாத் நோக்கிப் புறப்பட்டோம். போகும் வழியில் இரண்டு சிற்ப அதிசயங்களைக் காட்டுவதாகவும், இரண்டுமே உலக அதிசயங்களாகப் போற்றத்தக்கவை என்றும் ஓட்டுனர் கூறினார். 

ஏறக்குறைய காலை ஒன்பது மணி சுமாருக்கு பதான் என்னும் அந்தச் சிறிய கிராமத்தை அடைந்தோம். 

"இங்கே ஒரு கிணற்றைப் பார்க்கப் போகிறீர்கள்" என்றார் ஓட்டுனர்.

"கிணறா? அதை எப்படி உலக அதிசயமாகக் கூறமுடியும்?" என்று சற்றுச் சூடாகவே வினவினோம். ஓட்டுனர் எங்களது கோபத்தைக் கண்டு வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை. 

"பார்த்து விட்டுப் பேசுங்களேன்..." என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தில் இருந்த ஓர் மரத்தடியில் காரை நிறுத்தினார். 

அந்த உலக அதிசயத்தை நோக்கி எங்களை அழைத்துச் சென்றார். எங்களுடனேயே வாருங்கள். நீங்களும் அதனைப் பார்க்கலாம்.

 

வாழ்வை வளப்படுத்திய ராணி வாவி

குஜராத்தில் பத்தாம் நூற்றாண்டில் சோலங்கி வம்சத்தின் அரசாட்சி தொடங்கியது. இந்த வம்சத்தின் சக்தி வாய்ந்த மன்னன் பீம்தேவின் ஆட்சிக்காலம் குஜராத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. அவன் பல ஆலயங்களை நிர்மாணித்தான். சிற்பக்கலையை மேன்மைப்படுத்தினான். 

அவனது மறைவுக்குப் பின்னர் அவனது மனைவியான மகாராணி உதய்மதி, மன்னன் பீம்தேவின் நினைவாக கற் சிற்பங்களும், கற் கோலங்களும் நிறைந்த ஒரு படிக்கிணற்றினைப் பதினோராம் நூற்றாண்டில் கட்டுவித்தாள். மகாராணியால் கட்டுவிக்கப்பட்டதால் ராணி வாவி என்று அழைக்கப்பட்டது. 

முன்னாட்களில் அனஹில்வாதா என்று அழைக்கப்பட்ட பதான் என்னும் புராதன நகரத்தில் அமைந்திருக்கும் இந்த படிக்கிணறு உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றத்தக்கது.

கிழக்கு மேற்காகக் கட்டப்பட்டுள்ள ராணி வாவியின் அமைப்பே விந்தையானது. ஒரு பெரிய மாளிகை போல் அற்புதமான, அழகானதொரு கட்டிட அமைப்பு. சுமார் இருநூற்று எண்பத்தைந்து அடி நீளமும், ஐம்பதடி அகலமும் கொண்ட ஒரு செவ்வக நிலத்தை வெட்டி அதில் மூன்றடி அகலக் கருங்கல் படிகள் பாதாளம் நோக்கிக் கீழிறங்கும். 

செவ்வகத்தின் ஒரு முனையில் படிக்கட்டுகள் கேலரி அமைப்புடன் நீரை நோக்கி இறங்க, மறுமுனையில் நூறடி ஆழ வட்டக்கிணறு அமைந்துள்ளது. உச்சி மூடப்படாமல் இருப்பதால் கீழிருக்கும் கிணறு தெரிகிறது. 

இருநூற்று எண்பத்தைந்து அடி நீள படிக்கிணறு ஏழு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் இருநூற்று எண்பத்து அடி நீள கூடத்தை ஆங்காங்கே கல் தூண்கள் தாங்குகின்றன. ஒவ்வொரு தூணையும் உச்சியில் நன்னான்கு பூத கணச் சிற்பங்கள் தாங்குகின்றன. பூ வேலைப்பாடுகள். கொடிகள், இலைகள் என்னும் கல் செதுக்கல்களுடன் பிரமிக்க வைக்கும் உத்தரங்கள். 

ஒவ்வொரு தளத்தின் இரு புறங்களிலும் 285 அடி நீளச் சுவர்கள். இவற்றில் ஆங்காங்கே மாடப்பிறைகள் செதுக்கப்பட்டு அவற்றில் அன்னத்தின் மேல் ஆரோகணிக்கும் பிரம்மா, அவரது மடியில் ஒய்யார சரஸ்வதி, நந்தியின் மேல் அமர்ந்திருக்கும் சிவபெருமான், அவர் மடியில் பார்வதி, கருடனின் மீது ஆரோகணித்திருக்கும் விஷ்ணு, அவர் மடியில் லக்ஷ்மி என்று கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

போர்க்காட்சிகள், குதிரை வீரர்கள், கழைக்கூத்தாடிகளின் சாகசங்கள். நடன மங்கையர்கள், இசைக்கலைஞர்கள், பாம்பணை விஷ்ணு, குபேரன், சூரியன், இந்திரன் என இங்குள்ள அனைத்துச் சிற்பங்களும் அற்புதமான முக வடிவமைப்புடனும், நுணுக்கமான சித்தரிப்புடனும்  செதுக்கப்பட்டுள்ளன. 

தினம் ஊசி முனையளவு பாம்பின் விஷத்தை அருந்தினால் நாளாவட்டத்தில் விஷத்தை உட்கொள்பவரின் உடல் முழுக்க விஷம் பரவிவிடும். இவ்வாறு உடலில் விஷம் உள்ளவர்களோடு உடலுறவு கொள்பவர்களை மரணம் தழுவுவது நிச்சயம்.

அந்த நாட்களில் ஒவ்வொரு அரச அரண்மனையிலும் இவ்வகை விஷக்கன்னிகள் இருந்தார்கள். எதிரி நாட்டு அரசர்களுடன் நட்பு பூண்டு, உடல் உறவாடி அவர்களைக் கொல்வதுதான் விஷக்கன்னிகளின் வேலை.  

இந்த விஷக்கன்னிகளின் நிர்வாண உருவச் சிற்பங்கள் படிக்கிணற்றின் சுவர்களில் அங்கங்கே இடம் பெற்றுள்ளன. 

இங்கு காணப்படும் விஷக்கன்னிகையின் தலைக்கு மேல் மூன்று ஆந்தைகள். அவற்றுக்கு இருக்கும் அளவு கெட்ட புத்தி கொண்டவள் என்பதை ஆந்தைகள் குறிக்கின்றன.  உடலைப் பாம்பு சுற்றியிருக்கிறது. அரவத்துக்கு இருக்கும் விஷம், அவள் உடலிலும் உண்டென்பதைக் குறிக்கும் குறியீடே இந்தப் பாம்பு!  காலடியில் செதுக்கப்பட்டிருக்கும் மயில் அவளது அழகின் குறியீடு. கையில் வைத்திருக்கும் மீன் அவளது பளபளப்பான தேகத்தின் குறியீடு.  

படிக்கிணற்றில் காணப்படும் பல்வேறு சிற்பங்களில் விஷக்கன்னிகை சிற்பங்கள் படு வித்தியாசமானவை. 

அலங்கரித்துக் கொள்ளும் அரிவையர்கள், பெண்கள் அந்த நாட்களிலேயே அலங்காரங்களில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதை விளக்குகின்றன.

திருத்தமான நாசியும், பழச்சுளைகளைப் போன்ற இதழ்களும் கொண்ட இந்தப் பெண்கள் கண்ணாடி பார்த்துக் காதணி மாட்டிக்கொள்கிறார்கள். கண்ணுக்கு மை இட்டுக் கொள்கிறார்கள்.

உதட்டில் வண்ணச் சாயம் பூசிக் கொள்ளும் ஒருத்தி உள்ளங்காலை உயர்த்திக் காட்ட, அதில் ஒருவன் மெஹந்தி இடுகிறான்.   

திருமாலின் தசாவதாரச் சிற்பங்கள் இன்னொரு அற்புதக் கலை வரிசை. வாமன, ராம, கிருஷ்ண, பலராம அவதாரச் சிற்பங்கள் அனைத்தும் அற்புதமானவை.  
கல்கி குதிரையில் ஆரோகணித்துக் கையில் வாளேந்தி காட்சி தருகிறார். குதிரையின் கடிவாளம் கல்லில் செதுக்கப்பட்டிருந்தாலும், தோலினால் ஆனது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 

கல்கிக்குப் பின்னால் சாமரம் வீசும் இருவர். குடை பிடிக்கும் ஒருவர். பின்னாட்களில் விபத்துகள், வியாதிகள், போதை ஆகியவை தாக்கி மனிதர்கள் இறப்பார்கள் என்பதை உணர்த்தும் வகையில் குதிரையின் காலடியில் சிக்கி ஒருவர் மடிந்து கொண்டிருக்கிறார். இவற்றையெல்லாம் சீர்திருத்தவே கல்கி வாளேந்தி வருகிறார் என்பதை உணர்த்துகிறது கல்கி சிற்பம்.  

வலது கையில் மீனும், இடது கையில் மண்டையோடும் ஏந்தி, எலும்பும் தோலுமாய் வடிக்கப்பட்டிருக்கும் யோகினியானவள் நாவிதர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டிருக்கிறாள்.  

ஆஞ்சநேயரை வணங்கினால் சனீஸ்வரரின் தொந்தரவு இருக்காது என்பது ஐதீகம். இதனை உணர்த்தும் வகையில் ஆஞ்சநேயர் சிற்பம் இரு ஆட்களை காலடியில் போட்டு மிதிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று ஏழரைச் சனி. இன்னொன்று இரண்டரைச் சனி. 

மனைவியின் நினைவாக அலங்காரச் சமாதியான தாஜ்மஹலைக் கட்டினார் ஷாஜஹான். 

ராணி உதய்மதியோ கணவனின் நினைவாக, குடிநீருக்காக மக்கள் வந்து போகக்கூடிய, கலைநயம் மிக்க ஒரு சிற்பக்கூட நீர் நிலையைச் செதுக்கி வைத்திருக்கிறாள் என்பது வியக்கத்தக்க விஷயம். 

ஷாஜஹான் ஆண். அதனால் அவருக்குக் காதல் மட்டுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. 

ராணி உதய்மதியோ பெண். கணவனிடம் கொண்ட காதலை விடவும் மக்களின் வாழ்வே முக்கியமாகத் தோன்றியிருக்கிறது. ஆதலால் அவள் எழுப்பிய நினைவுச்சின்னமானது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத நீர் வாவியாகவும் அமைந்திருக்கிறது. 

 

சில அவசியத் தகவல்கள்

எங்கே உள்ளது?   : அஹமதாபாதில் இருந்து சுமார் நூறு கி.மீ, தொலைவில் உள்ள பதான் நகரில். இது பட்டுச் சேலைகளுக்கும் மிகவும் பிரபலம். 

எப்படிச் செல்வது?  : சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு ரயிலிலோ, விமானத்திலோ சென்றால் அங்கிருந்து பதான் ராணி வாவிக்கு பேருந்திலோ, காரிலோ செல்லலாம். 

எங்கே தங்குவது?   : அஹமதாபாதில் குஜராத் சுற்றுலாத் துறையினரின் தங்கும் விடுதி உள்ளது. தவிர பட்ஜெட்டுக்கு ஏற்றமாதிரி நிறைய தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் இருக்கின்றன.  

ராணி வாவியைக் கண்ட கண்கள் தாமாகவே கலங்கின. ராணி உதய்மதி  தனது கணவனின் மரணத்துக்குப் பின், ஏதோ ஓர் உக்கிராண அறையில் அடங்கி ஒடுங்கிக் கிடக்காமல் அரசாட்சியை ஏற்று, திறம்பட ஆட்சியும் புரிந்திருக்கிறாள்.

குஜராத்தில் எப்போதுமே தண்ணீர்ப் பஞ்சம். நல்ல தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். மழை நீரைச் சேமித்து வைத்துக் கொண்டால்தான் தண்ணீர்த் தேவையை ஓரளவு சமாளிக்க இயலும். 

மக்களுக்கு எந்நாளும் தண்ணீர் குறைவின்றி கிடைக்க என்ன செய்வது என்று யோசித்து யோசித்து இப்படி ஒரு கிணற்றினை அமைத்திருக்கிறாள் அரசி உதய்மதி.  இந்தக் கிணறு கிட்டத்தட்ட ஓர் ஏரியைப் போல பிரமாண்டமானது. 

மழை பெய்யும் நாட்களில் ஏழு தளங்களும் நீரில் மூழ்கி, கிணற்றின் முகப்பிலேயே வந்து நீரை மொண்டு செல்லலாம். மழை இல்லாத நாட்களில் தண்ணீரின் அளவு ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கிக் கொண்டே செல்லும். 

ஆனாலும் நூறடி ஆழம் வரைக்கும் கிணறு தோண்டப்பட்டிருப்பதால் நிலத்தில் பெய்யும் மழை அப்படியே அந்த ஊரில் நிலத்தடி நீராக மாறி, கிணற்றில் இருக்கும் ஊற்றுக்கண்கள் வழியாக வெளிப்படும். மொத்தத்தில் இந்த ராணி வாவி ஊர்மக்களுக்கு எந்த நாளிலும் தண்ணீர் வழங்கும் வள்ளலாகவே செயல்பட்டிருக்கிறது. இன்றைக்கும் அந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறது!

அது மட்டுமல்ல, ஊர் மக்கள் மாலை வேளைகளில் சந்தித்து மகிழ, அரட்டை அடிக்க, சித்ரான்னங்களைப் புசிக்க, காதலர்கள் ஆனந்தமாகக் கரம் கோத்து வலம் வர, அந்த நாட்களில் இந்த ராணி வாவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

எவ்வளவு நுட்பமாகச் சிந்தித்திருந்தால் அரசி உதய்மதி அப்படியொரு ஆழ்கிணற்றை உட்கார்ந்து மகிழும் உல்லாச மண்டபங்களுடன் உருவாக்கியிருப்பாள்! அரசி என்றால் அவள் அல்லவா அரசி? உலக அதிசயம் என்றால் அவள் உருவாக்கியிருக்கும் இந்த வாவி அல்லவா உலக அதிசயம்! 

வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த உலக அதிசயத்தைச் சென்று காண வேண்டும். மனிதநேயம் மிக்க மன்னர்களும் ராணிகளும் இந்தியாவில் வாழ்ந்திருப்பதை எண்ணி மெய்சிலிர்க்க வேண்டும். 

அடுத்த உலக அதிசயம்..!?

பயணம் தொடரும்...

- சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles