கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! 21

Friday, January 13, 2017

மவுன்ட் அபுவில் இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கி இருக்கலாம். அங்கே இயற்கை எத்துணை எழில் கோலங்களில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறாள் என்பதைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படலாம். ஆனாலும்... நமது பிற கடமைகளை அம்போ என்று விட்டுவிட முடியுமா? ஆதலின் மவுன்ட் அபுவை விட்டுப் புறப்பட்டோம்.

எங்களது ஓட்டுனர், "ராஜஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்தில் நுழையப்போகிறோம். மறுபடியும் இங்கு வரப்போவதில்லை.  இந்த மாநில நினைவாக ஏதாவது வாங்கிச் செல்வதாக இருந்தால் செல்லுங்கள்.."என்று கூறி மவுன்ட் அபுவிலுள்ள நக்கி ஏரிக்கு அருகே இருக்கும் கடைத்தெருவில் காரை ஓரம் கட்டினார்.

சமோசா, கச்சோரி, ஜிலேபி, அவல் கிச்சடி, தணலில் வாட்டிய சோளக்கதிர், பானி பூரி, ரொட்டி சப்ஜி என்று உணவுப்பண்டங்கள் ஒருபுறம் வரிசை கட்டியிருக்க, இன்னொருபுறம் விதவிதமான துணிவகைகள் காற்றில் ஊசலாடி "வா.. வா.." என அழைத்தன. சேலைகள், பதின் பருவத்தினருக்குப் பாவாடை, சட்டைகள், கவுன்கள் என்று ஏராளமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த  ஒரு கடைக்குள் நுழைந்தோம். காந்தி குல்லாய் போட்டிருந்த கடைக்காரர் முகம் நிறையச் சிரிப்புடன் வரவேற்றார் (இடையில் இரண்டு தங்கப்பற்கள்!) 

"ராஜஸ்தான் மாநிலத்துக்கே உரித்தான டை அண்ட் டை (Tie & Dye) புடவைகளைக் காட்டுகிறேன். அசந்து போய்விடுவீர்கள்..." என்று புன்சிரிப்புடன் பீரோவில் நிறைந்திருந்த ஆயிரம் புடவைகளை எடுத்து விரிப்பில் இறைத்தார். மார்கழி காலையில் பெண்கள் கோலம் போடுவதற்கு முன் சாண நீர் தெளிப்பது போல் தோன்றியது எங்களுக்கு! 

ஒவ்வொன்றாக அவர் விரித்துக் காட்ட, ஒவ்வொரு புடவையிலும் அலைஅலையாய் வானவில் நிறங்கள் மிளிர்ந்தன. ஷிஃபான் என்றோ,  நைலான் என்றோ, நைலக்ஸ் என்றோ சொல்ல முடியவில்லை. ஆனால் மெல்லிசானவை. பாம்பு உடல் போல் வழவழப்பானவை. கடையில் இருந்த விற்பனைப் பெண்ணின் முகத்தின் மீது அந்தச் சேலையைப் படரவைத்துக் காட்டினார். புடவைத் திரைக்குப் பின்னால், கண்களில் மை தீட்டியிருந்த அந்தப் பெண் தேவதை போல் தெரிந்தாள். 

அந்தப் புடவைகளால் இன்னும் நாங்கள் வசீகரிக்கப்படவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அந்தக் கடைக்காரர் தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி அதில் ஒரு புடவையை நுழைத்து இழுத்தார். பிரமாண்டமான பூதம் ஒரு சிறு குடுவையில் அடங்குவது போல் அந்த ஆறு கஜப் புடவையும் அந்தச் சிறு மோதிர ஓட்டைக்குள், எந்தச் சிரமமும் இல்லாமல் நுழைந்து நழுவி வெளிப்பட்டது.

"இது மஸ்லின் துணி. சைனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங். பாங்காக் என்று எக்ஸ்போர்ட் ஆகிறது. ராஜஸ்தானைத் தவிர வேறு எங்கும் பார்க்கமுடியாது. இதை வாங்கிச்சென்றால், உங்கள் வீட்டுப் பெண்கள் வாயார வாழ்த்துவார்கள். உங்கள் இல்லத்தரசிகள் உங்கள் காலடியே கதியாக இருப்பார்கள். நீங்கள் வாழ்நாள் முழுக்க என் முகத்தை மறக்க மாட்டீர்கள்..." என்றார்.

வாயைப் பிளந்தோம். கவர்ச்சியான நிறங்களில் புடவைகள் இருந்ததால் தங்கைகளுக்கும் மனைவிக்கும் தேர்ந்தெடுத்தோம். பேரம் பேசி எண்ணூறு ரூபாய்ப் புடவையை நானூறு ரூபாய்க்கு முடித்தோம். கிட்டத்தட்ட ஐம்பது புடவைகள். அவை போதாதென்று குழந்தைகளுக்குப் பருத்திப் பாவாடைகள், சட்டைகள், டிராயர்கள் என்று ஏகப்பட்ட துணிமணிகளை வாங்கினோம். 

கடைக்காரப்பையன் தனித்தனிப் புடவைப் பார்சல்களைக் காரில் கொண்டு வந்து வைத்தான். பார்சல்களைத் தடவித் தடவிப் பார்த்தோம். எவ்வளவு சூப்பரான புடவைகளை எவ்வளவு மலிவான விலைக்கு வாங்கியிருக்கிறோம் என்று பெருமிதமான பெருமிதம்.  (புடவைப் புராணம் முடியவில்லை. சென்னையில் மிச்சம் இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறோம். அதில் ஒரு சுவாரசியமான ரகசியம் அடங்கி இருக்கிறது.) 

மவுன்ட் அபுவிடம் பிரியா விடைபெற்று மலையில் இருந்து கீழிறங்கினோம். அரை மணி நேரத்தில் மலையடிவாரம். அடுத்த ஒரு மணி நேரப்பயணத்தில் அரசாங்கத்துக்கே படியளக்கும் அம்பாஜி அன்னை ஆட்சி புரியும் அம்பாஜியை சென்றடைந்தோம். நேரம் மதியம் ஒரு மணி.

எங்களது ஓட்டுனர் அம்பாஜி அன்னையின்  ஆலயத்துக்குச் செல்வதற்கு முன்னால் ஊருக்கு அருகில் இருக்கும் கப்பார் மலையில் எழுந்தருளியிருக்கும் மகாமாயாவை தரிசித்து வந்துவிடலாம் என்றார். 

அவரது வழிகாட்டுதலின் படி, அம்பாஜியில் ஒரு விடுதியில் மூட்டைகளை இறக்கிவிட்டு அவசரம் அவசரமாக உணவருந்தினோம்.

மீண்டும் காரில் ஏறினோம். சுகமான பிற்பகல் காற்றின் தாலாட்டில் மெய்மறந்த  பயணம்.  இமைகளை மூடிய மாதிரி இருந்தது. ஆனால் so sad.. கப்பார் மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம். மலையுச்சியில் கோயில். மகாமாயா தரிசனத்துக்குச் செல்வோம் வாருங்கள்!

 

கர்பக்கலையை அகிலத்துக்கு அருளிய கப்பார் மகாமாயா

மக்களை வாட்டி வதைத்த மஹிஷாசுரனை. அண்டம் காக்கும் ஆதிசக்தி வதம் புரிந்தாள். பின் ஆரவல்லி மலைத்தொடரில், தான் எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும் குன்றினை வந்தடைந்தாள். 

அமரர்கள், அசுரனிடமிருந்து தங்களைக் காத்தருளிய அன்னையின் அடி பணிந்தனர். அவ்வமயம் அன்னை அவர்களிடம் தானுறையும் அந்தக் குன்று தரணியில் தலைசிறந்த சக்திபீடமாக அறியப்பட இருப்பதாக அறிவித்தாள். 

உலகில் உயிரொன்று உதயமாவதற்கு முன்பிருந்தே அன்னை அந்த மலைக்குன்றில் உறைந்து வந்திருக்கிறாள். 

திரேதா யுகத்தில் இராமர், இந்த மாதாவை வணங்கி மனைவி மைதிலியைக் கண்டுபிடிக்க அருள்புரியுமாறு வேண்டியிருக்கிறார். அன்னை அளித்த அஜய் என்னும் அம்பு கொண்டு, இராமர் இராவணனுடன் போர் புரிந்து வென்று, சீதாதேவியை மீட்டிருக்கிறார். 

துவாபர யுகத்தில் அன்னை அரங்கேற்றிய திருவிளையாடல் ஒன்று அதிசுவாரசியமானது. 

மங்கள் என்றொரு இடையன். தனது மனைவியுடன் இந்த மலைச்சாரலில் மாடுகளை மேய்ப்பது வழக்கம். 

ஒருநாள், அவனுக்குச் சொந்தமில்லாத அற்புதமான வெண்பசு ஒன்று தனது பசுக்களுடன் மேய்வதைக் கண்டான். அந்தி சாய்ந்தவுடன் அது மலையுச்சிக்குச் சென்று மறைந்ததையும் கண்டான். 

வியப்பெய்திய மங்கள், பசுவைப் பற்றிய விவரங்களை அறியும் ஆவலில் மனைவியுடன் மலையுச்சிக்குச் சென்றான். 

அங்கிருந்த ஒரு பளிங்கு மண்டபத்தின் அருகே சென்று 'அம்மாஹ்ஹ்..' என்று பசு குரல் கொடுத்தவுடன் மண்டபத்தின் கதவு திறந்தது. 

அங்கு ஆதிசக்தி எழுந்தருளியிருந்ததை அவர்கள் கண்டனர். 

அந்தப் பசுதான் காமதேனு என்பதையும், அவள்தான் ஆதிசக்தி என்பதையும் அறியாத மங்கள் அன்னையிடம் பசுவை மேய்த்ததற்குக் கூலி கேட்டான். அன்னையும் பார்லி தானியத்தைக் கூலியாகக் கொடுத்தாள். 

மங்கள் ஏமாற்றமடைந்தான். இவ்வளவு செல்வச்செழிப்பான பெண், போயும்போயும் பார்லி தானியத்தைக் கூலியாகக் கொடுத்திருக்கிறாளே என்று அதனை மலைச்சரிவில் இறைத்துவிட்டு வீடு சென்றான். 

மறுநாள், மலைச்சரிவில் இறைக்கப்பட்ட பார்லி தானியங்கள் எல்லாம் தங்க தானியங்களாக மாறியிருப்பதைக் கண்டார்கள் மங்களும் அவன் மனைவியும்.

மலையுச்சி மாதா, மண்ணுலகின் நாயகியேதான் என்றுணர்ந்து அவளது பாதங்களில் விழுந்தார்கள்.  அன்னை அவர்களை மன்னித்தாள். அவர்களுக்குத் தான் மகளாக வந்து உதிப்பதாகவும் வாக்களித்தாள். 

அடுத்த பிறவியில் மங்களும் அவனது மனைவியும், நந்தனாகவும் யசோதாவாகவும் பிறந்தார்கள். யசோதாவின் வயிற்றில் அன்னை கருக்கொண்டு பிறந்தாள். 

அவளே கம்சனின் கையில் சிக்காமல் உயரே எழும்பி, அமானுஷ்யச் சிரிப்பைச் சிந்திவிட்டு மாயமான மகாமாயா. 

அன்றிலிருந்து யாதவர்களின் குலதெய்வமாக மகாமாயா கொண்டாடப்படுகிறாள். பலி மகாராஜாவின் பேரன் பாணாசுரனின் மகளான உஷா, கிருஷ்ணரின் பேரனான அநிருத்தனை மணம்புரிந்தாள். 

அன்னையின் அருளால் மணவிழா நடந்தேறியது என்பதால், அவள் தனது கரத்தில் கர்ப தீபம் எனும் ஒரு தீபம் ஏந்தி ஒரு பாடலைப் பாடியபடி நடனமாடினாள். 

இந்தப் பூமியிலேயே அந்த வகையான நாட்டியம் அவளால்தான் முதலில் இந்த மலையுச்சியில் ஆடப்பட்டது. இன்று அந்த நடனம் கர்ப நிருத்யம் என்ற பெயரில் உலகெங்கும் பிரபலமாகியுள்ளது. 

கர்ப நிருத்யம் நிகழ்ந்த குன்று கர்பா மலை என்றழைக்கப்பட்டு, கப்பார் மலை என்று திரிந்திருக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட கப்பார் குன்று சக்தி பீடமாகத் திகழ வேண்டுமென்பதற்காகவே, தக்ஷனுக்கு மகளாகப் பிறப்பெடுத்து, தந்தையின் விருப்பத்துக்கு மாறாக மகேஸ்வரனை மணம்புரிந்து, அழைக்கப்படாத யாகத்துக்கு வந்து அவமானப்பட்டு, யாகத்தீயில் பாய்ந்து அன்னை தன்னையே ஆகுதியாக்கிக் கொண்டாள் போலும்! 

அதன்பின் சிவன் தக்ஷனின் யாகத்தை அழித்து, சதியின் சடலத்தைத் தோளில் தாங்கித் தாண்டவம் ஆட விஷ்ணு சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலைத் துண்டாடினார். 

வெட்டுண்ட உடலின் பாகங்கள் ஐம்பத்தோரு இடங்களில் விழுந்தன. அன்னையின் இதயம் விழுந்த கப்பார் மலை சக்தி பீடங்களுள் ஒன்றாகப் புகழ்பெற்றது. 

குஜராத்தில், அம்பாஜி ஆலயத்திலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள கப்பார் குன்றின் உச்சியில் மகாமாயாவின் ஆலயம் அமைந்துள்ளது. 

ஆலயத்தை அடைய 999 படிகள். கேபிள் கார் வசதி உள்ளது. நடந்தும் மலையேறலாம்.  

விசாலமான திறந்த வெளிப்பரப்பில், கோபுரத்துடன் கூடிய ஒர் அழகிய பளிங்கு மண்டபமே அன்னையின் ஆலயம்!

மண்டபத்தில் பளிங்குத் தூண்கள். கருவறையில் அன்னையின் இரண்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒன்று செப்பாலான மகிஷாமர்த்தினி திருவுருவம். இன்னொன்று வெள்ளிக் கவசம் பூண்ட மகாமாயா. 

மக்கள் நின்று வணங்குவதற்கு வாகாக அமைந்துள்ள அர்த்த மண்டபத்தின் மூலையில், ஒரு சிறு பளிங்கு மண்டபத்தில் கணபதி. 

அன்னையை வணங்கிவிட்டு வெளிப்பட்டால் அவளது இதயம் வீழ்ந்ததாகக் கூறப்படும் அரசமரத்தடியைக் காணலாம். கிளைகளில் ஏராளமான வேண்டுதல் வளையல்கள் மாட்டப்பட்டுள்ளன. 

குஜராத்தில் இருக்கும் இடைக்குலத்து மக்களும், ஆதிவாசிகளும், மற்ற எளிய மக்களும் மலைக்கோவிலுக்கு வருகிறார்கள். அன்னையைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக பாவித்து வழிபடுகிறார்கள். கர்பா பாடல்களைப் பாடுகிறார்கள்.

நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று இருக்கும் கர்பா பாடல்கள், உச்சஸ்தாயியில் தீனமான குரலில் ஒலிக்கும்போது கேட்பவர் இதயங்களை என்னவோ செய்கிறது. 

இத்தகைய சக்தி படைத்த பாடலில் அன்னையைப் பாடுவதால்தான், இரக்க மனமுள்ள அவள் இதயம் இளகி வேண்டுபவருக்கு வேண்டுவன அளிக்கின்றாளோ என்ற எண்ணமும் எழுகிறது. 

அவளது சந்நிதியில் தஞ்சமடைந்து தலை வணங்கினால், தரணி காக்கும் தாய் நம்மையும் காத்தருள்வாள். 

சுற்றிலும் விலங்குகள் நிறைந்த கானகக் குன்றின் உச்சியில் மகாமாயா எழுந்தருளியிருக்கிறாள் என்பதால் அன்னையை அந்தி சாய்வதற்குள் தரிசித்து விட்டுக் கீழே இறங்கிவிடவேண்டும்.
 
 திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்                 : கப்பார் 
அன்னையின் திருநாமம்      : மகாமாயா
எங்கே உள்ளது?               : குஜராத்தில்
எப்படிப் போவது?               :  சென்னையிலிருந்து ஜோத்பூர் செல்லும் ரயிலில் சென்று அபுரோட் ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில் இருக்கும் அம்பாஜிக்குப் பேருந்திலோ, காரிலோ வரலாம். அம்பாஜியிலிருந்து கப்பாருக்கு ஏகப்பட்ட ஆட்டோக்கள் செல்கின்றன.     
எங்கே தங்குவது?                :  அம்பாஜியில் தேவஸ்தான  விடுதிகளும், தனியார் விடுதிகளும் ஏராளமாக உள்ளன.  பல சுவையான உணவு விடுதிகளும் உள்ளன. 
தரிசன நேரம்                      :  காலை 07.00 முதல் மாலை 06.00 வரை

 

 • திருப்தியான மகாமாயா தரிசனத்துக்குப் பிறகு அம்பாஜிக்குத் திரும்பினோம். இரவு மணி ஏழு. அம்பாஜி ஆலய வளாகத்தில் நுழைந்தோம். லட்சக்கணக்கான விளக்குகள் ஒளிர, ஆலயத்தை நோக்கிச் செல்லும் நடைபாதையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான கடைகள். சி.டி.க்கள், அம்பாஜி ஆலயப் படங்கள், குங்குமம், கயிறு, காதணிகள், காலணிகள்  என்று என்னென்னவோ விற்பனையாகிக் கொண்டிருக்க, தரிசனம் முடித்து வந்த மக்கள் அந்தக் கடைகளை ஆக்கிரமித்திருந்தார்கள். 
 • அம்பாஜியின் ஆலயம், நட்சத்திர வைரக் கற்களினூடே ஊடே அற்புதமாகக் காட்சி அளித்தது.  
 • பார் மக்களுக்குப் படியளக்கும் அம்பாஜிதான் குஜராத் மாநிலத்தையே ஆட்சி புரிபவள். அரசாங்க கஜானாவில் எப்போதாவது பணத்தட்டுப்பாடு வந்தால் ஆட்சியில் இருப்பவர்கள் அம்பாஜியிடம் கடன் கேட்டு கையேந்துவார்கள். அம்பாஜியும் அவர்களுக்குத் தாராளமாக வாரி வழங்குவாள்.
 • இவ்வளவு மகத்துவம் வாய்ந்த அன்னையை தரிசிக்க அவளது ஆலயம் நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்!

அகிலம் காக்கும் அன்னை அரசூரி அம்பாஜி

 • தக்ஷனின் மகளான தாக்ஷாயணி தந்தையின் சம்மதமின்றி மகேஸ்வரனை மணம் புரிந்ததால், அவருக்கு அழைப்பு அனுப்பாமல் தக்ஷன் யாகம் வளர்த்தான். 
 • சதாசிவனின் அனுமதியின்றி சதிதேவி யாகத்துக்குச் சென்றாள். தக்ஷனால் அவமானப்படுத்தப்பட்டாள்.. 
 • அவமானம் தாங்காத அன்னை யாகத்தீக்குள் பாய்ந்தாள். சினமுற்ற சிவன் தட்சனின் யாகத்தை அழித்தார். சக்தியின் சடலத்தைத் தோளில் தாங்கித் தாண்டவம் ஆடினார். ஈசனை இயல்பு நிலைக்கு மீட்க, நாராயணனும் சக்ராயுதத்தை ஏவினார். 
 • சக்தியின் உடல் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டது. இயல்பு நிலைக்கு மீண்ட ஈசன், 'உமையவள் உடலிலிருந்து விடுபட்ட அம்சங்கள் வீழ்ந்த தலங்கள் சக்தி பீடங்களாக அறியப்படட்டும்' என்றருளினார். 
 • ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்திருக்கும் அரசூரியின், கப்பார் மலையில் அன்னையின் இதயம் வீழ்ந்தது. அரசூரி சக்தி பீடமாக அறிவிக்கப்பட்டது.  
 • ஒளிக்கதிர்களின் பிறப்பிடம் ஆதவன் என்பது போல், பிரபஞ்சத்துக்கான சக்தி அலைகள் வெளிப்படும் சக்தி மையமாகவே அரசூரி உருமாறியது. அதனால் அது சக்தி வாய்ந்த புனிதத்தலமாகவும் ஆனது. 
 • சக்தி வெளிப்படும் புனித இடத்தையே கருவறையாகக் கொண்டு அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே அரசூரி அம்பாஜி ஆலயம்! நாளடைவில் அரசூரி என்ற பெயர் மறைந்து, ஊருக்கும் அம்பாஜி என்ற பெயரே நிலைத்துவிட்டது. 
 • ஆலயமே ஒரு சக்தி மையம் என்பதால், அன்னைக்கு இங்கே உருவம் கிடையாது. கருவறையில் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. ஆனால் கருவறைச் சுவரில் பிறை ஒன்று உள்ளது. அதில் ஐம்பத்தோரு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புனிதமான விஸஸ்ரீ சக்தி யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுதான் பூஜிக்கப்படுகிறது. 
 • யந்திரம் பொருத்தப்பட்ட பிறைக்கு அணிகலன்களும், கவசங்களும் பூணப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் அன்னை அம்பாஜியாக தரிசனம் அளிக்கும் வகையில் உருவம் அளிக்கப்படுகிறது. 
 • அன்னையின் அழகுக்கோயிலை அண்டி விட்டோம். அன்னை அழைக்கிறாள், வாருங்கள்! 

பயணம் தொடரும்...

சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles