கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம்! - 23

Thursday, February 16, 2017

மோகம் கொள்ள வைக்கும் மொதேரா சூரிய ஆலயம்

கி.பி. பத்தாம் நூற்றாண்டு! வடக்கு குஜராத்தில் மூலராஜா என்னும் அரசன் தனது ஆட்சியைத் தொடங்கினான். அவனது வம்சம் சோலங்கி வம்சம் என்று அகிலத்தில் அறியப்படலானது. சரித்திரமும், குஜராத்தில் சோலங்கியர்களின் ஆட்சி தொடங்கியது என்ற செய்தியைப் பதிவு செய்தது. 

ஆலயங்கள் நிர்மாணிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அரசன் மூலராஜாவைத் தமிழகத்தின் இராஜராஜ சோழனுக்கு இணையாகக் கூறலாம்.  அவனது காலத்தில் சிற்பக்கலை செழிப்புற்றது. சிற்பிகள் சிறப்பிக்கப்பட்டார்கள்.  சோலங்கி பாணி என்றொரு தனித்துவ சிற்பக்கலை பாணி உருவானது. 

சோலங்கி வம்சத்தினரின் மகத்தான முதல் சிற்பக்கலை சாதனையே மொதேரா சூரிய ஆலயம். கி.பி. 1027 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தின் அமைப்பைக் கற்பனையில் உருவாக்கி உயிர் கொடுத்தவர் யாராயினும் அவர் புவி உள்ளளவும் போற்றத்தக்கவர். 

முழுக்க முழுக்க பொன்வண்ண மணற்கற்களால் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட ஆலயம் ஒரு கட்டிடக்கலை அற்புதம்.  வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வனப்பும், நெஞ்சை அள்ளும் நேர்த்தியும் கொண்ட சிற்பங்கள் நிறைந்தது. காண்போரை பிரமிப்பின் எல்லை வரை இட்டுச் செல்லும் தன்மை படைத்தது. 
ஓரே நேர்க்கோட்டில் கர்ப்பகிரகம், அதனோடு ஒட்டி அமைந்த மண்டபம். அதனை அடுத்து ஒரு தனி மண்டபம். கல் தோரணவாயில். வாயிலுக்கு வெளியே கிழக்கில் அட்டகாசமான அலங்காரக் குளம் என்று ஆலயத்தின் அமைப்பு வெகு வசீகரமானது. 

ஆலயத்தின் உட்சுவர்களில் பூமி மட்டத்துக்குச் சற்று மேலே வரிசையாக யானைகள், குதிரைகள்  செதுக்கப்பட்டுள்ளன. தோரணங்கள் மற்றும் உத்தரங்களில் காணப்படும் நுணுக்கமான சிற்பங்கள் அத்தனையும் வழிபாட்டுக்கு உரியன. உலோகத்தை உருக்கி வார்க்கப்பட்டவையோ என்று ஐயப்படும் அளவுக்கு அனைத்து அங்குலங்களிலும் நுணுக்கமான கல் வேலைப்பாடுகள்.

ஆலயத்தின் தென் பகுதியில் அக்னியும், வட புறத்தில் ஆதவனும் சூரிய பகவானும் இயற்கை உபத்திரவங்களால் பாதிக்கப்படாமல் இன்றும் இளமையுடன் காட்சி அளிக்கிறார்கள். கர்ப்பக்கிருகம் மற்றும் அதனோடு இணைந்திருக்கும் மண்டபம் ஆகியவற்றுக்கு முன்னால் தனித்திருக்கும் மண்டபமானது ஆலயத்தை விட சற்றே பிற்பட்ட காலத்தையது. 

மையத்தில் எண்கோண வெளியுடன் காட்சியளிக்கும் இது சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த வளைவுகள், கல் தோரணங்கள், குவிமாடம் ஆகியவற்றுடன் பிரமிக்க வைக்கிறது. 

விதானத்தில் காணப்படும் சுற்று வளையங்களில் யானைகள், புரவி வீரர்கள், அன்னங்கள், அழகிய தொங்கணிகள் ஆகியன கல் கவிதைகளாக மதியைக் கிறங்கடிக்கின்றன. 

உத்தரங்களிலும், தூண்களிலும் சிறிய அளவுச் சிற்பங்கள், கொடிகள், இலைகள்! நான்கு திசை வாசல்களிலும் வளைவுகளுடன் கூடிய அலங்காரத் தோரணங்கள்,  உட்சுற்றளவில் நிறுவப்பட்டிருக்கும் தூண்கள் அலங்காரமான சிற்பச் செதுக்கல்களுடன் காட்சி தருகின்றன. 

கிழக்கு திசையில் இருக்கும் குளம் அசாதாரணமான கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. கட்டுமான அற்புதமான இந்தக் குளத்தில் இரட்டை அடுக்குப் படிகள் நீரை நோக்கிக் கீழிறங்குகின்றன. படித்துறைகளில் ஆங்காங்கே அலங்காரப் பிறைகள். அவற்றுள் கடவுளர் உருவங்கள். கண்ணை வசீகரிக்கும் கற்சிற்பங்களின் பேரழகும், உட்கூரைகளின் நேர்த்தியான செதுக்கு வேலைகளும், தூண்கள், வளைவுகள் ஆகியவற்றின் எழில் வேலைப்பாடுகளும், காண்போரைக் கனவுலகில் உலாவரத் தூண்டும்.

பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் கல் விந்தையான மொதேரா சூரிய ஆலயத்தின் சிற்ப வேலைப்பாடுகளைக் காண்பதற்காகவே உலகப் பயணியர் பலர் இந்தியா வருகிறார்கள். 

சில அவசியத் தகவல்கள்

எங்கே உள்ளது?   : அஹமதாபாதில் இருந்து சுமார் நூறு கி.மீ, தொலைவில் உள்ள பதான் என்னும் நகரில்.

எப்படிச் செல்வது? : சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு ரயிலிலோ, விமானத்திலோ சென்றால் அங்கிருந்து மொதேரா சூரியக்கோவிலுக்குப் பேருந்திலோ, காரிலோ செல்லலாம். 

எங்கே தங்குவது?   : அஹமதாபாதில் குஜராத் சுற்றுலாத் துறையினரின் தங்கும் விடுதி உள்ளது. தவிர பட்ஜெட்டுக்கு ஏற்றமாதிரி நிறைய தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன. 

மொதேரா சூரியக் கோவில் இருக்கும் இடம் ஒரு சிறு கிராமம்.அங்கே சரியான உணவு விடுதிகளும் இல்லை. தங்கும் விடுதிகளும் இல்லை. ஆனாலும் ஆதவனுக்காக எழுப்பப்பட்ட அந்த ஆலயத்தைக் கண்டபின் பசி இல்லை. தாகம் இல்லை. நெஞ்சம் நிறைந்திருந்தது.   

சுற்றுலா நிறைவடையும் நேரம். இத்தனை நாட்கள் சொந்த ஊரை மறந்து, ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு கோயிலாகச் சென்ற போது பெற்ற அனுபவங்கள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் மறக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்! சுற்றுலாக்களின் சிறப்பே அதுதான்! 

பிற்பகல் மூன்று மணிக்கு அஹமதாபாத் வந்தடைந்தோம். "இன்னும் ஒரே ஒரு புனிதமான தலம் இங்கே உள்ளது. அந்தப் புனிதத்தலம் நமது சுற்றுலா பயணத் திட்டத்தில் இல்லை. அதனால் நீங்களாகவே அந்த ஆனந்த ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்... " என்ற பீடிகையுடன் எங்களது வண்டி ஓட்டுனர் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கூறினார். 

"எது அந்தத் தலம்?"

"இந்த தேசத்தின் தந்தை மிக விரும்பி வந்து வாழ்ந்த தலம் அது. எங்கள் ஊரில் ஓடும் சபர்மதி நதிக்கு அருகிலேயே அந்தப் புனிதத்தலம் அமைந்துள்ளது. அதுதான் சபர்மதி ஆசிரமம். ஊருக்குச் செல்வதற்கு முன் அந்த அமைதிப் பூங்காவுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்..." என்றார் அவர் தழதழத்த குரலில். 

அறைக்குள் நுழைந்து பயணக்களைப்பு தீர வெந்நீரில் குளித்தோம். சூடாக தேனீர் அருந்தினோம். புத்துணர்வுடன் சபர்மதி ஆசிரமம் செல்லத் தயாராகி விட்டோம். ப்ளீஸ்.. நீங்களும் வாருங்களேன்...

மகாத்மா காந்தியின் அரண்மனையான சபர்மதி ஆசிரமம்

காந்தியை நமக்கெல்லாம் எப்படித் தெரியும்? ஒன்று சினிமா நீதிமன்றங்களில் தொங்கவிடப்பட்டிருப்பார்.  அல்லது கரன்ஸி காகிதங்களில் சிரிப்பார். வேறு எப்படி காந்தியை நமக்குத் தெரியும்? இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதிய அந்த எளிய மனிதர் வசித்த அரண்மனை அகமதாபாத்தில் அமைந்துள்ளது. ஆசிரமத்தை நோக்கிச் செல்லும் இந்தச் சிறு பொழுதில் அது உருவான வரலாறை அறிந்து கொள்வோமா?

சலசலத்துச் செல்லும் சபர்மதி நதிக்கரையோரம், பல சரித்திர நினைவுகளைத் தன்னுள்ளே பதித்து, மிக எளிய குடில்களுடன் காந்தியைப் போலவே, அவர் வாழ்ந்த சத்தியாகிரக ஆசிரமம் அமைதியாக விளங்குவதாகக் கூறினார்கள். அங்கே ஆசிரமம் துவக்கப்பட்டதே ஒரு சுவாரசியமான நிகழ்வு. 

அகமதாபாத்தில் கோச்ராப் என்ற இடத்திலிருந்து தன் ஆசிரமத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் மகாத்மா காந்திக்கு வந்தது. சபர்மதி கரையைப் பார்வையிட்டார். புதர்கள் நிரம்பியிருந்த கரடுமுரடான நிலத்தில், பாம்புகள் நெளிந்தன. அமைதியான ஆசிரமத்துக்கு இதுவா சிறந்த இடம் என்ற கேள்வி வந்தது. 

தர்ம யுத்தத்துக்காக, ததிசி முனிவர் தன் முதுகெலும்பையே வழங்கிய தலம் அது என்று மகாத்மா அறிந்தார். பாரத புராணத்தில் மாபெரும் தியாகத்தின் சின்னமாக விளங்கும் அந்த இடத்துக்கு இன்னொரு முக்கியத்துவமும் இருந்தது. 
அங்கே ஒருபுறம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சிறைச்சாலைகளில் இரும்புச் சங்கிலிகள் இடைவிடாமல் ஒலித்தன. மறுபுறம் மயான பூமியின் புகை விண் நோக்கிப் புரண்டு எழும்பியது.  

"இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றுக்குச் செல்ல எல்லோரும் தயாராக வேண்டும். அச்சத்தை ஒழித்து, உண்மையை நாடி நம் தேடல் தொடங்க இதுவே சிறந்த இடம்" என்று காந்தி அறிவித்தார்.  

ஆடம்பரமற்ற எளிமையான குடில்கள் உருவாயின. உண்மை, அன்பு, பிரம்மச்சர்யம், களவாமை, சுவதேசம், அச்சமின்மை, தீண்டாமை ஒழிப்பு, மத சமத்துவம், புலால் மற்றும் மது நிராகரிப்பு, உடல் உழைப்பு- போன்ற உயர்ந்த நோக்கங்கள் ஆசிரமத்தின் முக்கிய கொள்கைகளாக ஏற்கப்பட்டன. 
ஆசிரமத்தில் காந்தி தந்தையாகவும், கஸ்தூரிபா தாயாகவும் கருதப்பட்டனர். முதலாளி, பணியாளர் என்று பிரிவு இல்லை. அனைவரும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர்.
 
வன்முறையற்ற சத்தியாகிரகப் போராட்டங்களுக்கு ஆசிரமம் தன் உறுப்பினர்களைத் தயார் செய்தது. காந்தி இங்கிருந்த போது ஆறு முறை கைதாகி ஆசிரமத்துக்கு அருகில் இருந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இங்கே தான் தேசத்தின் தந்தை புகழ்பெற்ற 'சத்திய சோதனை' என்னும் தமது சுயசரிதத்தை எழுதத் துவங்கினார். 

1930, மார்ச் 12. அதிகாலை ஆறரை மணி. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய பல்சக்கரமாகக் கருதப்படும் தண்டி யாத்திரை இங்கே காந்தியின் தலைமையில் துவங்கியது. 

"இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இந்த ஆசிரமத்துக்கு நான் திரும்பப் போவதில்லை" என்று உணர்வுப்பூர்வமாக காந்தி ஒரு சபதம் எடுத்தார். தமது அறுபத்தோராவது வயதில், எழுபத்தெட்டு சத்தியாகிரகிகளுடன் காந்தி, தண்டி நோக்கி பாத யாத்திரையைத் துவக்கினார். 325 கி. மீ நடந்து இருபத்தாறு நாட்களில் தண்டியை அடைந்தார். உப்பை அள்ளி எடுத்தார். எதிர்பார்த்தபடியே கைது செய்யப்பட்டார். 

இந்தியாவெங்கும் சுமார் அறுபதாயிரம் பேர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலைகள் நிரம்பின. 

நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேய அரசை எதிர்த்து ஆண், பெண், இளைஞர்கள் என அனைவரும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு, தங்கள் சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து, காந்தியின் தலைமையை ஏற்றனர். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடத் துவங்கினர். 
மோகன்தாஸ் காந்தி, மகாத்மா காந்தி என்று அழைக்கப்பெற்றார். 
காந்தியின் ஆசிரமத்தை பிரிட்டிஷார் கைப்பற்றினர். 
இந்திய மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள். ஆங்கில அரசு, இந்தத் தகவலை அடிப்படையாகக்கொண்டு, ஒரு சூழ்ச்சி செய்தது. 

“இந்தியா ஹிந்துக்களின் நாடு! நாடு விடுதலை பெற்றால் ஹிந்துக்களே ஆட்சி புரிவார்கள். இன்று ஹிந்துக்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிடும் முஸ்லிம்கள், விடுதலைக்குப் பின் காந்தி மற்றும் ஹிந்துக்களாலேயே ஏமாற்றப்படுவார்கள்” என்றொரு விஷமப் பிரச்சாரத்தைச் செய்தது.  

ஆங்கிலேயர்களின் இந்தப் பிரச்சாரத்தால், முஸ்லிம்கள் தங்களுக்கென தனியொரு சுதந்திர நாடு வேண்டும் என்று கருதத்தொடங்கினார்கள்.  இஸ்லாமியத் தலைவரான முகம்மது அலி ஜின்னா, 'முஸ்லிம்களுக்குத் தனி நாடு தேவை..’ என்ற முழக்கத்துடன் களம் இறங்கினார். 

'இது ஆங்கிலேயர்களின் தந்திரம்' என்று உணர்ந்த காந்தி, “ஹிந்துக்கள், இஸ்லாமியர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது அவசியம். அவர்களுக்காக சில தியாகங்களைச் செய்வது ஹிந்துக்களுடைய கடமை” என்று ஹிந்துக்களை வலியுறுத்தத் தொடங்கினார். 

காந்தியின் இந்தக் கூற்றால் அவர் மீதும், முஸ்லிம்கள் மீதும் கடும் கோபமும், ஆத்திரமும் கொண்ட ஹிந்து இளைஞர்கள் பலர் உருவானார்கள். அவர்களுள் மிகத்தீவிரமான காந்தி விரோதியாக உருவானவனே நாத்துராம் விநாயக் கோட்ஸே. 

முகமது அலி ஜின்னா மற்றும் பல ஹிந்து-முஸ்லிம் தலைவர்கள் ஆகியோர்களின் பிடிவாதம் காரணமாக பாகிஸ்தான் என்னும் தனி இஸ்லாமிய நாடு உருவாக காந்திஜி ஒத்துக்கொண்டார். 

1947 ஆகஸ்டு 15. நாடு சுதந்திரம் பெற்றது. பாரதம் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிளவுபட்டது. 

பாகிஸ்தான் பகுதியில் மதவெறி பேயாட்டம் ஆடத் தொடங்கியது. அங்கிருந்த ஹிந்துக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாயினர். நூற்றுக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் கொன்று குவிக்கப்பட்டனர். பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். ஹிந்துக்களின் வீடுகளுக்குத் தீயூட்டப்பட்டன.  

பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பசியுடனும், உறவுகளை இழந்த துயருடனும் ரயில்களில் அடைந்து இந்தியப் பகுதிக்கு வரத் தொடங்கினர். வழியிலேயே பலர், முஸ்லிம் வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்த ரயில்கள் அனைத்திலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக அடுக்கடுக்காக ஆயிரக்கணக்கான ஹிந்துப் பிணங்கள். வல்லூறுகளும், கழுகுகளும் அந்தப் பிணங்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. சகிக்கமுடியாத துர்நாற்றம் ரயில் நிலையங்களையும், சுற்றுப்புறங்களையும் நிறைத்தது. 

பத்திரிகைகளில் இந்தச் செய்திகள் படங்களுடன் வெளியாகின. தீவிரவாத ஹிந்து இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். இந்தக் கொடுமைகள் அனைத்துக்கும் மூல காரணம் காந்திதான் என்று தீவிரமாக நம்பினார்கள். 'கொல் அந்தக் கிழவனை' என்று முழங்கினார்கள். நாதுராம் கோட்ஸே காந்திஜியைக் கொல்வதென்று முடிவானது. அவனுக்கு ஒரு துப்பாக்கி ஏற்பாடு செய்து தரப்பட்டது. 

1948. ஜனவரி 30. தில்லி பிர்லா மாளிகையின் புல்வெளியில், மஹாத்மா காந்தியுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர். 

அந்தக்  கூட்டத்தில் படபடக்கும் இதயத்துடன் காத்திருந்த நாதுராம் கோட்ஸே திடீரென காந்தியை நெருங்கினான். அவரது பாதத்தைத் தொட்டு வணங்குவது போல, அவருக்கு முன் குனிந்தான். வணங்கி விட்டு நிமிர்ந்த கோட்ஸே தன் வலது கையில் பிடித்திருந்த துப்பாக்கியை உயர்த்தினான். கண்ணிமைக்கும் நேரத்தில் மஹாத்மாவை மார்பிலும், வயிற்றிலும் சுட்டான். மூன்று குண்டுகள் மஹாத்மாவின் உடலைத் துளைத்தன. குருதி பொங்கியது. 

'ஹே ராம்' என்று தனது இஷ்ட தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தவாறே மஹாத்மா காந்தி பின்புறம் சரிந்து விழுந்தார். 

ஆயுதம் ஏந்தாமலேயே, சக்திவாய்ந்த ஆங்கிலேய ஆட்சியை அகற்றி, பாரதத்துக்கு விடுதலை பெற்றுத் தந்த அஹிம்சா மூர்த்தி, தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் உயிர் பிரிந்தது.

அடிமை இந்தியாவில் அவரை எதிரியாக நினைத்த பிரிட்டிஷார் கூட மதித்துப் பாதுகாத்த காந்தியை, சுதந்திர இந்தியாவில் நம்மால் பாதுகாக்க இயலவில்லை. சபர்மதிக்குத் திரும்புவேன் என்று சொன்ன தன் வாக்கை நிறைவேற்ற வாய்ப்பேயில்லாமல், காந்தி அமரர் ஆனார். 

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1963ல் சபர்மதி ஆசிரமம் காந்தியின் நினைவாலயமாக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைக்கப்பட்டது.  

உணர்ச்சிப் போராட்டங்களுடன் கூடிய சபர்மதி ஆசிரமத்தின் முன் கதை இது! காந்தி நுழைய முடியாமலேயே போய்விட்ட அந்த ஆசிரமம் இன்றைக்கு எவ்வாறு உள்ளது?

ஆசிரம வாயிலை நெருங்கி விட்டோம். வாருங்கள் உள்ளே நுழைவோம். அடுத்த இதழில் பயணம் நிறைவு பெறும்..

- சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles