மந்திராலயம் - நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி! சுபா (காஷ்யபன்)

Friday, December 1, 2017

ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், கர்நாடகாவின் மைசூர் பகுதியில் பன்னூர் கிராமத்தில், பல்லன்ன-சுமதி என்பவருடைய மகனாக, கி.பி.1460 இல் ப்ரம்மண்ய தீர்த்தர் என்ற மஹானின் அருளால் தோன்றினார்.யதிராஜன் என்று பெயரிடப்பட்டு, சிறு பாலகனாக ப்ரஹ்மண்யரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர், கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று, சிறு வயதிலேயே  சன்யாசம் ஏற்று, தன் குருவுக்குப் பின் மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

மத்வ சித்தாந்தத்தை நிலைநிறுத்திப் பெரும் புகழ் பெற்ற வியாசராஜர், 1486 முதல் 1498 வரை, திருப்பதி வேங்கடாஜலபதி ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தினார். திருப்பதி ஆலய விமானத்தில் சேவை தரும் விமான வெங்கடேஸ்வர ஸ்வாமியை அங்குப் பிரதிஷ்டை செய்தவர் இந்த மஹான் தான்.

பின்னர் மன்னன் சாளுவ நரசிம்மன் வேண்டுகோளை ஏற்று, விஜயநகர அரசின் தலைநகரான ஹம்பியில் வசிக்கத் தொடங்கினார்.  1509 ஆம் ஆண்டு அரியணை ஏறிய கிருஷ்ணதேவராயர் வியாசராஜரை ராஜ குருவாக மட்டும் அல்லாமல் தனது குலதெய்வமாகவே மதித்துப் போற்றி வணங்கினார்,

சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயருக்கு விதி வசத்தால் ஏற்பட இருந்த பீடை போன்ற பெரும் ஆபத்தை உணர்ந்த குருநாதர், அந்த நேரத்தில் மட்டும் தானே அரசராக அரியணையில் அமர்ந்து, அந்த வினையை நேரடியாக எதிர்கொண்டு அழித்து, மன்னரது உயிரையும், நாட்டு நலனையும் காத்தார், என்பது விஜயநகர சரித்திரத்தில் நடந்த முக்கிய நிகழ்வாகும்.

வியாசராஜர், தன் தாய் மொழியான கன்னடத்தில் அழகிய பக்திப் பாடல்கள் பல புனைந்துள்ளார். புகழ்பெற்ற 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ....', 'தாஸரேந்தரே புரந்தர தாஸரியா....' போன்ற பாடல்கள், வியாசராஜரால் புனையப்பட்டவையே.

கருமியாக வாழ்ந்த சீனப்பநாயக்கர் என்ற பெரும் செல்வந்தரைத் தடுத்து ஆட்கொண்டார் வியாசராஜர். இவரே, பின்னர், ஆயிரக்கணக்கான கீர்த்தனைகள் மூலம் இறைவனைப் போற்றி, கர்நாடக சங்கீத பிதாமகர் எனப் பெருமை பெற்ற மஹான் புரந்தரதாஸர் ஆவார். புரந்தரதாஸர் மற்றும் இன்னொரு சிஷ்யரான கனகதாஸர் மூலம் 'ஹரி தாஸ' பத்ததி என்ற இசையால் இறை பக்தி செய்யும் இயக்கத்தைப் பரப்பினார்.

ஆஞ்சநேயர் மீது பெரும் பக்தி கொண்டிருந்த வியாசராஜர், பாரத தேசமெங்கும், 732 அனுமன் மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தார். அவர் வாழ்ந்த ஹம்பியிலேயே, கிழக்கு நோக்கிப் பாயும் துங்கபத்ரா நதி, வடக்கு நோக்கித் திரும்பும் புனிதமான சக்ர தீர்த்தத்தின் கரையில், ஒரு பாறையின் மீது அவராலேயே வடிவமைக்கப்பட்ட ஹனுமான், யந்த்ரோத்தாரக ஹனுமான் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.      

ஆன்மீக உலகின் பெரும் தூணாக விளங்கிய ஸ்ரீ வியாசராஜர், கி.பி.1539 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள் சனிக்கிழமை அன்று முக்தியடைந்து, நவபிருந்தாவனத்தில், அவதார த்ரய ஹனுமான் சந்நிதிக்கு நேர் எதிரில், சமாதிக்கோயில் கொண்டார்.

மஹான் வியாசராஜர் தமது பிருந்தாவனத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம்பிக்கையுடனும், உள்ளன்புடனும் பிரார்த்தனை செய்வோர்க்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.  

ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர் ஆறாவது பிருந்தாவனத்தை அலங்கரிக்கிறார். வியாசராஜரின் சீடரான இவர் தமது குருவின் அருமை, பெருமைகளை உலகம் அறிந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். 'வியாச விஜயம்' என்ற தனது நூலில், வியாசராஜரின் வாழ்க்கை மற்றும் இறைத்தொண்டு ஆகியவற்றை அற்புதமாக விவரித்துள்ளார்.

வியாசராஜரைத் தொடர்ந்து பீடாதிபதியாக தலைமைப் பொறுப்பு ஏற்று, ஆன்மீக சேவை செய்த ஸ்ரீநிவாஸ தீர்த்தர், கி.பி. 1564 இல் முக்தி அடைந்து, நவபிருந்தாவனத்தில் சமாதியானார்.

   ஸ்ரீ ராம தீர்த்தர் அவர்களின் பிருந்தாவனம், ஏழாவதாக வருகிறது. ஸ்ரீநிவாச தீர்த்தரின் சிஷ்யரான இவர், 1584 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்து நவபிருந்தாவனத்தில் சமாதியானார்.

ஸ்ரீ ஸுதீந்த்ர தீர்த்தர் அவர்களின் பிருந்தாவனம், இங்குள்ள எட்டாவது பிருந்தாவனம் ஆகும். விஜயீந்த்ர தீர்த்தரின் சீடராக, அவர் அருளால் துறவறம் பூண்டவர் ஸுதீந்த்ரர். ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் குருவாக விளங்கிய பெருமை பெற்றவர். சித்திகள் பலவும் கைவரப் பெற்ற ஸுதீந்த்ர தீர்த்தர், கி.பி. 1623 ஆம் ஆண்டு, முக்தியடைந்து, நவபிருந்தாவனத்தில் கோயில் கொண்டார்.

ஸ்ரீ கோவிந்த ஒடயர் அவர்களுடைய பிருந்தாவனம் ஒன்பதாவதாக அமைந்துள்ளது.  வியாசராஜர் அருளால் மத்வ மதத்தைத் தழுவிய இந்த மஹான், குருவால் சன்யாஸம் அளிக்கப்பட்டு, 'கோவிந்த ஒடயர்' என்ற திருநாமத்துடன், த்வைத சித்தாந்தத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தனது குருநாதர் வியாசராஜருக்கு முன்பாகவே கி.பி.1534 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்து, நவபிருந்தாவனத்தில், சமாதியடைந்தார். வியாசராஜ பிருந்தாவனத்துக்கு இடப்புறப் பகுதியில், பத்மநாப தீர்த்தரின் முதல் பிருந்தாவனத்தை அடுத்து, அதற்கு இடப்புறம், கோவிந்த ஒடயரின் ஒன்பதாவது பிருந்தாவனம், சிறிய வடிவில் அமைந்துள்ளது.

மஹானாகவும், சன்யாஸியாகவும் இருந்தும், மடத்தலைவராகப் பீடத்தில் அமராத காரணத்தால், கோவிந்த ஒடயர் பலருக்கு முன்பே பிருந்தாவனம் புகுந்திருந்தாலும், அவரது பிருந்தாவனம், இறுதியான ஒன்றாகக் கணக்கிடப்பட்டு வருகிறது.

நவபிருந்தாவனத்தில் சமாதிக்கோயில் கொண்டுள்ள மஹான்கள் அனைவரும் பெரும் இறைத் தொண்டர்கள். இன்றும் அங்கு, உயிர்ச் சக்தியுடன் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வணங்குபவர்களின் துன்பங்களைக் களைந்து, நன்மைகள் செய்து, அருளை வாரி வழங்கிக் கொண்டிருப்பவர்கள்.

'யந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமுலு........' என்ற மஹான் தியாகராஜரின் கீர்த்தனை வரிகளை நினைவு கொள்வோம்.      

நவபிருந்தாவன மஹான்களுடன் கூட, இப்பூவுலகில் அவதரித்து அருளாட்சி செய்து கொண்டுள்ள அனைத்து மஹான்களையும் சிரம் தாழ்த்தி வணங்குவோம்.

சில அவசியத் தகவல்கள் :

ஆற்றின் நடுவில் அமைந்திருக்கும் நவபிருந்தாவனத் தீவுப் பகுதியை படகின் மூலமாகத் தான் சென்று அடைய வேண்டும். அவ்விடத்தில் நவபிருந்தாவனத்தைத் தவிர வேறு எந்த கட்டிடமோ, அமைப்போ இல்லை. தங்குவதற்கு எந்த வசதிகளும் இல்லை. நவபிருந்தாவனத்தை வழிபடச் செல்பவர்கள், காலை முதல் மாலை வரை, நதியின் கரைப்பகுதியிலிருந்து படகின் மூலம் அவ்விடத்தை அடையலாம். தரிசனம் செய்து விட்டு, மீண்டும் படகின் மூலமே கரைக்குத் திரும்பி விட வேண்டும்.  

ஆனேகுந்தியின் படகுத் துறையிலிருந்து இயக்கப்படும் மோட்டார் படகுகள் மூலம், நதியின் நடுவே இருக்கும் நவபிருந்தாவனத் தீவுப்பகுதிக்குச் செல்லலாம். காலை 6 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை படகுப் போக்குவரத்து உண்டு. ஆனேகுந்தியில் இருக்கும் ராகவேந்திர ஸ்வாமி மடம் மற்றும் உத்தராதி மடம் ஆகியவற்றிலிருந்து அர்ச்சகர்கள், இதே படகுகள் மூலம் காலை சுமார் 7 மணிக்கு நவபிருந்தாவனம் செல்வது வழக்கம். அங்கு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை முடித்து விட்டு, பகல் சுமார் 11, 12 மணிக்குள் திரும்பிவிடுவது வழக்கம். ஆகவே, நவபிருந்தாவனத்தை தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்களும், இதே நேரத்தில் சென்று வழிபடுவது நல்லது.

பூஜை, பிரார்த்தனைக்குத் தேவையான பொருட்கள், எண்ணெய், நெய் விளக்குகள், அவற்றை ஏற்ற தீப்பெட்டி, அணிவிக்க வஸ்திரங்கள் போன்றவற்றையும், நாம் குடிக்கத் தேவையான தண்ணீரையும் வெளியிலிருந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும்; தீவுத்திட்டில் கடை எதுவும் கிடையாது, எந்தப் பொருளும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதையோ, புனிதமான அந்த வளாகத்தில் உட்கொள்வதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

நவபிருந்தாவன வளாகத்துக்கோ, அங்கு இருக்கும் சந்நிதிகளுக்கோ கதவுகள் இல்லை. ஆகவே படகு இயங்கும் நேரமான காலை முதல் மாலை வரை எந்நேரமும் தரிசனம் செய்ய முடியும். ஆனால், குறைந்தது 10 பயணிகள் இருந்தால்தான், படகு இயக்கப்படும் என்பதால், தரிசனத்துக்குச் செல்பவர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்வது நல்லது.

முக்கியமான எச்சரிக்கை. இந்தப் பகுதிகளில் ஜூன் மாதம் முதல் மழைக்காலம் துவங்கும். ஜூலை மாதம் முதல் துங்கபத்ரா நதியில் வெள்ளம் பாயத் தொடங்கும். நதியின் நடுவே அமைந்துள்ள நவபிருந்தாவனத் தீவுக்கு படகுகள் செல்ல முடியாத நிலையும் ஏற்படும். ஜூலை மாத மத்தியிலிருந்து, செப்டம்பர் மாதத் துவக்கம் வரையில், நவபிருந்தாவனத்துக்கான படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும் சாத்தியம் உள்ளது.

இது போன்ற நேரங்களில் நவபிருந்தாவனங்களை தரிசனம் செய்வது இயலாத காரியம். ஆகவே, இந்தக் காலத்தில் நவபிருந்தாவன யாத்திரையைத் தவிர்க்க வேண்டும்.  

ஆனேகுந்தி ராகவேந்திர மடம்

படகுத்துறைக்கு அருகில் அமைந்துள்ளது, இந்த அழகிய சிறிய மடம். இங்கு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்தை தரிசிக்கலாம். இந்த மஹான் ஜீவ சமாதி அடைந்த மூல பிருந்தாவனம் மந்த்ராலயத்தில் அமைந்துள்ளது. அந்தத் தலத்திலிருந்து 'மிருத்திகை' எனப்படும் மண் எடுத்து வந்து, அதைக் கொண்டு எழுப்பப்பட்ட இது போன்ற பிருந்தாவனங்கள், மிருத்திகா பிருந்தாவனங்கள் எனப்படுகின்றன. இங்கு சிரத்தையுடன் செய்யப்படும் பூஜை, ஆரத்தி போன்றவற்றிலும், பக்தர்கள் பங்கு கொண்டு மஹானின் அருள் பெறலாம்.

இந்த மடத்தில் தங்குவதற்கு, பிராகாரம், ஹால் போன்ற பொது இடங்கள் உள்ளன. உடமைகளை பத்திரமாக வைத்து விட்டுச் செல்வதற்கும் வசதி உள்ளது. மடத்தில், குறிப்பிட்ட நேரங்களில், உண்பதற்கு எளிய உணவும் கிடைக்கிறது. இங்கு தங்குவதற்கும், உணவுக்கும் முன்கூட்டியே செய்தி சொல்லி விடுவது நல்லது. மேலும், நவபிருந்தாவனத்தில் செய்யப்படும் பூஜை முதலியவற்றை இங்குள்ள அர்ச்சகர்களே சென்று மேற்கொள்வதால், அந்தப் பூஜைகள் தொடர்பாகவும், இங்கு முன்கூட்டியே தெரிவித்து, அவர்களின் அறிவுரையையும் பெற்றுக் கொள்ளலாம்.

ராகவேந்திர மடத்தை அடுத்து, உத்தராதி மடமும் உள்ளது. கீழ்க்கண்ட விலாசம் மற்றும் தொலைபேசிகளில், இந்த மடங்களைத் தொடர்பு கொள்ளலாம்:

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடம்,

ஆனேகுந்தி,

கங்காவதி தாலுக், கொப்பல் மாவட்டம், கர்நாடக மாநிலம். பின் கோடு 583227

தொலைபேசி  08533-267733

ஸ்ரீ உத்தராதி மடம்,

ஆனேகுந்தி,

கங்காவதி தாலுக், கொப்பல் மாவட்டம், கர்நாடக மாநிலம். பின் கோடு 583227

தொலைபேசி  08533-267562

 

இந்த மடங்களைத் தவிர, ஆனேகுந்தி கிராமத்தில் ஓரிரண்டு தங்கும் விடுதிகளும் உள்ளன. இங்கு உணவுக்கான முழு ஏற்பாடுகளையும் செய்து தருகிறார்கள். ராகவேந்திர மடத்துக்கு எதிரே உள்ள, இது போன்ற ஒரு தங்கும் விடுதியின் விவரம் :

வைபவா தங்கும் விடுதி (Vaibhava Guest House)

ராகவேந்திர ஸ்வாமி மடம் எதிரில், ஆனேகுந்தி,

கங்காவதி தாலுக், கொப்பல் மாவட்டம், கர்நாடக மாநிலம்.- 583227

தொலைபேசி- 08533-267560. கைப்பேசி- 9449432520, 9480794104

இவ்விடத்தில் தங்குபவர்களுக்கு, தீபம் / விளக்கு போன்ற நவபிருந்தாவனப் பூஜைப் பொருட்களை, இவர்களே ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். இங்கு சென்று தங்க விரும்புபவர்கள், தொலைபேசி, கைபேசி மூலம், முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஹோஸ்பெட்டில் தங்கியும், இங்கு வந்து தரிசனம் செய்யலாம். ஹோஸ்பெட்டில், ஏராளமான தங்கும் மற்றும் உணவு விடுதிகள் உள்ளன. நடுத்தர வர்கத்துக்கு ஏற்ற ஹோட்டல்களில் ஒன்று

 

Hotel Malligi, 10/90, J.N.Road, Hospet - PIN: 583201

Ph: (08394) 228101 (8 lines)

malligihome@hotmail.com <mailto:malligihome@hotmail.com>

சென்னையிலிருந்து நவ பிருந்தாவனம் செல்ல விரும்புபவர்கள், பெங்களூர் சென்று, அங்கிருந்து ஹோஸ்பெட் செல்லலாம். அல்லது ரயிலில் குண்டக்கல் சென்று, அங்கிருந்து வேறு ரயிலில் ஹோஸ்பெட் செல்லலாம். பின்னர் அங்கிருந்து ஆனேகுந்தியை அடையலாம்.

அல்லது குண்டக்கல்லிலிருந்து பஸ் மூலம் பெல்லாரி மார்கமாக கங்காவதி என்ற நகருக்கு வரலாம். இங்கிருந்து 12 கிமீ தொலை வில் உள்ள ஆனேகுந்தியை. பஸ் அல்லது ஷேர் ஆட்டோ முலம் எளிதில் அடையலாம். கங்காவதியிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள ஹோஸ்பெட்டையும் அடையலாம்.

மந்த்ராலய மற்றும் நவ பிருந்தாவன மஹான்களை உளமார தரிசித்து அந்த மஹான்களின் பரிபூரண அருளுடன் ஆனந்தமாகத் திரும்பி வருவதற்கு அந்த மஹான்களே  அனுக்கிரஹம் செய்வார்கள். ஜெயம் உண்டு. பயமில்லை. சென்று வாருங்கள். அருளை அள்ளி வாருங்கள்.

 

..(பயணம் நிறைந்தது)

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles