மந்திராலயம் - நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி!

Monday, August 21, 2017

நீரில் மூழ்கிய போட்டோகிராஃபரும், ஓவியரும் வெளிப்படவில்லை என்று நினைத்து மனதில் திடுக் எழுந்த காரணத்தால் ஆற்று நீரில் சிகப்பு நிறத்தில் வண்ணத்தீற்றலைப் பார்த்தவுடன் அது இரத்தமாகத்தான் இருக்க வேண்டும் என ஏற்கெனவே பயந்திருந்த மனம் கன்னா பின்னா என்று கற்பனை செய்து விட்டது.  

“ஹலோ..” என்று சற்று தூரத்தில் இருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் கரை ஓரத்தில் இருந்த ஒரு பாறை மீது ஓவியரும், ஃபோட்டோகிராஃபரும் உட்கார்ந்திருந்தார்கள். “நாங்கள் தண்ணீரில் முங்கி உடனே எழுந்து வந்து உட்கார்ந்து விட்டோம்.  நீங்கள் எவ்வளவு நேரம் தண்ணீருக்கடியில் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் அந்தப் போட்டியையே வைத்தோம்… “ என்றார் ஓவியர் ஜெ.பி. சிரித்துக் கொண்டே. 

அடப்பாவிகளா.. அப்படியானால் ஆற்றுநீரில் வந்த அந்த இரத்தச் சிவப்புத் தீற்றல்?

சுற்றிலும் பார்த்தோம். சற்றுத் தொலைவில் வரிசையாக அமர்ந்திருந்த புது மண ஜோடிகளுக்கு ஆரத்தி எடுத்து, கரைசலை ஆற்றில் ஊற்றிய காட்சி தென்பட்டது. அடச் சே, இவ்வளவுதானா? அதன் பின் ஒழுங்காக நீராடி விட்டுக் கரையேறினோம். புத்தாடை உடுத்திக் கொண்டு மந்திராலய மகானின் தரிசனத்துக்காகச் சென்றோம். 

ஆலய வாசலை நோக்கிச் செல்லுமுன் மாஞ்சாலம்மா தேவி சன்னிதி எதிர்கொண்டது.  ஸ்ரீ ராகவேந்திரரின், பிருந்தாவன ஆலயத்துக்கு, இடது புறம் நதியின் திசையில் மாஞ்சாலம்மா சன்னிதி அமைந்துள்ளது. 
இந்த அன்னையிடம் தான் மகான் ராகவேந்திரர், 'அன்னையே! என்னை நாடி வரும் பக்தர்கள் மந்திராலயம் வந்ததும் உன்னை வணங்கிப் பின்னரே என்னைத் தேடி வரட்டும். உன் தரிசனம் கிட்டியவர்களுக்கே எனது அருள் கிட்டும்' என்று உறுதி அளித்திருக்கிறார். 

மாஞ்சாலம்மா மந்திராலயப் பிரதேசத்தின் காவல் தெய்வம். பிரகலாதரின் குல தெய்வம். அன்னை மாஞ்சாலம்மா பட்டாடை உடுத்தி, முகத்தில் புன்னகை தவழ எழுந்தருளி இருக்கிறாள். ஒரு கரம் அபயம் அளிக்கிறது. இன்னொரு கரம் வரதானம் அளிக்கிறது. அன்னையின் முன்னால் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.  பெண்கள் மாவிளக்கு ஏற்றி வணங்குகிறார்கள். பொங்கல் இட்டுப் படைக்கிறார்கள். 

அன்னையை தரிசித்த மன நிறைவுடன் அடுத்திருக்கும் பிருந்தாவன ஆலயத்துள் நுழைகிறோம். உள்ளே அமைதி நிலவும் சூழல். எங்கெல்லாமிருந்தோ வந்து குவிந்திருக்கும் பக்தர்கள்.  வெள்ளிக் கவசமிட்ட ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்துக்கு எதிரில் நின்று விழிகளை மூடினால் உள்ளம் நிறைகிறது. மகானின் திருவருள் நம்மை ஊடுருவித் தன்னைப் பதிவு செய்கிறது. பிரசாதமாக மிருத்திகா என்ற மண் கலந்த அட்சதை வழங்கப்படுகிறது. தீர்த்தம் தரப்படுகிறது.

ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்துக்கு எதிரில் வெகு அழகான, வேலைப்பாடுகள் நிறைந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரையும் வணங்குகிறோம். ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தை அடுத்து அவர் வழியில் வந்த ஐந்தாவது பீடாதிபதி ஸ்ரீ வாதீந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 

ஸ்ரீ வாதீந்திரர், தேவ குருவான பிருகஸ்பதியின் அம்சமாக அவதரித்தவர். 
பெரிய பண்டிதரான இவர் ராகவேந்திரர் மீது 'குருகுணஸ்தவனம்' என்னும் கவிதை நூலை இயற்றி, அதை ராகவேந்திரரின் பிருந்தாவனத்தின் முன்னர் அரங்கேற்ற, மூலபிருந்தாவனம் குலுங்கி நூலை அங்கீகரித்தது. பிருந்தாவனத்திலிருந்து துளசி மாலை அவர் கழுத்தில் ராகவேந்திரரின் ஆசியாக விழுந்தது. 

அவர் பிருந்தாவனஸ்தராக வேண்டிய சமயம். சீடர்கள் சிலரின் கனவில் தோன்றிய ராகவேந்திரர், தன் பிருந்தாவனத்துக்கு அருகில் உள்ள பிருந்தாவனம் வாதீந்திரருக்காக கட்டப்பட்டதே என்று அருளி அவருக்குத் தன்னருகே தனி இடம் அளித்தார். ராகவேந்திரரின் பிருந்தாவனத்தை வலம் வரும் பக்தர்கள் இன்று வாதீந்திரர் பிருந்தாவனத்தையும் வலம் வருகிறார்கள்.

ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவன சன்னிதியில், மகானின் திருப்பிரசாதமாக மிருத்திகா என்னும் மண் கலந்த அட்சதை வழங்கப்படுகிறது. மந்த்ராலயத்து மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் கொண்டு வரப்பட்டு, பாரதத்தின் பல்வேறு நகரங்களில் மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணியிலும், தியாகராய நகரிலும் இத்தகைய மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. 

மந்திராலயம் செல்லும் பக்தர்கள் இங்கு சங்கல்ப சேவை செய்வது வழக்கம். சங்கல்ப சேவை என்பது குறிப்பிட்ட வழியில், குறிப்பிட்ட நாட்கள், குறிப்பிட்ட முறை பிருந்தாவன வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டு பின்னர், அந்த வகையில், அதைச் செய்து முடிப்பது. அது பிராகார பிரதட்சணமாகவோ, அடிப் பிரதட்சணமாகவோ, அங்கப் பிரதட்சணமாகவோ இருக்கலாம். சங்கல்ப சேவை செய்பவர்களுக்கு உடல் தூய்மையும், மனத்தூய்மையும் அவசியம். மேலும் உடல் சௌகரியங்களைக் குறைத்துக் கொண்டு, நாள் முழுவதும் ராகவேந்திரர் தியானத்தில் அந்த நாட்களில் ஈடுபடுதல் அவசியம். 

ஏதாவது காரியப் பூர்த்திக்காக சங்கல்ப சேவை செய்பவர்கள் கனவில் இன்றும் ராகவேந்திரர் தோன்றுவதோடு, இஷ்ட பலனையும் தவறாமல் அளித்து வருகிறார். நாங்கள் சென்றிருந்த சமயத்திலும் ஏராளமான பக்தர்கள் அடிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தார்கள். 

மந்திராலயத்தில் எல்லா நாட்களும், நல்ல நாட்களே என்றாலும் குருவுக்கு உகந்த வியாழக்கிழமை புனிதமான நாளாகும். வியாழக்கிழமைகளில் பிருந்தாவனம் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை வஸ்திரம் சாத்தப்படுகிறது. துளசி மாலை மட்டும் அணிவிக்கப்பட்டு அன்று ஒரு நாள் கவசங்கள் இல்லாமல் பிருந்தாவன தரிசனம் கிட்டுகிறது. இந்த தரிசனத்துக்கு நிர்மால்ய பிருந்தாவன தரிசனம் என்று பெயர். தவிர, ஒவ்வொரு ஏகாதசி அன்றும் நிர்மால்ய பிருந்தாவன தரிசனம் கிட்டும். 

மத்வ மடங்களில் ஏகாதசி நாள் பூரண உபவாச நாளாக அனுசரிக்கப்படுவதால் அன்று இங்கு பூஜை எதுவும் செய்யப் படுவதில்லை. பிரசாதமும் வழங்கப்படுவதில்லை. உபவாச நாள் என்பதால் ஆலய உணவும் சமைக்கப்படுவதில்லை. மந்திராலய மடத்தின் பிராகாரங்களில் நடைபெறும் உத்சவ மூர்த்தியின் உலா மிகவும் பிரசித்தமானது. விசேஷ நாட்களில் நடைபெறும் யானை வாகன சேவையும், ரதோத்சவமும், பல்லக்கு உலாவும் குறிப்பிடத்தக்கவை.

மந்திராலயத்தில் மாலை வேளைகளில் வெள்ளி ரதமும், சந்தனமர ரதமும் உத்சவ மூர்த்தியை சுமந்து பிராகார வலம் வருகின்றன, உத்சவ காலங்களில் தங்க ரத தரிசனமும் கிடைக்கும். உத்சவ மூர்த்தியுடன் மடத்தின் யானையும் பிரகார வலம் வருவதும், வணங்கித் தொழுவதும் கண் கொள்ளாக் காட்சிகளாகும். எனவே மந்திராலயம் செல்பவர்கள் அங்கே மூன்று நாட்களாவது தங்கியிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் பிருந்தாவன தரிசனம் செய்து , அங்கே நிகழும் உற்சவங்களைக் கண்டு களித்து, அதன் பின்னர் மகானிடம் மானசீகமாக புறப்படுவதற்கான அனுமதி பெற்று புறப்படுதல் நலம்!

மத்வ மடத்தின் பீடாதிபதி மந்திராலயத்தில் இருக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மூலராமர் தரிசனம் கிட்டும். மூலராமர் ஸ்ரீ மடத்தின் விலை மதிக்க முடியாத சொத்து. இன்றும் ஸ்ரீ மட பீடாதிபதிகள் தங்களது திருக்கரங்களால் மூலராமர் விக்கிரக ஆராதனையை, தங்களின் முக்கியமான தொண்டாகச் சிரமேற்று செய்து வருகிறார்கள். மூலராமர் மடத்துக்கு வந்து சேர்ந்ததும் சாதாரணமாக நடந்த நிகழ்ச்சி அல்ல.  நான்முகன், பரந்தாமனைப் பல கோடி வருடம் வழிபட்டு வந்தார். இருந்தாலும் பத்மநாபனின் அர்ச்சா ரூபத்தைக் காண அவருக்கு அவா மிகுந்தது. விசுவகர்மாவிடம் தன் இச்சையை அவர் உரைக்க, தேவ சிற்பி ஒரு திவ்ய மங்கள விக்கிரகம் வடித்தார். 

அந்த அற்புத விக்கிரகத்தை 'ராமா' என்றழைத்து, பிரம்மா ஆராதனை செய்து வந்தார். காலப்போக்கில் ராமர் சூர்ய தேவனிடம் வந்து சேர்ந்தார். பின்னர் திரேதா யுகத்தில் சூர்ய வம்ச மன்னர்கள் தங்கள் அரண்மனையில் ராமரை ஆராதித்தார்கள். 

தசரத மன்னன் மக்கட் பேறு இல்லாமல் புத்திர காமேஷ்டி யாகம் நடத்த, நான்கு பிள்ளைகள் பிறந்தனர். மூத்த மகனுக்கு ராமன் என்று, தனது ஆராதனை தெய்வத்தின் பெயரையே மன்னன் இட்டான். இராமரும், சீதையும், லக்ஷ்மணனும் வணங்கிய இந்த மூலராமரை, துவாபர யுகத்தில் பீமன் ஆராதித்தான். மூலராமர், கலியுகத்தில் கலிங்க மன்னர் வம்ச வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

மத்வாச்சார்யரின் சீடரான நரஹரி தீர்த்தர், கலிங்க நாட்டில் அற்புதம் ஒன்று நிகழ்த்த, அதன் மூலமாக ஸ்ரீமடத்திற்கு வந்து மத்வாச்சார்யரின் பூஜையை ஏற்கத் தொடங்கினார் மூலராமர். தொடர்ந்து பல ஆச்சார்யர்கள் மூலராமரை ஆராதித்து வரத் தொடங்கினார்கள். தமது காலத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமரை நாள் தவறாமல், நேம நியமங்களுடன் பூஜித்து வந்தார். 

பிருந்தாவன தரிசனம் முடித்துக் கொண்டு இட, வலமாகப் பிராகார வலம் வரும் பொழுது, இடது பிராகாரத்தின் மூலையில் அன்னதான கூடத்துக்குச் செல்லும் வழி அமைந்துள்ளது.  அந்த வழியில் நுழைந்தால் மரங்கள் அடர்ந்த ஒரு சிறு சோலையின் நடுவில் அன்னதானக் கூடம் அமைந்திருக்கிறது. பிரமாண்டமான அரச மரத்தின் அடியில் நாகப்பிரதிஷ்டைகள் செய்யப்பட்டுள்ளன.

அரசமரத்தின் கிளைகளில் நூற்றுக்கணக்கான குருவிகள் அமர்ந்து சிட், சிட் என்று இனிமையான குரலில் அழைக்கின்றன. அவ்வளவு குருவிகளையும் அங்கு ஒரு சேரப் பார்த்தால் மனதில் இனம் புரியாததொரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அன்னதான மண்டபத்தில் நுழைந்தால் இன்முகத்துடன் வரவேற்று அமர வைக்கிறார்கள்.

இளமையில் உணவில்லாமல், பசியின் கொடுமையை அனுபவித்து  உணர்ந்திருந்த மகான், ‘தன்னை நாடி வருபவர்கள் பசியோடு திரும்பக் கூடாது’ என்பதில் தீர்மானமாக இருந்தார். அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது போல், இன்றளவும் பக்தர்களுக்கு மந்த்ராலயத்தில் மதிய உணவு வயிறார வழங்கப்படுகிறது.  நாங்களும் அமர்ந்தோம். வாழை இலைகளிலும், மந்தாரை இலைகளிலும் அன்னம் பரிமாறப்படுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில் எங்கள் இலையில் படைக்கப்பட்ட அன்னத்தை ஒரு பசுமாடு வந்து வாய் வைத்து உண்டது. 

மடத்து ஊழியர்கள் யாரும் பசுவை விரட்டவில்லை. மாறாக, ‘ஸ்ரீ ராகவேந்திராய நமஹ’ என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்தார்கள்.  பசு சற்று நேரத்தில் திருப்தியடைந்து எங்களை ஒரு முறை கருணையுடன் பார்த்து விட்டு நகர்ந்தது. நமக்குப் படைக்கப்பட்ட இலையில் பசு வந்து புசித்தால் அது நமக்கு வழங்கப்படும் பேறு என்று மடத்து நிர்வாகிகள் கூறினார்கள். குருவின் அருள் நமக்குப் பரிபூர்ணமாகக் கிட்டி இருக்கிறது என்று கூறி ஆசீர்வதித்தார்கள். அதன் பின் கூட்டு, பொரியலுடன், வயிறார சாம்பார் சாதமும், ரசம் சாதமும், மோர் சாதமும் சாப்பிட்டு விட்டு நிறைந்த மனதுடன் ஆலயத்தை விட்டு வெளிப்பட்டோம்.

மந்த்ராலய மகான் தனது வாழ்க்கை மூலம் பல விஷயங்களை நமக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அற்புதங்களை நடத்திக் காட்டும் சக்தி அவரிடம் இருந்தது. ஆனாலும் அதை அவர் சுயநலத்துக்காகப் பயன்படுத்தியதே இல்லை.
 
தன் மீது சந்தேகம் கொண்டு யாராவது சோதித்துப் பார்த்தால், சினம் கொண்டதும் இல்லை. தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பவன், அந்தக் கணமே மன்னிக்கப்பட வேண்டும் என்பதை இறுதி வரை கடைப்பிடித்தார். கடவுளுக்கு எதிரில் எவரும் உயர்ந்தவர்,- தாழ்ந்தவர் இல்லை என்பதை நிலை நிறுத்தினார். 
கல்வியும், பக்தியும் மனித வாழ்வுக்கு இன்றியமையாதது என்று வலியுறுத்தினார். மொழி, ஜாதி, நிறம் என்று எந்த பேதமுமின்றி எம்மதத்தினருக்கும், வெளிநாட்டவருக்கும் குறையற்ற அருளை வழங்கி ஆசிகள் தந்தார்.

தீவிரமான பக்தியுடன் ராகவேந்திரரின் பாதார விந்தங்களை தியானித்து அவரைத் துதிப்போர் வாழ்வில் துன்பம் என்பதே கிடையாது. குரு ராகவேந்திரரைப் பணிவோம் இம்மையும், மறுமையும் பெறுவோம்.

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்                                : மந்திராலயம் 
மகானின் திருநாமம்                        : பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர்

எங்கே உள்ளது?                               : ஆந்திர மாநிலத்தில் 
எப்படிப் போவது?                            :  சென்னையில் இருந்து மும்பை  செல்லும் ரயிலில் ஏறினால் மந்திராலயம் ரோடு என்னும் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பேருந்து மூலமாக அரை மணி நேரப் பயணத்தில் மந்திராலயம் சென்றடையலாம்.  
    
எங்கே தங்குவது                              :    மந்திராலயத்தில் நிறைய தங்கும் விடுதிகளும்,     உணவு விடுதிகளும் உள்ளன.                          
தரிசன நேரம்                                     :  காலை  06.00  முதல்  பகல்  02.00  வரை    
                                                                  மாலை   04.00 முதல் இரவு   09.00 வரை

(…பயணம் தொடரும்)

- சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles