கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் - 14

Friday, September 30, 2016

உதய்பூர் மிக அழகானதொரு நகரம். ரசனைமிக்க ராஜ புதன வம்சத்து அரசர்கள் நகரமெங்கும் கோட்டைகளையும்,  இயற்கை கொஞ்சும் நந்தவனங்களையும், வாவிகளையும் உருவாக்கி மொத்த ஊரையும் கனவு தேசமாக மாற்றியிருக்கிறார்கள். 

அரசியின் தோழிகளுக்கென்று இவர்கள் அமைத்திருக்கும் நந்தவனம் ஒரு பூலோக சொர்க்கம். அந்த நந்தவனத்தில் நீரூற்றுகளுடன் கூடிய வாவிகள், எந்நேரமும் உற்சாகமாக நீர்த்திவலைகளை இறைத்தபடி இருக்கின்றன. புள்ளினங்கள் பாடித் திரிகின்றன. விதவிதமான பூக்கள் மலர்ச்சியுடன் புன்னகைக்கின்றன. சுட்டெரிக்கும் கோடையிலும் நந்தவனம் குளுகுளுவென்று இருக்கிறது. 

 

சிற்றெறும்புகள் போல இளம்பெண்கள் சுறு சுறு, துறு துறு என்று போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள். ஆங்காங்கே யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அணைத்து, மோந்தபடி சென்ற காதல் ஜோடிகள்.

 

இங்கிருந்து சற்று தூரத்தில், ஒரு சிறு குன்றின் உச்சியில் உள்ள ஒரு பளிங்கு மண்டபத்தில் சேத்தக் குதிரையின் சிலை இருக்கிறது. அந்தக் குன்றின் சரிவுகளில் தோட்டம் அமைக்கப்பட்டு, ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தி நேரங்களில் அங்கே சென்றால், விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் அந்த இடம் ஏறக்குறைய ஒரு திரைப்படத்தின் செட் போல காட்சியளிக்கும். இயற்கையின் கொடையான தென்றல், அங்கே வருவோர் அனைவரையும் பாரபட்சமின்றித் தழுவி சுகம் நல்கும்.

 

சுற்றுலா வரும் மக்களாகட்டும், ஊர் மக்களாகட்டும், இந்த நந்தவனத்துக்குப் போகாமல் இருப்பதில்லை. சேத்தக்கின் சிலையைப் பிரமிப்புடன் நோக்காமல் இருப்பதில்லை. சேத்தக் என்னும் ஐந்தறிவு புரவி ஆற்றிய சாகசம் அப்படிப்பட்டதல்லவா? 

 

மறுநாள். காலை உணவை முடித்துக்கொண்டு உதய்பூரில் இருந்து புறப்பட்டோம். ஏறக்குறைய அரை மணி நேரப் பயணத்திற்குப் பின்னர், ஏக்லிங்க் என்னும் சிற்றூரை அடைந்தோம். அந்த ஊரில் இருக்கும் ஏகலிங்கநாதர் ஆலயம் சிற்பச் சிறப்பு வாய்ந்தது. அது மட்டுமல்லாமல் ஆலயத்தில் ஏகலிங்கநாதர் பிரதிஷ்டை ஆன விதமும் படு விசித்திரமானது என்ற முன்னுரையுடன், எங்கள் ஓட்டுனர் ஏக்லிங்க் ஆலயத்துக்கு அழைத்துப் போனார்.

 

ஏக்லிங்க்ஜியின் வரலாறும் அவரது தரிசன அனுபவமும் இதோ விரிகிறது.

 

இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் ஏக்லிங்க் ஏகலிங்கநாதர்

தாருகாவனத்து ரிஷிபத்தினிகளை மயங்க வைத்த மகேஸ்வரன், முனிவர்களின் சாபத்தினால் ஆரவல்லி மலைத்தொடரின் வனமொன்றில் ஏகலிங்கநாதனாக எழுந்தருளினான். அவன் மண்ணுலகு அடைந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது! 

குசனின் வழித்தோன்றல்களான மேவார் ராஜ வம்சத்தினருக்கும், மௌரியர்களுக்கும் இடையில் இருந்த பகையால், ஒரு முறை நடந்த போரில் மேவார் வம்சத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர். 

மேவார் வம்சம் அழிந்து விடலாகாது என்று கருதிய அரசன் அபராஜிதன், தனது கர்ப்பிணி மனைவியைத் தப்பிக்க வைத்தான். 

அவள் வசிஷ்டராவல் என்னும் புரோகிதர் ஒருவரின் பாதுகாப்பில் வாழத் தொடங்கினாள். தான் ஈந்த ஆண் வாரிசுக்கு பாப்பாராவல் என்று பெயர்சூட்டி வளர்த்தாள்.

வசிஷ்டாராவல், பாப்பாராவலிடம் கால்நடைகளை மேய்க்கும் பணியைக் கொடுத்தார். 

அவனும் பசுக்களைக் காட்டில் மேயவிட்டுத் தோழர்களுடன் குதூகலமாகக் குழந்தைப் பருவத்தைக் கழித்து கொண்டிருந்தான். ஒருநாள், பசுக்களில் ஒன்று பால் கொடுப்பதை நிறுத்திவிட்டது. பாப்பாராவல் கறவைப்பசுவின் பாலைக் குடிக்கிறான் என்று மகாராணியிடம் குற்றம்சாட்டினார் புரோகிதர். மகாராணி மகனைக் கண்டித்தாள். பாப்பாராவல், உண்மையை அறிந்து கொள்ள உத்தேசித்தான். 

மறுநாள் மேய்ச்சலின்போது, பால் தராத பசுவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் பாப்பாராவல். திடீரென்று, அந்தப் பசு கூட்டத்திலிருந்து விலகிச் சென்று மூங்கில் காடு ஒன்றில் நுழைந்தது. அங்கு ஓரிடத்தில், பூமியிலிருந்து பீறிட்டிருந்த சிவலிங்கம் ஒன்றின் மீது தானாகவே பால் சொரிந்தது.  

அந்தக் காட்சியை, பாப்பாராவலைத் தவிர யோகிராஜ் ஹரித் என்ற துறவியும் பார்த்துக் கொண்டிருந்தார். பாப்பா ராவல் அவர் கால்களில் வீழ்ந்தான். முனிவர் அவனது பிறப்பு பற்றி விசாரித்தார். பாப்பாராவல், தான் ராஜக்ஷத்திரியன் என்பதையும், அன்னையுடன் அஞ்ஞாதவாசம் செய்வது பற்றியும் தெரிவித்தான். 

மஹரிஷி அவனை உச்சி மோந்தார். 'மகனே! இங்கிருக்கும் ஏகலிங்கநாதன் எனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. நாளை உதயத்தின் போது, நான் இந்த உலகு விடுத்து மறுஉலகு ஏகுகிறேன். அந்தச் சமயத்தில் என்னை வந்து பார்' என்றார்.

மறுநாள் பாப்பாராவல் ஆரண்யம் அடைந்தபோது, ஆதவன் மேலேறி விட்டான். முனிவரைக் காணவில்லை. திகைத்துத் தேடியபோது, ஆகாயத்தில் மேலேறிக் கொண்டிருந்த புஷ்பக விமானமொன்றில் முனிவர் அமர்ந்திருந்ததைக் கண்டான். 'குருதேவா..' என்று தீனமாக அலறினான். 

குருதேவர் அவனைக் கண்டார். 'காலம் தாமதித்து வந்திருக்கிறாயே பாப்பாராவல்! பரவாயில்லை, ஆசீர்வாதம் அளிக்கிறேன். வாயைத் திற' என்றார். பாப்பாராவல் வாய் திறந்தான். முனிவர் தனது வாய் தாம்பூலத்தை உமிழ்ந்தார். தாம்பூலச் சாறு பாப்பாராவலின் வாய் நோக்கி வந்தது. 

அடுத்தவர் எச்சிலை ஏந்துவதா என்ற எண்ணத்தால், பாப்பாராவல் தலைகுனிந்தான். தாம்பூலச் சாறு அவனது கால் கட்டை விரலில் வீழ்ந்தது. 

அதனைக் கண்ட முனிவர், 'ஐயோ! ஏகலிங்கநாதர் எனக்கறிவித்தபடிதான் தாம்பூலத்தை மென்று சாறினை உனக்களித்தேன். அதனை உன் வாயில் ஏற்றிருந்தாயேயானால், இந்த உலகமே உன் காலடியில் கட்டுண்டு கிடந்திருக்கும். இப்போதோ, மேவாருக்கு மட்டுமே அரசனாக மாறக்கூடிய பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது!' என்று ஆசீர்வதித்து மறைந்தார். 

மேவாரின் மணிமுடி பாப்பாராவலை வந்தடைந்தது. பாப்பாராவல் கி.பி.734 இலிருந்து கி.பி.753 வரை மேவார் ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். தனது தலைநகரமான நாகதாவில் ஏகலிங்கநாதருக்கு ஆலயம் கட்டினார். அன்றைய நாகதா, இன்று ஏக்லிங்க் என்று அழைக்கப்படுகிறது.

ஏகலிங்க்ஜி ஆலயம், உதய்பூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பல பளிங்குக் கோபுரங்கள் கொண்ட ஆலய வளாகம், மலைச்சரிவிலிருந்து காண்பதற்குக் கொள்ளை அழகு! 

கிழக்கு வாசலுக்கு அருகில் கணேசரும் அம்மை பார்வதியும், தெற்கு வாசலுக்கு அருகில் கங்கையும் கார்த்திகேயனும் எழுந்தருளியிருக்கிறார்கள். 

வடக்குப் பிராகாரத்தில் அம்பாஜிக்கான தனி ஆலயம் உள்ளது. வண்ண ஆடைகள், மலர்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வெண் பளிங்கு அன்னை புன்னகை பொலியத் துலங்குகிறாள். அம்பாள் சந்நிதிக்கு இடது புறத்தில், காளி மாதாவுக்கு தனி ஆலயம். கரும் பளிங்கு அன்னை பத்து தலைகளுடன் தரிசனம் அருள்கிறாள். 

சந்நிதி வாசலில், ஐராவதத்தின் மீது அம்பாரியில் இந்திரன். அவனுக்கு முன்புறம் மாவுத்தன். பின்னால் இந்திராணி. யானையைச் சுற்றிலும் நான்கு அப்சரஸ்கள். ஒரே வெண் பளிங்குக் கல்லில் வடிக்கப்பட்ட இந்தச் சிற்பக் களஞ்சியம் வெகு சிறப்பானது. 

கருவறைக்கு எதிரில் தனி மண்டபத்தில் இருகரம் கூப்பிய நிலையில் பாப்பாராவல், அவருக்கு முன்பாக பித்தளை நந்தி, மேற்கில் பிரம்மா, வடக்கில் திருமால், கிழக்கில் சூரியன், தெற்கில் ருத்ரன் என நான்கு திசைகளில் நான்கு முகங்களுடன் வித்தியாசமாக, கிழக்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார் ஏகலிங்கநாதர். 

இவரை வேண்டிக் கொண்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் மீளும் என்ற நம்பிக்கை, பக்தர்களின் நெஞ்சில் வேரூன்றியிருக்கிறது. 'ஏக்லிங்க்ஜி கீ ஜய்' என்று உச்சரித்தபடி, ஏராளமான ஏக்க நெஞ்சங்கள் அண்ணலை அண்டி நிற்கின்றன.

மேளதாளம், பஜனைப் பாடல்களுடன் ஆராதனை நிகழ, ஆரத்தி ஒளியில் ஐயனை தரிசிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. அந்த அற்புத அனுபவத்தை அடைய ஏக்லிங்க்ஜியை தரிசியுங்கள்!  

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்             : ஏக்லிங்க்
சுவாமியின் திருநாமம்    : ஏக்லிங்க்ஜி
எங்கே உள்ளது?                  : ராஜஸ்தானில்
எப்படிப் போவது?                : சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்று அங்கிருந்து பேருந்திலோ, காரிலோ உதய்பூர் வழியாக ஏக்லிங்கை அடையலாம்.    
எங்கே தங்குவது?           :  உதய்பூரில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.        
தரிசன நேரம்                   : காலை 04.00 முதல் 7.00 வரை / காலை 10.30 முதல் 1.30 வரை / மாலை 5.30 முதல் 8.00 வரை 

 

ஏக்லிங்கநாதரின் தரிசனத்தை முடித்துக்கொண்டு, எங்களது அடுத்த இலக்கான நாத் துவாரா நோக்கிப் புறப்பட்டோம். அங்கு, எவ்வளவு பெரிய சோதனை எங்களுக்காகக் காத்திருந்தது என்று வண்டியில் ஏறும்போது தெரியவில்லை.

 

புகழ்பெற்ற நாத் துவாரா பஞ்ச துவாரகைகளில் ஒன்று. அங்கே ஸ்ரீநாத் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன், மற்ற பஞ்ச துவாரகை ஆலயங்களில் காட்சி அருளும் கண்ணனை விட முற்றிலும் மாறுபட்ட ஒர் திருக்கோலத்தில் காட்சி தருபவன். 

 

அவனை எவ்வளவு விரைவில் தரிசிக்க இயலுமோ, அவ்வளவு விரைவில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன் எங்களது டிரைவரை ‘ஜல்தி.. ஜல்தி..’ என்று விரட்டினோம். சற்றே தாமதமானாலும் நடையை அடைத்து விடுவார்கள் என்பதும் ஒரு காரணம். ஆனால், எங்களுக்கு விளையாட்டு காட்டுவதற்காக விதி வேறொரு வடிவத்தில் காத்திருந்தது. 

 

ஏக்லிங்க் ஊரின் எல்லையைத் தாண்டியிருப்போம். திடீரென்று பாலாவின் வலது தோள்பட்டையில் லேசாக அரிப்பது போல் தோன்றவே, அவர் அந்த இடத்தை இயல்பாகச் சொரிந்துவிட்டுக் கொண்டார். நூறடி தூரம் கடந்ததும், மார்பில் அரிப்பது போல் ஓர் உணர்வு. அப்போதும் எதுவும் தப்பாகத் தோன்றவில்லை. மார்பில் சொரிந்துவிட்டுக் கொண்டார். 

 

அடுத்த பதினைந்து நிமிடத்துக்குள் இடது கை, வலது கை, மணிக்கட்டு, விரல்கள், தலை, வயிறு, தொடை, மூக்கு என்று உடல் முழுக்க அரிப்பு. ரியர் வ்யூ மிர்ரரில் பார்த்தால், பாலாவின் உதடுகள் கண்டபடி இழுத்துக் கொண்டன. முகத்தில் எல்லாம் அங்கங்கே தடிப்பு. என்னவோ அலர்ஜி. அந்த நெடுஞ்சாலையில் ஒரு மருந்துக்கடை கூடக் கிடையாது. ஒரு செக்போஸ்ட் வந்தது. பக்கத்தில் ஏதாவது மருந்துக்கடை இருக்கிறதா என்று டிரைவர் பதைப்புடன் விசாரித்தார்.  

 

"பாலத்தின் அடியில் இறங்கி வலது பக்கம் திரும்பினால், மறுபடி உதய்பூருக்கே போய்விடலாம். அங்கேதான் எல்லாம் கிடைக்கும்.." என்று சொல்லிவிடவே, பாலத்துக்கடியில் இறங்கி திரும்பி உதய்பூரை நோக்கிக் காரை புயல் வேகத்தில் செலுத்தினார் டிரைவர். பத்து கி.மீ. செல்வதற்குள், பாலாவுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. 

 

"மயக்கமா வருது.." என்று சீட்டிலேயே மயங்கிச் சரிந்துவிட்டார். பொன் காசிராஜனும், ஜே.பி.யும் மிகவும் பயந்து போனார்கள். சுரேஷ் பாலாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து, திகிலுடன் 'பாலா, பாலா' என்று எழுப்ப.. பாலாவுக்கு விழிப்பு வந்துவிட்டது.

 

உதய்பூரின் முதல் கிளினிக் வாசலில், டிரைவர் காரை நிறுத்தினார். அங்கே சுமார் 100 கர்ப்பிணிகள் வெய்ட்டிங். அது, டாக்டர் கணவரும் டாக்டர் மனைவியுமாய்ச் சேர்ந்து நடத்தும் மகப்பேறு மருத்துவமனை. 

 

பாலாவின் நிலையைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் ஒதுங்கி வழிவிட, டாக்டர் பாலாவைப் பார்த்துவிட்டு, "பேஷன்ட் கொட்டாவி விடுகிறார்.. பல்ஸ் எறங்குது.. சீக்கிரம் பெட் ரெடி பண்ணுங்க. சலைன் வாட்டர் கொண்டு வாங்க.." என்று பதற்றமாக உத்தரவிட்டார்.

 

கட்டில். சலைன் வாட்டர். அலர்ஜிக்கான மருந்து எல்லாம் செலுத்திவிட்டு நான்கு மணி நேரம் ஆஸ்பத்திரி கட்டிலிலேயே சுயநினைவின்றிக் கிடந்து, பிற்பகல் நான்கு மணி சுமாருக்குத்தான் பாலாவுக்கு விழிப்பு வந்தது. தடிப்புகள் அடங்கியிருந்தன. அரிப்பு இல்லை. 

 

'பூச்சிக்கடி அல்லது புட் பாய்சன்.. அதான் அலர்ஜி ஆயிருக்கு. புட் பாய்சன்னா, எது உங்களுக்கு ஒத்துக்கலன்னு ஒவ்வொண்ணா ட்ரை பண்ணிப் பாக்கணும்.. பூச்சிக்கடின்னா, இதோட உங்களைப் புடிச்ச சனியன் விட்டதுன்னு நெனைச்சிக்குங்க.. ' என்றார் டாக்டர். நன்றி கூறிப் புறப்பட்டோம். 

 

என்னவோ, ஏதோ என்று பதற்றத்துடனேயே காத்திருந்தார் டிரைவர். முகத்தில் வீக்கம் எதுவுமின்றி இயல்பாக நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, விடுதலைப் புன்னகையுடன் பாலாவுக்காக காரின் பின்கதவைத் திறந்தார்.  

 

காலை வைக்கப்போகும் தருணத்தில், இருக்கைக்குக் கீழே காரில் ஏதோ நெளிந்ததை பாலா பார்த்தார். என்ன அது..? அது.. அது.. இவ்வளவு அமளி துமளிக்கும் மூலக் காரணமாய் இருந்த ஒரு குட்டிப்பூரான். 

 

அதை வெளியே எடுத்து விட்டோம். புட் பாய்சன் இல்லை. அதுவரைக்கும் நிம்மதி. 'சனியன் விட்டது.. சனியன் விட்டது..' என்று சொல்லிச் சொல்லி பொன் காசிராஜனும் ஜே.பி.யும் ஆறுதல் பட்டுக்கொண்டார்கள்.  நாத் துவாரா சென்று சேர்ந்தபோது, மாலை ஆறுமணி. கோயில் மாலை தரிசனத்துக்காகத் திறந்து விடப்பட்டிருந்தது. 

 

இவ்வளவு அமளி துமளிக்குப் பின்னர்தான், எங்களை ஆலய வாசலையே அண்ட வைத்தார் நாத் துவாரா ஸ்ரீநாத். அவரது தரிசன அனுபவம்... அடுத்த இதழில்...! 

பயணம் தொடரும்..

சுபா (காஷ்யபன்) 

மேலும் படிக்க:
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 13
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 12
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 11

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles