கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! - 13

Thursday, September 15, 2016

ஷாம்லாஜி தரிசனத்துக்குப் பிறகு மீண்டும் பயணம். மதிய உணவுநேரத்தின்போது ராஜஸ்தான் மாநிலத்தின் செழிப்பான, உற்சாகமான உதய்பூரை வந்தடைந்தோம். நகரம் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. முக்காடு அணிந்த புன்னகைப் பெண்கள் சேட்டக் ஸ்கூட்டர்களின் பின்னால் பயணித்தார்கள். சாலைகளில் அனைத்து வாகனங்களும் பாய்ந்து சென்ற போக்குவரத்து வெள்ளம். நடைபாதைகளில் குளிர்நீர், வெள்ளரிக்காய், பான் பீடா, சமூசா, தேனீர், உள்ளாடைகள் என்று என்னென்னவோ விற்பனையாகிக் கொண்டிருந்தன. அத்தனை கடைகளிலும் மக்கள், மக்கள், மக்கள்! அவர்களின் முகங்களில் உற்சாகம்.

ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறையின் கொஞ்சம் பழசான, ஆனால் வசதியான விடுதியில் அறை எடுத்தோம். அங்கு பொருட்களை வைத்துவிட்டு, மதிய உணவைத் தேடிச் சென்றோம். 

 

'நட்ராஜ் ஹோட்டலுக்குப் போங்கள்.. உணவு நன்றாக இருக்கும்..' என்று ஆட்டோ டிரைவர்களில் இருந்து பெரிய கடைக்காரர்கள் வரை அத்தனை பேரும் ஒரே திசையில் கை காட்டினார்கள்.

 

நட்ராஜ் ஹோட்டல் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருந்தது. ஹோட்டல் வாசலில் நீளமாக க்யூ! அரைமணி நேர அரட்டையுடன் கூடிய காத்திருத்தலுக்குப் பிறகு, உள்ளே செல்ல முடிந்தது. 

 

உணவு உண்மையிலேயே நன்றாக இருந்தது. பூரி, ஃபுல்கா, பலவித பக்க வாத்தியங்கள், சோறு, பருப்பு, நெய், கெட்டித் தயிர் என்று படாடோபமான சுவையான உணவு. ஆனால் நம் ஊர் பாலாஜி பவன், வசந்த பவன் விலைதான் எனவே நண்பர்களே,  உதய்பூர் சென்றால் ஒரு முறையாவது நட்ராஜ் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு வாருங்கள். அப்போதுதான் ஜன்மம் கடைத்தேறும். ஹோட்டல் நட்ராஜ் என்றாலே எல்லோரும் வழிகாட்டிவிடுவார்கள். கிட்டத்தட்ட அறுபது, எழுபது ஆண்டுகளாக அதே இடத்தில், இதே போல் தரமான உணவை வழங்கி வருகிறது அந்த ஹோட்டல். 

 

உணவை முடித்துக்கொண்டு உதய்பூர் அரண்மனைக்குச் சென்றோம். ராஜபுதன வம்சத்தினர் எப்படி ராஜஸ்தானை ஆண்டார்கள், அவர்களது ஆடைகள், ஆயுதங்கள் எல்லாம் எப்படி இருந்தன என்று பலவற்றைப் பார்த்தோம். ரசித்தோம். 

 

இரண்டு மணி நேரத்துக்குள் அரண்மனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளிப்பட்டோம். அருகிலேயே, நூறடி உயர கோபுரத்துடன் ஜெகதீஷ் ஆலயம் நம்மை 'வா, வா' என்று கொடியசைத்து வரவேற்றது. 

 

'பூரி ஜகன்னாதர்தான் இந்தக் கோயிலில் மூலவராக எழுந்தருளியிருக்கிறார். அந்த வரலாறு உவக்கத்தக்க அளவில் சுவையானது' என்று கோவில்வாசலில் இருந்த ஒரு ராஜஸ்தானி மாது கன்னத்தில் போட்டுக்கொண்டபடி எங்களிடம் தெரிவித்தாள்.

 

அந்த ஆலயத்துக்குச் செல்வோமா?

அன்புக்கு அடிமையான
உதய்பூர் ஜகதீஷ்

புகழ்வாய்ந்த புனிதத்தலமான பூரி உறை ஜகன்னாதர் மீது மேவார் சமஸ்தானத்தின் மன்னர் ஜகத்சிங்குக்கு அளப்பரிய அன்பு. வாழ்நாளில் ஒரு முறையாவது அவன் திருமுகத்தை தரிசித்துவிட வேண்டும் என்று அவர் நாளும் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அரச அலுவல்கள் அவரை அரண்மனையிலேயே கட்டிப்போட்டிருந்தன. 

 

ஒருமுறை அலுவல்கள் அனைத்தையும் அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, புண்ணியத்தலமாம் பூரிக்கு யாத்திரையாகச் சென்றார். 

 

ஜகன்னாதனைக் கண்குளிரக் கண்டார். சிரம் தாழ்த்தி கரம் குவித்து, 'ஐயனே! அனுதினமும் உன்னைத் தரிசிக்கும் பேற்றினை அருள்வாயாக' என்று அவனிடம் வேண்டி மேவாருக்கு மீண்டார் அரசர். 

 

வேண்டுதல் நிறைவேறியது. ஒவ்வொரு விடியலிலும் பூரிக்கு வந்து தன்னை தரிசிக்கும் உணர்வினை, ஜகன்னாதன் அவருக்கு வரமாக அருளினான். 

 

மன்னர் அனுதினமும் பூரி ஜகன்னாதரை தரிசிக்கும்போது, தானெய்திய பரவச அனுபவத்தை  அவையினரிடமும் அரசியிடமும் பகிர்ந்து கொண்டார். ஒருநாள், அவரது கனவில் ஜகன்னாதன் எழுந்தருளினான். 

 

'மன்னா. என்னைத் தரிசித்த அனுபவத்தை நீ உரைக்கக் கேட்டு, உனது குடிமக்களுக்கும் எனைத் தரிசிக்க வேண்டும் என்ற பேரவா ஏற்பட்டுவிட்டது. அனைவராலும் பூரி யாத்திரை மேற்கொள்ள இயலாது. உந்தன் ஊரிலேயே எனக்கோர் ஆலயம் எழுப்பு. ஆலய விக்கிரகத்தில் என் சாந்நித்யம் குடியேறும். எனை தரிசிக்கும் மக்களும் பூரி யாத்திரை செய்த பலனை அடைவர்' என்று அந்தக் கனவில் உலகநாதன் உரைத்தான்.

 

யாருக்குக் கிட்டும் இந்தப் பேறு? அரசர் ஜகன்னாதனிடம் அன்பு கொண்டார். அவனோ, அவரது அடிமையாகவே மாறிப்போனான். இப்படி ஓர் இறையுத்தரவு கிடைத்தவுடன், ஜகத்சிங் தனது தலைநகரமான உதய்பூரில் அரண்மனைக்கு அருகிலேயே அண்ணலுக்கு நூறடி உயரத்தில் ஓர் ஆலயம் எழுப்பினார். 

 

பதினாறாம் நூற்றாண்டு ராஜபுதனக் கோயில்! வேலைப்பாடுகள் நிறைந்த கோபுரத்தின் சிகரத்தில் பதாகை படபடக்கிறது.  நிலத்திலிருந்து முப்பத்திரண்டு படிகள் ஏறிச் சென்றால் ஆலய முகப்பு. 

 

விசாலமான திறந்தவெளிப் பிராகாரத்தில் கருட மண்டபம். பிரமாண்டமான பித்தளை கருடாழ்வார் அகன்ற கண்களும் கூரிய நாசியும் வழியும் தாடியுமாய், கருவறைக் கடவுளை தரிசிக்கும் நிலையில் எழுந்தருளியுள்ளார். நேரெதிரே அமைந்திருக்கும் கருவறை முன் மண்டபத்தை அடைய மேலும் பதிமூன்று படிகள்! அரைக்கோள விதானத்துடன் கூடிய இந்த அர்த்த மண்டபத்தில், கண்ணாடிக் கோளங்களில் விளக்குகள் ஒளிர்கின்றன. 

 

கருவறையில் பூரி ஜகன்னாதன் அலங்காரமான தலைப்பாகையுடன் ஜகதீஷாக தரிசனம் தருகிறான். இந்த அழகனுக்கு மேலும் அழகு சேர்க்க, அவன் திருமார்பில் முத்து மாலைகளும் மலர்மாலைகளும் துலங்குகின்றன. மேல் வலது கரத்தில் சக்கரமும், மேல் இடது கரத்தில் சங்கும் ஏந்தியிருக்க, கீழ் வலதில் கதையை ஒயிலுடன் பற்றியிருக்கிறான். கீழ் இடது கரத்தில் கேடயம்! 

 

ஜகதீஷுக்கு வலதில் புல்லாங்குழல் தாங்கிய கிருஷ்ணன். இடதில் அன்னை லக்ஷ்மி.  

 

அர்த்த மண்டபத்தில் கூடியிருக்கும் மக்கள் ஜகதீஷுக்குச் சாமரம் வீசுகிறார்கள். கைகளைக் கொட்டி 'கோவிந்த ஜய ஜய.. கோபால ஜய ஜய..' என்று துன் பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். தினம் சங்கீதம், தாளம், மேளம் சகிதம் ஐந்து முறை ஆரத்தி ஆராதனை மேற்கொள்ளப்படுகிறது. 

 

கருவறையைச் சுற்றியுள்ள திறந்த வெளிப்பிராகாரத்தில் கணபதி, ஆதவன், சூரியன், சிவன் ஆகியோருக்குச் சந்நிதிகள். 

 

சிவன் சந்நிதியில் பளிங்கில் வடிக்கப்பட்ட சிவன், நந்தியின் மேல் தனது காலை இருத்திக் காட்சி அளிக்கிறார். அருகில் பார்வதி. காலடியில் கணேசரும் கார்த்திகேயனும் காட்சி அளிக்கிறார்கள். 

 

கருவறை கோபுரத்தில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய குதிரைச் சிற்பங்களும் யானைச் சிற்பங்களும் அணிவகுத்துள்ளன. அப்சர மங்கையர்கள் நடனமாடுகிறார்கள். 

 

சக்திக்குக் குதிரைகளும், அதிர்ஷ்டத்துக்கு யானைகளும் குறியீடுகளாக விளங்கும் இந்த அபாரச் சிற்பங்களில் பெரும்பான்மையானவை அந்நியப் படையெடுப்பில் சிதைக்கப்பட்டுள்ளன. ப்ச்...!

 

கருவறை கோஷ்டத்தில் அன்பின் குறியீடாகப் பொளியப்பட்டிருக்கும் ராதா-கிருஷ்ணரின் பாதங்களை மக்கள் தொட்டு வணங்கி வாழ்க்கை அன்புமயமாக வேண்டிக்கொள்கிறார்கள். இந்தச் சிற்பத்துக்குக் கீழே இருக்கும் இரு யானைகளின் சிற்பத்தைத் தொட்டு வணங்கி, தங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கவும் வேண்டிக்கொள்கிறார்கள்.  

 

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் தேர்த்திருவிழா! 

 

ஆயிரக்கணக்கான பெண்கள் கலசம் சுமந்து வெள்ளித்தேரின் முன்பாக ஊர்வலமாக வர, பஜனைப்பாடல்கள், நடனம், மேள தாளங்கள் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்த ரதயாத்திரையில் கலந்துகொள்ள லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். 

 

அன்பின் அடிமை ஜகதீஷை வணங்குங்கள். அன்பே உருவாய் மாறுங்கள். 

 

திருத்தலக் குறிப்புகள்

 

தலத்தின் பெயர்             : உதய்பூர்

சுவாமியின் திருநாமம்            : ஜகதீஷ்

எங்கே உள்ளது?                  : ராஜஸ்தானில்

எப்படிப் போவது?               :  சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு ரயிலில் சென்றால், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள உதய்பூருக்கு ரயிலிலோ, பேருந்திலோ, காரிலோ செல்லலாம். 

எங்கே தங்குவது?             :  உதய்பூரில் வசதியான தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள்ளன.        

தரிசன நேரம்                   :  காலை 05.00 முதல் பகல் 02.00 வரை / மாலை 04.00 முதல் இரவு 10.30 வரை 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கு நோக்கினாலும், பஜாஜ் நிறுவனத்தாரின் சேத்தக் ஸ்கூட்டர்கள் சாலைகளில் வலம்வருகின்றன.  மக்களும் அந்த ஸ்கூட்டர்களில் ஒய்யாரமாகச் செல்கிறார்கள்.  

 

ஒரு ஸ்கூட்டருக்கு ’சேத்தக்’ என்று பெயர் வைக்க என்ன காரணம்? சேத்தக் என்பது ஒரு போர்க் குதிரையின் பெயர். ராஜஸ்தானை ஆண்ட ராஜபுதன வம்சத்து அரசர்களில் ஒருவனான ராணா பிரதாபின் செல்லக் குதிரை. சேத்தக் மார்வாரி குதிரை இனத்தைச் சேர்ந்த ஒரு முரட்டுப் போர்ப்புரவி. அதை யார், யாரோ அடக்கப்பார்த்தார்கள். யாருக்கும் அது அடங்கவில்லை. கடைசியில் ராணா பிரதாப் அதை அடக்கினான். 

 

சேத்தக்கும் ராணா பிரதாபைத் தனது தலைவனாக ஏற்றுக்கொண்டது. அவன் சொற்படி எல்லாம் கேட்டது. ராணா பிரதாபைத் தவிர, வேறு யாரும் தன் மீது சவாரி செய்வதை அது விரும்பவில்லை. அந்தப் புரவி வெளிர் நீல நிறத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தது. அதன் மீது சவாரி செய்த ராணா பிரதாப் ’நீலப்புரவி வீரன்’ என்ற பட்டப்பெயரையும் பெற்றிருந்தான். 

 

ராணா பிரதாபும் சேத்தக்கும் எப்போதும் இணை பிரியாமலே இருப்பார்கள். சேத்தக்கின் மீதேறிச் சென்று ராணா பிரதாப் வெற்றிபெற்ற போர்கள் கணக்கில் அடங்காதவை.  ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சேத்தக்கின் புகழ் பரவியிருந்தது. ராஜபுதனத்து அரசர்கள் அனைவரும், சேத்தக்கின் மீது ஒருமுறையாவது சவாரி செய்ய வேண்டும் என்ற நிறைவேறாத ஆசையை தங்களது உள்ளத்தில் ரகசியமாகப் பொத்திப் பாதுகாத்தார்கள்.

 

ராணா பிரதாப் ஆட்சிசெய்த சமயத்தில், ஒருமுறை முகலாய மன்னன் ஒருவன் அவனை எதிர்க்கப் பெரும்படை பலத்துடன் வந்தான். வீரமும் தைரியமும் குருதி முழுக்க நிறைந்திருந்த ராணா பிரதாப் சேத்தக் மீது ஆரோகணித்து, தனது சிறுபடையுடன் முகலாயப் படையை எதிர்க்கச் சென்றான். ஹல்திகாட்டி என்னும் இடத்தில் போர் நிகழ்ந்தது. 

 

போர்க்களத்தில் எதிரியின் படைபலம் அதிகமாக இருந்தபோதிலும், மிகுந்த மன வலிமையுடன் அதை எதிர்கொண்டான் பிரதாப். 

 

எதிரியின் படைபலம் அதிகமாக இருந்ததால், போரில் தான் தோல்வியைத் தழுவ நேரிடும் என்று ராணா பிரதாக்குத் தோன்றியது. முகலாயப் படையின் தளபதியான மான்சிங்கை  வீழ்த்தி விட்டால், போரின் தலையெழுத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றிவிடலாம் என்று அவனது நெஞ்சில் ஓர் எண்ணம் எழுந்தது.   

 

அந்தச் சமயத்தில், முகலாயப் படையின் தளபதி மான்சிங் ஒரு யானை மீது அமர்ந்து தனது படை வீரர்களை வழி நடத்திக்கொண்டிருந்தான். 

 

ராணா பிரதாப் தனது உயிரைக்காட்டிலும் மேலாக நேசித்த சேத்தக் புரவியின் மீது ஆரோகணித்து, முகலாயப் படையின் தளபதியான மான் சிங்கை வீழ்த்தும் நோக்கத்துடன் எதிரியின் படையை ஊடுருவினான். 

 

தனது எஜமானனின் நோக்கத்தைப் புரிந்து கொண்டது போல் சேத்தக்கும் நாலு கால் பாய்ச்சலில் மான்சிங்கை நோக்கி, அவனது முகலாயப் படைவீரர்களை முட்டி மோதிக்கொண்டு ஏறி மிதித்துப் பாய்ந்தது. 

 

வழியில் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் ராணா பிரதாப் வாளால் வெட்டி வீழ்த்தியபடி, முகத்தில் வீரத்தின் பெருமிதமும் எதிரி வீரர்களின் குருதியும் ஒளிர பாய்ந்து சென்றான். மான்சிங் அமர்ந்திருந்த யானையை நெருங்கினான். தனது முன்னங்கால்களின் இரு குளம்புகளையும் அந்த யானையின் முகபடாம் மீது பதித்து, இரு பின்னங்கால்களில் நின்று வெற்றிக்கனைப்பு கனைத்தது சேத்தக். 

 

ராணா பிரதாப் தனது ஈட்டியை மான்சிங் மீது எறிந்தான். அந்தோ.. அந்த ஈட்டி மான்சிங் மீது பாய்வதற்குப் பதிலாக, அவன் அமர்ந்திருந்த யானையின்  பாகனைத் தாக்கியது. ஈட்டி பாய்ந்த கணத்திலேயே பாகன் இறந்தான். அதே தருணத்தில், சேத்தக்கை மான்சிங் தனது வாளால் வெட்டினான். சேத்தக்கின் கால்களில் ஒன்றில் மரணகாயம் உண்டானது. சேத்தக் மரணக் கனைப்பு கனைத்தது. இருப்பினும், அதன் ஆக்ரோஷம் குறையவில்லை.  

 

சேத்தக் காயப்பட்டதைக் கண்ட ராணா பிரதாபின் படைவீரர்கள், அவனைப் பின்வாங்குமாறு வேண்டினார்கள். ராணா பிரதாபுக்கு போர்க்களத்தை விட்டு விலக மனமில்லை. அவனது வீர உள்ளம் அவனைப் பின்வாங்க அனுமதிக்கவில்லை. தங்களது தலைவனின் உயிரை மதித்த படை வீரர்களோ, அவனை வற்புறுத்தினார்கள். 

 

ராணா பிரதாபின் விசுவாசமான ஜலா சர்தார் என்னும் ஒரு படைவீரன், அவன் அணிந்திருந்த தலைக்கவசத்தையும் உடற்கவசத்தையும் வலுக்கட்டாயமாகப் பறித்து, தான் அணிந்து கொண்டான். 

 

ராணா பிரதாப் என்று கருதி, ஜலா சர்தாரைத் துரத்தினார்கள் எதிரிப்படை வீரர்கள். அவன், ராணா பிரதாபிடமிருந்து விலகி ஓடினான். துரத்தி வந்த எதிரி வீரர்களோடு போரிடத் தொடங்கினான். ’மரணம்தான் முடிவு’ என்று தெரிந்திருந்தும், ஜலா சர்தார் இவ்வாறு செயல்பட்டதைப் பார்த்து விக்கித்துப்போனான் ராணா பிரதாப். தான் உயிரோடு இருக்கவேண்டியதின் அவசியத்தை உணர்ந்து, விசுவாசமான படை வீரர்கள் புடைசூழ போர்க்களத்திலிருந்து விலகினான். 

 

காயமடைந்த குதிரையும், தனது தலைவனைச் சுமந்து கொண்டு நான்கைந்து கிலோ மீட்டர்கள் ஓடியது. வழியில் இருபத்தோரு அடி அகலமுள்ள ஓர் ஆறு குறுக்கிட்டது. காயமுற்றிருந்த நிலையிலும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது சேத்தக். காயத்தின் வேதனையும், நதியின் வெள்ளமும் சேர்ந்து புரவியை வீழ்த்தப் பார்த்தது. இருந்தாலும், சேத்தக் அந்த வெள்ளத்தில் பிடிவாதமாகப் பாய்ந்தது.  

 

எப்படியோ நதியைக் கடந்தது. கரையை அடைந்ததும், தனது சுயநினைவை இழந்துவிடும் நிலையை எய்தியது. தனது கண்களில் இயலாமையின் வேதனையை வெளிப்படுத்தியது. தலைவனிடம் மன்னிப்பு கேட்பது போல், இறுதியாக ஒரு முறை கனைத்தது. அதன் இதயத்துடிப்பு நின்றது. தரையில் சரிந்தது.

 

ஒரு தேர்ந்த வீரனைப் போல, சேத்தக் வீர மரணம் எய்தியது. சேத்தக்கின் மரணத்தைக் கண்டு துடிதுடித்துப் போனான் ராணா பிரதாப். எந்த இடத்தில் சேத்தக் சரிந்து விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதோ, அந்த இடத்தில் அதற்கு ஒரு சிலை எழுப்பினான்.  

 

கி.பி. 1576 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தொன்றாம் தேதி, இந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியது. 

 

அந்தக் குதிரை மேல் ராணா பிரதாப் ஆரோகணித்தபடி இருக்கும் ஒரு சிலை, உதய்பூரில் ஒரு நந்தவனத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. 

 

அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குப் போவோம். வருகிறீர்களா? பயணம் தொடரும்... 

- சுபா (காஷ்யபன்)

மேலும் படிக்க:
டாகோர்  திருத்தலக் குறிப்புகள்
பேட் துவாரகை துவாரகாதீஷ்  திருத்தலக் குறிப்புகள்
நாகேஸ்வரம்  ஜோதிர்லிங்க தலம் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles