கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! - 16

Monday, October 31, 2016

கன்க்ரோலி துவாரகதீஷ் தரிசனம் முடிந்து ஆலயம் விட்டு வெளிப்பட்டோம். புகழ்பெற்ற பஞ்சதுவாரகை புனிதத்தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் மாலனை, மணிவண்ணன் கண்ணனை,  அகிலத்து அண்ணலை தரிசித்து விட்டோம் என்ற பெருமிதம் நம்மை அறியாமல் நெஞ்சில் குடியேறுகிறது. 

யாத்திரை நிறைவடையப் போகிறதா? சட்டென்று கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு, மனதில் கிலேசம் தோன்றுவது போன்றதொரு உணர்வு.  

பஞ்சதுவாரகை தல தரிசனம் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் இவ்வளவு தூரம் வந்த பின்பு, மிச்சமிருக்கும் சில முக்கியமான புனிதத் தலங்களை தரிசிக்காமல் ஊர் திரும்பினால் விட்ட குறை, தொட்ட குறையாக வாழ்நாள் முழுக்க உறுத்திக் கொண்டிருக்கும்.  ஆகவே கார் நான்முகன் குடிகொண்டு அருள்பாலிக்கும் புஷ்கர் எனும் புஷ்கரம் அமைந்திருக்கும் திசையில் விரைந்தது.   

பாலைவன மாநிலம்.  சாலையின் இரு புறங்களிலும் மணற்காடுகள்.  அவற்றில் கள்ளி, சப்பாத்தி, இன்னும் பெயர் தெரியாத தாவரங்கள். வெயில் வெருட்டியது.  கானல் நீர் தகதகத்தது.

அந்த சமயத்தில் தகரக்கூரையுடன் கூடிய சரக்கு வேன் ஒன்று எங்களை ஓவர்டேக் செய்து சென்றது. உள்ளே அடைந்து கிடந்த ஆட்கள் வேனின் சுவரில் தட்டி தாளம் போடுவது போல் ரகளையாய் ஓசை. 

என்ன இது? அந்த வேனின் உள்ளே யார் அடைந்து இருக்கிறார்கள். எதற்காக இந்த ரகளை? வேனை ஓட்டிச் செல்லும் டிரைவருக்கு  அந்த ஓசை கேட்டதா இல்லையா? 

வேனை ஓவர்டேக் செய்து டிரைவரை விசாரிக்கலாமா என்று எண்ணிய வேளையில், அந்த வேன் தூரத்தில் சாலையின் ஒரு திருப்பத்தில் திரும்பியது. 

நாங்களும் அந்தத் திருப்பத்தை அடைந்தோம். திரும்பினோம்.  அந்தக் குறுகிய பாதையின் இரு கரைகளிலும் புதர்கள் அடர்ந்திருந்தன. பாதையின் முடிவில் பரந்திருந்த மௌனமான மணல் வெட்டவெளியில் அனல் நடனம். ஆங்காங்கே ஒன்றிரண்டு கருவேலமரங்கள். அதன் சொற்ப நிழலில் காதலர்களின் சரசம். சென்னையில் பகல் நேரக் கடற்கரை மணல்வெளிதான் காதலர்களின் சொர்க்கம். ராஜஸ்தானிலோ, மாநிலம் முழுவதுமே காதலர் தேசம் போலும்!

எங்களை ஓவர்டேக் செய்து கடந்த வேன் இப்போது எங்களைப் பார்த்து திரும்பி நின்றிருந்தது. அதன் டிரைவர் வேனின் பின்கதவைத் திறந்து கொண்டிருந்தான். கையில் ஒரு குண்டாந்தடி.

நாங்கள் காரை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக இறங்கினோம். கிட்டத்தட்ட வேனை நோக்கி ஓடினோம். வேன் டிரைவர் எங்களைப் பார்த்தான். அவன் முகத்தில் திடுக்கிடலோ, பதற்றமோ இல்லை. 

நாங்கள் வேனை நெருங்கிய வேளையில் அதன்பின் கதவு திறந்தது. முப்பது, நாற்பது நாய்கள் வெளியே பாய்ந்தன. சரிவில் சரிந்து சுடுமணலில் ஓடின. சாலைப்பக்கம் திரும்பப் பார்த்த ஒன்றிரண்டு நாய்களையும் டிரைவரின் கையிலிருந்த குண்டாந்தடி மிரட்டி மணல் வெளிப் பக்கமே திருப்பியது.

"என்னங்க இது?" என்று அந்த டிரைவரிடம் திகைப்புடன் கேட்டோம். 

"அஜ்மீர்லேர்ந்து அடைச்சி எடுத்துட்டு வரேன். அறுபது கிலோ மீட்டர். அங்கே இதுங்க குடுத்த தொல்லை கொஞ்சநஞ்சம் இல்ல. ராவெல்லாம் ஊளையிடறது, சண்டை போடறது, பசுமாடுங்களையும், பச்சைக் குழந்தைங்களையும், ஊருக்கு வர ஜனங்களையும் தொரத்தித் தொரத்திக் கடிக்கறதுன்னு.. ஊரே நரகமாய்டிச்சி. ஜனங்க ஒட்டுமொத்தமா சேர்ந்து காசு போட்டு 'இதுங்களை எங்கயாவது கண்காணாத எடத்தில கொண்டு போய் விட்டுட்டு வந்துடு'ன்னு சொன்னாங்க.. கோயிலுக்கு ஆடு மாடு கோழி விடறதுக்கு நேர்ந்துக்கற மாதிரி, நான் இந்த நாய்ங்களை விடறேன்னு நேர்ந்துக்கிட்டதா வச்சிக்கங்களேன்.." என்று வேதனை கலந்த புன்னகையுடன் அவர் கூறினார்.

சுடுமணலில் ஊளையிட்டுக்கொண்டே ஓடிய நாய்களைப் பார்த்தோம். இரண்டு குட்டிகள் வெயிலில் ஓடமுடியாமல் மணலில் புரண்டு 'க்யீங்க்..ம்மா.. க்யீங்க்..ம்மா..' என்று வேதனையுடன் முனக, தாய் நாய் கூட்டத்திலிருந்து பிரிந்து ஓடிவந்து அவற்றை நெருங்கி மண்டியிட்டு வாயில் கவ்வி எடுத்துக் கொண்டது.  குட்டிகளைச் சுமந்தபடி அந்தத் தாய் மூச்சிரைத்தபடி ஓடியது. தாய்ப் பாசத்தில்தான் இந்த விலங்குகள் மனிதர்களை எவ்வளவு எளிதாக வென்று விடுகின்றன!

கையாலாகாத சூழ்நிலை. கண்கள் பனித்தன. சற்றே கனத்த நெஞ்சுடன் பயணத்தைத் தொடர்ந்தோம்.  அஜ்மீரில் நுழையும்வரை யாரும் பேசிக்கொள்ளவில்லை. 

அஜ்மீர் நகரத்தைப் பற்றிச் சற்று சொல்லியாக வேண்டும். ஒரு பெரிய கிராமம் போல் அது விகசித்திருக்கிறது. தெருக்களில் சாரி சாரியாக மக்கள் ஒரே திசையை நோக்கிக் குதூகலமாக நடந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.

அஜ்மீரில் உலகப்புகழ் பெற்ற க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்களின் சமாதி உள்ளது. 

ராகவேந்திரர், ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், புதுவை அன்னை, காஞ்சி முனிவர் ஆகியோர் அடக்கம் ஆகியுள்ள இடங்களுக்கு எப்படி நாம் பக்தியுடன் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வருவோமோ, அதுபோல் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த தர்காவுக்கு வந்து தங்களது பிரார்த்தனைகளைச் செலுத்துகிறார்கள்.  

க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்கள் அவ்வளவு சக்திவாய்ந்த சூஃபி துறவி. அஜ்மீர் கடந்துதான் புஷ்கர் செல்ல வேண்டும் என்பதால், அஜ்மீரில் இருக்கும் தர்காவுக்குச் சென்று நமது பிரார்த்தனைகளையும் செலுத்திவிட்டு வரலாமே என்ற எண்ணம் எழுந்ததால் இந்த அஜ்மீர் தர்கா புனிதப் பயணம்.

தர்காவுக்குச் செல்வதற்கு முன் அங்கே அடக்கம் ஆகியிருக்கும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்வோம். 

அசஃபஹானுக்கு அருகில் சஞ்சார் என்ற இடத்தில் க்வாஜா மொய்னுதீன் 1135 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு மொய்னுதீன் ஹாசன் என்று பெயரிடப்பட்டது. தந்தையின் பெயர் கயாஸ் உதீன் ஹாசன். அவர் கொரஸ்ஸான் என்ற இடத்தில் இருந்த சூஃபி குழு ஒன்றினைச் சேர்ந்தவர். தாய் பீபீ மாஹ் நூர், ஜிலான் பகுதியைச் சேர்ந்த, பெருமைமிக்க சூஃபி ஆசான் ஷேக் மொஹியுதீன் அப்துல் க்வாதிர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

பதினைந்தாவது வயதில் மொய்னுதீன் ஹாசன் அனாதையானார். கால் போன போக்கில் சென்று கொண்டிருந்த அவர், வழியில் இருந்த ஒரு திராட்சைத் தோட்டத்தில் நுழைந்தார். 

அந்தத் தோட்டம் சூஃபி ஆசானான இப்ராஹிம் க்வண்டூஜியின் தோட்டமாகும். மொய்னுதீன் ஹாசன் திராட்சைத் தோட்டத்தில் சில பழங்களைப் பறித்தபோது, சூஃபி ஆசான் இப்ராஹிம் க்வண்டூஜியை அங்கே கண்டார். 

கையிலிருந்த ஒரு திராட்சைக் கொத்தினை இப்ராஹிம் க்வண்டூஜியிடம் நீட்டினார். அதனைப் பெற்றுக்கொண்ட இப்ராஹிம் க்வண்டூஜி, அதுவரை தனது வாயில் இட்டு மென்று கொண்டிருந்த இனிப்புத் தின்பண்டத்தின் ஒரு பகுதியை வாயிலிருந்து எடுத்து மொய்னுதீனுக்குக் கொடுத்தார். 

அதை உண்டவுடன், திடீரென அவருக்கு வாழ்க்கை கசந்தது. அதன் நடைமுறைகளும் கசந்தன. அவர் உண்மையைத் தேட ஆரம்பித்தார்.
  
இல்லத்தை விட்டு வெளியேறினார். சூஃபியின் செல்வாக்கு மிக்க மையங்களும், இஸ்லாமியக் கல்வி அறிவு மையங்களுமான பாக்தாத், சமர்கண்ட், புக்காரா ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தார். 

அதற்குப்பிறகு ஈரானிலுள்ள ஹருனுக்குச் சென்றார். அங்கேதான், இவரைத் தேடிக் கொண்டு இருந்த ஆசானை, மொய்னுதீன் கண்டுபிடித்தார். 
 
அவரது ஆசான் க்வாஜா உஸ்மான் அப்போது ஹருனில், சிரியா தேசத்தைச் சேர்ந்த க்வாஜா அபு இஷாக் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சிஸ்டி பிரிவில் ஒரு ஆசிரியராக இருந்தார். 

அதனாலேயே, மொய்னுதீன் ஹாசனும், க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி என்று அழைக்கப்பட்டார். 

தனது ஆசானுடன் அங்கே மொய்னுதீன் மூன்று வருடங்களைக் கழித்தார். அந்தச் சமயத்தில் அவர் மிகவும் கடுமையான ஆனால் எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொண்டார். 

பின்னர் மொய்னுதீன் சிஸ்டி மீண்டும் பயணம் செய்யத் தொடங்கினார். பல துறவிகளைச் சந்தித்தார். இஸ்லாமிய நெறியிலிருந்து சற்றும் பிறழாமல் மிகக்கடுமையான, அதே சமயம் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த பிரிவினரையும் சந்தித்தார். 

ஐம்பத்தி நான்காவது வயதில், அவரது ஆசானான ஷேக் உஸ்மான் ஹரூன் அவர்கள், க்வாஜா மொய்னுதீன் சிஸ்டியை தனது வாரிசு என அறிவித்தார். தான் தியானம் செய்ய உபயோகிக்கும் கம்பளியையும் கைத்தடியையும் இவருக்கு வழங்கினார்.  

அதன் பிறகு, க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி ஹஜ் புனித யாத்திரையை மேற்கொண்டார். 

காபாவை வணங்கி வலம் வந்தபிறகு மதீனா வந்தடைந்தார். அங்கேதான்  மனித உருவத்திலிருந்த தெய்வ தூதரான தீர்க்கதரிசி மொஹமத் அவர்களின் கல்லறை இருக்கிறது. அங்கேதான் இவருக்கு, இந்தியாவில் இருக்கும் அஜ்மீருக்குச் சென்று தங்கிவிடுமாறு, ஓர் ஒளிமயமான மாயக்காட்சியின் மூலம் உத்தரவு கிடைத்தது.

1191 ஆம் ஆண்டு க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்கள் அஜ்மீருக்கு முதல்முறையாக வந்து சேர்ந்தார். பிறகு 1200ம் ஆண்டு, பால்க் மற்றும் பாக்தாத் நகரங்களுக்குச் சென்றார். சிறிது காலத்துக்குப் பிறகு முல்டான், தில்லி வழியாக மீண்டும் அஜ்மீருக்குத் திரும்பினார். 

தில்லிக்கு வந்தபோது, மொய்னுதீன் சிஸ்டி அவர்கள் கொரஸ்ஸானைச் சேர்ந்த சூஃபி துறவி குதுப் ஷாவைச் சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, துறவி குதுப் ஷா மொய்னுதீன் சிஸ்டியின் சீடராக மாறினார். புகழ்பெற்ற சூஃபி துறவி பாபா ஃபரித் கஞ்ச்-இ-ஷகரும் மொய்னுதீன் சிஸ்டிக்கு சீடரானார். 

க்வாஜா மொய்னுதீன் சிஸ்டியின் இறுதி வாழ்க்கையில், குதுப் ஷா அவருடன் அஜ்மீரிலேயே இருந்தார். 

ஒரு நாள் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தமது ஆடையையும் தலைப்பாகையையும் குதுப் ஷாவிடம் அளித்தார். 

தமது ஆசானான க்வாஜா உஸ்மான் ஹரூனியவர்கள் கொடுத்திருந்த புனிதச் செங்கோலையும் குதுப் ஷாவிடம் அளித்து, இன்னும் சில நாட்களில் தாம் இந்த உலகை விட்டுச் செல்லப்போவதாகவும், அவரை தில்லி சென்று தங்கி விடும்படியும் கூறினார். 

குதுப் ஷாவிடம் அவர் கடைசியாகக் கூறிய அர்த்தமுள்ள சில வார்த்தைகளாவன: "நீ எங்கே வேண்டுமானாலும் போகலாம். குற்றமற்ற மனிதனாக வாழு."

குதுப் ஷா தில்லிக்குச் சென்ற இருபது நாட்களுக்குப் பிறகு, கி.பி.1229 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள், க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தமது இரவு பிரார்த்தனையை முடித்தார். காலை வரை தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறினார். தமது படுக்கை அறைக்குள் நுழைந்தார். 

அவரது படுக்கை அறையிலிருந்து சாரங்கி இசைக்கப்படுவது போன்றதொரு மென்மையான இன்னிசை இரவு முழுவதும் கேட்டவாறு இருந்தது. 

மறுநாள். அவர் காலைப் பிரார்த்தனைக்கு வரவில்லை. என்ன காரணம் என்று தெரிந்து கொள்வதற்காக அவரது அறைக்கதவை பணியாளர்கள் திறந்தார்கள். அவர் தமது மஞ்சத்தில் படுத்த நிலையில் ஒரு பரவசப் புன்னகையுடன் உயிர் நீத்திருந்தார். 

திரு. க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி, பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அனிஸ்-உல்-அர்வாஹ், ஹடிஸ்-உல்-மாரிஃப், கஞ்சுல் இஸ்ரார், காஷ்ஃபுல் இஸ்ரார் ஆகியவை அவர் எழுதியவற்றுள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நூல்களாகும்.  

இந்தியாவில் சூஃபி பக்தி அலையின் முன்னோடியாக க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி இருந்தார். 

பாரம்பரிய இஸ்லாம் மார்க்கத்தில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குரானை மட்டுமே மந்திர இசை போல் உச்சரிக்கலாமே தவிர, வேறெந்த இசையும் இசைக்கப்படக்கூடாது என்றும் அது கூறுகிறது. 

ஆனால் சூஃபியின் சிஸ்டி பிரிவினர், இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதையும், பாடல்களைப் பாடுவதையும், ஆன்மீகப் பயிற்சிகளில் முக்கியமானதாகக்  கருதுகின்றனர். 

அங்கே இசைக்கப்படும் இசைக்கு சாமா என்று பெயர். இந்த இசையானது பாடுபவரையும், கேட்பவரையும் பரவச நிலைக்கு ஆளாக்கி அவர்களது உணர்வுகளை உச்சமாக்கும் தன்மை படைத்தது. 

சிஸ்டி சம்பிரதாயம் காதலைத் துறப்பதை முக்கிய அடிப்படையாகக் கொண்டது. இறைவனை முகத்திரை அணிந்த காதலியாகவும், பாடுபவர் தன்னைக் காதலனாகவும் வரித்துக் கொள்வது இந்தச் சம்பிரதாயத்தின் நடைமுறை. 

பாடுபவரின் ஆத்மா முகத்திரைக்குள் மறைந்திருக்கும் இனிமையான வதனத்தைப் பார்ப்பதற்கு ஏங்கும். பாடும் சூஃபியானவர், தலை முதல் கால் வரை காதல் வயப்பட்டு, இஷ்க் என்றழைக்கப்படும் போதையூட்டும் காதல் மதுவை அருந்திவிட்டு, தன்னையே மறந்து, தனது அடையாளங்கள் அத்தனையையும் இழந்து, ஒரு நொடியாவது தனது அன்புக்குரிய காதலியிடம் தனிமையில் இருப்பதற்காகவும், தன் அன்புக்குரிய காதலியை அணைத்துக் கொள்ளவும் ஏங்குவார்.  

என்றென்றும் நிரந்தரமான தெய்வீக நினைவில் ஒருவர் தனது தனித்தன்மையை, தனது அடையாளங்களை அடியோடு அழித்துவிடுவதை ஃபனா என்று அழைக்கிறார்கள்.  

கவ்வாலி மற்றும் கஜல் பாடல்களைப் பாடுபவர்கள், சிஸ்டி பிரிவினருக்கும், க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்களுக்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.  

இந்தியாவில் இருக்கும் சூஃபி புண்ணியத்தலங்களில், குறிப்பாக அஜ்மீரிலும்,  தில்லி நிஜாமுதீனிலும் காலையிலும் மாலையிலும், இதயத்தையே உருக வைக்கும் கஜல் பாடல்களும், கவ்வாலிப் பாடல்களும் ஹார்மோனியத்துடனும், தபேலாக்களுடனும் பாடப்படுகின்றன.

மிகவும் சக்திவாய்ந்த சூஃபி துறவி க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்களின் சமாதியைத் தரிசித்தபோது எங்களுக்கு நேர்ந்த பரவச அனுபவத்தைச் சொற்களில் வடிக்க இயலாது. இருப்பினும் சொல்ல முயற்சி செய்கிறோம்.

அந்தப் பரவச அனுபவம்... பயணம் தொடரும்...

- சுபா (காஷ்யபன்)

மேலும் படிக்க 
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 15
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 14
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 13

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles