கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் - 15

Saturday, October 15, 2016

கொண்டாட வைக்கும் கோபாலன் நாத் துவாரா - ஸ்ரீநாத் மேவார் சாம்ராஜ்யத்தில் சின்ஹாட் என்னுமொரு சிறு கிராமம். கவனிப்பாரற்ற அந்த கிராமத்தில் கிருஷ்ண ஆலயம் ஒன்று எழும் என்றோ, அதில் கிருஷ்ணன் எழுந்தருளுவான் என்றோ, நாத் துவாரா என்ற பெயரில் சின்ஹாட் அகிலப் புகழ் அடையும் என்றோ ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் யாருமே அறிந்திருக்கவில்லை. 

அப்படிப்பட்டதொரு ஆச்சரிய வரலாறு இந்த யாத்திரைத்தலத்தின் பின்னணியில் பின்னிப் பிணைந்திருக்கிறது. 

கோகுலத்தில் கோபாலன் உட்பட யாதவர்கள் அனைவரும் ஆண்டு பிறழாமல் கோவர்தனகிரி அருகே கூடி இந்திரவிழா எடுப்பார்கள். 

ஒரு சமயம் அவ்வாறு இந்திரவிழா நடத்தப்பட்டபோது, கோவர்தனகிரியின் சிகரத்தில் சுண்டுவிரலால் மலையைத் தூக்கி, நின்ற நிலையில் இறைவன் யாதவர்களுக்குக் காட்சிதந்தான். யாதவர்கள் அந்தத் திருவுருவை கோவிந்தன் எனக் கொண்டாடினார்கள். 

வேதவியாசரும் அவ்வாறு காட்சிதந்த கிரிதரன்தான் இறைவன் என்றும், அதனால்தான் அவனை யாதவ மக்களோடு சேர்ந்து மனித வடிவில் இருக்கும் கிருஷ்ணனும் தொழுகிறான் என்றும் உரைத்தார். 

யாதவர்கள் அன்றிலிருந்து கிரிதரனையே இறைவனாக ஏற்று, அவனுக்கே அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனை, அன்ன நைவேத்யம் என அனைத்து உபச்சாரங்களையும் செய்து தொழத் தொடங்கினார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில், வல்லபாச்சாரியார் என்ற பக்தருக்கு கிரிதரன் மீண்டும் காட்சிதந்தான். வல்லபாச்சாரியாரும் அவனையே இஷ்ட தெய்வமாக ஏற்று ’ஸ்ரீநாத்’ என்ற திருநாமமும் சூட்டினார். 

இல்லறத்தில் ஈடுபட்டிருந்த வல்லபாச்சாரியார், கிருஷ்ணனின் அருளைப் பெற உலகவாழ்க்கையைத் துறக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று கருதினார். 

கண்ணனை ஈன்றெடுத்த தாயாகத் தங்களைப் பாவித்துத் தாயன்புடன் அவனைச் சீராட்டி, பாராட்டி, தாலாட்டி, பாலும் வெண்ணெயும் பற்பல தின்பண்டங்களும் படைத்து ஒவ்வொரு நாளையும் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்பது வல்லபாச்சாரியார் வகுத்துத் தந்த புஷ்டி மார்க்கத்தின் வழிபாட்டு முறை. 

கி.பி. 1520 இல் வல்லபாச்சாரியார் தான் தரிசித்த கிரிதர வடிவையே விக்கிரமாக வடித்து மதுராவில் கோயில் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தார். 

பாரதத்தை மொகலாய வம்சம் ஆளத்தொடங்கியிருந்த நேரம் அது. சக்கரவர்த்தி அக்பர் வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கத்தை ஆதரித்தார். தாஜ் பேகம் என்னும் மொகலாய அரசி ஒருத்தி ஸ்ரீநாத்தின் பரம பக்தையாகவே விளங்கினாள். தான்சேன், பீர்பல், தோடர்மால் போன்ற அறிஞர்கள் புஷ்டி மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் பக்தர்களாக விளங்கினார்கள்.

வல்லபாச்சாரியாரின் காலத்துக்குப் பின்னர், முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஔரங்கசேப் ஆட்சியில் அமர்ந்தார். நிலைமை தலைகீழாக மாறியது. ஔரங்கசேப் விக்கிரக வழிபாட்டை எதிர்த்தார். கோயிலில் இருந்த விக்கிரங்களை அவரது வீரர்கள் அழிக்கத் தொடங்கினார்கள்.

மதுராவில் வல்லபாச்சாரியார் நிறுவியிருந்த ஸ்ரீநாத்தின் விக்கிரகமும் ஔரங்கசேப்பின் வீரர்களால் சின்னாபின்னமாகிவிடும் என்ற நிலைமை உருவானது. 

ஆகவே ஸ்ரீநாத்தின் விக்கிரகத்தைக் காப்பாற்றும் பொருட்டு வல்லபாச்சாரியாருக்குப் பின்னால் வந்த புஷ்டி மார்க்கத் தலைவர்கள் மதுராவில் இருந்த விக்கிரகத்தை ஒரு ரதத்தில் ஏற்றிப் புறப்பட்டு  ஆக்ரா, குவாலியர், கோட்டா, புஷ்கர், ஜோத்பூர் ஆகிய ஊர்களின் வழியாக இறுதியில் மேவார் சாம்ராஜ்யத்தில் இருந்த சின்ஹாட் என்ற கிராமத்தை சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் வந்தடைந்தனர். 

அப்போது மேவாரை ஆண்டு கொண்டிருந்த ராஜசிம்மன், ஸ்ரீநாத்தை சின்ஹாடில் பிரதிஷ்டை செய்து கொண்டாடுவதற்கு அத்தனை உதவிகளும் செய்தான். 

சின்ஹாடில் ஆலயம் கட்டப்பட்டது. அதில் ஸ்ரீநாத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். சின்ஹாடுக்கு ’நாத் துவாரா’ என்ற பெயர் இடப்பட்டது. மதுரா நாதனை மக்கள் நாத் துவாராவிலேயே வழிபடத் தொடங்கினார்கள். 

சில ஆண்டுகளுக்குப் பின் அரசியலில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக ஸ்ரீ நாத் விக்கிரகம் நாத் துவாரா ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டு, உதய்பூரில் ஒரு சிறு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

சிந்தி வம்சத்து அரசர்களின் அநீதிகளுக்கு அஞ்சி, அங்கிருந்தும் விக்கிரகம் அகற்றப்பட்டு கசியார் என்னும் இன்னொரு கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆறு ஆண்டுகள் கஸியார் நாத் துவாராவாக அறியப்பட்டது. 

அந்தச் சமயத்தில் அர்ச்சகர் ஒருவரின் கனவில் ஸ்ரீநாத் தோன்றி, தன்னை மறுபடியும் சின்ஹாடுக்கே எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்யுமாறு ஆணையிட்டான். அவனது ஆணையை ஏற்று விக்கிரகம் மீண்டும் சின்ஹாடுக்குக் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

மறுபடி சின்ஹாட் நாத்துவாராவாகத் தழைக்கத் தொடங்கியது. அவனது ஆலயம் அகிலப்புகழ் பெறத்தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை புஷ்டி மார்க்கத்து ஸ்ரீநாத்தின் புகழ் ஓங்கிக்கொண்டே இருக்கிறது.

ஆலயத்துக்குச் செல்லும் பாதையெங்கும், கறவைப்பசுக்களும் காளைகளும் சுதந்திரமாகத் திரிகின்றன. வழிநெடுகக் கடைகள். மக்கள் கூட்டம். தின்பண்டக்கடைகள். தேநீர்க் கடைகள். பால், வெண்ணெய்க் கடைகள். தெருக்களில் பக்திப் பாடல்களின் நாத வெள்ளம். ஊதுபத்திகளின் சுகந்தம்! நாத் துவாராவே பக்திமயமாகக் காட்சி அளிக்கிறது.

அரண்மனை வாசல் போன்ற ஆலய வாசலைக் கடந்தால் விசாலமான திறந்த வெளி. அதனைக் கடந்து படிகள் ஏறி ஆலயத்தில் நுழைந்தால், கருவறைச் சுவரின் விலாப்பகுதியில் அம்பாரிகளுடன் கூடிய யானைகளின் சித்திரங்கள்! 

கருவறையில் இருபதடி தொலைவில் நின்று ஸ்ரீநாத்தைத் தரிசிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. அண்ணல் அவ்வளவு அழகாய் காட்சியளிக்கிறான் கருநீல வண்ணன். கால்களில் முத்துத் தண்டைகள். இடையில் முத்து மேகலை. வெண்ணிற ஆடை அவனது சிற்றிடையை அலங்கரிக்கும் வெண்ணிற ஆடை. கழுத்தில் முத்து மாலைகள். கைகளில் முத்து வளையல்கள். முத்து மூக்கணி. விரல்களில் முத்து மோதிரங்கள். 

வெண்ணிறத்தில் தலைப்பாகை சூட்டிக்கொண்டிருக்கும் அந்த இடையன் இடது கரத்தை உயர்த்தி கோவர்தன கிரியை ஒயிலாகத் தாங்கியநிலையில் காட்சி அருள்கிறான். 

தரிசனம் கண்ட ஆனந்தத்தில் அகம் துள்ளுகிறது.  கருவறைக்கு வெளியே ஆரத்தி தீபத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. 

தனியொரு சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் கள்வனின் காதலி ராதா, காதல் மணாளன் கண்ணனைக் கொண்டாடும் கோபியர் கூட்டத்தைப் புன்னகை பொலிய பொறாமையின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

நாத் துவாரா வாருங்கள். ஸ்ரீநாத்தைக் கொண்டாடுங்கள்!

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்            : நாத் துவாரா
சுவாமியின் திருநாமம்        : ஸ்ரீநாத் (ஸ்ரீ கிருஷ்ணர்)
எங்கே உள்ளது?                 : ராஜஸ்தானில்
எப்படிப் போவது?               : சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்றால் அங்கிருந்து சுமார் இருநூறு கி.மீ, தொலைவில் இருக்கும் நாத் துவாராவுக்குப் பேருந்திலோ, காரிலோ செல்லலாம். உதய்பூரில் இருந்து சுமார் 52 கி.மீ.    
எங்கே தங்குவது?                  :  நாத் துவாராவில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும்   உள்ளன.        
தரிசன நேரம்                   :  காலை 5.25-6.00, 7.15-7.30, 9.15-9.30, 11.30-11.45, 12.15-12.30  / மாலை 3.15-3.30,  4.30-4.45, 5.30-6.00

பஞ்ச துவாரகைகளில் ஒன்றான நாத் துவாரா ஸ்ரீநாத்தை தரிசித்தபின், ஆலயத்துக்கு வெளியே திறந்த வெளியில் இடப்பட்ட ரொட்டியையும் சப்ஜியையும் சாலையிலேயே நின்று சாப்பிட்டோம். என்ன சொன்னாலும் சரி, வட இந்திய உணவை வட இந்தியாவில் உண்ணும்போது அதற்கு ஒரு தனிச் சுவை இருப்பதை மறுக்க இயலாது. புளிப்பும் காரமுமாக ரொட்டி (சப்பாத்தி அல்லது ஃபுல்கா) உண்ட பிறகு, வட இந்தியத் தேனீரை அருந்தினோம். 

 

அடுத்து சற்று தொலைவிலேயே கான்க்ரோலி என்னும் ஊரில் துவாரகதீஷ் என்ற திருநாமத்துடன் ஸ்ரீகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிறான் என்றும்,  பஞ்ச துவாரகைகளில் ஒன்றான கான்க்ரோலி ஆலயத்து துவாரகதீஷையும் தரிசித்துவிட்டு ஓய்வைப் பற்றி யோசிக்கலாம் என்றும் கார் ஓட்டுனர் அறிவுறுத்தவே ஒப்புக்கொண்டோம். வேறு வழி? காரை நேராக கான்க்ரோலிக்கு விடச் சொன்னோம்.  துவாரகதீஷையும் தரிசித்து விடுவோம் வாருங்கள்! 

பரவசமளிக்கும் பாலகிருஷ்ணன் கான்க்ரோலி  துவாரகதீஷ்

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய வல்லபாச்சாரியாருக்கு இறைவன் கோவர்தனகிரியின் சிகரத்தில் சுண்டுவிரலால் மலையைத் தூக்கி, நின்ற நிலையில் காட்சி தந்தான். அவரும் அந்த கிரிதரனைத் தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டாடத் தொடங்கினார்.  

கி.பி. 1520 இல் வல்லபாச்சாரியார் கிரிதரனை விக்கிரமாக வடித்து மதுராவில் கோயில்கட்டி அதில் பிரதிஷ்டை செய்தார். 

துறவறம் மேற்கொள்ளாதவர்களும், பிராமணர்கள் அல்லாதாரும் இறைவனின் அருளைப் பெற முடியாது என்பது போன்ற மூடநம்பிக்கைகளும் பழமையான சம்பிரதாயங்களும் சமூகத்தில் புரையோடியிருந்த காலகட்டம் அது. 
கிருஷ்ணனின் அருளைப் பெற உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும், கண்ணனைச் சீராட்டி, பாராட்டி, பாலும் வெண்ணெயும் பற்பல தின்பண்டங்களும் படைத்து, ஒவ்வொரு நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினாலே அவனது அருளைப் பெறலாம் என்றும் வல்லபாச்சாரியார் கூறினார். 

அது மட்டுமன்றி, சூத்திரர்கள், பெண்கள், ஏழைகள், சமூகத்தால் இழிந்தவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்ட எவரும் இறைவனின் அருளைப் பெற இயலும் என்றும் எடுத்துக் கூறி புஷ்டி மார்க்கம் என்னும் ஒரு புது மார்க்கத்தை வகுத்துத் தந்தார்.   அதனால் அவரது புஷ்டி மார்க்கம் மக்களிடையே மகத்தான வரவேற்பினைப் பெற்றது. 

பாரதத்தில் முகலாயர்களின் ஆட்சி தொடங்கியது. ஔரங்கசேபின் ஆட்சிக்காலத்தில் இந்து மதத் தலைவர்கள் அனைவரும் அனேக சிரமங்களுக்கு ஆளாயினர். 

அந்தச் சமயத்தில், மதுராவில் புஷ்டி மார்க்கத்தை ஆதரித்து பூஜை புனஸ்காரங்களை மேற்கொண்டிருந்த விரஜபூஷண் என்னும் பக்தரும் ஔரங்கசேபின் ஆட்சிக்காலத்தில் பல இன்னல்களுக்கு ஆளானார். 

அதனால், மதுராவை விட்டு விலகி வேறு எங்காவது குடி புகுந்து ஓர் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளத் தீர்மானித்தார். கி.பி. 1664 இல் அஹமதாபாத் வந்தார்.

அஹமதாபாத் அருகிலிருக்கும் ராய்பூரில் ஒரு வீட்டில் தனது பூஜைகளை மேற்கொண்டார். முகலாய ஆட்சியாளர்களின் தொல்லை அங்கும் அவரைத் தொடர்ந்தன. எனவே, அங்கொரு கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்திருந்த துவாரகாதீஷின் விக்கிரகத்தை விட்டுவிட்டு சூரத் சென்றார். அங்கு ஒரு பாலகிருஷ்ணரின் விக்கிரகத்தைச் செதுக்கச் செய்து, பிரதிஷ்டை செய்து பூஜைகளைத் தொடர்ந்தார்.

அப்போது மேவாரை ஆண்டு கொண்டிருந்த ராஜசிம்மன் என்னும் ராஜபுதன அரசரின் அழைப்பின் பேரில் கி.பி. 1671 இல் சூரத்திலிருந்து பாலகிருஷ்ண விக்கிரகத்தோடு ஆசோடியா என்னும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த ஒரு சிறு ஆலயத்தில் பாலகிருஷ்ணனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். 

ஆசோடியாவுக்கு அருகில் ராஜசமந்த் என்னும் ஏரி ஒன்று இருந்தது. கி.பி. ஆயிரத்து எழுநூறில் பெய்த பெரு மழையின் காரணமாக வெள்ளம் உண்டானது.  ஆசோடியா ஆலயம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. 

அதனால் பாலகிருஷ்ணர் அருகிலிருக்கும் தேவல்மகரி என்னும் குன்றின் உச்சியில், ஒரு பிரமாண்டமான வேப்ப மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டு அண்ணல் மலையப்பராகக் கொண்டாடப்படலானார். 

வெள்ளம் வடிந்தபின்பு, மறுபடியும் வெள்ளத்தால் ஊர்மக்களுக்கு எந்த இன்னலும்  ஏற்படக்கூடாது என்று எண்ணிய அரசர் ராஜசிம்மர் ராஜசமந்த ஏரியை ஒட்டி ஓர் அணை கட்டினார். 

அதன்பின் அணைக்கு அருகில் இருக்கும் கன்க்ரோலி நகரில் ஓர் அழகான ஆலயம் எழுப்பப்பட்டு, அதில் மலையப்பர் பிரதிஷ்டை செய்யப்பட்டு ’துவாரகாதீஷ்’ என்ற திருநாமத்தில் கொண்டாடப்படத் தொடங்கினார்.

அன்றிலிருந்து கன்க்ரோலி ஆலயம் புஷ்டி மார்க்கத்தின் மூன்றாவது பீடமாக அறியப்படத் தொடங்கியது.  விரஜபூஷணின் காலத்துக்குப் பிறகு, அவரது வம்சத்தவர்கள் இந்த மூன்றாவது பீடத்தை அலங்கரிக்கின்றனர். 

கன்க்ரோலியிலும் கறவைப்பசுக்களும், காளைகளும் சுதந்திரமாகத் திரிகின்றன. ஆலயத்தை ஒட்டி பிரமாண்டமான நீர்ப்பரப்புடன் ராஜசமந்தர் ஏரி. அதனை ஒட்டி அணைக்கட்டு. 

ஆலயத்துக்கு அரண்மனை வாயில். அதன் இருபுறச் சுவர்களில் அம்பாரிகளுடன் கூடிய யானைகளின் சித்திரங்கள்.  வளாகத்தில் நுழைந்தவுடன் ஒரு பெரும் முற்றம். அங்கே, மக்கள் தாளங்கள் சகிதம் பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். 

முற்றத்தின் இடது புறத்தில் மேலே மாடத்தில் கிருஷ்ணரும், பலதேவரும் இரு சந்நிதிகளில் எழுந்தருளியிருக்கிறார்கள். 

முற்றத்துப் படிகளை ஏறிக் கடந்தால் ஒரு பெரும் கூடமாகக் காட்சியளிக்கும் கருவறை. அதில் சின்னஞ்சிறிய சிங்கார வடிவில் பாலகிருஷ்ணன், கருநீல வண்ணனாய்க் காட்சி தருகிறான். 

துவாரகாதீஷ் என்று கொண்டாடப்படும் இந்த இறைவனுக்கு நான்கு திருக்கரங்கள். இடது மேல்கரத்தில் சங்கும், கீழ்க்கரத்தில் சக்கரமும் துலங்குகின்றன. வலது மேல்கரம் கதையைத் தாங்கி இருக்க, வலது கீழ்க்கரம் அபயம் அளிக்கிறது.  

கால்களில் தண்டைகள். கழுத்தில் முத்து மாலைகள். கைகளில் முத்து வளையல்கள். மஞ்சள் நிற மகுடத் தலைப்பாகையில் மயிலிறகு. இத்தனையும் தாங்கிநிற்கும் கருவறைக் கண்ணனை தரிசிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. 

கிருஷ்ணனை ஆடம்பரமாக அலங்கரித்து, தின்பண்டங்கள் படைத்து ஒவ்வொரு நாளையும் திருவிழாவைப் போல் கொண்டாடி வணங்க வேண்டும் என்ற புஷ்டி மார்க்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இந்த அண்ணலும் தினம் தினம் கொண்டாடப்படுகிறான். 

அவனது பிறந்ததினமான ஜன்மாஷ்டமியில் இரவு முழுக்கப் பக்தர்கள் அவனை அலங்கரித்து, ஊட்டி, விளையாடி, தாலாட்டுப் பாடி, மகிழ்கின்றனர். 
கன்க்ரோலியின் கோவர்தன பூஜை மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் பசுக்களையும் காளைகளையும் அலங்கரித்து, அவற்றுக்கு உணவூட்டி, அவைகளோடு சேர்த்து அண்ணலையும் கொண்டாடுகிறார்கள். 

தீபாவளிக்கு அடுத்தநாள் பால் பானைகள், இனிப்பு வகைகள், பாபட், பூரி, ஸப்ஜி மற்றும் ஏராளமான தின்பண்டங்கள் படைக்கப்பட்டு ’அன்னகூட்’ என்னும் அன்னத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

பஞ்சத் துவாரகைகளில் ஒன்றாக அறியப்படும் கன்க்ரோலி பாலகிருஷ்ணன் பார்க்கப் பார்க்கப் பரவசம் அளிப்பவன். 

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்            : கான்க்ரோலி
சுவாமியின் திருநாமம்         : துவாரகாதீஷ் (ஸ்ரீ கிருஷ்ணர்)
எங்கே உள்ளது?                  : ராஜஸ்தானில்
எப்படிப் போவது?               :  சென்னையில் இருந்து அஹமதாபாத்- விமானம், ரயில், அங்கிருந்து உதய்பூர்- பேருந்து அல்லது கார். உதய்பூரிலிருந்து 67 கி.மீ. தொலைவில் இருக்கும் கான்க்ரோலிக்குப் பேருந்திலோ, காரிலோ செல்லலாம்.     
எங்கே தங்குவது?                 :  கான்க்ரோலியிலும், உதய்பூரிலும் தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள்ளன. 
தரிசன நேரம்                   :  காலை 7.00-7.15 8.30-9.30, 11.00-11.15, 
                                      மாலை 4.00-4.15, 4.30-4.45, 5.00-5.15, 7.30-7.45 

(பயணம் தொடரும்...)

- சுபா (காஷ்யபன்) 

மேலும் படிக்க 
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 14
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 13
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 12

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles