கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 17

Tuesday, November 15, 2016

சூஃபி துறவி க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்களின் தர்காவை நோக்கிச் சென்ற சாலை மிகுந்த பரபரப்பாக இருந்தது. வழியெங்கும் வரிசையாக பிரியாணி  மற்றும் பூரி, சப்பாத்தி, பராத்தா கடைகள். காற்றை மசாலா மணம் நிறைத்திருந்தது. கடை வாசலில் வியாபாரிகள் நின்று கூவிக் கூவி அழைத்தார்கள். 

தர்காவில் பிரார்த்தனை செலுத்துவதற்கு மதவேறுபாடு இன்றி அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், தர்காவுக்குள் நுழையும்போது யாராக இருந்தாலும் தலையில் ஒரு தொப்பி அணிந்துகொள்ள வேண்டும் அல்லது தலைமுடியை மறைத்து கைக்குட்டை போன்ற சிறு துணியையாவது கட்டிக்கொள்ள வேண்டும். 

 

மஞ்சள் நிறத்திலான கைக்குட்டைகளுடன், எக்கச்சக்கமான பேர் வழிமறித்து வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள்.  ஆளுக்கொரு தங்க மஞ்சள் கைக்குட்டையை வாங்கிக்கொண்டோம். 

 

சிறிய, பெரிய நூற்றுக்கணக்கான கடைகளில் பூக்கள், சால்வைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் சமாதியில் வைக்கக்கூடிய ஆராதனைக்குரிய பொருட்கள் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. 

 

ஷெர்வானி போன்ற நீள அங்கி அணிந்து, தலைப்பாகை கட்டிய முஸ்லிம் ஃபக்கீர்கள் நிறைய பேர் எதைப்பற்றியும் யாதொரு பிரக்ஞையும் இன்றி உலவிக் கொண்டிருந்தார்கள்.  

 

அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் செல்லும்  துவாரகை, சோமநாதர் போன்ற ஆலய வாசல்களில், சிலர் வழிமறித்து அனைத்து சன்னிதிகளிலும் சுவாமி தரிசனம் செய்யவைத்துக் கூட்டி வருவதாகக் கூறி ஐநூறு, ஆயிரம் என்று பிடுங்கப் பார்ப்பார்கள்.

 

நம் கோயில்களில் மட்டும் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கவில்லை என்பது அஜ்மீரில் தெளிவாகப் புரிந்தது. 

 

அங்கேயும் ஏராளமான பணம் பிடுங்கிகள்  வளைய வந்தார்கள். அவர்கள் நம்மை மொய்த்து, தர்காவில் நமக்காக சிறப்பான பிரார்த்தனைகள் செய்வதாகக் கூறி பணம் பறிக்கப் பார்த்தார்கள்.  

 

அவர்களில் பலர், டிசைன் டிசைனாக வண்ண ஆடைகள் அணிந்து கொண்டு, அந்த மஹானின் நேரடி வழித்தோன்றல்கள் எனப் பெருமையாகப் பறைசாற்றிக்கொண்டார்கள்.  

 

எங்களுடன் வந்த டிரைவர் ஏற்கெனவே எச்சரித்திருந்ததால், நாங்கள் புன்னகையுடன் மறுத்துக்கொண்டே தர்காவை நோக்கி முன்னேறினோம். 

 

தர்காவின் காம்பவுண்ட் சுவர் அருகில் ஒரு பழைய மசூதி இருந்தது. அதில்தான்  சூஃபி துறவி க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்கள் தொழுகை செய்வது வழக்கமாம்.  

 

அந்த மசூதியில் சிலர் அமர்ந்து, ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் குரான் படித்துக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதுபோல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்கள். 

 

ஒரு குறுகலான வாசலைக் கடந்து தர்காவின் வளாகத்தில் நுழைந்தோம். அடடா... எவ்வளவு மக்கள். பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடிக்கொண்டிருந்தது. 

 

க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்களின் சமாதி இருந்த  கட்டிடத்துக்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்ற மக்கள் அமைதியாக உள்ளே சென்றார்கள். 

 

நாங்களும் நுழைந்தோம். உள்ளே மிக அழகாக இருந்தது. கல்லறையுடன் கூடிய அந்தக்கூடம் முழுவதையும் தூய்மையான பக்தி நிறைத்துப் பரவி இருந்தது. 

 

சிவப்பு மற்றும் பச்சை நிற வெல்வெட் துணி கல்லறையின் மீது அழகாகப் படர்ந்திருந்தது. கூட்டம் அலை மோதினாலும், அதன் தலைமை காதிம் எங்களை ஒரு மூலையில் சற்று நேரம் இருக்க அனுமதித்தார். 

 

எல்லோரும் அராபிய மொழியில் உச்சரித்துப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். மயிர்க் கூச்செரிந்தது. கண்ணீர் திரண்டு வழிந்தது. அங்கு வந்திருந்த மற்ற பக்தர்களைப் போலவே, நாங்களும் மண்டியிட்டு சமாதி மேடையில் முகம்பதித்து சற்று நேரம் அமைதியாக இருந்தோம். எல்லோரும் மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற எண்ணம்தான், ஒவ்வொரு கோயில் சன்னிதியிலும் எங்கள் நெஞ்சில் எழும். அதே எண்ணம்தான் இங்கும் எழுந்தது. 

 

சில கணப்பொழுதுகள் அங்கேயே அப்படியே அமைதியாக இருந்தோம். எங்களது உச்சந்தலையில் அங்கே இருந்த துறவி ஒருவர் மயில் தோகையால் வருடிவிட்டார். 

 

அந்தக் கணத்தில் இனம் புரியாததொரு பரவசம் உடலெங்கும் ஊடுருவியது. திருவண்ணாமலை ரமணாசிரமத்துக்குச் செல்லும்போதும் சரி, மந்த்ராலயம்  ராகவேந்திரர் பிருந்தாவனத்துக்குச் செல்லும்போதும் சரி, இதே பரவச உணர்வை அனுபவித்திருக்கிறோம். 

 

ஆஹா.. எல்லா மதங்களும் ஒரே மார்க்கத்தை நோக்கித்தான் நம்மை அழைத்துச் செல்கின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

 

அந்த எண்ணம் எங்கள் நெஞ்சில் எழ, எங்களது பரவச உணர்வு இன்னும் அதிகரித்தது. உடலெங்கும் இன்ப மின்சாரம் ஊடுருவியது. அதைச் சொல்லில் வடிக்க இயலாது; அனுபவித்துத்தான் உணரவேண்டும். 

 

தர்காவினுள் சூஃபி துறவியின் சக்தி நீக்கமற நிறைந்திருந்தது. மாறாத அந்தப் பரவச உணர்வுடன் சமாதியை வலம் வந்தோம்; வெளியே வந்தோம். 

 

அந்த வளாகத்தில் மேலும் சில கூடங்கள் இருந்தன. பெரிய பெரிய பித்தளை அண்டாக்கள், தவலைகள் எல்லாம் ஓரிடத்தில் குவிந்திருந்தன. சில முக்கியமான நாட்களில் அவற்றில் பிரியாணி சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றார்கள். 

 

சூஃபி க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி ஏராளமான அற்புதங்களை ஆற்றியிருக்கிறார் என்று பலர் அங்கே கண்கள் விரியக் கூறினார்கள். அவற்றை எல்லாம் அறிந்து கொள்ளவேண்டும் போல் ஆவலாக இருந்தது. அவர் ஆற்றிய அற்புதங்களை யாராவது புத்தக வடிவில் கொண்டு வந்திருக்கிறார்களா என்று விசாரித்தோம். ம்ஹூஹும், புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை. 

 

தர்காவில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உஸ்மானி சில்லா என்றொரு இடம் உள்ளது. அந்த இடத்தில்தான் துறவி க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி நாற்பது நாட்கள் தனிமையான ஏகாந்தத்தில் அமர்ந்திருந்தார் என்று சொல்லப்பட்டது. 

 

அது ஓர் அமைதியான இடம். பாலைவனப் பிரதேசமான ராஜஸ்தானில், ஓர் ஏரியை நோக்கிய வண்ணம் அமைந்திருந்த அந்த இடம் கண்ணுக்குக் குளிர்ச்சியையும், மனதிற்கு மகிழ்வையும் அளித்தது. 

 

விளக்கை நோக்கி வரும் ஈசல்கள் போல் பக்தர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் மண்டியிட்டு சூஃபி துறவியை  மானசீகமாக வணங்கிவிட்டு, பின்னர் பிரார்த்தனை செய்தார்கள்.   

 

அந்தி நேரம். சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியிருந்தான். சுற்றுப்புறத்தில் இருந்த மசூதிகளில் இருந்து, பிரார்த்தனை செய்ய பாங்கு ஒலி அழைத்தது.  

 

அந்த பாங்கு ஒலியின் தனித்துவமான சங்கீதத்தை அனுபவித்தபடி ஓர் உணவு விடுதிக்குச் சென்றோம். ரொட்டி, சப்ஜி சாப்பிட்டு விட்டு மீண்டும் தர்காவுக்குச் சென்றோம்.

 

தர்காவில் ஏராளமான விளக்குகள் ஒளிர்ந்தன. சமாதிக்கு வெளியே கவ்வாலி கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாடகர்கள் ஹார்மோனியத்துடனும், தபேலாக்களுடனும் உணர்ச்சி பொங்க உலகையே மறந்து பாடினார்கள்.

 

அடிப்படையில் அவை காதல் பாடல்களே! இறைவனையே காதலியாக வரித்து, அந்தக் காதலியின் அன்பிற்காக மிகவும் ஏங்கிக்கொண்டு இருப்பதாகப் பாடினார்கள். காதலி தனது முகத்திரையை அகற்றினால், அவளது அழகிய வதனத்தை ஒரு கணமேனும் பார்த்து விடலாமே என்று ஏங்கிப் பாடினார்கள். அந்தப் பாடல்கள் எங்களது இதயங்களை நிறைத்து என்னவோ செய்தன. 

 

கச்சேரி முடிந்தபின் ஊருக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறினோம். மனம் நிறைந்திருந்தது. பேசத் தோன்றவில்லை. கார் இயந்திர ரீங்காரத்துடன் அரை மணி நேரம் ஓடி புஷ்கரை அடைந்தது.  

 

அங்கே ராஜஸ்தான் மாநில அரசின் சுற்றுலா விடுதியில் அறை பதிவாகி இருந்தது. அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தோம். 

 

மறுநாள் காலை. சூரியோதயம் ஆகிக்கொண்டிருந்தபோதே அறையை விட்டுக் கிளம்பிவிட்டோம்.

 

புஷ்கரில் இருக்கும் ஏரிதான் கடவுள்! பதினைந்து நிமிட நடைப்பயணம் எங்களை அந்த ஏரிக்கரைக்குக் கொண்டு சேர்த்தது. அடேயப்பா. எவ்வளவு பெரிய ஏரி.  அருகில் சென்று தரிசிப்போம் வாருங்கள்! 

அயன் ஆலயம் கொண்டு அருளும்
புஷ்கரப் பொய்கைக் கரை

 

புவி தோன்றிய நாளிலிருந்தே புனிதத் தீர்த்தங்களின் அரசனாக விளங்கும் புஷ்கரம் நனிசிறந்த பஞ்ச புனிதத்தலங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் நகரங்கள் ஏழில் ஒன்றாகவும் விளங்குகிறது. 

 

பரமசிவன் இட்ட சாபத்தால், படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு அவனியில் ஆலயம் இல்லாது போயிற்று. ஆதங்கம் காரணமாக அயன், தந்தையான அரியிடம் முறையிட்டார்.

 

நாராயணனோ தாமரை மலர் ஒன்றினை நான்முகனிடம் அளித்தார். அந்த மலர் மண்ணுலகில் விழும் இடத்தில் அயன் அறுபதாயிரம் ஆண்டுகள் யாகம் வளர்த்தால், அங்கே அவருக்கோர் ஆலயம் எழும் என்று அருள்வாக்குரைத்தார். 

 

பிரம்மாவின் கரத்திலிருந்து நழுவிய கமல புஷ்பம் புவியினில் விழுந்த இடத்தில் நீர் பீறிட்டுப் பெருகி புனிதமானதொரு பொய்கையாக மாறியது. கரத்திலிருந்து விழுந்த புஷ்பத்தால் உருவானதால், பொய்கை புஷ்கரம் எனப் பெயர்பெற்றது.

 

தனக்கென ஏற்பட்ட அந்தத் தலத்தில் யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. அறுபதாயிரம் ஆண்டுகள் வளர்ந்த யாகம் நிறைவுறும் வேளையும் நெருங்கியது. 

 

யாகத்தின் பலனை அடைய வேண்டுமானால், அவருக்குத் தனது சதியான சாவித்திரி தேவியின் பங்களிப்பு தேவைப்பட்டது. பிரம்மா நாரதர் மூலமாக சாவித்திரிதேவிக்கு அழைப்பு அனுப்பினார். 

 

ஆயின் சாவித்திரிதேவி வரக் காலதாமதமாகியது. முகூர்த்தவேளை தவறிவிட்டால் யாகத்தின் பலன் கிட்டாமலேயே போய்விடக்கூடும் என்று அஞ்சிய அயன், தனது தவ வலிமையினால் காயத்திரிதேவியைப் படைத்தார். தன்னருகில் அவளை அமர்த்தி யாகத்தை நிறைவு செய்தார்.   

 

யாகத்தின் பலனாக, அது நிறைவுற்ற கார்த்திகை பௌர்ணமி திதியில் புஷ்கரப் பொய்கையின் கரையினில் பிரமனுக்கென்றே ஓர் ஆலயம் தோன்றியது.   

 

தனது நாயகன் காயத்திரிதேவியுடன் அமர்ந்து யாகத்தை நிறைவு செய்த செய்தியை அறிந்த சாவித்திரிதேவி பிரம்மனிடம் ஊடல் கொண்டு, அருகில் இருக்கும் குன்றின் மீது தனக்கென ஒரு கோயில் கொண்டாள். 

 

காலத்தில் உதவிய காயத்திரிதேவிக்கு, ஆலயத்தில் தனக்கருகில் ஓர் இடமும் ஈந்தார் பிரம்மன்.

 

பாரதம் முழுவதும் பல புனிதத்தலங்கள் இருந்தாலும் புனித நீராடுதலுக்காக பெயர் பெற்ற தலம் புஷ்கர். அதனாலேயே ஐம்பத்திரண்டு தீர்த்தக் கட்டங்கள் அமைந்த இந்தப் பொய்கை 'தீர்த்த ராஜா' என்று அழைக்கப்படுகிறது. 

 

கார்த்திகை பௌர்ணமி அன்று இங்கு நீராடி ஆலயங்களில் வழிபட்டால் முக்தி கிட்டும் என்பது புராணங்களின் கூற்று. 

 

அந்த நாள் தொட்டு, புஷ்கரத்தின் புகழ் புராணங்களில் பேசப்பட்டு வந்துள்ளது. விஷ்ணு பக்தர்களில் சிறந்தவனான பிரகலாதன் இங்கு அருள்பெற்றதாக வாமன புராணம் கூறுகிறது, இராமாயண காலத்தில் விசுவாமித்திரர் இங்கு தவம் இயற்றி உள்ளார். தீர்த்த யாத்திரை சென்ற தர்மராஜர் இங்கும் யாத்திரை மேற்கொண்டதாக மகாபாரதக் காவியம் தெரிவிக்கிறது.

 

மேலும் பராசர மகரிஷி பிறந்த இடமாக புஷ்கரம் அறியப் படுகிறது. இன்றும் அவர் சந்ததியினர் பராசர அந்தணர்கள் என்ற பெயருடன் ஆலயத் திருப்பணி செய்து வருகிறார்கள்.

 

இன்று புஷ்கரத்தில் சிறியதும் பெரியதுமாக சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்கள் தொடர்பான ஐம்பத்திரண்டு தீர்த்த கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த ஆலய தரிசனத்திற்காக பக்தர்கள் வருகிறார்களோ, அந்த தீர்த்த கட்டத்தில் நீராடி அந்தக் கடவுளை வழிபட்டு பலன் பெறுகிறார்கள். 

 

புஷ்கர் ஏரி வேதங்களின் தலைவன் நான்முகனால் உருவாக்கப்பட்டதால், தேவலோகத்திலிருந்து தேவர்களும் ரம்பை ஊர்வசி போன்ற அப்சரஸ் கன்னிகைகளும் கந்தர்வர்களும் இந்த தீர்த்தத்தில் புனித நீராடி வந்துள்ளனர். 

 

மற்ற புண்ணிய நதிகள் இங்கு தங்களிடம் சேர்ந்த பாவங்களைக் கரைக்கின்றன.

  
மண்டோர் மன்னன் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஏரியின் கரையை பலப்படுத்தி, அதன் கரைகளைச் சுற்றி தர்மசாலைகள் பல அமைத்துள்ளான்.

 

மலைகள் சூழ அமைந்திருக்கும், அமைதியான புஷ்கரப் பொய்கையில் குளிர் நீராடுவது ஓர் இனிய அனுபவம். நீராடுவதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி கரையில் முன்னோர்களுக்குப் பிண்டம் அளிக்கவும் வசதிகள் உள்ளன. 

 

தொன்றுதொட்டு பல ஞானிகளையும் முனிவர்களையும் தவசீலர்களையும் புனிதப்படுத்திய அதே பொய்கை நீர். இது நம்மையும் கரை சேர்க்கும் என்ற    நம்பிக்கை. அதனால் உண்டான அமைதி நம் உள்ளத்தில் நிறைகிறது. 

 

பொய்கையிலிருந்து ஐம்பதடி தூரத்தில் பிரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அங்கே எழுந்தருளியிருக்கும் நான்முகனை தரிசிக்கச் செல்வோமா? பயணம் தொடரும்...

- சுபா (காஷ்யபன்)

 

மேலும் படிக்க 
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 16
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 15
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 14

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles