கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 10

Saturday, July 30, 2016

இல்லம் ஏகுவோருக்கு எல்லாம் வழங்கும் பேட் துவாரகை துவாரகாதீஷ் துவாரகை ஆலயத்தில் கிருஷ்ணனை தரிசித்து விட்டு வெளியே வந்தபோதே, ஆலய வாசலில் ஒரு பண்டா எங்களை வழிமறித்தார். 

 

 "இது கோயில் அல்ல. கிருஷ்ணனின் அரசவை. இங்கே கிருஷ்ணன் ராஜ்ய பரிபாலனம் செய்தார். தினமும் காலையில், கடலில் இருக்கும் தீவில் உள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு கருடன் மீதேறி இங்கே வந்து சேருவார்.." என்று எங்களிடம் கூறிவிட்டு, அந்த அரிய தகவலுக்காக இருநூறு ரூபாய் தட்சிணை கேட்டார். அவருக்கு ஒரு வேளை போஜனம் செய்வித்துவிட்டு, நாங்கள் கழன்று கொண்டோம். பஞ்ச துவாரகை யாத்திரையின்போது, ஒவ்வொரு ஆலய வாசலிலும் இது போன்ற பண்டாக்கள் நம்மை வழிமறிப்பார்கள். பாவ, புண்ணிய கணக்கு போட்டோ, மனிதநேயம் கொண்டோ, அவர்களுக்கு உதவுவதும் உதவாததும் நம் விருப்பம்!  

 

கடற்கரை நகரமான குசஸ்தலையில் உள்ள அரண்மனை, ஆலிலை கண்ணன் அரசாண்ட துவாரகையாக அறியப்படுகிறது. அரசு அலுவல்களைக் கண்ணன் துவாரகையிலிருந்து கவனித்தான். ஆயினும், அவன் இருந்து வசிப்பதற்கு இல்லம் ஒன்று வேண்டுமல்லவா?

 

துவாரகையிலிருந்து சுமார் முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது ஓகா துறைமுகம். இங்கிருந்து அரை மணி நேர விசைப்படகு பயண தூரத்தில் கிருஷ்ணனின் இல்லம் அமைந்துள்ளது. அன்னை ருக்மணியை தரிசித்துவிட்டு, நாங்கள் துறைமுகத்தை வந்தடைந்தோம். அங்கே தயாராகக் காத்திருந்த படகு, எங்களை அழைத்துச் சென்று இறக்கிவிட்ட இடம் ஒரு தீவு.  இது பேட் துவாரகை என்று அழைக்கப்படுகிறது. 

 

துவாரகையானது கிருஷ்ணர் அரசோச்சிய அரண்மனை ஆலயம் எனில், பேட் துவாரகையானது அந்த மாயக்கண்ணன் மகிழ்ந்து உறைந்த இனிய இல்லக் கோயிலாகக் கொண்டாடப்படுகிறது. 

 

கடலுக்கு நடுவே இருக்கும் அந்தத் தீவில், ஒரு கிராமமே இயங்கிக் கொண்டிருந்தது. புழுதி நிறைந்த தெருக்களில், அங்குள்ள யாதவர்களின் பசுக்களும் காளைகளும் சுதந்திரமாகத் திரிகின்றன. ஊர் முழுக்க கோதூளி! (கால்நடைகளின் பாதங்களில் இருந்து மேல் எழும்பும் புழுதி). மூலைக்கு மூலை லஸ்ஸி, பீடா, சிகரெட் மற்றும் பெப்சி, கோக் விற்ற கடைகள். தெருக்களின் இரு புறங்களிலும் சப்பாத்தி சுட்டு விற்றுக் கொண்டிருந்த ஓட்டு வீடுகள். 

 

முக்காடு அணிந்த பருத்த பெண்கள் தயிர் விற்றார்கள்.  காற்றில் பசு நெய் வாசனை!

கோயிலுக்கு வழி கேட்டோம். 'துவாரகீஷ் வீடா?' என்று கேட்டு, வழி சொல்லி, இறுதியில், உண்மையிலேயே ஒரு வீடு போலவே அமைந்திருந்த கோயிலை அடைந்தோம். வாசல் கடந்து (கோபுரம் கடந்து அல்ல) உள்ளே சென்றோம். 

 

பழமையான ஆலயம் என்றாலும், கஜினி முகமதுவின் படையெடுப்பின்போது அழிந்திருக்கிறது. பின்னர், இதனை பரோடா அரசர் கட்டுவித்திருக்கிறார்.  

 

நுழைந்தவுடன் கணபதி தரிசனம். அவரை வணங்கிக் கடந்து சென்று, வலதில் திரும்பினால் பெரிய முற்றம். அதன் இருபுறங்களிலும் வரிசையாகச் சந்நிதிகள் அமைந்த கூடங்கள்.

 

இடதுபுறக்கூடத்தின் முதல் சந்நிதியில் கல்யாண்ராய் தரிசனம் தருகிறார். மூன்றாவது சந்நிதியில் திரிவிக்கிரமன்.

 

மையச் சந்நிதியில், இல்லத்தலைவன் கிருஷ்ணன் துவாரகாதீஷ்!  

 

இந்தச் சந்நிதியில்தான் பக்தமீரா பரந்தாமனுடன் ஐக்கியமாகியிருக்கிறாள்! சுதாமா தன் அருமை நண்பனைத் தேடிவந்து, அவல் தந்து ஐசுவர்யங்களைப் பெற்று செழிப்படைந்ததும் இந்த இல்லத்தில்தான்! 

 

பாரதப்போருக்குப் படை தந்து உதவுமாறும், பரந்தாமனே வந்திருந்து பார்த்தசாரதியாகப் பணிபுரியுமாறும், தலைமாட்டில் துரியோதனனும் கால்மாட்டில் அர்ச்சுனனும் இருந்து இறைஞ்சியதும் இந்த இல்லத்தில்தான்! 

 

இங்கிருந்துதான், கண்ணன் கருடன் மீது ஆரோகணித்து, துவாரகை அரண்மனைக்குத் தினமும் சென்று, ராஜ்ய பரிபாலனம் செய்து திரும்பியிருக்கிறான். கருடர், ஆலயத்தில் சிங்காரப் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார்.

 

கடல் மையத்தீவில் இருப்பவன் கண்ணன் என்பதால், கடல்விளை முத்துக்கள் ஹாரங்களாக அவன் மார்பை அலங்கரிக்கின்றன.

 

மேல் இடது கரத்தில் சக்கரம். மேல் வலது கரத்தில் கதை. கீழ் இடது கரத்தில் சங்கு ஆகியன ஏந்தி, அண்ணல் கீழ் வலது கரத்தால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறான். அன்னை ருக்மணி வடித்தெடுத்த மூலஸ்வரூபமாக இந்த துவாரகதீஷ் கருதப்படுகிறார். தலைப்பாகை, அதனை அலங்கரிக்கும் மயிலிறகுடன் மார்பில் முத்துமாலைகள் துலங்க, அவன் அளிக்கும் அழகு தரிசனத்தைக் காண மக்கள் அலைமோதுகின்றனர்.

 

வலதுபுறக் கூடத்தில் துவாரகாதீஷூக்கு நேர் எதிரே அன்னை தேவகி. அவளுக்கு வலதுபுறத்தில் மாதவன். இடதுபுறத்தில் புருஷோத்தமன். திறந்தவெளி முற்றத்தின் நேர் எதிரே, அம்பாஜிக்கு ஒரு சந்நிதி.

 

துவாரகாதீஷ் சந்நிதியின் வலதுபுறத்தில் ஓர் தனிக்கட்டு. இங்கே லக்ஷ்மியின் சந்நிதி.  இதனை வணங்கிவிட்டு, மேலும் வலதுபுறம் சென்று திரும்பினால் போஜன சாலை. அது ஒரு திறந்த முற்றம். இங்கே கோவர்தன கிரிதரன் ஒரு சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறான். 

லக்ஷ்மி சந்நிதிக்கு எதிரில் செல்லும் பாதையில் அமைந்துள்ள ஒரு கூடத்தினில் நுழைந்தால், அங்கே கண்ணனின் காதலி ராதிகா கருவறை கொண்டிருக்கிறாள். இல்லத்தின் அனைத்து அதிகாரங்களும், இவளுக்குத்தான் ஈயப்பட்டிருக்கின்றன. அனுதினமும் காலையில், இவளிடம் இருந்து திறவுகோல் பெற்றுத்தான் மற்ற சந்நிதிகள் எல்லாம் திறக்கப்படுகின்றன. ராதிகாவுக்கே அதிகாரங்கள் அனைத்தும். 

துவாரகாதீஷூக்கு இடதுபுறத்தில் அந்தப்புர ஆலயம். இங்கே லக்ஷ்மி நாராயணரும், அன்னை ஜாம்புவந்தியும் தரிசனம் அளிக்கிறார்கள். 

இதனை அடுத்திருக்கும் இன்னொரு மாளிகையில், சத்யபாமா மஞ்சளாடை உடுத்திக் காட்சி தருகிறாள். 

கண்ணனின் இந்த இல்லத்துக்கு ஏகினால், அவனிடம் யாசிக்காமலேயே அத்தனையும் அள்ளித்தருவான். 

துவாரகை செல்பவர்கள், பஞ்ச துவாரகை ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவன் இல்லத்துக்கும் அவசியம் செல்ல வேண்டும்.  

 

திருத்தலக் குறிப்புகள்

 

தலத்தின் பெயர்                        : பேட் துவாரகை 

சுவாமியின் திருநாமம்            : துவாரகாதீஷ்

எங்கே உள்ளது?                        : குஜராத்தில்

எப்படிப் போவது?                      : சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்று, அங்கிருந்து துவாரகைக்கு அருகில் இருக்கும் துறைமுக நகரமான ஓகாவுக்கு ரயிலிலோ, காரிலோ, பேருந்திலோ செல்லலாம். ஒகா படகுத்துறையிலிருந்து இயந்திரப் படகில் சுமார் முப்பது நிமிடங்கள் பயணம் செய்தால், பேட் துவாரகாவை அடையலாம்.  நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து உண்டு. 

எங்கே தங்குவது?          : துவாரகையில் குஜராத் சுற்றுலாத்துறையின் விடுதி உள்ளது. தவிர, வசதியான தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள்ளன. பேட் துவாரகையில், தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லை. 

தரிசன நேரம்                    :  காலை 07.30 மணி முதல் பகல் 12.30 வரை /  மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 வரை 

தரிசனத்தை முடித்துக் கொண்டு, படகுத்துறை நோக்கி நடந்தோம். திடீரென்று, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருத்தி வழிமறித்தாள். முகமெல்லாம் வாடி, வதங்கி கறுத்துப்போய் இருந்தாள். உதடுகளில் வெடிப்பு. 

"என் மகனைப் பார்த்தீர்களா?" என்று ஏக்கத்துடன் ஹிந்தியில் கேட்டாள். பரிதாபமாக இருந்தது. பையன் பெயர் துவாரகாதீஷாம். சத்யபாமா, ஜாம்புவந்தி என்று இரு மனைவியர். ராதா என்னும் வைப்பாட்டி என்று அடையாளம் எல்லாம் சொல்லி 'அவனைப் பார்த்தீர்களா?' என்று கேட்டாள். 

எங்களைக் கடந்து சென்ற பெரிய தலைப்பாகைக்காரர் ஒருவர், 'கிறுக்கு' என்று சைகையாலேயே தெரிவித்துவிட்டுப் போனார். அந்தப் பெண்மணியோ, எங்களை விட்டு விலகுகிற மாதிரி இல்லை. வேறு வழியின்றி அவளைக் கோயிலுக்கு அழைத்துப்போய் கிருஷ்ணனின் எதிரில் நிற்கவைத்து, 'பார்.. உன் பையனை..' என்றோம்.

அவள் அப்படியே சரிந்து அமர்ந்தாள். 'டேய்.. துவாரகாதீஷ்.. ஏண்டா என்னை இப்படி உதாசீனப்படுத்தறே? வப்பாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு, வீட்டை விட்டே தொரத்தி விட்டுட்டியேடா... ஒங்கிட்ட அப்படி நான் என்னடா கேட்டுட்டேன்? பசிக்கு ஒரு ரொட்டித்துண்டு.. அவ்வளவுதானே?' என்று ’ஓ’வென்று அழத் தொடங்க, எங்களுக்கு என்னவோ போலாகி விட்டது. அவளை எழுப்பி, 'துவாரகாதீஷ் உங்களுக்கு ரொட்டி வாங்கிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறான்' என்று சொல்லி அழைத்துச் சென்றோம். வயிறு நிரம்ப சப்பாத்தியும், சப்ஜியும் வாங்கித் தந்தோம். 

"டேய்.. துவாரகாதீஷ்.. பெரிய மனசுடா ஒனக்கு.. அம்மாவை நீ மறக்கல.. இன்னிப் பொழுதுக்கு வழி பண்ணிட்டே.." என்று தழுதழுப்புடன் கூறியபடி கோவிலைப் பார்த்து கும்பிட்ட அந்தப் பெண்மணியிடம், நூறு ரூபாய் கொடுத்தோம்.

"இதை வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போறேன்? ராஜமாதாவுக்கே பிச்சை கொடுக்கறியா..? போ..போ.." என்று பணத்தை நிராகரித்தாள். கனத்த நெஞ்சுடன் படகில் ஏறினோம்.  

மறுபடியும் துவாரகை வந்து சேர்ந்தோம். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில், இன்றைக்கும் கோபிகைகள் வசிக்கிறார்கள் என்று கூறி, எங்களது ஆவலைத் தூண்டினார் கார் டிரைவர். 

காரை அந்த கிராமத்துக்கு விடச் சொன்னோம். ஐந்து நிமிட பயணத்தில், கோபிகைகள் கொஞ்சி விளையாடும் கிராமத்தை அடைந்தது கார்.

காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். ஒரு பெண்மணி பால் கறந்து கொண்டிருந்தார். ஒரு பெண்மணி தயிர்ப்பானையை தலையில் வைத்துக் கொண்டு நடந்து  வந்தார். அவர்கள் அனைவரும் கோபிகைகள் என்றார் டிரைவர். 

யாதவர்கள் வசிக்கும் கிராமம் அது. கிருஷ்ணனும் யாதவ குலத்து மக்களிடையே வளர்ந்தவன். யாதவப் பெண்களைத் தோழிகளாகக் கொண்டவன். அவ்வாறெனில் யாதவப் பெண்கள் அனைவருமே கோபிகைகள்தானே! புராண காலத்து கோபிகைகள் இன்றும் இருப்பார்கள் என்று நம்பி வந்தது, எங்கள் தப்புதானே?

ஊர் மக்கள் எங்களை அழைத்துச் சென்று, அங்கிருந்த ஓர் ஏரியைக் காட்டினார்கள். அதில்தான், ’ கிருஷ்ணன் காளிங்கநர்த்தனம் ஆடினான்’ என்றும், ’அந்த ஏரிக்கரையில்தான்  கோபிகைகள் கழற்றி வைத்திருந்த ஆடை அணிகலன்களை கிருஷ்ணன் அபகரித்தான்’ என்றும், பிருந்தாவன லீலைகள் எல்லாம் அங்கே நிகழ்ந்ததாகக் கூறி, அவர்கள் தங்கள் ஊருக்குப் பெருமை தேடிக்கொண்டார்கள்.  புன்னகையுடன் அங்கிருந்து புறப்பட்டோம். 

"பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான நாகேஸ்வரத்துக்கு, இப்போது உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்" என்றார் டிரைவர். 

நாகேஸ்வரம் சென்று அடைந்து நாகேஸ்வரனை தரிசிக்கும் முன்பு, அந்தத் தலத்தின் பின்னணியில் இருக்கும் புராணக்கதையைக் கொஞ்சம் அசை போடுவோமா?

அல்லவரை அழித்து நல்லவரைக் காக்கும் துவாரகை நாகேஸ்வரன்

அரக்கர்களைக் குடிமக்களாகக் கொண்டு, தாருகாசுரன் என்பான் அடர்வனப்பகுதி ஒன்றினை ஆண்டு வந்தான். அவனது பட்டமகிஷியான தாருகை, பார்வதிதேவியின் பரம பக்தை. பரமேஸ்வரியைக் குறித்துத் தவம் புரிந்து வரங்கள் பல வாங்கி வந்தவள். 

அரக்க அரசனும், அவனது அரக்கர் குடிமக்களும் அவனி மாந்தருக்குத் தொல்லைகள் பல தந்தனர். யாகங்களை அழித்தும், அகப்பட்டவர்களை வதைத்தும் அக்கிரமங்கள் புரிந்தனர். 

அல்லலுற்ற மக்கள், ஓவர் என்றொரு மகரிஷியைச் சரணடைந்து, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினர். அங்கமெங்கும் சிவதத்துவம் என்னும் அக்கினியைக் கொண்டிருந்த அந்த மகரிஷியும், மாந்தரைக் காக்கக் கடுந்தவத்தில் ஆழ்ந்தார்.

அவரது தவத்தினால் எழுந்த அக்னியின் வெப்பம் தாளாமல், விண்ணுலம் கருகத் தொடங்கியது. வெம்மை விண்ணவர்களைச் சுட்டது. இந்திரனும் வாயுவும் இன்னபிற தேவர்களும், மகரிஷியின் தவத்துக்கான காரணத்தை அறிந்து, தாருகனுடனும் அரக்கர்களுடனும் போர் புரிய ஆயுதங்கள் ஏந்தி, மண்ணுலகு நோக்கி வந்தனர்.

அரக்கர்கள் திகைத்தனர். தேவர்களுடன் போர் புரிந்து மாண்டு போக, அவர்களுக்கு விருப்பம் இல்லை.  போரிடாவிடினும் தாங்கள் அழிவது உறுதி என்ற நிலையில், தங்களைக் காக்குமாறு தாருகையிடம் வேண்டினர்.

தானிருக்கும் பகுதி எதுவாயினும், அதனைத் தரையோடு பெயர்த்துக் கொண்டு பறந்து செல்லும் வரத்தைப் பெற்றிருந்தாள் தாருகை. எனவே, அவர்கள் இருந்த வனத்தையே பெயர்த்துச் சென்று ஆழ்கடலின் மையத்தில் இறக்கினாள். 

உயிர் காத்த அரசியைப் போற்றிப் புகழ்ந்த அரக்கர்கள், முன் போல் அக்கிரமங்களைத் தொடர்ந்தனர். அவ்வப்போது நிலப்பகுதிக்கு வந்து மாந்தர்களைச் சிறையெடுத்துச் சென்று அவர்களை வதைத்தும், கொடுஞ்சிறையில் தள்ளியும் கொடுமைப்படுத்தினர். அரக்கர்களால் சிறையில் தள்ளப்பட்டவர்களில், சிவபக்தனான சுப்ரியும் ஒருவன். 

சிறையில் அவன் தனது சிவலிங்கத்தை வைத்து வணங்கினான். சுப்ரி சிவபூஜை செய்யும் செய்தி தாரகனுக்குச் சொல்லப்பட்டது. சர்வ வல்லமை பொருந்திய தானிருக்கும்போது, ’ஓர் அற்ப மானிடன் தனது சிறையிலேயே சிவபூஜை செய்வதா’ என்ற இறுமாப்புடன், சுப்ரியைக் கொன்றுவிடும் நோக்குடன் வந்தான் தாருகன்.

சுப்ரியோ, ’எது நடப்பினும் ஈசனைத் தொழுவதை விடேன்’ என்று சிவலிங்கத்தைத் தொழுதபடி இருந்தான். தாருகன் சிறையேகினான். சுப்ரியைக் கொல்ல வாளுயர்த்தினான். அவ்வளவுதான், சிவலிங்கம் பிளந்தது. அதில் இருந்து ஜோதி வடிவில் எழுந்தருளிய சிவபெருமான், தாருகனை எரித்துச் சாம்பலாக்கினார்.

தாருகனோடு சேர்ந்து அக்கிரமங்கள் புரிந்தபோதிலும், தாருகை பார்வதிதேவியின் அருளைப் பெற்றவள் என்பதால் அவளை மன்னித்தார் சிவபெருமான். அது மட்டுமன்றி, தான் ஜோதிர்லிங்கமாக அத்தலத்திலேயே எழுந்தருளி இருப்பதாகவும், தலமும் தாருகாவனம் எனப் பெயர் கொண்டு விளங்குமெனவும் அருளினார். 

ஆலயத்தை அண்டி விட்டோம். தரிசனத்துக்குச் செல்வோம் வாருங்கள்... (பயணம் தொடரும்)

- சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles