கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் -9

Friday, July 29, 2016

ஆணவம் அழிக்கும் அன்னை துவாரகை ருக்மணி
 
கண்ணனை மணந்த காரிகை ருக்மணியை அகிலம் அறியும். மாதவனின் மனம் கவர்ந்த மங்கை ருக்மணி, மோட்சபுரி துவாரகை ஆலயத்தின் எந்த ஒரு சந்நிதியிலும் எழுந்தருளவில்லை. ஏன்? ஆணவம் கொள்பவர் யாராயினும், அவர் அவனியில் தனித்திருந்து தவிக்க நேரிடும் என்னும் அற்புத தத்துவத்தை எடுத்துச் சொல்லும் வரலாறு, இந்த வினாவுக்கு விடையாக விரிகிறது.

விதர்ப தேசத்து வேந்தன் பீஷ்மகருக்கு ருக்மி என்றொரு புதல்வன். ருக்மணி என்றொரு புதல்வி. துவாரகை மன்னன் கண்ணனையே தன் மணாளனாக ருக்மணி வரித்திருக்க, அவளை சிசுபாலனுக்கு மணம் முடித்துக் கொடுக்க முனைந்தனர் ருக்மியும் பீஷ்மகரும். மணநாளும் குறிக்கப்பட்டு விட்டது. 

 

மணநாளன்று, குலதெய்வமான மலைமகள் ஆலயத்துக்கு வரும் தன்னைக் கடத்திச் சென்று காந்தர்வ விவாகம் புரிய வேண்டும் என்று தன் உள்ளம்கவர் கள்வன் கண்ணனுக்கு ஒரு காதல் கடிதம் எழுதி, அதை சுனந்தா என்னும் ஓர் அந்தணனிடம் கொடுத்து தூது அனுப்பினாள் ருக்மணி.  கண்ணன் அவ்வாறே சென்று, அரிவையைக் கடத்தி வந்து கடிமணமும் புரிந்து கொண்டான். 

 

அமளிகள் அனைத்தும் அடங்கிய பின், கண்ணன் தன் மனைவி ருக்மணியுடன் துவாரகை நோக்கி நான்கு அசுவங்கள் பூட்டிய ரதத்தில் வந்து கொண்டிருந்தான்.  துவாரகை அரண்மனை நோக்கி தேர் சென்றது. அரசனை வணங்கிய மக்கள், அவளையும் வணங்கினர். ’உலகாளும் மன்னனையே மணாளனாக அடைந்து விட்டோம்’ என்ற ஆணவம் ருக்மணியின் உள்ளத்தில் பூநாகம் போல் எழுந்தது. 

 

அண்ணல் அவளது ஆணவத்தை அறிந்து கொண்டான். ஆணவம் வளர்ந்தால் அது ருக்மணியையே அழித்துவிடும் என்ற கவலை கண்ணனுக்கு. அதனால் அவளுக்கு ஒரு பாடம் புகட்டத் தீர்மானித்தான். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி துவாரகைக்கு வந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தடைந்தது. அது கேட்டு கிருஷ்ணன் அகமகிழ்ந்தான். துர்வாசரை எதிர் கொண்டான். மனைவி சகிதம் ரதத்திலிருந்து இறங்கினான். இருவருமாக துர்வாசருக்குப் பாத பூஜைகள் செய்தார்கள்.

 

துர்வாசரும் அவர்களது உபசரிப்பில் மனம் மகிழ்ந்தார். அவர் கிருஷ்ணனை நோக்கி, "கிருஷ்ணா நீயோ அவனி மக்கள் அனைவர் இதயங்களிலும் நிறைந்து, உறைந்து இருப்பவன். இருந்தும் ஒரு சாதாரண மானிட உருவெடுத்து, இந்த உலகத்தில் பிறந்திருக்கிறாய். இப்போது என்னைத் தேடி வந்திருக்கிறாய். சொல். எதற்காக என்னைத் தேடி வந்தாய்? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?" என்றார்.

 

'மானிடப் பிறப்பெடுத்து மனைவியாய் விளங்கும் மங்கை ருக்மணியின் ஆணவத்தை அழிக்க வேண்டும்' என்று கண்ணன் தன் உள்ள விழைவைச் சொல்லவில்லை. அதற்கு மாறாக, "தாங்கள் எங்கள் இல்லம் ஏகி ஒரு வேளை உணவருந்திச் செல்ல வேண்டும்" என மகரிஷியிடம் இறைஞ்சினான். 

 

துர்வாசரும் விருந்துக்கு வர ஒத்துக் கொண்டார். மன்னன் கண்ணனின் மன விழைவின் படி மகரிஷி, கிருஷ்ணனையும் ருக்மணியையும் சோதித்துப் பார்க்க எண்ணம் கொண்டார். அதனால் அவர் கிருஷ்ணனை நோக்கி, " சரி. ஆயின் நான் தேர் ஏறுவேன். நீங்கள் இருவரும் கீழே இறங்கி அசுவங்களுக்குப் பதிலாக இந்தத் தேரை இழுத்துச் செல்லவேண்டும்" என்றொரு நிபந்தனை விதித்தார். 

 

கணவனும் மனைவியும் ஒத்துக்கொண்டார்கள். கேட்டவர் மகரிஷியாயிற்றே! அதுவும் கோப ரிஷியாயிற்றே! அவர் மனம் ஒரு கணம் கோணினாலும் 'பிடி சாபம்' என்று சொல்பவர் ஆயிற்றே! கணவனும், மனைவியும் தேரை இழுக்கத் தொடங்கினார்கள். ருக்மணி அரண்மனையில் வளர்ந்தவள். பிறந்ததும் ராஜவம்சம். புகுந்ததும் ராஜவம்சம். ஒரு நாளும் உடல் நோக உழைத்ததில்லை. அதனால் அவளுக்கு மூச்சு வாங்கியது. உச்சி வெயில் உச்சந்தலையை ஊடுருவியது. நாக்கு வறண்டது. உதடுகள் காய்ந்தன.

 

ருக்மணி தாகத்தில் தவித்தாள். ஒரு வாய் நீராவது தொண்டையை நனைத்தால்தான் அடுத்த அடி எடுத்து வைக்க இயலும் என்ற நிலையை எய்தினாள். கருமமே கண்ணாக ரதத்தை இழுத்துக் கொண்டிருந்த கணவனை, அவள் சைகையாலேயே அழைத்தாள். புது மனைவியின் அசைவே கிருஷ்ணனை அவள் பால் நோக்க வைத்துவிட்டது. பார்த்தான் பார்த்தனின் சாரதி.

 

கண்களால், என்ன என்று வினவினான் கண்ணன். தாகம் என்று, தனது தவிப்பை சைகையாலேயே பகர்ந்தாள் ருக்மணி. புது மனைவியின் மனம் கோணலாகுமா? அதனால் கண்ணன் தன் கால் கட்டை விரலால் காலடியில் இருந்த பூமியைக் கீறினான்.

 

கீறுபவன் கிருஷ்ணன் என்றதால், நிலம் பிளந்தது. மண்ணிலிருந்து கங்கை பீறிட்டு எழுந்தது. அந்த நீரைக் கண்ட நங்கை ருக்மணி தன்னை மறந்தாள். தன் நிலையை மறந்தாள். சட்டென்று தழைந்து தண்ணீரை தனது தாமரைக் கரத்தில் ஏந்தி வாயிலிட்டுக் கொண்டாள். அடுத்து ஒரு வாய், அடுத்து ஒரு வாயென தனது தாகம் தணியும்வரை தண்ணீரைப் பருகிக் கொண்டே இருந்தாள். அதனைக் கண்டார் துர்வாசர். அவ்வளவுதான். தேரிலிருந்து தெருவுக்கு இறங்கினார். மங்கையை சினம் பொங்கும் கண்களால் பார்த்தார். 

 

"அரிவையே. ருக்மணி. அதிதி நான். உன் கணவன் என்னைத் தன் இல்லத்துக்கு விருந்துண்ண வருமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டதாலேயே நான் தேரில் ஏறினேன்...நீ அரசகுமாரியாக இருந்திருக்கலாம். அதனால் இந்தக் கடும் வெயில் உன்னைச் சுட்டிருக்கலாம். உனக்கு தாகம் எடுத்திருக்கலாம். மங்கை உன் தாகத்தைத் தணிக்க, உன் கணவன் தன் கால் கட்டைவிரலால் கீறி கங்கையை வரவழைத்திருக்கலாம்..

 

அதெல்லாம் சரிதான். ஆனால் நீ நீர் அருந்துவதற்கு முன், அதிதியான என்னை ஒப்புக்காவது ஒரு முறை நீர் குடிக்கிறாயா என்று கேட்டிருக்க வேண்டாமா? அதிதியைக் கேட்காமல் நீர் அருந்தியது எங்ஙனம்...? என்னை மதியாது நீ இவ்வாறு நடந்து கொண்டதற்கு, உன் கணவன் கண்ணன் ஈரேழு லோகங்களுக்கும் இறைவன் என்ற அகங்காரத்தால் தானே? பிடி சாபம். எந்தக் கணவனை மணந்ததால் மனதில் இறுமாப்பு கொண்டு விருந்துக்கு அழைத்துவிட்டு என்னை அவமதித்தாயோ, அந்தக் கணவனுடன் இனிமேல் நீ இணைந்து வாழ இயலாது. இன்றிலிருந்து நீ பன்னிரு ஆண்டுகளுக்கு, உன் பர்த்தாவைப் பிரிந்தே இருக்க வேண்டும். அது மட்டுமன்றி, நீ இருக்குமிடத்தில் நிலம் வறண்டு போகும். நீர் நிலைகள் வற்றிப் போகும். வாழ வழியற்ற புட்களும், இன்ன பிற உயிரினங்களும் நீ இருக்கும் இடத்தை விட்டு அகன்று போகும். நீ இருக்கும் பிரதேசம் இனி காட்டுப் பாலைவனமாய்க் காட்சியளிப்பதாக.. " என்று சாபத்துக்கு மேல் சாபமாய் அடுக்கிவிட்டு அவர்களை விட்டு விலகிப் போனார். 

 

ருக்மணி திக்பிரமை பிடித்தவள் போல் நின்றாள். இப்படி ஒரு சாபத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும், அரசகுமாரி எனவும் தனக்கு வாய்த்ததைப் போல ஒரு கணவன் இந்த நானிலத்தில் யாருக்கும் வாய்க்க மாட்டான் எனவும் அகங்காரத்துடன் எண்ணியதற்குத் தக்கதொரு தண்டனை கிடைத்து விட்டது என்றே அவளுக்குத் தோன்றியது. 

 

"தேவி. துறவிகளின் சாபம் நம்மைச் சும்மாவிடாது. நிச்சயம் உன்னையும் என்னையும் அது பிரிக்கத்தான் போகிறது. பன்னிரண்டு ஆண்டுகள் தானே? நீ தனித்தே இரு. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நீயாக என்னை வந்து சேரும் தருணம் வரத்தான் போகிறது. ஆனாலும் உனக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். அகங்காரம் கொள்ளாதே. ஆடம்பரத்துக்கு அடி பணியாதே. நீ இருக்கும் தனி இடத்துக்கு தினமும் இருமுறை நான் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறேன்" என்று அண்ணல் கண்ணன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினான். 

 

துவாரகையின் எல்லையில் அன்னை ருக்மணிக்கு ஒரு தனிக்கோயில் எழுந்தது. அன்னை அங்கேயே தனித்துத் தவமிருக்கத் தொடங்கினாள்.  அன்னையின் ஆலய கோபுரமும் துவாரகை கோபுரம் போலவே அமைந்துள்ளது. ஆனால் சிறிய வடிவில்! 

 

பழைய கோவில். கிருஷ்ணருக்கு ருக்மணி எழுதிய காதல் கடிதம் ஒன்று, வாசலில் ஒரு பலகையில் வரலாறுக்கு ஒரு சான்று போல் காட்சியளிக்கிறது. படிகளேறி ஆலயத்தில் நுழைந்தால், நேர் எதிரே ஆஞ்சநேயர் தரிசனம். அவருக்கு இடது புறத்தில் ஒரு மண்டபத்தை அடுத்துக் கருவறை. 

 

அன்னை ருக்மணிக்கு நான்கு கரங்கள். பூ வடிவ கிரீடம். வலது கையில் சக்கரம். இடது கரத்தில் சங்கு. கீழ் வலது கை கதையைப் பற்றியிருக்கிறது. கீழ் இடது பத்மம். வெள்ளைப்பளிங்கில் காட்சியளிக்கும் அன்னை அகங்காரம் கூடாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.

 

கருவறைக்கு முன்னிருக்கும் மண்டபத்தில் வந்து கூடி, அன்னையை தரிசிக்கும் பக்தர்களை அப்படியே அமரவைத்து, அன்னை ருக்மணி இப்படித் தனித்து நின்று தவிக்கும் கதையை எடுத்துச் சொல்கிறார் அர்ச்சகர். 

 

துர்வாசர் சாபத்தால் அந்தப் பகுதியில் நல்ல நீர் கிடைப்பது இல்லை. காய்கனிகள் விளைவது இல்லை. ஆகவே அங்கு ஜலதானம் செய்வது சிறப்பு என்று கூறி நன்கொடை கோருகிறார். பிராகாரத்தைச் சுற்றி வந்தால், கருவறைக்குப் பின்னால் கோஷ்ட தெய்வமாக மகாவிஷ்ணு காட்சி தருகிறார். வானில் கருடன் ஒன்று வட்டமிட்டு வளைய வருகிறது. 

 

ஆலய வாசலுக்குச் சற்றுத் தள்ளி சுமார் ஐம்பது அறுபது ஆண்டிகள் கொத்தாக அமர்ந்து யாசிக்கிறார்கள். பத்து ரூபாயை ஒருவரிடம் ஈந்தால் அனைவரும் கை தூக்கி ஆசீர்வதிக்கிறார்கள். இந்த இடத்தில் ஜலதானம் செய்வது சிறப்பு என்று அர்ச்சகர் சொன்னதில் ஆச்சரியமே இல்லை. சுற்றிலும் எங்கு நோக்கினும் நீரே இல்லை. கடலும் கடல் சார்ந்த நெய்தல் பிரதேசம் என்பதால், அங்கே கானல் நீர் எனும் மாய நீர்தான் காணக் கிடைக்கிறது. வேறு வழியின்றி ருக்மணியைப் போலவே அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் குடிநீருக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள். 

 

துவாரகை யாத்திரை செல்பவர்கள் அனைவரும், அன்னை ருக்மணியின் ஆலயத்துக்கும் சென்று தரிசித்தால், ஆலய வாயிலேயே அகங்காரம் அற்று வீழும். அன்னையைத் தரிசியுங்கள். 
 
திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்                 : ஓகா

அன்னையின் திருநாமம்   : ருக்மணி

எங்கே உள்ளது?                  : குஜராத்தில்

எப்படிப் போவது?            : சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்றால் அங்கிருந்து துவாரகைக்கு ரயிலிலோ, காரிலோ, பேருந்திலோ செல்லலாம். துவாரகையின் எல்லையில் துறைமுக நகரமான ஓகா துவங்கும் இடத்தில் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்துக்கு துவாரகையில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்லலாம். 

எங்கே தங்குவது?                  : துவாரகையில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன. ஓகாவில் தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லை.

தரிசன நேரம்                   :  காலை 7.00 மணி முதல் பகல் 12.30 வரை  மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை 
 

என்னவொரு முரண் என்றால், சாபம் கொடுத்த துர்வாசருக்கு துவாரகை ஆலயத்தில் சந்நிதி உள்ளது. ஆனால் அஹங்காரத்தால் மதியிழந்த ருக்மணிக்கு அங்கே வாசம் புரியும் வாய்ப்பு இல்லை. அஹங்காரமானது நம்மை எவ்வளவு தூரம் இந்த உலகில் இருந்து விலக்கி, தனித்துத் தவிக்கவிடும் என்பதற்கு அன்னையின் ஆலயமே சாட்சி! 

 

இந்த ஆலயத்தை அடுத்து நாம் செல்ல இருப்பது, கண்ணனின் இல்லம் இருக்கும் பேட் துவாரகைக்கு. சுற்றிலும் கடல் சூழ்ந்த ஒரு தீவான பேட் துவாரகைக்குச் செல்ல கடலைக் கடந்துதான் செல்ல வேண்டும். இயந்திரப் படகில் பயணம் செய்துதான் கண்ணனின் இல்லம்  ஏக இயலும்.

 

எங்களுக்கு என்ன மாதிரியான வினோத அனுபவம் காத்திருக்கிறது என்பதை அறியாமலேயே, அங்கே செல்ல முடிவெடுத்தோம். அந்த நெகிழ்வான பேட் துவாரகை தரிசன அனுபவத்தை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளதா? கொஞ்சம் பொறுங்கள்...பயணம் தொடரும்... 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles