கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! 20

Saturday, December 31, 2016

சிவபெருமானிடமிருந்து சிரஞ்சீவி வரம் வாங்கியிருந்த காரணத்தால் பாஷ்கலீ தன்னுடைய படை முழுக்க அழிக்கப்பட்ட பின்பும் தன்னை அன்னையால் அணு அளவு கூட அழித்துவிட முடியாது என்ற தைரியத்தில் அன்னை தேவியையே எதிர்த்துப் போர்புரியத் தொடங்கினான். 

அன்னையால் அவனை வதம் செய்யாமல் போய்விடுமோ என்ற எண்ணம் தேவர்களுக்கு எழுந்தது. அவர்கள் நடுநடுங்கியபடி அன்னையிடம், 'தாயே, இவனை வதம் செய்யாதவரை எங்களால் மீண்டும் சொர்க்கலோகத்துக்குச் செல்ல இயலாது' என்று இறைஞ்சினர்.

தேவி விசுவரூபம் எடுத்தாள். தனக்கருகே இருந்த பெரும் மலைப்பாறை ஒன்றை உயர்த்தி, அதைப் பாஷ்கலீயின் மீது வைத்து அழுத்தினாள். 

பாஷ்கலீ பாறையின் கீழ் அழுத்தப்பட்டான். உலக நன்மையைக் கருத்தில் கொண்டு அன்னை அந்தப் பாறை மீது எழுந்தருளினாள். 

பாறையடியில் அழுத்தப்பட்ட பாஷ்கலீ இனி எந்நாளும் இடம்பெயர இயலாது என்பதை அறிந்த இந்திரனும் தேவர்களும் அகமகிழ்ந்து அன்னையைப் போற்றிப் புகழ்ந்தார்கள். சொர்க்கலோகம் மீண்டார்கள்.

அற்புதமலையில் எழுந்தருளிய அன்னை அற்புதாதேவி என்ற திருநாமத்தால் அழைக்கப்பட்டாள். அங்கு சித்திரை, வளர்பிறை சதுர்தசி அன்று எழுந்தருளிய அன்னை, தன்னை தரிசிப்பவர்களுக்கு வீடுபேறினை அருளுவதாக வாக்குரைத்தாள்.  

மவுன்ட் அபு கடைவீதியிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் ஆலயத்தின் அடிவாரம் அமைந்துள்ளது. ஆலயத்தை அடைய முன்னூற்று ஐம்பது படிகள் மேலேற வேண்டும். 

மலைப்பாறைகளை உடைத்து வழி பண்ணி அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம் என்பதால் இருபுறங்களிலும் பிரமாண்ட பாறைகள். மையத்தில் படிகள். வழியில் ஆலயமணி. அன்னையின் கொடி. 

நுழைவாயிலில் கணேசரும் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருக்கிறார்கள். வணங்கிக் கடந்தால் அமிர்தகுண்டம் எனப்படும் மலைச்சுனை. அதில் எந்நாளும் வற்றாத இளநீர். 

குகைக்கோயிலின் இரண்டாவது நுழைவாயிலில் துவாரபாலகரான காலபைரவர் சந்நிதி. வெள்ளி வர்ணம் பூசப்பட்ட மண்சுதை பைரவர் அகன்ற கண்களுடன் காட்சியளிக்கிறார்.  

இவரைக் கடந்தால், மூலத்துவாரத்துக்கு முன்னால் அகண்ட் குண்ட் என்னும் யாக மண்டபம். இதற்கப்பால் இயற்கையான குகையில் கருவறை அமைந்துள்ளது. 

குகைப்பாதையில் தவழ்ந்து நுழைந்தால் கருவறைக் குகையில் அன்னை வெண்கொற்றக்குடையின் கீழ் காட்சி அளிக்கிறாள். கருமையான முகம். ஒளிரும் கண்கள். சரிகை வேலைப்பாடுகளுடன் புடைவை. வெண்பூமாலை. திருமுகம் தவிர ஏனைய அங்கங்கள் மலர் அலங்காரத்தில் மறைந்து இருக்கின்றன. அன்னைக்கு முன்பாக, தங்கமுலாம் பளபளக்கும் புலி வாகனம். 

ஆரத்தி ஒளியில் அன்னை முகம் கண்டு ஆனந்தம் கொண்டு சந்நிதியை விட்டுத் தவழ்ந்து வெளிப்பட்டால், ஒரு பாறை உச்சியில், குகையில் சிவலிங்கம். லிங்கத்துக்குப் பின்னால் குதிரையில் சிவமூர்த்தி. சிவலிங்கத்துக்கு முன்பாக யாகக் குண்டம். அதன் மையத்தில் சூலம். 

அன்னை எழுந்தருளிய சித்திரை, வளர்பிறை, சதுர்தசி நாள் இங்கே மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பதினான்காம் நாள் துவங்கும் வேள்வியானது, அடுத்த நாளான பௌர்ணமியன்று நிறைவடைகிறது. ஊரெங்கும் கொண்டாட்டம். கோலாகலம். 

அருகில் இருக்கும் ஊர்களில் வசிக்கும் ஆயர் குலத்து மக்கள் அன்றைய தினம் தாங்கள் கறக்கும் பாலை விற்பனை செய்யாமல், அப்படியே பாயசமாகச் செய்து அன்னைக்குப் படைத்துப் பிரசாதமாக விநியோகிக்கிறார்கள். 

இதுதவிர தீபாவளி, சிவராத்திரி, நவராத்திரி ஆகியவையும் இந்த மலைக்குகைக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.    

அற்புதாதேவியை வணங்குங்கள். அவள் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்!             

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்                : அபு மலை (மவுன்ட் அபு)
அன்னையின் திருநாமம்      : அற்புதாதேவி
எங்கே உள்ளது?                : ராஜஸ்தானில்
எப்படிப் போவது?               :  சென்னையில் இருந்து ஜோத்பூர் செல்லும் ரயிலில் சென்று அபு ரோட் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் 26 கி.மீ. தூரத்தில் இருக்கும் அபு மலைக்குப் பேருந்து மற்றும் காரில் செல்லலாம்.                   
எங்கே தங்குவது?                :  மவுன்ட் அபுவில் வசதியான தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும்  உள்ளன.    
தரிசன நேரம்                      :  காலை 07.00 முதல் மாலை 06.00 வரை

அன்னையின் தரிசனம் முடிந்த பின் காரிலேயே சென்று நக்கி ஏரிக்கரையில் சற்று நேரம் உலவினோம். இயற்கையிலேயே தவளை போல் உருவாகியிருந்த தவளைப் பாறையைக் கண்டோம்.  வெகு அழகான சூரிய அஸ்தமனத்தையும் சிலிர்ப்புடன் பார்த்து விட்டு விடுதிக்குத் திரும்பிய எங்களை விடுதிக்காப்பாளர் வரவேற்றார். 

"தெல்வாடா ஆலயத்துக்குச் சென்றீர்களா, இல்லையா?" என்று கேட்டார்.

"இல்லையே..." என்றோம்.

"அதைப் பார்க்காமல் சென்றால் நீங்கள் மவுன்ட் அபுவுக்கு வந்ததே வீண். நாளைக் காலை முதல் வேலையாக தெல்வாடா ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். அதன்பின் பாருங்கள். நீங்கள் அறிந்த உலக அதிசயங்கள் எல்லாம் எந்த மூலைக்கு என்று மூக்கில் விரலை வைக்காவிட்டால், என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்.. " என்றார். 

தெல்வாடா ஆலயத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல், அப்போதிலிருந்து எங்கள் நெஞ்சில் கனலாய்த் தகதகக்க ஆரம்பித்தது.  

மறுநாள் காலை எழுந்ததும் பரபரவென்று குளித்துத் தயாராகி, சிற்றுண்டியை உண்டுவிட்டு தெல்வாடா ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டோம். 

சென்ற வழியில் எங்களது கார் திடீரென்று ஓரிடத்தில் ஓரம் கட்டப்பட்டது. எதிரில் ஒரு சாமியார் வந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஜைன மதத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரண்டு, அவர் கூடவே ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார்கள்.

ஜைன சாமியார் உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக நடந்து வந்தார். இதுவரை இப்படிப்பட்டதொரு காட்சியை நாங்கள் பார்த்ததில்லை என்பதால் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது.

ஜைன ஆலயக் கருவறைகளில் எழுந்தருளியிருக்கும் மஹாவீரர் ஆகட்டும்,  அல்லது ஜைன மதத்தைச் சேர்ந்த வேறு துறவிகளாகட்டும்,  நிர்வாணமாகத்தான் காட்சியளிக்கிறார்கள். ஜைனத் துறவிகள் அந்த அளவுக்கு முற்றிலும் துறந்தவர்கள். அதனால், ஊர்வலத்தின் நடுவில் திகம்பரராக வந்த அவரைப் பார்த்தபோது திகைப்பாக இருந்தாலும் தவறாக நினைக்கத் தோன்றவேயில்லை. 

ஊர்வலம் கடந்ததும் கார் கிளம்பியது. தெல்வாடா ஜைன ஆலயங்கள் கோலோச்சும் வளாகத்தின் வாயிலில் நின்றது. 

பதினோராம் நூற்றாண்டுவரை இந்துக்களின் புனிதத்தலமாக மட்டுமே இருந்துவந்த அபுமலை இன்று சமணர்களின் புனித யாத்திரைத் தலமாகவும் திகழ்கிறது.

இதற்குக்காரணம் பதினோரம் நூற்றாண்டில், அபுமலையில், உலக அதிசயமாய்க் கட்டப்பட்ட இரு சமண ஆலயங்கள்.

முழுக்க முழுக்க வெண்பளிங்குக் கற்களால், அருகருகே கட்டப்பட்ட இந்த ஆலயங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வனப்பும், நெஞ்சை அள்ளும் நேர்த்தியும் கொண்ட பளிங்குச் சிற்பங்களால் நிறைந்தவை. காண்போரை பிரமிப்பின் எல்லை வரை அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தவை.

இந்த இரண்டு வெண்பளிங்கு ஆலயங்களை அடுத்து, இதே இடத்தில் மேலும் மூன்று சமண ஆலயங்கள் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கட்டப்பட்டன.
ஆலயங்கள் அமைந்துள்ள இடத்தை ராஜஸ்தானியில் தேவல்வாடா என்று குறிப்பிடுகிறார்கள். அபுமலை சமணக் கோவில்களும் அப்படியே அழைக்கப்பட்டன. நாளடைவில் அந்தப் பெயர் திரிந்து இன்றைக்கு இவை தெல்வாடா அல்லது தில்வாடா ஆலயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தெல்வாடா ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் ஐந்து கோயில்களுக்கும் தனித்தனிப் பெயர்கள். அவை:

1. விமல் வசாஹி கோவில்.
2. லுனா வசாஹி கோவில்.
3. பீத்தல்ஹார் கோவில்.
4. பார்ஷ்வநாத் கோவில்
5. மஹாவீர்ஸ்வாமி கோவில்

இவற்றுள் விமல் வசாஹி ஆலயமும், லுனாவசாஹி ஆலயமும் வெண்பளிங்கு விந்தைகள்.

சுவர்கள், கதவுகள், தூண்கள், மண்டபங்கள், உட்கூரைகள் என நீக்கமற எங்கெங்கும் ஏராளமான சிற்பங்களும், அலங்கார வேலைப்பாடுகளும் நிறைந்து பிரமிக்க வைக்கின்றன.

ஓரிடத்தில் காணப்படும் அலங்கார வேலைப்பாடு எதையும் மறுபடியும் வேறு இடத்தில் காண இயலாத அளவு ஆலயத்தை வடித்திருக்கும் அந்தச் சிற்பக் கலைஞர்களின் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

 

விமல் வசாஹி கோவில்:

குஜராத்தை ஆண்ட சோலங்கி வம்சத்து மன்னர் முதலாம் பீமதேவின் அமைச்சரும், படைத்தலைவருமான விமல்ஷா இக்கோயிலைக் கட்டினார்.
பல போர்க்களங்களில் செய்த உயிர்க்கொலைகளால் உண்டான பாவங்களைப் போக்குவதற்காக அவர் இந்தக் கோயிலை நிர்மாணித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

பதினோராம் நூற்றாண்டுக் கோயில் இது. அந்நாட்களில் இக்கோயிலைக் கட்டுவதற்கு ஆன செலவு பதினெட்டரை கோடி ரூபாய்.

குஜராத்தின் புகழ்பெற்ற அம்பாஜி ஆலயத்திற்கு அருகில் இருக்கும் அரசூரி மலையில் இருந்து இக்கோயிலுக்குத் தேவையான பளிங்குப் பாறைகளை வெட்டி யானைகள் மீது ஏற்றிக்கொண்டு வந்து இருக்கிறார்கள்.

சுமார் ஆயிரத்து ஐநூறு சிற்பிகள் மற்றும் ஆயிரத்து இருநூறு கட்டிடக் கலைஞர்கள் இணைந்து பதினான்கு ஆண்டுகள் அயராது பாடுபட்டு உருவாக்கி இருக்கும் கோவில் இது.

விமல்வசாஹி ஆலயத்தின் நுழைவாயிலுக்கு நேர்எதிரே ஓர் அற்புத மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. ஹஸ்திசாலா என்றழைக்கப்படும் யானை மண்டபம் இது. இதில் முப்பது பளிங்கு யானைகள் மூன்று வரிசைகளில் அணிவகுத்து நின்று விழிகளை விரிக்க வைக்கின்றன.

கோயிலைக் கட்டுவதற்குத் தேவையான பளிங்குப் பாறைகளை, அரசூரி மலையில் இருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அபுமலைக்கு, யானைகள் சுமந்து மலைச்சரிவுகளில் இறங்கியும், ஏறியும் கொண்டுவந்து சேர்த்ததனால், ஒரு நன்றியறிதலாக இந்த யானைச் சிற்பங்கள் கோயிலின் நுழைவாயிலுக்கு முன்பாகச் செதுக்கி வைக்கப்பட்டதாகச் செவி வழிச் செய்திகள் உலவுகின்றன. உண்மையோ, பொய்யோ- இந்த மண்டபத்தைக் கண்ணுற நேரும் உயிருள்ள யானைகளின் நெஞ்சங்களை நெகிழவைக்கும் பொருத்தமான நன்றியறிதல்!

விமல்வசாஹிக்குள் நுழையும்போதே நம் கண்களை வசீகரிக்கும் பளிங்குச் சிற்பங்களின் பேரழகும், உட்கூரைகளின் நேர்த்தியான செதுக்கு வேலைகளும், தூண்கள், வளைவுகள் ஆகியவற்றின் எழில்நிறைந்த வேலைப்பாடுகளும் நம்மைக் கனவுலகில் சஞ்சரிக்க வைக்கும்.

இக்கோயிலில் ஒரு பிரதான கருவறை. கருவறைக்கு முன்னால் ரங் மண்டபம் என்று அழைக்கப்படும் ஒரு முன்மண்டபம் மற்றும் பிராகாரம் ஆகியவை உள்ளன.

பிரதான கருவறை தவிர, பிராகாரத்தில் ஐம்பத்தேழு கருவறைகள் அமைந்து உள்ளன.

இந்த ஐம்பத்தேழு கருவறைகளில் ஒவ்வொரு கருவறையிலும் ஒரு சமண தீர்த்தங்கரரின் உருவச்சிலை காட்சியளிக்கிறது. இந்தப் பளிங்குக் கருவறைகளின் முன்புறம் அமைந்துள்ள பளிங்குக் கூரைகளிலும், பளிங்குத் தூண்களிலும், அற்புதமான பளிங்குச் சிற்பங்கள் அபார அழகுடன் மிளிர்கின்றன.

பிரதான கருவறையில் சமணர்களின் முக்கியக் கடவுளான ரிஷபதேவரின் திருவுருவச் சிலை உள்ளது. ரிஷபதேவரே, ஆதிநாதர் எனப்படும் முதல் சமண தீர்த்தங்கரர் என்று அறியப்படுகிறார்.

ரங் மண்டபம் என்பது சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த தூண்களைக் கொண்ட அற்புதமானதொரு மண்டபம். இது பிரதான கருவறைக்கு முன்னால் கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ளது.

நுட்பமான வேலைப்பாடுகள் உள்ள பளிங்கு வளைவுகளும், பளிங்குத் தோரணங்களும், குவிமாடமும் கொண்டது இம்மண்டபம்.
குவிமாடத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.

மைக்கேல் ஏஞ்ஜலோவின் கூரைச் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை.
தெல்வாடா சமணக்கோவில்களின் கூரைச்சிற்பங்கள் உலகம் அறியாதவை. அவ்வளவுதான் வேறுபாடு. இந்தக் கோயிலின் கூரைகளில் செதுக்கப்பட்டுள்ள பளிங்குப்பதுமைகள் மனிதசக்தியானது எட்டக்கூடிய உச்சத்தை எடுத்துக்காட்டுகின்றன. உட்கூரைகளில் காணப்படும் பதினோரு சுற்று வளையங்களில் யானைகள், குதிரை வீரர்கள், வாத்துகள், அன்னங்கள் மற்றும் அழகிய தொங்கணிகள் ஆகியவை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே மதியைக் கிறங்க வைக்கும் வடிவழகைக் கொண்டவை.

ரங் மண்டபத்தின் தூண்களில் இசைக்கருவிகளை இயக்கும் பெண் உருவங்களும், மேலே வித்யாதேவியின் உருவங்களும் உள்ளன.

 

லுனா வசாஹி கோவில்:

குஜராத் மன்னர் இரண்டாம் பீம்தேவின் அமைச்சர்களாய் இருந்த வஸ்துபால், தேஜ்பால் என்னும் இரு சகோதரர்களால், இக்கோயில் இருபத்திரண்டாவது தீர்த்தங்கரர் நேமிநாதரைப் பிரதான கருவறையில் விளங்கச் செய்து கட்டப்பட்டது.

இந்தக் கோவில், விமல்வசாஹியை விட அளவில் சற்றே சிறியது. எனினும், அதைவிட மிகத்துல்லியமான, நுணுக்கமான, மேன்மையான வேலைப்பாடுகளைக் கொண்டது. இங்கே உள்ள சுந்தரச் சிற்பங்களும் சொற்களைக் கடந்தவை. நம்மைச் சொக்க வைப்பவை.

விமல்வசாஹி கோவில் போலவே இதுவும், பிரதான கருவறை, ரங் மண்டபம், பிராகாரம், யானை மண்டபம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பிராகாரத்தில் ஐம்பத்திரண்டு சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கருப்புப் பளிங்கினால் உருவாக்கப்பட்ட சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் ஒன்று திகழ்கின்றது.

பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் வெண்பளிங்கு விந்தைகளான தெல்வாடா சமணக் கோவில்களின் மீது உலகின் மஞ்சள் வெளிச்சம் இதுவரை படவில்லை. அது மட்டும் நிகழ்ந்திருந்தால், இவை என்றைக்கோ உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

விமல் வசாஹியிலும், லுனா வசாஹியிலும் இடம்பெற்றிருக்கும் சிற்பங்களில் குறிப்பிடப்பட வேண்டிய சில செதுக்கல்கள்:

* காணிக்கைகளை ஏந்தியுள்ள ஆண்களும், பெண்களும்.
* பதினாறு கரங்கள் படைத்த இறைவி.
* காவல் தெய்வம் அம்பிகையின் அழகுச் சிலை.
* கருடன் மீது ஷங்கேஸ்வரி.
* மலர்ந்த தாமரையின் நடுவில் இரண்யனின் வயிற்றைக் கிழித்து வதம்       செய்யும் நரசிம்மர்.
* யானை மண்டபம்.
* விதான வட்டங்களின் வேலைப்பாடுகள்.
* ரங் மண்டபத்தூண்கள்.
* பளிங்குத் தோரணங்கள்.    

ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் பிற கோயில்கள்:

மஹாவீர் ஸ்வாமி கோவில்:

வெளிவாயிலில் நுழைந்து நேரே சென்று படிகளில் ஏறிப்போனால் முதலில் வருவது, இடப்பக்கத்தில் இருக்கும் மஹாவீர் ஸ்வாமி கோவில்.எளிமையான சிறிய கட்டிடம். 1582 இல் கட்டப்பட்டது. இருபத்துநான்காம் சமண தீர்த்தங்கரராகிய மஹாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவரது திருவுருவமும், வேறு ஒன்பது உருவச்சிலைகளும் இக்கோயிலில் உள்ளன. மேல் சுவர்களிலும், முன்மண்டபத்திலும் ஓவியங்கள் ஒளிர்கின்றன.

 

பீத்தள்ஹார் கோவில்

இது அகமதாபாத் சுல்தான் பேகடாவின் அமைச்சர் பீமாஷாவால் கட்டப்பட்டது. பஞ்சலோகத்தில் அற்புதமாக வார்க்கப்பட்ட ரிஷபதேவரின் (ஆதிநாதரின்) மிகப்பெரிய சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சலோகத்தில் பித்தளையே பெருமளவில் இருப்பதால்,  'பீத்தள்ஹார் கோவில்' என்று பெயர்பெற்றது.

 

பார்ஷ்வநாதர் கோவில்    

  • ஆலய வளாகத்தின் உள்ளே நுழைந்தவுடன் இடப்பக்கம் காணப்படும் மூன்றடுக்குக் கோவில் பார்ஷ்வநாதர் கோவில். இதைக் கட்டார்வசாஹி என்றும் அழைக்கிறார்கள்.
  • இக்கோயிலில் ஒவ்வொரு அடுக்கிலும், நான்கு புறங்களிலும் பார்ஷ்வநாதர் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் என்னும் ஆதிநாதருக்கு அருகில், நின்ற நிலையில் தியானத்தில் ஈடுபட்டவரே பார்ஷ்வநாதர்.
  • மூன்று அடுக்குகள் கொண்ட இக்கோவில், தெல்வாடாவில் உள்ள கோயில்களிலேயே மிகவும் உயரமானது.
  • கீழ்த்தளத்தில் உள்ள கருவறையின் நாற்புறங்களிலும் நான்கு பெரிய மண்டபங்கள் அமைந்துள்ளன.
  • கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் அழகான, உயிரோட்டமுள்ள சாம்பல் மணல்பாறைகளில் திக்பாலர்கள், வித்யாதேவிகள், யட்சிணிகள் ஆகியோரின் சிற்பங்கள் உணர்ச்சித்துடிப்புடன் விளங்குகின்றன.

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்                 : அபு மலை (மவுன்ட் அபு)
சுவாமியின் திருநாமம்          : ஆதிநாதர் அற்புதாதேவி
எங்கே உள்ளது?                : ராஜஸ்தானில்
எப்படிப் போவது?               :  சென்னையில் இருந்து ஜோத்பூர் செல்லும் ரயிலில் சென்று அபு ரோட் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் 26 கி.மீ. தூரத்தில் இருக்கும் அபு மலைக்குப் பேருந்து மற்றும் காரில் செல்லலாம்.                   
எங்கே தங்குவது?                :  மவுன்ட் அபுவில் வசதியான தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும்  உள்ளன.    
தரிசன நேரம்                      :  காலை 07.00 முதல் பகல் 11.00 வரை / 
                                         மாலை 04.00 முதல் மாலை 06.00 வரை

பயணம் தொடரும்... 

சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles