கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம்! - 19

Friday, December 16, 2016

சொல்லி வைத்தாற் போல், புஷ்கருக்குச் சென்றால் அங்கிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில் இருக்கும் மவுன்ட் அபுவுக்குச் செல்லாமல் ஊர் திரும்பக்கூடாது என்று சுற்றுலா அமைப்பாளர்கள் அத்தனை பேரும் வற்புறுத்துகிறார்கள். 

அதனால் புஷ்கர தரிசனம் முடிந்ததும் மவுன்ட் அபுவை நோக்கி விரைந்தோம்.  அடிவாரத்தை நெருங்கியபோதே இருட்டிவிட்டது. மலைப் பாதை பயணத்தில் காருக்குள் புகுந்த குளிர் காற்றில் மூலிகை மணம். குளிருக்குப் பயந்து கண்ணாடிகளை ஏற்றினால் மூலிகை மணத்தை அனுபவிக்கமுடியாது. உடலைக் குறுக்கி வைத்துக்கொண்டு மூலிகை வாசத்தை அனுபவித்தபடி பயணம் செய்தோம். இன்ப அவஸ்தை! 

மவுன்ட் அபுவில் சற்று ஓரமாக ஒதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலச் சுற்றுலாத்துறை விடுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. எளிமையான, அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட அறைகள். மிருதுவான சப்பாத்தி, தால், காய் ஆகியவற்றைத் திருப்தியாகச் சாப்பிட்ட பின் சூடான தேனீருடன் சிட் அவுட்டில் அமர்ந்து இரவை ரசித்தோம். வண்டுகளின் ரீங்காரம், பூக்களின் மணம், விலங்குகளின் கர்ஜனைகள், உரசிக்கொண்ட மூங்கில்களின் முனகல்கள் என்று அபு மலை இரவு, தான் ஒளித்து வைத்திருந்த ரகசியங்களை வாரி வழங்கியது. 

மறுநாள் விடியற்காலையில், இருள் பிரியும் முன்னரே எழுந்து விட்டோம். வெயில் ஏறுவதற்குள் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் வசிஷ்டர் ஆலயத்துக்குச் சென்று வருவது என்று திட்டம். வெந்நீரில் குளியலை முடித்துவிட்டு,  தேனீர் பருகினோம். வசிஷ்டர் ஆலயத்துக்குச் செல்லும் பள்ளத்தாக்கு துவங்கும் இடத்தை நோக்கி நடந்தோம். ஆலயத்துக்கு வாகனங்களில் செல்லமுடியாது. காட்டினூடே  கீழிறங்கும் பாறைப் பாதை வழியாக நடந்து தான் செல்ல வேண்டும். வசிஷ்டர் ஆலயத்தை தரிசிப்பதற்கு முன்பாக மவுன்ட் அபு பற்றி ஓர் அறிமுகம். 

மானத்தை உயிராய் மதித்த ராஜபுத்திர மறவர்களும், மன்னர்களும் வாழ்ந்த மகோன்னத ஜீவபூமி ராஜஸ்தான். பொன்னிற மணற்பரப்பு பரவிக்கிடக்கும் ராஜஸ்தானில், பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலை என விளங்கும் மவுன்ட் அபு மாநிலத்தின் ஒரே மலைவாழிடம்.

ரிஷிகளும், முனிவர் பெருமக்களும் இங்கு தவம் செய்திருக்கிறார்கள் எனவும், வசிஷ்ட மகரிஷி தனது மனைவி அருந்ததி மற்றும் தனது காமதேனுப் பசுவுடன் இங்கு தங்கியிருந்து தவம்புரிந்து வேள்விகள் இயற்றியிருக்கிறார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

ஆறுகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள் போன்றவை நிறைந்து எப்போதும் பசுமையாகக் காட்சி தரும் மவுன்ட் அபு  குறித்து பல புராணக் கதைகளும் உள்ளன. ஒருமுறை, 'அற்புதா' என்ற பெயர் கொண்ட நாகம் ஒன்று, சிவபெருமானின் வாகனமான நந்திதேவரின் உயிரைக் காப்பாற்றியது. ஆகவே, இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடமான இந்த மலை, அற்புதா காடுகள் என்ற பொருளில், 'அற்புதாரண்யம்' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பெயர் திரிந்து, 'அபு பர்வதம்' என்றும், பின்னர் மவுன்ட் அபு என்றும் மாறிப்போனது என்று ஒரு கதை சொல்லப்படுகிறது. 
 
வசிஷ்ட மகரிஷி, உலகில் தர்மத்தைக் காக்கும் பொருட்டு இங்கு ஒரு பெரிய யாகத்தைச் செய்ததாகவும், அந்த வேள்வித் தீயிலிருந்து இளம் மாவீரன் ஒருவன் உதித்ததாகவும், அவன்தான் வீரசாகசங்களுக்குப் பெயர் பெற்ற ராஜபுத்திர வம்சத்தின் முதல் வீரன் என்றும் இன்னொரு கதை வழக்கில் உள்ளது. 

மேவார் மன்னர் ராணா கும்பாவினால் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அசல்கர் கோட்டை, அதன் நடுவே உள்ள நக்கி ஏரி, அருகே குன்றின் மீதுள்ள தவளைப் பாறை போன்றவை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பிக் காணும் இடங்களாகும். அசலேஷ்வர் மஹாதேவ் ஆலயம் என்ற புகழ் பெற்ற சிவன் கோயிலும் அருகில் உள்ளது.   

தவிர,  வசிஷ்டர் ஆசிரமம், கௌதமர் ஆசிரமம், வியாசதீர்த்தம், பெண்களின் மலட்டுத்தன்மையைப் போக்கும் நாகதீர்த்தம் ஆகிய புனிதத் தலங்களும் உள்ளன. 

அபு மலை உலகலவில் புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்குக் காரணம் இங்குள்ள அற்புதமான தில்வாரா அல்லது தெஹல்வாடா ஜைன ஆலயங்களே எனலாம். 

இந்த மலையில் அற்புதா தேவி, ஸ்ரீ ரகுநாத்ஜி, தத்தாத்ரேயர், துர்கை போன்ற பல ஹிந்துக் கடவுளருக்கும் கோயில்கள் உள்ளன.

சுற்றுலாத்தலம், சமய முக்கியத்துவம் வாய்ந்த புனிதத்தலம் என இரண்டு வகையிலும் சிறந்து விளங்குகிறது மவுன்ட் அபு. 

பட்ஜெட்டிற்கு ஏற்ற மாதிரி நிறைய தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ள மவுன்ட் அபுவைச் சென்றடைவது எப்படி?

அருகிலுள்ள ரயில் நிலையமான அபு ரோடு, இந்த மலைவாசஸ்தலத்திலிருந்து சுமார் இருபத்தேழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இருநூற்று ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உதய்பூரில் விமான நிலையமும் உள்ளது. பேருந்து, கார் போன்றவை மூலம் அபு மலையை எளிதில் அடையலாம்.

'போர், போர்' என்று நீங்கள் சலித்துக் கொள்வது எங்களுக்குப் புரிகிறது. வசிஷ்டர் ஆலயத்தை தரிசிப்போம் வாருங்கள். 

அனைவருக்கும் அருள் புரியும் அபுமலை வசிஷ்டர் ஆலயம்!

ஒரு காலத்தில் வசிஷ்டர் ஆலயம் இருந்த பிரதேசமும் பாலைவனமாகத்தான் இருந்தது. இங்கு அரங்கேறிய ஓர் அற்புத வரலாறு காரணமாக இது புவி போற்றும் புனிதத்தலமாக மாறியுள்ளது. 

கௌதமமுனிவர் தனது தர்மபத்தினி அகல்யாவுடன் இங்கு ஆசிரமம் அமைத்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். உதங்கர் அவருக்குச் சீடராக வந்து சேர்ந்தார். 

கௌதமர் அவருக்கு அனைத்தையும் போதித்தார். குருகுலவாசம் முடிந்தவுடன் உதங்கர் குருதக்ஷிணை தர விரும்பினார். குருபத்தினியான அகல்யா அவரிடம் சௌத வம்சத்து அரசிகள் வழிவழியாக அணிந்து வரும் காதணிகளைக் கொண்டுவந்து தருமாறு கேட்டாள். 

சௌத வம்சத்தவர்கள் அரசாண்டு கொண்டிருந்த அயோத்தியை உதங்கர் அடைந்தார். மகாராணி மதயந்தி உதங்கரை வரவேற்றாள். உதங்கர் தானமாகக் கேட்ட காதணிகளைத் தயங்காமல் கழற்றி அவரிடம் ஈந்தாள்.  

திரும்பும் வழியில் உதங்கர் சந்தியா கால தியானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் காதணிகளை மான் தோல் ஒன்றில் வைத்துவிட்டு தியானத்தைத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் தக்ஷகன் என்னும் நாகன் ஒருவன் அங்கு வந்து காதணிகளைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் மறைந்தான். 

தியானம் முடித்த உதங்கர் காதணிகள் களவு போனதைக் கண்டார். ஞான திருஷ்டியில் அவை தக்ஷகனால் அருகில் இருந்த ஒரு பிளவு வழியாகப் பாதாளலோகத்துக்குக் கொண்டு சென்று பதுக்கப்பட்டுள்ளதையும் உணர்ந்தார். 

அச்சமயம் தேவேந்திரன் அங்கு வந்தான். உதங்கரிடம் உரையாடி விவரம் அறிந்து, வஜ்ராயுதத்தால் பிளவினைத் தாக்கினான். அது சுரங்கக் குகையாய் விரிந்தது. உதங்கர் அக்னியின் துணையுடன் அதனுள் நுழைந்தார். பாதாளலோகம் சென்று தக்ஷகனிடமிருந்து காதணிகளை மீட்டு வந்தார்.

மகரிஷி வசிஷ்டரின் பசு நந்தினி ஒரு சமயம் மேய்ச்சலுக்கு வந்தபோது திறந்து கிடந்த சுரங்கப்பாதையில் தவறி விழுந்தது. 

வசிஷ்டர் பசு பாதாளத்தில் விழுந்திருப்பதை அறிந்தார். அந்தச் சுரங்கப்பாதையை நீரால் நிறைக்குமாறு சரஸ்வதி நதியிடம் வேண்டினார். 

சரஸ்வதியும் சுரங்கப்பாதையை நீரால் நிரப்பினாள். நீரில் நீந்தி நந்தினி வெளிப்பட்டது. 

இனி எவரும் சுரங்கத்தில் விழாமல் இருக்க அதனை மூடிவிடலாம் என்று தீர்மானித்த வசிஷ்டர் இமயமலையிடம் சென்றார். சுரங்கப்பாதையை மூடி மக்களைக் காக்கும் பொருட்டு இமயத்தின் மைந்தனான நந்திவர்ஷனை அனுப்புமாறு வேண்டினார். 

நந்திவர்ஷனின் இறக்கைகள் வஜ்ராயுதத்தால் வெட்டப்பட்டிருந்தமையால் அவனால் பறக்க இயலாது என்று இமயன் இயம்பவே, வசிஷ்டர் 'இறக்கை வெட்டுப்படாத அற்புதன் உனது மைந்தனின் நண்பன். அவன் நந்திவர்ஷனைச் சுமந்து வரட்டும்' என்று ஆலோசனை கூறினார்.

நந்திவர்ஷனைப் பாலைவனத்துப் பள்ளத்தில் கொண்டு வைத்த பின் அந்தப் பிரதேசம் தனது பெயரால் அறியப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அற்புதன் ஒத்துக்கொண்டான்.

நந்திவர்ஷனோ, 'வசிஷ்டரே, அந்தப் பிரதேசம் வறண்டதொரு பாலைவனம். புண்ணியத்தலமோ, புனிதத் தீர்த்தமோ கிடையாது. அங்கு என்னை வந்து இருக்கச் சொல்கிறீர்களே' என்று ஆதங்கத்துடன் வினவினான்.

'நந்திவர்ஷனே! பரமேஸ்வரனையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர் பெருமக்களையும், மரம் செடி கொடிகள் அடர்ந்த வளமான வனத்தையும், கனி மலர் வகைகளையும் அங்கே உனக்குத் துணையாகத் தோன்றச் செய்கிறேன்' என்று வசிஷ்டர் அவனுக்கு வாக்களித்தார். 

நந்திவர்ஷன் அற்புதனால் சுமந்து வரப்பட்டான். பள்ளத்தில் நிறுத்தப்பட்டான். பிரதேசம் அற்புதமலை என்று அறியப்படலானது. நாளடைவில் அபுமலை என்றானது.

வசிஷ்டர், எண்பத்து எண்ணாயிரம் முனிவர் பெருமக்களுடன் அங்கு ஆசிரமம் அமைத்து யாகம் வளர்த்தார். வேத மந்திர முழக்கங்கள் பிரதேசத்தை நிறைத்தன. வளமிக்க வனங்கள் தோன்றின. சரஸ்வதி ஜீவநதியாய் பாயத்தொடங்கினாள். ஈஸ்வரனும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எழுந்தருளினார். அவரது சாந்நித்யம் நிறைந்த அந்த இடம் புனிதத்தலமாகப் போற்றப்படத் தொடங்கியது.  

மவுன்ட் அபு பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அடர்த்தியான, பசுமையான காட்டின் பள்ளத்தாக்கில் வசிஷ்டரின் ஆசிரமமும், ஆலயமும் அமைந்துள்ளன. 

அந்தப் புனிதத்தலத்தை அடைய அடர்ந்த காட்டில், அற்புதமலைப் பள்ளத்தாக்கில் 750 படிகள் கீழிறங்கவேண்டும். அரக்கர்களின் முக வடிவில் அமைந்த குகைகளையும் பாறைகளையும் வழி நெடுகிலும் காணமுடிகிறது. 

ஆசிரமத்தின் உள்ளே கோமுக தீர்த்தம் உள்ளது. பசுமுக வாயிலிருந்து சரஸ்வதி நதி இடையறாது வீழ்ந்து முன்னால் இருக்கும் ஒரு குளத்தில் சேர்ந்து வடிந்து அந்த வனத்தையே வளமாக்கிக் கொண்டிருக்கிறாள். 

ஆசிரமத்தில் எழுப்பப்பட்டுள்ள ஆலயத்தின் கருவறையில் வசிஷ்டர், அருந்ததியுடன் எழுந்தருளியுள்ளார். அபுமலைப் பிரதேசத்தைப் புனிதப்படுத்திய அந்த மகானை தரிசிக்கும்போது நெஞ்சில் ஆனந்தம் மிகுகிறது. 

குலகுருவான வசிஷ்டருக்கு அருகே இராமரும், லக்ஷ்மணரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள். 

கருவறைக்கு வெளியே இடது புறம் காமதேனுவின் மகளான நந்தினிக்கு ஒரு சந்நிதி. முன் மண்டபச் சுவரில் மாடத்தில் ஆஞ்சநேயர்.

கருவறைக்கு நேர் எதிரே, வெளியே தேவேந்திரன் எழுந்தருளியிருக்கிறான். அருகில் அக்னிகுண்டம். 

திறந்த வெளிப் பிராகாரத்தில் வலது புறம் பாதாளேஸ்வர மகாதேவர் ஆலயம் உள்ளது. பிராகாரத்தில் சுற்றிலும் தேவர்கள் வணங்கிய நிலையில் எழுந்தருளியிருக்கிறார்கள். 

இந்தத் தலத்தின் புனிதத்தன்மை கெடாமல் இருக்க, இன்றும் இங்கு யாகங்கள் வளர்க்கப்படுகின்றன. 

அபுமலை வசிஷ்டரை வணங்கி அவரருளைப் பெறுவோம். 

 

திருத்தலக் குறிப்புகள்
        
தலத்தின் பெயர்           : மவுன்ட் அபு
சுவாமியின் திருநாமம்     : வசிஷ்டர்
எங்கே உள்ளது?           : ராஜஸ்தானில்
எப்படிப் போவது?        : சென்னையில் இருந்து ஜோத்பூர் செல்லும் ரயிலில் சென்று அபு ரோட் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் 26 கி.மீ. தூரத்தில் இருக்கும் அபு மலைக்கு பேருந்து மற்றும் காரில் செல்லலாம்.                       
எங்கே தங்குவது?           :  மவுன்ட் அபுவில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.                 
தரிசன நேரம்               :  காலை 6.00 முதல் மாலை 6.00 வரை   

வசிஷ்டர் ஆலய தரிசனம் முடிந்து மீண்டும் மலைப்பாதையில் ஏறியபோது ஒரு நட்டுவாக்கலியைப் பார்த்தோம். பெரியதொரு கருந்தேளை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்த அதைப் பார்த்தபோது உடல் நடுங்கியது. அது கொட்டினால் ஆள் காலியாம். ஆனால் அது பாட்டுக்கு சாதுவாய் ஒரு படியில் அன்ன நடை போட்டுச் சென்று கொண்டிருந்தது. 

அந்த ஆபத்தான அழகை ரசித்தபடி படியேறிய எங்களின் கால்களில் எப்படியோ அட்டைப்பூச்சி ஏறி, ஜம்மென்று அமர்ந்து எங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்ததை நாங்கள் அறியவே இல்லை. விடுதிக்கு வந்து கால்களைக் கழுவ பேன்டை உயர்த்தியபோது தான் கம்பளிப் பூச்சி அளவில் இருந்த அட்டையைக் கண்டோம். அது அட்டை என்று விடுதிக் காப்பாளர் கூறினார். 'அது ஜாலியாக உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது' என்று அவர் விளையாட்டாகச் சொன்னபின் எங்களைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.  தலை சுற்றியது. மயக்கம் வரும் போல் இருந்தது. 

கால்களை  உதறினோம். அட்டை விழவில்லை. பிய்த்து எறியப் பார்த்தோம். ம்ஹூம். வருவேனா என்றது அது!

விடுதிக் காப்பாளர் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு வந்து, அதன் சுடர் அட்டையின் மேல் படுகிற மாதிரி காண்பித்தார். அவ்வளவுதான். அடுத்த கணம் அது எங்கள் உடலில் இருந்து உதிர்ந்தது.

"இதை இப்படித்தான் அகற்ற முடியும். வாருங்கள். பயப்படாதீர்கள். அது உங்கள் உடலில் உள்ள கெட்ட ரத்தத்தைத்தான் உறிஞ்சும். ஒன்றும் ஆகாது. வாருங்கள் சாப்பிடலாம்.." என்று எங்களை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றார். 

சாப்பிட்ட பின் மனதில் தெம்பு வந்து விட்டது. அதன் காரணமாக உடலிலும். 
எனவே அற்புதா தேவி ஆலயத்தை நோக்கிச் சென்றோம். அற்புதா தேவியை தரிசிப்போம் வாருங்கள்!

 

அல்லல் களையும் அபுமலை அற்புதாதேவி

மலைமகள், மலைக்குகை ஒன்றில் அற்புதாதேவி என்னும் அரிய பெயருடன் 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோயில் கொண்டிருக்கிறாள். அன்னை அற்புதமலையைத் தன் இருப்பிடமாக ஏற்றுக் கொண்டது எங்ஙனம்?

பாஷ்காலீ என்னும் அரசன் ஒருவன் சிவ பக்தன். தவம்புரிந்து சிவனிடமிருந்து மூப்பும், மரணமும் தனக்குக் கூடாது என்ற வரங்களைக் கேட்டுப் பெற்றான். 

ஆணவம் மிகுந்து அமரரின் சொர்க்கலோகத்தை ஆக்கிரமித்தான். அல்லலுற்ற அமரர்களும் தங்களது இருப்பிடத்தை விட்டு விலகி, அவனியின் அற்புதமலையை அடைந்தனர். 

அங்கு மலைக்குகைகளில் நோன்பு நோற்று மலைமகளை ஆராதித்தனர். அன்னை பிரத்யட்சமானாள். யாது வரம் வேண்டுமெனக் கேட்டாள். 

இந்திரனும், இதர தேவர்களும் பாஷ்காலீயை வதம் செய்து, சொர்க்கலோகத்தை மீட்டுத்தருமாறு அன்னையிடம் யாசித்தனர்.

அன்னையோ சிவனிடம் சிரஞ்சீவி வரத்தைப் பெற்ற பாஷ்கலீயை வதம் செய்வது இயலாத காரியம் என்று கூறினாள். ஆயினும் அவனை சொர்க்கலோகத்திலிருந்து அகற்றுவதாக வாக்களித்தாள். 

தூதுவரை அனுப்பி சொர்க்கலோகத்தைக் காலிசெய்து தருமாறு பாஷ்கலீயிடம் பரிந்துரைக்கச் சொன்னாள். 

பாஷ்கலீயோ, மரணத்தை வென்ற இறுமாப்பில் படையைத் திரட்டிக்கொண்டு அன்னையோடு போர் புரிய அற்புத மலையை அடைந்தான். 

தன்னெதிரே வந்து நின்ற பாஷ்கலீயையும் அவனது படையையும் கண்டு அன்னை கலகலவெனச் சிரித்தாள். 

அந்த நகைப்பு நலியுமுன் அவளது முகமலரில் இருந்து அளவிலா வீரர்கள் அவதரித்தார்கள். பாஷ்கலீயின் படைவீரர்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் வதம் செய்தார்கள். சிரஞ்சீவியான பாஷ்கலீயை மட்டும் அவர்களால் வதம் செய்ய இயலவில்லை. 

படை அழிக்கப்பட்டது கண்டு பாஷ்கலீ திகைத்தாலும், அன்னையால் கூடத் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற காரணத்தால் தேவியுடன் போர் புரிய நெருங்கினான். 

பயணம் தொடரும்...

- சுபா (காஷ்யபன்)

மேலும் படிக்க 
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 18
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 17
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 16

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles