கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் -18

Thursday, December 1, 2016

புஷ்கரப் பொய்கையிலிருந்து ஐம்பதடி தூரத்தில் பிரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ரத்தினச் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும் செந்தூர கோபுரம் ஆலயத்தைத் தனித்துக் காட்டுகிறது. நுழைவாயிலில் நான்முகனின் வாகனமான அன்னபட்சி! 

முழுவதும் வெண்சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்ட ஆலயத்தின் சலவைக்கல் படிகளில் ஏறினால் அது திறந்தவெளி முற்றம் ஒன்றினைச் சென்றடைகிறது. 

முற்றத்தில் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே இடது பக்கம் மழைக்கடவுளான இந்திரன் காட்சி தருகிறான். வலது பக்கம் தனக்கடவுளான குபேரன் தனது கணங்களுடன் யானை மீது ஆரோகணித்திருக்கிறான்.  

யக்ஷர்களின் தலைவனும் நவமகா நிதிகளின் அரசனுமான இந்தக் குபேரனும் அவனது கணங்களும்தாம் ஆலயத்தை அரணாகக் காக்கிறார்கள்.

மூலவர் சந்நிதிக்கு முன்பாக ஒரு தூணில் அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அசுவத்தின் சிற்பம்.

மகா மேருவையும், மண்ணுலகையும் தன் முதுகில் தாங்கக் கூர்மாவதாரம் எடுத்த மகா விஷ்ணு, கருவறைக்கு முன்னால் தரையில் வெள்ளி ஆமை வடிவில் எழுந்தருளியிருக்கிறார்.  

சுவர்களில் பிரமனின் துணைவி சரஸ்வதியின் வாகனமான மயில் வரையப் பட்டுள்ளது.

செந்தூரம் பூசப்பட்ட கருவறையில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த பிரம்மா. அமர்ந்த நிலையில் தரிசனம் தரும் படைப்புக் கடவுளின் கரங்களில் நான்கு வேதங்களும் தவழுகின்றன. 

அனைவருக்கும் முன் தோன்றிய பிரஜாபதியான பிரம்மன் அமரும் கமல மலர் ஆன்மிகத்தையும், வாகனமான அன்னம் பகுத்தறிவையும், நான்கு முகங்கள் நான்கு வேதங்களையும், திருமுக மண்டலத்தில் காணப்படும் வெண்பஞ்சு ஜடாமுடி ஞானத்தையும் குறிக்கின்றன.

உலகைப் படைத்து, அதில் வாழும் ஒவ்வொரு உயிரின் விதியையும் நிர்ணயித்து பல்லாயிரம் ஆண்டுகளாகப் பிரபஞ்சத்தை ஆண்டுவரும் பிரம்மனின் முன் நின்று கரம் கூப்புகையில் நன்றி உணர்வால் நம் சிரம் தாழ்கிறது.  

அயனுக்கு அருகில் அன்னை காயத்திரி தேவி. 

பிராகார வலம் வருகையில் சுவர்களில் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருக்கும் வெள்ளிக் காசுகள் ஆலயத்தின் அழகை மெருகூட்டுகின்றன.

வெளிப்பிராகாரத்தில், கருவறைக்குப் பின்னால் ஒரு சுரங்கச் சிவாலயத்தில் சிவலிங்க தரிசனம். 

தொன்றுதொட்டுப் பல ஞானிகளையும் முனிவர்களையும் தவசீலர்களையும் புனிதப்படுத்திய புஷ்கரப் பொய்கை நீரும், புனித பிரம்மனின் தரிசனமும் நம்மையும் கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையை 'புஷ்கரில் ஒரு நாள் தங்கினாலே முக்தி' என்னும் ஞானிகளின் கூற்றும் உறுதிப்படுத்துகிறது.   

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்            : புஷ்கரம்

சுவாமியின் திருநாமம்         : பிரம்மா

அன்னையின் திருநாமம்    : காயத்ரிதேவி

எங்கே உள்ளது?                 : ராஜஸ்தானில்

எப்படிப் போவது?               :  சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு 
                                                    ரயிலில் சென்று, அங்கிருந்து புதுதில்லி 
                                                    செல்லும் ரயிலில் சென்றால் அஜ்மீரில் 
                                                   இறங்கிக் கொள்ளலாம். அஜ்மீரிலிருந்து 13 
                                                   கி.மீ. தொலைவில் இருக்கும் புஷ்கருக்கு 
                                                   காரிலோ, பேருந்திலோ, ஆட்டோவிலோ           
                                                   செல்லலாம். அருகில் உள்ள விமான நிலையம்    
                                                   130 கிமீ தொலைவில் உள்ள ஜெய்ப்பூர் 
                                                   சங்கானேர் விமான நிலையம். சாலை வழியாக  அஜ்மீர், ஜெய்ப்பூர்,  ஜோத்பூர் நகரங்களிலிருந்து   புஷ்கரை அடையலாம் .

எங்கே தங்குவது?                  : புஷ்கரில் ராஜஸ்தான் சுற்றுலாத் துறையினரின் தங்கும் விடுதி உள்ளது. தவிர ஏராளமான தனியார் விடுதிகளும்,

                                                       உணவு விடுதிகளும் உள்ளன. இவை தவிர குறைந்த வாடகை விடுதிகளும், சத்திரங்களும் உள்ளன.        

தரிசன நேரம்                 :  காலை 6.00 முதல் பகல் 12.30 வரை  /                                                    

                                               மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை 
                                               புஷ்கர் ஏரியில் சூரியோதயம் முதல், சூரிய 
                                               அஸ்தமனம் வரை மட்டுமே நீராட இயலும். 

புஷ்கர் ஆலய தரிசனம் நிறைவடைந்தது அல்லவா? அந்த ஆலயத்துக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் நடந்த ஒரு கூத்தை இப்போது சொன்னால் தப்பில்லை என்று நினைக்கிறோம். புஷ்கர் ஆலயத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது காலை எட்டு மணி. எங்களுடன் வந்த புகைப்பட நண்பர் பொன்.காசிராஜன் காமிராவோடு உள்ளே வந்துவிட்டார். தமிழ்நாட்டில் எந்தக் கோவிலுக்குப் போனாலும், பத்திரிகை அடையாள அட்டையைக் காண்பித்து புகைப்படம் எடுக்க அனுமதி வாங்கிவிடுவோம். 

இது ராஜஸ்தான். காமிராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டால் என்ன ஆவது என்ற பயம் காசிக்கு. புஷ்கர் ஆலயத்தில் இருந்த கோவில் அலுவலகத்தைத் தேடிச் சென்று அங்கிருந்தவரிடம் அடையாள அட்டையைக் காண்பித்து, புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டோம்.

"லெட்டர் எழுதிக் கொடுங்க.." என்றார். 

ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தோம். அதை வாங்கி மேஜை மேல் வைத்தார். "வெயிட் பண்ணுங்க... " என்றார். பெஞ்சில் அமர்ந்தோம். ரொம்ப பிஸியான ஆசாமி போலும். அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவரை யார் யாரோ வந்து பார்த்தார்கள். ராஜஸ்தானி மொழியில் கேள்விகள் கேட்டார்கள். அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். டீ வந்தது. எங்களுக்கும் கொடுக்கச் சொன்னார்.

டீ குடிக்கும் நேரத்தில் கடிதத்தைப் படித்துவிட்டு எங்களை அருகில் அழைத்தார். போனோம். கடிதத்தைத் திருப்பிக் கொடுத்தார். 

"கோவிலை போட்டோ எடுக்க உங்களை அனுமதிக்கறதுக்கு எனக்கு அதிகாரம் இல்ல. இங்கேர்ந்து சற்று தூரத்தில மெயின் ஆபீஸ் இருக்கு. அங்க போய் பர்மிஷன் கேளுங்க.. தருவாங்க.." என்றார். இதை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அவர் சொல்லியிருக்கக்கூடாதா? 

மெயின் ஆபீஸுக்குப் போனோம். உட்கார வைத்தார்கள், டீ கொடுத்தார்கள். அனுமதி கொடுக்க வேண்டிய அதிகாரி எங்கோ வெளியில் போயிருப்பதால் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்தோம். எங்களைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் மிருகக்காட்சி சாலை விலங்குகளைப் பார்ப்பது போலவே பார்த்துக்கொண்டு சென்றார்கள். 

இன்னும் அரை மணி நேரம் கழித்து அந்த அதிகாரி வந்து எங்கள் கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு, "யெஸ்.." என்று தலையாட்டி கம்ப்யூட்டரில் கடிதம் டைப் அடிக்கச் சொன்னார். ஒரு பெண் யோசித்து யோசித்து டைப் அடிக்க ஆரம்பித்தது. அதிகாரி நூறு ரூபாய் பீஸ் கட்டச் சொன்னார். கட்டினோம். ரசீது கொடுத்தார். அந்தப் பெண் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள். கையெழுத்துப் போட்டு எங்களிடம் நீட்டினார். ஓட்டை இங்கிலீஷ்! அனுமதி கிடைத்த சந்தோஷத்தில் ராஜஸ்தானி இங்கிலீஷெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. 

சந்நிதி மூடிவிடப் போகிறார்களே என்று பயத்துடன் அவசரம் அவசரமாக  கோயிலுக்கு ஓடினோம். கோவில் அதிகாரியிடம் கடிதத்தைக் காட்டினோம். பார்த்தார். தலையை அசைத்தார். "கோயில் 12.30 வரை திறந்திருக்கும். அந்த நேரத்தில் பிரதான சந்நிதி மூடப்படும். 'ஆப் ஆராம் ஸே ஜித்னே சாஹோ உத்னே பிக்சர் கீஞ்ச் லோ..' என்றார். அதாவது 'நீங்கள் நின்று நிதானமாக எவ்வளவு படம் வேண்டுமோ, அவ்வளவு படம் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று அந்த வாக்கியத்துக்கு அர்த்தம்.  

காசி பெருமிதத்துடன் உபகரணங்களை வெளியே எடுத்தார். ஒரு தூணை போகஸ் செய்யலாம் என்று பார்த்தால், அங்கே ஒரு காதல் ஜோடி போஸ் கொடுத்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது. 

இன்னொரு கோணத்தில் இருந்து எடுக்கலாம் என்று கோயில் பிராகாரத்தில் மெல்ல நடந்தோம். பார்த்தால் பிராகாரம் முழுக்க, ஆங்காங்கே மக்கள் செல்போன்களிலும், டிஜிட்டல் காமிராக்களிலும், விடியோ காமிராக்களிலும் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

காசி பொறுக்கமாட்டாமல் ஓர் ஆளிடம் சென்று, ’புகைப்படம் எடுக்க அனுமதி வாங்கி விட்டீர்களா’ என்று கேட்டார். 

"என்ன அனுமதி? எதற்கு அனுமதி?" என்று அவர் திருப்பிக் கேட்டார். 

கோவில் அதிகாரியிடம், (அவர் இப்போதும் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். மறுக்க மறுக்க எங்களுக்கும் ஆர்டர் செய்தார்.) "என்ன சார். இவ்ளோ பேர் பர்மிஷன் இல்லாமலேயே போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்னடாவென்றால் எங்களை இவ்வளவு அலைய விட்டீர்களே.." என்று காசி பொருமினார். 

"பிரதர். நீங்கள்தான் வந்து என்னிடம் பர்மிஷன் கேட்டீர்கள். அதனால் இங்கே இருக்கும் நியதியைச் சொன்னேன். அவர்கள் அனுமதி கேட்டு வந்திருந்தால் அவர்களுக்கும் இதே நியதிதான்.. கேட்காதவர்களுக்கு நியதி எதுவும் கிடையாது. கேட்பவர்களுக்கு நியதி உண்டு. அதுதான் இங்கே நியதி" என்றார் புன்னகையுடன். 

காசியின் முகத்தில் ஈயாடவில்லை. எங்கள் முகத்திலும்தான்... 

பிரம்மா கோயிலை ஒரு வழியாக புகைப்படங்களில் வாரி எடுத்துக் கொண்டு மீண்டும் ஏரிக்கரைக்கு வந்தோம். அருகில் இருந்த போஜனாலயாவில் ரொட்டி, சப்ஜி, தால், தயிர் சாதம் சாப்பிட்டோம். 

புஷ்கரில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள். ஏறக்குறைய வீட்டுக்கு ஒரு கோயில் என்றே சொல்லலாம். புஷ்கருக்குத் தீர்த்த யாத்திரையாக வருபவர்கள் நான்முகன் ஆலயத்தைத் தவிர இன்னும் நான்கு ஆலயங்களுக்கு முக்கியமாகச் சென்று தரிசிப்பது வழக்கம். சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் அந்த ஆலயங்களுக்குப் புறப்பட்டோம். 

 

வராஹர் ஆலயம்

இந்த ஆலயம் பிரம்மா ஆலயத்திற்கு இணையாகப் புராதனமானது. இங்கு மஹாவிஷ்ணு தமது அவதாரங்களில் ஒன்றான பன்றி வடிவில் காட்சியளிக்கிறார். 

அரக்கன் ஹிரண்யாட்சன் பூமித்தாயை கவர்ந்து சென்றுவிட அச்யுதன் காட்டுப்பன்றி வடிவில் அவனுடன் பொருதி உலகைக் காத்த கோலம் இது.

 

சாவித்திரி தேவி ஆலயம்

பிரம்மன் துணைவியான சாவித்திரி தேவி பதியுடன் ஊடல் கொண்டு, அதனால் அவள் குடி போன ஆலயம் அருகில் உள்ள ரத்னகிரி என்ற குன்றின் உச்சியில் உள்ளது. படிக்கட்டுகள் பல ஏறி ஆலயத்தில் சாவித்திரி தேவியை தரிசிப்பதோடு இங்கிருந்து புஷ்கர் நகரையும், பொய்கையும், மணல் பரப்பையும் கண்டு களிக்கலாம்.

அப்டேஷ்வர் மகாதேவ் ஆலயம்

புஷ்கரில் பக்தர்கள் தவறாமல் தரிசிக்கும் ஆலயம் சிவபெருமானுக்காக அமைந்துள்ள அப்டேஷ்வர் மகாதேவ் ஆலயம். மிக அழகான இந்த ஆலயத்தில் ஐந்து முகங்களுடன் சலவைக்கல் வடிவமாக மகாதேவர் காட்சியளிக்கிறார். ஆலய அமைப்பிற்கும், ஆபரணங்களுக்கும் இந்த ஆலயம் புகழ் பெற்றது.

 

ரங்கஜி ஆலயம்

புஷ்கரில் உள்ள மற்றொரு புகழ் பெற்ற ஆலயம் தென் இந்தியப் பாணியில் ராஜகோபுரம் மற்றும் விமானம் அமைந்த ரங்கஜி ஆலயம். இந்த ஆலயத்தை வைகுந்த நாதர் ஆலயம் என்றும் கூறுகின்றனர். முக்தி அளிக்கும் இந்த முகுந்தனுக்கு தென் இந்திய முறையில் வழிபாடும் நடக்கிறது.

 

புஷ்கர் சந்தை

புஷ்கர் நகர் வியாபாரத்திற்கும் வழிகாட்டுகிறது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் புஷ்கர் சந்தை உலகப்புகழ் பெற்றது. வெளிநாட்டிலிருந்து இலட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளை இது கவர்ந்து இழுக்கிறது. 

ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள் முதல் வண்ணமயமான ஆடை ஆபரணங்கள், கைவினை மற்றும் அலங்காரப் பொருட்கள் வரை இங்கு கோடிக்கணக்கில் விற்பனை ஆகின்றன. 

மேலும் ஆடல் பாடல் கொண்டாட்டம், விளையாட்டுகள், கால்நடைகளின் ஓட்டப்பந்தயங்கள் என சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக இருக்கிறது இந்த புஷ்கர் சந்தை. 

வாழ்க்கையில் ஒரு முறையாவது புஷ்கர் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது, அங்கே பத்துப் பதினைந்து நாட்கள் தங்கி இருந்து ஆற அமர ஊரின் அழகை ரசிக்க வேண்டும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று அந்தந்த ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களை வணங்கவேண்டும். ஒரு முறை புஷ்கர் சென்று வந்தால், அது இந்தப் பிறவி முழுவதும் மறக்கமுடியாத நினைவலைகளை நெஞ்சில் நிரந்தரமாக்கும். 

புஷ்கரை அடுத்து நாம் செல்ல இருப்பது அபு மலை. அற்புதமான அபுமலையில் என்னென்ன பொக்கிஷங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள... ப்ளீஸ்.. சற்றே பொறுங்கள்..! 

பயணம் தொடரும்... 

- சுபா (காஷ்யபன்)

மேலும் படிக்க 
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 17
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 16
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 15

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles