கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 12

Wednesday, August 31, 2016

போதனாவின் பரிதவிப்பையும் திகிலையும் கண்ட கிருஷ்ணர், அவரிடம்  அச்சப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளித்தார். தன்னை கோமதி குளத்தில் ஒளித்து வைக்குமாறு கூறினார்.போதனா கிருஷ்ண விக்கிரகத்தைக் குளத்தில் ஒளித்து வைத்தார். பின், தயிர் ததும்பும் ஒரு பானையைக் கையில் ஏந்திச்சென்று அர்ச்சகர்களைச் எதிர்கொண்டார். உபச்சார வார்த்தைகளுடன் ஒவ்வொருவரையும் வரவேற்றார். 

ஆனால் கோபமுற்ற அர்ச்சகர்களில் ஒருவன் ஈட்டி ஒன்றை போதனாவை நோக்கி எறிந்தான். போதனாவை ஈட்டி தாக்கியது. அவர் அப்படியே மண்ணில் சரிந்து விழுந்து மண்ணுலக வாழ்வைத் துறந்தார். அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்த அந்தக் கணத்திலேயே, முகுந்தன் அவருக்கு மோட்சத்தை அருளி விட்டான். ஆனாலும், உலக நியாயம் என ஒன்று உண்டல்லவா? அதன் படி அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

 

போதனாவைத் தாக்கிய ஈட்டி முனை குளத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தையே தாக்கிவிட்டது போல், நீரில் அமிழ்ந்து கிடந்த கிருஷ்ண விக்கிரகத்திலிருந்து உதிரம் பெருகியது. குளத்து நீர் சிவப்பானது. 

 

துவாரகை அர்ச்சகர்கள் குருதியால் சிவந்த குளத்து நீரில் குதித்துத் தேடி, கிருஷ்ண விக்கிரகத்தை மேலே கொண்டு வந்தனர். 

 

போதனாவின் மரணம் அவர்களை அணுவளவும் அசைக்கவில்லை. கிருஷ்ணர் தங்களுடன் துவாரகைக்குத் திரும்பும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக உரைத்துவிட்டுக் குளக்கரையிலேயே அமர்ந்து விட்டார்கள். 

 

போதனாவுடன் டாகோருக்கு வந்து சேருகிறேன் என்று புறப்பட்டு வந்த கிருஷ்ணரின் பாடு தர்மசங்கடமாகி விட்டது. அவர் போதனாவின் மனைவியிடம் தன் எடைக்கு ஈடாகத் தங்கம் அளிக்கும்படியும் அதனை ஏற்றுக்கொண்டு அர்ச்சகர்கள் துவாரகைக்குத் திரும்பி விடுவார்கள் என்றும் கூறினார். இந்த ஏற்பாட்டுக்கு, அர்ச்சகர்களும்  அரை மனதுடன் ஒத்துக் கொண்டனர். 

 

ஏழை விதவையான கங்காபாயிடம், கிருஷ்ண விக்கிரகத்தின் எடைக்கு எடை ஏது தங்கம்? கணவனைப் பறிகொடுத்த துக்கத்தில் இருந்த அந்தக் காரிகை, கிருஷ்ணரின் வற்புறுத்ததால் தன் ஒரே சொத்தான அரை கிராம் தங்க மூக்குத்தியைக் கழற்றி, தராசினில் வைத்தாள். அதிசயத்திலும் அதிசயமாக, தராசுகளின் இரு தட்டுகளும் சமமாக நின்றன. 

 

தன் விக்கிரகத்தின் எடையை அந்த மூக்குத்தியின் எடையளவு இருக்குமாறு, அவ்வளவு லேசானதாக மாற்றிக் கொண்டார்கிருஷ்ணர் . 

அர்ச்சகர்களோ ஏமாற்றமடைந்தார்கள்.. மூர்க்கத்தனமாக முரண்டு பிடித்தார்கள். கள்ளன் கண்ணனிடமே தங்களுக்கு ஒரு தீர்வு சொல்லும் படி வேண்டிக் கொண்டார்கள்.

கிருஷ்ணரும் அவர்களிடம், துவாரகையில் இருக்கும் சேவார்தன் தீர்த்தத்தில் ஆறுமாதம் கழித்துத் தேடினால், இதே போல் இதே அளவில் விக்கிரக உருவில் அவர்களுக்குத் தான் கிடைப்பதாக வாக்களித்தார்.

அர்ச்சகர்கள் ஊர் திரும்பினார்கள். ஆறுமாதம் வரை காத்திருக்கும் பொறுமை இன்றி, ஒரு மாதம் முன்பாகவே சேவார்தன் குளத்தில் இறங்கித் தேட, அவர்களுக்கு ஒரு விக்கிரகம் கிடைத்தது. ஆனால் அது முன்பிருந்த விக்கிரகத்தை விடவும் அளவில் சற்றே சிறியதாக இருந்தது. 

இங்கே கோமதி குளத்தில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் விஜயானந்த் போதனாவின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் இருந்தது. அதன்பின், அந்த இல்லத்துக்கு அருகிலேயே இருக்கும் அன்னை லக்ஷ்மி ஆலயத்தில் இருநூற்று ஐம்பது ஆண்டுகள் இருந்தது.

கி.பி. 1770 இல் மஹாராஷ்டிராவைச்  சேர்ந்த கோபால்ராவ்  ஜகன்னாத் என்னும் அந்தணர் ஒருவரின் கனவில் கிருஷ்ணன் தோன்றி, தனக்கொரு ஆலயம் கட்டி அதில் தன்னைப் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினான்.கோபால்ராவ் ஜகன்னாத் டாகோர் வந்து அண்ணலுக்கு ஓர் ஆலயம் எழுப்பினார். கி.பி. 1772ம் ஆண்டு, அதில் ஸ்ரீகிருஷ்ணனைப் பிரதிஷ்டை செய்தார். அவன் துவாரகை மன்னனே அன்றி வேறு யாரும் இல்லை என்பதை அகிலத்துக்கு அறிவிக்கும் விதமாக, அண்ணலுக்கு ரன்சோட்ராய்ஜி என்ற திருநாமம் வழங்கப்படலானது. ரன்சோட் என்றால் ’போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டவன்’ என்று பொருள். 

 

நூற்று எழுபது சதுர அடிப் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், எட்டு கோள வடிவக் கூரைகளுடனும், இருபத்து நான்கு கூம்புச் சிகரங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. பன்னிரண்டு அகலமான படிகள் ஏறி ஆலயத்தில் நுழைந்தால், பிரதான வாயிலுக்கு இரு புறங்களிலும் தீப ஸ்தம்பங்கள் ஒளிரும் ஜோதிகளுடன் காட்சி தருகின்றன. விசாலமான பிரகாரத்தின் துவக்கத்தில் கோள வடிவக் கூரையுடன் ஒரு முக மண்டபம். இதன் விதானத்திலும் தூண்களிலும் சுவர்களிலும் கிருஷ்ணனின் லீலைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.  

நேரே கருவறை. போதனாவுடன் துவாரகையிலிருந்து புறப்பட்டு வந்த போது கண்ணன் சக்கரவர்த்தித் திருக்கோலத்தில் புறப்பட்டு வந்ததால், அவருக்கு இங்கே வெள்ளியாலும் தங்கத்தாலும் வேயப்பட்ட அரியாசன மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  அதில், கள்ளக்கண்ணன் ரன்சோட்ராய்ஜி நான்கு திருக்கரங்களுடனும் வசியப் புன்னகையுடனும் எழுந்தருளியுள்ளான். 

 

அலங்காரத் தலைப்பாகை. அங்கமெல்லாம் தங்க ஆபரணங்கள். அகன்ற கண்கள். மேல் இடது கரத்தில் சக்கரமும், கீழ் இடது கரத்தில் சங்கும் தரித்து, கானம் இசைத்தபடி அலங்கார புருஷனாய்க் காட்சி தரும் அந்த வேணுகோபாலனைக் கண்ணுறும் போது, அகத்தில் ஆனந்தம் பெருகுகிறது. 

 

அவனைத் தரிசித்துப் பிரகார வலம் வந்தால் ஆலய தரிசனம் நிறைவடைகிறது. 

ஆலயத்துக்கு நேர் எதிரே கோமதி குளம். குளத்தில் கிருஷ்ண விக்கிரகம் விழுந்து கிடந்த இடத்தில் ஒரு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அங்கே கிருஷ்ணரின் பாதம் பதிந்த ஒரு கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கரையிலிருந்து மண்டபத்தை அடைய ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. குளக்கரையில் டாங்க்நாத் மகாதேவ் எழுந்தருளியிருக்கிறார்.

ரன்சோட்ராய்ஜி ஆலயத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில், துவாரகை மன்னனை இந்த மண்ணுக்கு அழைத்து வந்த போதனாவின் எளிமையான இல்லம். கிருஷ்ண விக்கிரகம் இருந்த இடம், ஒரு சந்நிதியாக கோபுரத்துடன் வாசலுக்கு நேரே காட்சியளிக்கிறது. 

படியிறங்கி அடைய வேண்டிய அந்தச் சிறு மண்டபச் சந்நிதியில், ஒரு சப்பரத்தில் கிருஷ்ணரின் படம். ஓரத்தில் இருக்கும் பளிங்கு மேடையில், கண்ணனின் பாதங்கள் காணப்படுகின்றன.

வீட்டின் விலாப்புறத்தில் இருக்கும் ஓர் அறையில், போதனாவும் கங்காபாயும் கரும்சிலைகளாகக் காட்சி தருகிறார்கள். 

போதனா இல்லத்தின் அருகிலேயே ,இருநூறு ஆண்டு கிருஷ்ண விக்கிரகம் பிரதிஷ்டை ஆகியிருந்த லக்ஷ்மி ஆலயம். எளிமையான, அமைதியான ஆலயம். நுழைந்தவுடன் வலதுபுறத்தில் சிவசந்நிதி. அடுத்து ஆஞ்சநேயர். அடுத்திருக்கும் முகமண்டபத்திலிருந்து கருவறையில் இருக்கும்  அன்னை லக்ஷ்மியைத் தரிசிக்கலாம்.

பஞ்சதுவாரகை தலங்களில் ஒன்றான டாகோருக்குச்சென்று , அழையாமலே வந்த அந்த ஆராமுதனை அகத்தில் ஏந்தி வாருங்கள்!

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்         : டாகோர்

சுவாமியின் திருநாமம்    : ரன்சோட்ராய்ஜீ (ஸ்ரீ கிருஷ்ணர்)

எங்கே உள்ளது?                  : குஜராத்தில்

எப்படிப் போவது?          :  சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்றால் ,அங்கிருந்து அறுபது கி.மீ. தொலைவில் இருக்கும் டாகோருக்குப் பேருந்திலோ, காரிலோ செல்லலாம்.  
எங்கே தங்குவது?                  : டாகோரில் ஏராளமான தர்மசத்திரங்கள் உள்ளன. தவிர, குறைந்த செலவில் வசதியான தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள்ளன. 

தரிசன நேரம்                      : காலை 06.45 முதல் பகல் 12.30 வரை

                                                   மாலை 04.15 முதல் இரவு 07.30 வரை

                                                   (காலை 10.30 இலிருந்து11.30 வரை தரிசனம்                                                    
                                                   கிடையாது.)

 

டாகோரில் கண்ணனை தரிசித்தபின் உண்டாகும் மனநிறைவை ,சொல்லில் வடிக்கமுடியாது. இன்னும் இரண்டு பஞ்சதுவாரகை  தலங்கள் மிச்சமிருந்தன. அவை இரண்டுமே ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருந்தமையால் , நாங்கள் ராஜஸ்தான் நோக்கிப் பயணப்பட்டோம். 

டாகோரில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூரை நோக்கிச் செல்லும் பாதை ஏற்ற-இறக்கங்கள் நிறைந்த மலைப்பாதை. நாகம் போல் பாதை வளைந்து வளைந்து சென்றது. அதில் எங்களது இன்னோவா வழுக்கிக்கொண்டு சென்றது. 

காலை பதினோரு மணி இருக்கும். எங்களுடைய வண்டிக்கு முன்னால் ஒரு சரக்கு லாரி மூச்சுத் திணறியபடி ஏறிக்கொண்டிருந்தது. அதை முந்திச் செல்வதற்காக ,டிரைவர் ஹாரன் அடித்தார். முன்னால் சென்ற லாரி டிரைவரும் லேசாக ஒதுங்கி முந்திச் செல்லுமாறு சைகை காட்டினார். 

இன்னோவா முந்தியது. திடீரென்று ஒரு திருப்பம். சற்றும் எதிர்பாராத வகையில், ஒரு சரக்கு லாரி அடிமரங்களைக் கட்டி ஏற்றிக்கொண்டு, இறக்கத்தில் சற்று வேகமாக வந்தது. லாரி  டிரைவர் இன்னோவாவைப் பார்த்து மிரண்டு, சற்றே ஓரம் ஒதுங்கினார். எங்களது டிரைவரும் காரை இடது பக்கம் லேசாக ஒதுக்கி லாரியைக் கடந்தார்.

மலைப்பாதையில் அதற்கு மேல் ஒதுங்க இடமின்றி, எதிர்ப்புறம் வந்த லாரி டிரைவர் மறுபடி ஸ்டியரிங்கை வளைத்து சாலையின் மையத்துக்கு வரப்பார்க்க, எங்களுக்குப் பின்னால் மூச்சுத் திணறலுடன் ஏறிக்கொண்டிருந்த லாரியை எதிர்கொண்டார். அந்த லாரி மீது மோதாமல் இருக்க, மரங்களை ஏற்றியிருந்த லாரி டிரைவர் சாமர்த்தியமாக ஒதுங்கிய போதும், எங்களுக்குப் பின்னால் வந்த லாரி எதிரில் வந்த லாரி மீது லேசாக உரசியதில் மரக்கட்டைகளைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கயிறு தெறித்தது. அத்தனை அடிமரங்களும் உருண்டு, பயங்கரமான சத்தத்துடன் மலைப்பாதையில் சரிந்தன. இரண்டு லாரி டிரைவர்களும் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டார்கள். 

ஒரு பெரிய விபத்திலிருந்து மயிரிழையில் நாங்கள் தப்பித்ததை நினைத்துப் பெருமூச்சு விடுவதா அல்லது அடுத்த நான்கு மணி நேரத்துக்கு அந்தப் பாதையில் போக்குவரத்து தடைபடப்போவதை நினைத்து வருத்தப்படுவதா என்று புரியவில்லை. 

சற்றே திகிலான மனதுடன் பயணம் செய்து அடிவாரத்துக்கு வந்ததும் அங்கிருக்கும் ஒரு கோயில் வாசலில் காரை நிறுத்தினார் டிரைவர். "முதலில் ஷாம்லாஜியிடம் நன்றி தெரிவித்து விட்டு வருவோம்.. வாருங்கள்.." என்றார்.

நாங்களும் முழுமனதுடன் கோயிலை நோக்கி நடந்தோம். அடுத்து வருவது அந்தக் கோயில் வரலாறும், தரிசன அனுபவமும்...! 

இருளைப் போக்கிடும் இருளன்

ஷாம்லாபூர் ஷாம்லாஜி

ஆரவல்லி மலைத்தொடரின் ஆரண்யப் பகுதியில் வசித்து வந்த மலைவாழ் மக்கள் உழவு புரிந்து தொழுது வாழ்ந்திருந்தனர். ஒரு சமயம், மலைக்குடியிருப்பைச் சேர்ந்த குழந்தைகள் இருவர் கலப்பை ஏந்திக் காட்டுக்குச் சென்று கடின பூமியை உழத் தொடங்கினர். 

நிலத்தில் நேராகச் சென்று கொண்டிருந்த கலப்பை திடீரென்று எதன் மீதோ மோதி, ’டங்’ என்ற ஒலியையும் எழுப்பியது. கடினமான பாறையினை கலப்பை மோதியிருக்கும் என்று பார்த்தால், அது பாறை அல்ல. பரந்தாமனின் விக்கிரகம்!

கடவுள் சிற்பம் கிடைத்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. அகிலத்து அழகையெலாம் உருட்டித் திரட்டி உருவாக்கியது போல், கார்மேக வண்ணத்தில் காட்சி தந்த அரியின் அர்ச்சா மூர்த்தியைக் கண்டு காட்டுவாசிகள் களிப்பெய்தினர். 

அவர்கள் அந்தி மாலையை, 'காலி' என்று அழைப்பார்கள். காலி என்றால் இருள் என்று பொருள். கரு நிறத்தில் இருந்த கருணாமூர்த்தியை, இருளன் என்று பொருள்படும் ’காலியா’ என்ற பெயரால் அழைத்து, பிரதிஷ்டை செய்து கொண்டாடத் தொடங்கினார்கள். 

ஊர்மக்களோ ,இவரை அந்தி நிறத்தவன் என்று பொருள்படும்படியாக ’ஷ்யாம்லால்’ என்று அழைத்தார்கள். அதுவே ஷாம்லாஜி என்று மருவி விட்டது. ஊரும் ஷாம்லாஜி என்ற பெயரிலும், ஷாம்லாபூர் என்ற பெயரிலும் வழங்கப்படத் தொடங்கியது. 

விஸ்வகர்மாவே அந்த நாட்களில் ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்லப்பட்டாலும், பின்னால் கோவில் சீராக எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. 

ஆலய வளாகம்! 

விசாலமான வெட்டவெளி முற்றத்தில், ஐம்பதடி தள்ளி கஜூராஹோ பாணி கோபுரம். அதில் யானைகள், நடன மங்கையர், ஆலிங்கன நிலை ஆடவர், பெண்டிர் என்று ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள்.  

கோபுர முகப்பில் இருக்கும்  படிகள் ஏறி, வாசலைக் கடந்தால், பளிங்குத் தரையுடன் ஷாம்லாஜியின் தர்பார் மண்டபம். அரைக்கோள விதானத்துடன் கூடிய இந்த மண்டபத்தின் அலங்காரத் தூண்களில், அபாரமான வேலைப்பாடுகளுடன் அப்ஸர மங்கைகளின் சிற்பங்கள் பொளியப்பட்டுள்ளன. 

மண்டபத்தின் மையத்தில் கருடாழ்வார் கருவறைக் கடவுளை வணங்கிய நிலையில் எழுந்தருளியிருக்கிறார். கூர் மூக்கு. அகன்ற கண்கள். தோடணிந்த காது. இரு சிறகுகள். வித்தியாசமான, அழகான கருடரின் கூர் மூக்கும், தோடணிந்த காதுகளும் அன்னியர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டு, சீர் செய்யப்பட்டுள்ளன. 

அகன்ற மார்பில் முத்துக்களால் ஆன ஹாரங்கள் துலங்குகின்றன. காதுகளில் கவசம். இடது பக்கம் தண்டம். வேஷ்டி கட்டியிருக்கும் விதமே அலாதியாக உள்ளது. கால்களில் கொலுசுகள் பளபளக்கின்றன.

முன்னொரு சமயம், சுவாமியின் இரட்டைக் கொலுசுகளில் ஒன்று தொலைந்து, சுவாமியே அதனை மீட்டுத் தந்திருக்கிறார். அந்த வரலாறு சுவையானது. 

இரவு நேரங்களில் ஷாம்லாஜி அருகில் இருக்கும் நாராயண் கோவிலில் இசைக்கப்படும் பஜனைப் பாடல்களைக் கேட்கச் செல்வது வழக்கம், ஒரு முறை சுவாமி அப்படிச் சென்றபோது, இரவு முழுக்க பஜனை தொடர்ந்திருக்கிறது.

விடியல் நேரத்தில், இங்கே ஆலயத்தில் உஷத்கால பூஜைக்கான அறிவிப்பாகத் துந்துபிகள் முழங்கத் தொடங்கியிருக்கின்றன. அது கேட்டு, ஷாம்லாஜி அவசரமாக நாராயண் கோயிலில் இருந்து புறப்பட்டு வர, அவரது ஒரு கால் கொலுசு அங்கேயே விழுந்து விட்டது. 

ஒற்றைக் கால் கொலுசுடன் ஷாம்லாஜி கருவறையில் காட்சி தர, தரிசனத்துக்கு வந்தவர்கள் சுவாமியின் காலில் கொலுசு இல்லாதது கண்டு திடுக்கிட்டிருக்கிறார்கள். ’பூஜாரிதான் பொறுப்பு’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அவர் ஷாம்லாஜியைத் தஞ்சம் அடைந்திருக்கிறார்.

அங்கே, சுவாமி நாராயண் ஆலயத்துப் பூஜாரியின் கனவில் கொலுசு இருக்கும் இடத்தை ஷாம்லாஜி சொல்ல, அவர் அதனைக் கண்டெடுத்து வந்து சுவாமியின் பாதத்தில் பூட்டியிருக்கிறார் ஷாம்லாஜியின் பூஜாரி. தன்னை இக்கட்டிலிருந்து விடுவித்த கார்மேக வண்ணனை பூஜாரி வணங்கித் தண்டனிட, ஷாம்லாஜியின் முகத்தில் அப்போதும் மாறாத புன்னகை. 

ஷாம்லாஜியின் பாதத்தில் லக்ஷ்மி இருப்பதாக ஐதீகம் என்பதால், ஆலயத்தில் தேவி சிலை கிடையாது. 

கார்த்திகை பௌர்ணமியன்று கொண்டாடப்படும் ரதயாத்திரைக்கு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களுடன், மலையில் வசிக்கும் ஆதிவாசிகளும் வந்து குவிகிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக ரதம் இழுக்கிறார்கள். 

ஜாதி என்னும் அறியாமை இருளைப் போக்கி, அனைத்து மாந்தரும் ஒற்றுமையாக வாழ வழி வகுக்கும் ஷாம்லாஜியை வணங்கி வளம் பெறுவோம்.

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்           : ஷாம்லாஜி

சுவாமியின் திருநாமம்   : ஷாம்லாஜி

எங்கே உள்ளது?           : குஜராத்தில்

எப்படிப் போவது?         :  சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்று, அங்கிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இருக்கும் ஷாம்லாஜிக்குப் பேருந்திலோ, காரிலோ செல்லலாம்.                  
எங்கே தங்குவது?          :  அஹமதாபாதில் குஜராத் சுற்றுலாத் துறையின் தங்கும் விடுதிகளும், தனியார் விடுதிகளும் உள்ளன. 

தரிசன நேரம்               :  காலை 6.00 முதல் 12.30 வரை 

                                       மாலை 3.00 முதல்  8.30 வரை 

பயணம் தொடரும்...

-  சுபா (காஷ்யபன்)

 

மேலும் படிக்க 

கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 11
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 10
கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 9

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles