கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் - 11

Saturday, August 13, 2016

அருள்மிகு நாகேஸ்வரர் ஆலயம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. வாகனங்கள் வந்து நிற்க, பிரம்மாண்டமான வெட்ட வெளி. விசாலமான வெளிப்பிராகாரத்தில் விஸ்வரூப கோலத்தில் சுதையாலான சிவபெருமான் காட்சி தருகிறார். 

ஆலயத்தில் நுழைந்தால், விசாலமான மண்டபம். அதன் முடிவில், நந்தியம் பெருமான். நந்தியின் திமிலைச் சுற்றி வந்து, கொம்புகளுக்கிடையில் நுழைந்து எழுந்து, கல்நாகம் ஒன்று கருவறையில் இருக்கும் நாகேஸ்வரரைத் தரிசிக்கும் நிலையில் காட்சி தருகிறது. நந்திக்கு முன்பாக, ஓர் ஆமை காட்சி அளிக்கிறது. 

 

நேர் எதிரே கருவறை. புஷ்ப மாலைகள், ஒளிரும் திருவிளக்குகள். நாகக் குடையுடன் அலங்காரமான லிங்கரூப நாகேஸ்வரர் தரிசனம் தருகிறார். இந்த ஜோதிர்லிங்கத்தின் மீது ஒரு சமயம் நாகமொன்று குடைபிடித்த வண்ணம் காட்சியளித்ததால், நாகேஸ்வரன் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் இறைவன். 

 

சுவாமிக்குப் பின்னால், பார்வதி நாகேஸ்வரி என்னும் திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கிறாள்.

 

மக்கள் கையில் விளக்கேந்தி நந்திக்கு ஒரு தீபாராதனையும், கருவறைக் கடவுளுக்கு ஒரு தீபாராதனையும் காட்டி வணங்குகிறார்கள். கருவறையிலேயே பக்தர்கள் அமர வழி செய்யப்பட்டு, அங்கே கால சர்ப யோக பூஜை அனுதினமும் நிகழ்கிறது.  

 

கருவறைக்கு முன்பாக இடது புறம் கணேஷும், வலது புறம் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருக்கிறார்கள். 

 

மூலவர் தரிசனம் முடிந்து பிராகார வலமாக வந்தால், கருவறைக்கு வலது புறத்தில் உற்சவமூர்த்தி போல் உலோகத்தில் வடித்தெடுக்கப்பட்ட சிவன் அமர்ந்த நிலையில் காட்சியருள்கிறார். முறுக்கிய மீசை, சிரசில் இருக்கும் ஜடாமுடியை நாகம் பிணைத்திருக்கிறது. ஜடாமுடியில் கங்கைக்கு என ஒரு முகம். 

 

அவரை வணங்கி தீர்த்தம் பெற்றுக்கொண்டு வெளியே வந்தால், வெளிப்பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமாய் பிரமாண்டமான அரசமரம்.   

 

துவாபரயுகத்தில் கிருஷ்ணர், நாகேஸ்வரருக்கு அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் நிகழ்த்தியிருக்கிறார். ஆதிசங்கரரும் தாருகாவனத்து நாகேஸ்வரரைத் தரிசித்து, அவர் மீது ஸ்தோத்திரப் பாடல்களை இயற்றியிருக்கிறார்.

 

ஆதி நாட்களில் தாருகாவனம் என்று அறியப்பட்ட இப்பகுதியே, கிருஷ்ணரின் வருகைக்குப் பிறகு ’துவாரகாபுரி’ என்று அழைக்கப்படலாயிற்று என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். 

 

மகாராஷ்டிர மாநிலத்தில், அவுண்டா எனும் ஊருக்கு அருகில் இருக்கும் நாகநாதமே முன்பு தாருகாவனம் என்று அறியப்பட்டதாகவும், அதுவே ஜோதிர்லிங்கத் தலம் என்று இன்னொரு சாரார் இயம்புகின்றனர். எந்த இடத்து நாகேஸ்வரரை வணங்கினாலும், வாழ்வில் வளம் சேருவது உறுதி. 

 

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்                  :நாகேஸ்வரம்
சுவாமியின் திருநாமம்      : நாகேஸ்வரர்
எங்கே உள்ளது?                  : குஜராத்தில்
எப்படிப் போவது?              : சென்னையில் இருந்து அஹமதாபாதுக்கு விமானத்திலோ, ரயிலிலோ சென்றால் அங்கிருந்து துவாரகைக்கு ரயிலிலோ, காரிலோ, பேருந்திலோ செல்லலாம். துவாரகையிலிருந்து       சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் நாகேஸ்வரத்துக்கு ஆட்டோவிலோ, காரிலோ செல்லலாம்.     

எங்கே தங்குவது?               : துவாரகையில் குஜராத் சுற்றுலாத்துறையின் விடுதி உள்ளது. தவிர, வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
    
தரிசன நேரம்                     :  காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இடைவிடாத தரிசனம். 

 

நாகேஸ்வர தரிசனம் முடிந்தபின், நாங்கள் மறுபடி அஹமதாபாத் நோக்கிப் புறப்பட்டோம். பஞ்ச துவாரகைகளில் இன்னும் மூன்று துவாரகை தலங்களை, நாம் தரிசிக்க உள்ளோம். இந்த மூன்று தலங்களில் இரண்டு தலங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள காரணத்தால், நாம் தாய்ச்சியைத் தொடுகிற மாதிரி அஹமதாபாதுக்கு வந்தே ஆகவேண்டும். 
 

அஹமதாபாதில் குஜராத் சுற்றுலாத்துறையினரின் தங்கும் விடுதிக்கு நாங்கள் வந்தடைந்தபோது பிற்பகல் மூன்று மணி. 

 

நகர்வலம் கிளம்பினோம். அஹமதாபாதின் உள்ளே ஊடுருவிச் சென்றோம். குஜராத் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள நேரும்போது 'ஹலோ..' என்றோ, 'வணக்கம்' என்றோ முகமன் கூறுவதில்லை. மாறாக 'ராம்.. ராம்..' என்று கூறுகிறார்கள். 

 

ஓரிடத்தில் சாலையை ஒட்டியிருந்த கடை ஒன்றில், சுடச்சுட சமோசா போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அஹமதாபாத் நகர மக்கள் அனைவருமே, அந்தக் கடை வாசலில் திரண்டிருந்தது போல் அவ்வளவு கூட்டம். 

 

அவ்வளவு தூரம் போய் சமோசா சாப்பிடாமல் வருவதற்கு, எங்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ஆளுக்கொரு சமோசா ஆர்டர் கொடுத்தோம். வாயில் போட்டவுடன் கரைந்து விட்டது. அதன்பின் ஆளுக்கு இன்னும் மூன்று சமோசா சாப்பிட்டு, சுடச்சுட தேனீர் அருந்திய பிறகே திருப்தி வந்தது. இரவு அறைக்குத் திரும்பி வந்து, விரைவிலேயே உறங்கி விட்டோம். 

 

மறுநாள் காலை, வழக்கம் போல ஆறு மணிக்குப் புறப்பட்டோம். கார் அதேதான். ஆனால், டிரைவர் மாறிவிட்டார். ’கோபால்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கோபால்ஜி என்று, உடனே அந்தப் பெயரை மாற்றினோம். கோபால்ஜி என்று அழைத்தவுடன், அவருக்கு அவ்வளவு உற்சாகம். 

 

"பஞ்ச துவாரகைகளில் ஒரு துவாரகையான டாகோருக்கு நாம் செல்கிறோம்.."  என்று சொல்லிவிட்டு, காரைக் கிளப்பினார். எட்டரை மணிக்கெல்லாம் டாகோர் போய் சேர்ந்து விட்டோம். டாகோர் பஞ்சதுவாரகை தலங்களில் ஒன்றாக மாறியதன் பின்னணியில், ஒரு சுவையான வரலாறு புதைந்துள்ளது. 

 

அந்த வரலாற்றை அறிந்து கொண்டு, ஆலயத்தில் அடியெடுத்து வைப்போம்.

அழையாமலே வந்த ஆராவமுதன் டாகோர் ரன்சோட்ராய்ஜி

 

தன் பக்தன் ஒருவன் தடுமாறும் வயதிலும் தன்னை விடாமல் தரிசிக்க வருவதைக் கண்டு, மனமிரங்கி அந்த துவாரகை நாதனே தானிருந்த அரண்மனை ஆலயத்தைத் துறந்து, பக்தனின் குடிசைக்குத் தானாக வந்து சேர்ந்தான்.

 

அவ்வாறு வந்த பக்தவத்சலன், ரன்சோட்ராய்ஜி என்ற பெயரில் ஆலயம் கொண்டு அமைந்த டாகோர் என்னும் ஊரானது புவியின் புனிதத்தலமாகவும், பஞ்ச துவாரகைகளில் ஒன்றாகவும் அகிலத்தில் அறியப்படுகிறது.

 

பக்தனுக்காகப் பரந்தாமன் தனது அரண்மனையைத் துறந்த கதை அதி சிறப்பானது. 

 

கோகுலத்தில் கிருஷ்ணனின் விளையாட்டுத் தோழனாக விளங்கியவன் விஜயானந்த். ஒரு ஹோலித் திருநாள் அன்று, கோகுலவாசிகள் அனைவரும் திருவிழாவைக் கொண்டாடினார்கள். தங்களுடன் விழாவில் கலந்து கொண்ட கிருஷ்ணனைத் தொழுதார்கள். ஆனால் போயும், போயும் தோழனைத் தொழுவதா என்று நெஞ்சில் எழுந்த சிற்றகந்தை காரணமாக, திருவிழாவில் பங்கேற்காமல் இல்லத்திலேயே இருந்து விட்டான் விஜயானந்த்.

 

அடுத்த நாள், வண்ணங்களை வாரி இறைத்து விளையாடும் வண்ண ரகளை தினம். அன்றைக்கு வர்ணப்பொடியிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஓடிய கண்ணன், நதியினில் குதித்தான். விஜயானந்தும் நண்பனைத் தொடர்ந்து நதியினில் இறங்கினான். நதியினில் யாரும் காண முடியாத ஓரிடத்தில் கிருஷ்ணன், விஜயானந்துக்குத் தனது விசுவரூபத்தைக் காட்டினான். 

 

அதனைக் கண்ட விஜயானந்த், கண்ணனின் கால்களில் விழுந்தான். தனது கர்வத்துக்கு மன்னிப்பு கேட்டான். கூடவே, தனக்கு அப்போதே முக்தி அளிக்குமாறு வேண்டினான். அவனது அரற்றல் கண்ணனை வெகுவாக நெகிழ்த்தியது.

 

விஜயானந்த், கலியுகத்தில் ’போதனா’ என்னும் பெயருடன் பிறப்பான் என்றும், அப்போது அவனுக்கு மறுபடி காட்சி கொடுத்து முக்தியும் அளிப்பதாக வாக்குக் கொடுத்தான். 

 

இது இவ்வாறிருக்க.... 

 

இடும்ப மரங்கள் அடர்ந்த காடு ஒன்றினில், டாங்க் என்னும் முனிவர் ஒருவர் ஆசிரமம் அமைத்து பரமசிவனைக் குறித்துத் தவம் புரிந்து கொண்டிருந்தார். 

 

அவரது தவத்தினால் அகமகிழ்ந்து அவர் முன் பிரத்யட்சமான அரனைக் கண்டு, முனிவர் தன் ஆசிரமத்திலேயே அவன் அனவரதமும் உறைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பரமனும் டாங்க்நாத் மகாதேவர் என்ற திருநாமத்துடன், லிங்க வடிவில் எழுந்தருளினார். அதனால் இந்தத் தலம், அந்த நாட்களில் ’டாங்க்பூர்’ என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

 

குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர், அர்ஜூனனின் பேரனும், அபிமன்யுவின் புதல்வனுமான பரீக்ஷித்தின் உபநயனத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, கிருஷ்ணரும் பீமரும் டாங்க்பூர் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். 

 

அச்சமயம், பீமனுக்கு தாகம் எடுத்தது. உடன் வந்த கிருஷ்ணன், டாங்க் மகரிஷியின் ஆசிரமத்தின் அருகே இருந்த ஒரு குட்டையைச் சுட்டிக் காட்டினான். 

 

இருவரும் குட்டை நீரைப் பருகித் தாகத்தைத் தணித்துக் கொண்டனர். குட்டை பெரியதாக இருந்தால், ஆரண்யத்து விலங்குகள் அனைத்தும் அதனை அண்டி தாகத்தைத் தணித்துக் கொள்ளக் கூடுமே என்று எண்ணிய பீமன் அதனை ஓரு பெருங்குளமாக மாற்றினான். 

 

572 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளமே, இன்று ரன்சோட்ராய்ஜியின் ஆலயத்துக்கு எதிரில் உள்ள கோமதி குளம். இதன் நீர், மனித எலும்புகளையும் கரைக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது.

 

கிருஷ்ணரும் பீமரும் டாங்க் மகரிஷியைச் சந்தித்தனர். தன்னுடன் வந்து உறையும் சிவனைப் போலவே, கிருஷ்ணனும் அங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மகரிஷி. கலியுகத்தில், தான் அங்கே வந்து இருப்பதாகக் கிருஷ்ணனும் அவருக்கு வாக்களித்தான். 

 

கலியுகம். அந்த டாங்க்பூர், டாகோர் என்று பெயர் மாற்றம் பெற்றிருந்தது. அந்த ஊரில்,  ஒரு ராஜபுதனக் குடும்பத்தில் விஜயானந்த் போதனா என்னும் ஒரு க்ஷத்திரியன், தனது துணைவி கங்காபாயுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.  

 

அவர் நீலவண்ணக் கண்ணன் மீது நீங்காத பக்தி கொண்டவராய் விளங்கினார். அவர் ஒரு மண்பானையில் துளசிச் செடி ஒன்றை வளர்த்தார். துளசிச்செடி வளர்ந்த பானையை உள்ளங்கையில் ஏந்திக் கொண்டு, டாகோரில் இருந்து 565 கி.மீ. தொலைவில் இருக்கும் துவாரகைக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 

 

துவாரகையில் துளசி இலைகளைக் கொண்டு அவர், கண்ணனை ஆராதித்து விட்டு உளம் நிறைய உவகையுடன் ஊர் திரும்புவார். எழுபத்திரண்டு வயது ஆகும் வரை, இது போலவே துவாரகை யாத்திரை மேற்கொண்டு யாதவக் குலத் தோன்றலை தரிசித்துக் கொண்டிருந்தார். 

 

வயதாக, ஆக உடல் தளர்ந்தது. துவாரகை வரை செல்வது இயலாத காரியமாக இருந்தது. ஆனாலும், பிடிவாதமாக அவர் யாத்திரையை மேற்கொண்டு வந்தார். 

 

அவரது பக்தியில் தன்னையே அர்ப்பணிக்கும் அளவுக்கு உருகிப் போன கிருஷ்ணன், ஒரு முறை போதனாவிடம், "போதனா. அடுத்த முறை நீ துவாரகைக்கு ஒரு மாட்டு வண்டியில் வா. அதில் ஏறி, நானும் டாகோருக்கே வந்து உன் இல்லத்திலேயே இருந்து விடுகிறேன். அனவரதமும் நீ என்னைத் தரிசித்த வண்ணம் இருக்கலாம்" என்று கூறினான். 

 

அதே போல், அடுத்த துவாரகை யாத்திரையின் போது போதனா மாட்டு வண்டியுடன் துவாரகை அடைந்தார். அங்கே வழிவழியாக கிருஷ்ணனை ஆராதித்துக் கொண்டிருந்த அர்ச்சகர்கள், ’அவர் மாட்டு வண்டியுடன் வந்திருப்பதற்குக் காரணம் என்ன?’ என்று வினவினர். போதனாவும், கிருஷ்ணனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத்தான் மாட்டுவண்டியைக் கொண்டு வந்திருப்பதாக உரைத்தார். 

 

அர்ச்சகர்கள் அவர் கூற்றை நம்பவில்லை. இருந்தாலும், விபரீதம் எதுவும் விளைந்து விடக்கூடாது என்று கண்ணனின் கருவறையைப் பூட்டி விட்டார்கள். 

 

நள்ளிரவில் கண்ணன் கதவுகளை உடைத்துத் திறந்து கொண்டு வந்து, வண்டியில் ஏறி அமர்ந்து, உறங்கிக் கொண்டிருந்த போதனாவை எழுப்பினான். வண்டியை விரைவாக டாகோருக்கு ஓட்டும்படி உரைத்தான். 

 

போதனா வண்டியைச் செலுத்தத் தொடங்கினார். களைத்திருந்த போதனாவைச் சற்றுக் கண்ணயரச் சொல்லிவிட்டு, கிருஷ்ணனே வண்டியை ஓட்டத் தொடங்கினான். அவர்கள் டாகோரை அடைந்தார்கள்.

 

துவாரகை கருவறையில் கண்ணன் இல்லாததைக் கண்டார்கள் அர்ச்சகர்கள். போதனா என்ற பெயருடைய  கிழவன், தான் சொன்னது போலவே கிருஷ்ண விக்கிரகத்தைத் திருடி எடுத்துச் சென்றுவிட்டார் என்று, அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. 

 

மண்வெட்டி, கடப்பாறை, தடி என்று கைக்குக் கிடைத்த  ஆயுதங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, 'அடி, பிடி, குத்து, வெட்டு' என்ற வன்முறைக் கூச்சல்களுடன் குதிரைகளிலும் வண்டிகளிலும் ஏறி போதனா சென்றடைந்த டாகோரை வந்தடைந்தார்கள். 

 

தனக்குப் பின்னால் தொடர்ந்து புழுதி பறக்க, கூச்சலும், ஆர்ப்பாட்டமுமாக வந்த அர்ச்சகர்களைக் கண்டு அச்சம் கொண்டார் போதனா. திகிலின் உச்சத்தில் செய்வதறியாது தவித்துப் போனார். 

 

பிறகு? 

பயணம் தொடரும்...

சுபா (காஷ்யபன்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles