ஒற்றைக்கொம்பன்கள் - 11

Monday, May 15, 2017

ஒரு சிறிய பரிசோதனை!

உங்கள்முன்னே நான்கு கதைகள் உள்ளன. ஆனால், அவற்றை எழுதியவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த நான்கில் ஒரு கதை, உங்கள் அபிமான எழுத்தாளர் எழுதியது. மற்ற மூன்றும் வேறு யாரோ எழுதியவை.

இப்போது, நீங்கள் இந்த நான்கு கதைகளையும் படித்துப்பார்க்கவேண்டும், அவற்றுள் உங்கள் அபிமான எழுத்தாளர் எழுதிய கதை எது என்று கண்டுபிடிக்கவேண்டும்.

ஏற்கெனவே படித்த ஞாபகத்தை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அது சாத்தியமில்லை. காரணம், உங்கள் அபிமான எழுத்தாளருடைய புதிய கதை இது. நீங்கள் இன்னும் இந்தக் கதையைப் படிக்கவில்லை. ஆகவே, இப்போது உங்களுக்கு நினைவாற்றல் உதவாது. அந்த அபிமான எழுத்தாளருடைய பாணியைக் கண்டுபிடிக்கும் திறன்தான் உதவும்.

அதாவது, உங்கள் அபிமான எழுத்தாளருக்கென்று ஒரு தனித்துவமான பாணி இருந்தால், இந்த நான்கில் ஒரு கதையில் அந்தப் பாணி வெளிப்படும், நீங்கள் சட்டென்று அதைக் கண்டுபிடித்துவிடுவீர்கள். ஒருவேளை அவருக்கு அப்படி எந்தப் பாணியும் இல்லை, அவர் எல்லாரையும்போல் எழுதுகிறவர் என்றால், இவற்றில் எது அவருடைய கதை என்று நீங்கள் கண்டுபிடிப்பது சிரமம். குத்துமதிப்பாக ஏதேனும் ஒன்றைச் சொல்லலாம். அதிர்ஷ்டவசமாக அது சரியாக அமைந்தால்தான் உண்டு.

ஆனால், இந்த விஷயத்தில் பெரும்பாலானோர் தவறுசெய்யமாட்டார்கள். தங்களுடைய அபிமான எழுத்தாளரின் கதையைத் துல்லியமாகவே கண்டுபிடித்துவிடுவார்கள். இதற்கு என்ன காரணம், எதைவைத்து இது அவருடைய கதை என்று சொல்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்தால், அவர்களுக்கு விளக்கம் சொல்லத்தெரியாது. 'இது அவரோட கதைன்னு தோணுது' என்பார்கள், அவ்வளவுதான்.

உண்மையில் அவர்கள் இவ்வாறு கண்டுபிடிக்கக் காரணம், அவர்களுடைய தனித்திறமை இல்லை. சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் தனித்திறமை, அதாவது, அந்த எழுத்தாளர் கூட்டத்திலிருந்து தன்னைத் தனியே அடையாளம் காட்டிக்கொள்ளும் திறமைதான் இதற்குக் காரணமாகிறது. அவர் அவ்வாறு தனித்துக்காட்டிக்கொண்டதால்தான் அவருடைய எழுத்தை இவர்கள் ரசிக்கிறார்கள்.

தனிப்பட்ட எழுத்தாளர்களின் நிலைமை இப்படியிருக்க, ஊடகங்கள் இதற்கு நேரெதிரான ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, தனித்துக்காட்டிக்கொள்ளாவிட்டால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்கிற மனோபாவம் அதிகரித்திருக்கிறது. 'இன்றைய பத்திரிகைகளின் அட்டையைக் கிழித்துவிட்டால் எதையும் யாருக்கும் அடையாளம் தெரியாது' என்பார்கள். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சானல்கள், இணையத்தளங்கள் என அனைத்திலும் அதே கதைதான். தங்களுடைய அடையாளமாக அவர்கள் காட்டிக்கொள்ளும் வணிகச்சின்னம் போன்ற விஷயங்களை மறைத்துவிட்டால், அவர்களைத் தனித்துக் கண்டறிய இயலாது. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் ஒரேமாதிரிதான் இயங்குகின்றன.

இதனால், இன்றைக்கு யாரேனும் ஊடகத்துறையில் நுழைந்து ஒரு புதிய பத்திரிகையை உருவாக்க விரும்பினால், ஏற்கெனவே பலரும் பின்பற்றிக்கொண்டிருக்கிற அதே பாணியைதான் அவர்களும் பின்பற்றவேண்டியிருக்கிறது. ஒருவேளை மாற்றிச்செய்தால் மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்று அவர்கள் தயங்குகிறார்கள்.

இது ஒரு மிக மோசமான சுழல். யாரைப்பார்த்து யார் செய்கிறார்கள் என்றே தெரியாதபடி எல்லாரும் எல்லாரையும் பார்த்து ஒரேமாதிரியான ஊடகச்சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இப்படிச்செய்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பாருங்கள். எல்லாரும் ஒரேமாதிரி பாத்திரங்கள், ஒரேமாதிரி கதைப்பின்னணி, ஒரேமாதிரி திருப்பங்களுடன் கதையெழுதத் தொடங்கினால், ஒரு நாளைக்கு ஐம்பது கதைகள் உருவாகிவிடும், ஆனால், அவற்றை யாரும் வாசிக்கமாட்டார்கள், புறக்கணித்துவிட்டுச் சினிமா பார்க்கப் போய்விடுவார்கள்.

அதேபோல், மாறுகிற சமூக எதிர்பார்ப்புகளையும் ஊடகங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்பத் தங்களுடைய பாணியை அமைக்கவேண்டும். அப்படிச்செய்யாவிட்டால், 'இவர்கள் என் மொழியைப் பேசவில்லை, நான் கேட்க விரும்பும் விஷயங்களைப் பேசவில்லை’ என்று ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும் ஏற்படும், மாற்று ஊடகங்களைத் தேடத்தொடங்குவார்கள். இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்தச்சூழல், சுமார் கால் நூற்றாண்டுகாலத்துக்குமுன்பே மேற்கத்திய நாடுகளில் தொடங்கிவிட்டது. அன்றைய மக்களின் மொழியை அன்றைய ஊடகங்கள் பேசவில்லை, எல்லாம் ஒரேமாதிரி அரைத்த பழைய மாவையே அரைத்துக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பாக, இளைஞர்களின் மாறிவரும் உலகைப் பொது ஊடகங்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய தர அளவுகோல்களை இவர்கள்மீது திணிக்க முயன்றார்கள். அது எப்படி எடுபடும்?

அந்தச் சூழ்நிலையில், இளைஞர்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் விதத்தில், அவர்களுக்கு நெருக்கமான மொழியில், அவர்களுக்கான பொழுதுபோக்கை வழங்கியது Voice of Montreal என்ற ஒரு பத்திரிகை. மற்றவர்கள் மத்தியில் இவர்கள் வித்தியாசமாகச் செயல்பட்டதால், இளைஞர்கள் உடனே கவனித்தார்கள், ஆதரவளித்தார்கள். அப்போதும், மற்ற ஊடகங்கள் விழித்துக்கொள்ளவில்லை. சொல்லப்போனால், அவர்கள் இந்தப் பத்திரிகையைக் கண்டுகொள்ளக்கூட இல்லை. ஒருவேளை கவனித்திருந்தாலும், 'இதெல்லாம் ரொம்பநாள் தாங்காது, ஒன்று, இந்தப் பத்திரிகையை இழுத்து மூடிவிடுவார்கள், அல்லது, அவர்களும் விரைவில் எங்கள் பாணிக்கு வந்துவிடுவார்கள்' என்றுதான் சொல்லியிருப்பார்கள்.

ஆங்கிலத்தில் இதனை 'Niche Market' என்பார்கள். அதாவது, வெகுஜன மக்களுக்காக அல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான பேர்களைமட்டும் திருப்திப்படுத்தும் சந்தை. நமக்குப் புரியும்படி ஓர் உதாரணம் சொல்வதென்றால், ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களெல்லாம் வெகுஜன மக்களுக்காகப் பரபரப்பான கதைகளுடன் எடுக்கப்படுகின்றன; இன்னொருபக்கம், இயல்பான மனிதர்களை, வாழ்க்கையைப் பதிவுசெய்கிற படங்களும் வருகின்றன, அவற்றை அதிகப்பேர் பார்ப்பதில்லை, எனவே, அவற்றை விரும்பிப்பார்க்கிற சிலரைமட்டுமே அந்தப் படங்கள் திருப்திப்படுத்தும். அதுதான் Niche Market.

இப்போது ரஜினி, கமல் படங்களை எடுக்கிற இயக்குநர்கள் இந்த Niche Market படங்களைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்?

'அதெல்லாம் சில பேர்தான் விரும்புவாங்க, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்காது, நான் அந்தமாதிரி படம் எடுத்தா நல்லாயிருக்காது'... இந்தத் திசையில்தான் அவர்களுடைய சிந்தனைகள் செல்லும். ஒருவேளை, இந்த Niche Market மெல்ல Mass Marketஆக மாறிவிட்டால்? பெரும்பான்மை மக்கள் அதிரடிப் படங்களைவிட இதுபோன்ற படங்களை விரும்பத்தொடங்கிவிட்டால்?

இதுதான் ஊடகத்துறையில் அன்றைக்கு நடந்தது. மக்கள் 'வழக்கமான' ஊடகங்களை வெறுக்கத்தொடங்கினார்கள். தங்களுக்கான விஷயங்களைத் தரும் தனித்துவமான ஊடகங்களைத் தேடினார்கள். அவற்றைக் கொண்டாடினார்கள். Voice of Montreal பத்திரிகை வெற்றிபெற்றது அப்படிதான். 1994ம் ஆண்டில் தொடங்கிக் கனடா அரசின் ஆதரவுடன் வெளிவந்த இந்தப் பத்திரிகை, ஆரம்பத்திலிருந்தே மற்றவர்களைப்போலில்லாமல் வித்தியாசமாகச் செயல்பட்டது. இளைஞர்களின் மனத்தை அறிந்து அவர்களுக்கு நெருக்கமான பாணியில் எழுதியது. அன்றைக்கு அந்தப் பத்திரிகையில் வந்த விஷயங்களைப் பெரிய பத்திரிகைகள் ஒருநாளும் வெளியிடமாட்டார்கள். ஒருவேளை அவற்றை வெளியிட்டாலும், இதேபோல் வெளியிடமாட்டார்கள், ‘தூய்மைப்படுத்தி’தான் வெளியிடுவார்கள்.

காரணம், ஒரு பத்திரிகையில் எவையெல்லாம் வரவேண்டும், அவை எப்படி வரவேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் வரையறுத்துக்கொண்டிருந்த எல்லைகள், இலக்கணங்களையெல்லாம் இந்தப்பத்திரிகை மீறியது. மற்ற பத்திரிகைகள் வெளியிடாத விஷயங்களை வெளியிட்டது, அவர்கள் எழுதாத பாணியில் எழுதியது. அதனாலேயே, இளைஞர்களுக்கு இப்பத்திரிகையைப் பிடித்துப்போனது. இசை, நவீன பழக்கவழக்கங்கள், கலாசாரம் என அவர்கள் எதைப் பேசினாலும் ஒரு வித்தியாசத்தன்மையுடன் பேசினார்கள். அதுவும் வலியத்திணித்த வித்தியாசத்தன்மை அல்ல, இளைஞர்கள் இப்படிதான் சிந்திக்கிறார்கள், இதைத்தான் வாசிக்க விரும்புகிறார்கள் என்று புரிந்துகொண்டு செயல்படும் உறுதியான பத்திரிகை தர்மம், அல்லது, தொழில் தர்மம், அல்லது, இரண்டும்.

இங்கே 'பத்திரிகை', 'தொழில்' என்ற சொற்களின் கூட்டணி மிகவும் முக்கியம். Voice of Montreal பத்திரிகையை நடத்திய ஷேன் ஸ்மித், சுரூஷ் அல்வி, கவின் மெக்இன்னீஸ் மூவருமே இதனை வெறும் பத்திரிகையாக நினைக்கவில்லை; வெறும் தொழிலாகவும் நினைக்கவில்லை; இளைஞர்கள் விரும்பக்கூடிய விஷயங்களைத் தரவேண்டும், அதேசமயம், அது வெறும் சேவையாக இருந்துவிடாமல், தொடர்ந்து லாபமும் வரவேண்டும், அதன்மூலம் இந்த ஊடகத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்று நினைத்தார்கள்.

பொதுவாக Niche Marketக்குப் படைப்புகளை உருவாக்குபவர்கள் இப்படிச் சிந்திப்பதில்லை. 'நாம சிலருக்காகமட்டும்தானே இயங்கறோம், அவங்ககிட்டேயிருந்து பெரிய லாபத்தை எதிர்பார்க்கமுடியாது' என்று நினைத்துவிடுவார்கள். ஆனால், ஷேன் ஸ்மித் குழுவினர் அப்படி நினைக்கவில்லை. இந்த Niche Marketதான் நாளைக்கு Mass Market ஆகப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆகவே, ஆரம்பத்திலிருந்தே லாபத்தையும் ஒரு குறிக்கோளாகக்கொண்டு இயங்கினார்கள். அதேசமயம், வெறும் லாபத்துக்காக மற்றவர்கள் செல்லுகிற பாதையில் செல்லாமல் வித்தியாசம் காட்டினார்கள்.

இதனால், ஆரம்பத்தில் கனடாவில்மட்டும் வெளியாகிக்கொண்டிருந்த Voice of Montreal விரைவில் பிற நாடுகளுக்கும் பரவியது. அதன் பெயரும் VICE என மாறியது. சந்தையும் பெயரும் மாறியபோதும், VICE தனது தனித்துவத்தை மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ந்து இளைஞர்களுக்குப் பிடித்தமான விஷயங்களையே தந்துகொண்டிருந்தார்கள். அதன்மூலம் அவர்களுடைய ஆதரவைப் பெற்று வளர்ந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் VICE பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டது. அவற்றில் சில, அவர்களுடைய அடித்தளத்தையே அசைத்துப்பார்ப்பவையாக இருந்தபோதும், அவர்கள் தயங்கவில்லை, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அந்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்கள், அதற்குப் பொருந்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

எடுத்துக்காட்டாக, இளைஞர்கள் வாசிப்பதைவிடப் 'பார்ப்பது' அதிகம் என்பதைப் புரிந்துகொண்டபோது, தங்களுடைய தனித்துவமான பாணியை வீடியோவில் வழங்க முன்வந்தார்கள். அந்த DVDகள் கடைகளுக்கு வருவதற்குள் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது என்பதைப் புரிந்துகொண்டபோது, சட்டென்று இணையம்வழியே வீடியோக்களை வழங்கும் பாணிக்குத் தாவினார்கள். இன்றைக்கு இளைஞர்களைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான இணைய வீடியோ சானல்கள் இயங்கிவருகின்றன என்றால், அனைத்துக்கும் முன்னோடி VICEதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தங்களுடைய 'லாபகரமான ஊடகம்' என்ற குறிக்கோளிலிருந்தும் மாறவில்லை. 'இளைஞர்களுக்கேற்ற நிகழ்ச்சிகள்' என்ற கொள்கையையும் விட்டுக்கொடுக்கவில்லை. அச்சு, வீடியோ, இணையம் என ஊடகம் எதுவானாலும், VICEன் பேச்சைக்கேட்கும் ஸ்பான்ஸர்கள்தான் அங்கே நுழையமுடியும், தங்கள் விருப்பத்துக்கு அவர்களை வளைக்கமுடியாது.

இப்படி எத்தனைதான் நிபந்தனை போட்டாலும், அடுத்த பல மாதங்களுக்கு VICE ஊடகத்தளங்களில் விளம்பரங்கள் ஹவுஸ்புல்; காலியிடமே இல்லையாம். அந்த அளவுக்கு அனைத்துப் பெரிய நிறுவனங்களும் அங்கே க்யூவில் நிற்கிறார்கள். காரணம், இளைஞர்களின் நாடித்துடிப்பை VICE புரிந்துகொண்டுவிட்டது. அதுவும் இப்போதல்ல, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பே. அதை இன்னும் தக்கவைத்துக்கொண்டு அடுத்த தலைமுறையையும் ஈர்க்கும்படி தன் ஊடகங்களைத் தனித்துவத்துடன் நடத்திவருவதே அவர்களுடைய வெற்றிக்கு அடிப்படை.

(தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles