ஒற்றைக்கொம்பன்கள் 9

Wednesday, March 15, 2017

க்ளோன் அல்ல, ஒரிஜினல்; தனித்துவத்தை நிரூபித்த Coupang!
'க்ளோன்(Clone)'. அறிவியலில் மரியாதையுடன் பேசப்படும் இந்தச்சொல், நிறுவனங்களைப்பொறுத்தவரை கொஞ்சம் அவமரியாதையானதுதான். திரைப்படங்களில் ஒரு யானைக்கதை வெற்றியடைகிறது என்றால், அதேபோல் ஏழெட்டு யானைப்படங்கள் எடுக்கப்படும்.

ஜெயிக்கிற குதிரையின்மீது (அதாவது, ஜெயிக்கிற யானையின்மீது) பணம்கட்டிச் சுலபமாகச் சம்பாதித்துவிடுகிற ஆசைதான்! இத்தனைக்கும், அந்த யானைப்படங்களில் ஐந்தில் ஒன்று தேறினாலே அதிசயம். ஆனாலும், ஒரு புதிய யோசனையை உருவாக்குவதைவிட, அடுத்தவருடைய யோசனையை அல்லது வெற்றிபெற்ற, நிரூபிக்கப்பட்ட சிந்தனையைப் பயன்படுத்திக்கொள்வது சுலபமல்லவா?

தொழில்துறையிலும் இப்படிதான். ஓர் அமேசான் ஜெயிக்கிறது என்றால், அதே அமெரிக்காவில், அதைப்பார்த்துச் சூடுபோட்டுக்கொள்கிற 'க்ளோன்' இணையதளங்கள் ஏராளமாக முளைக்கும். இவர்களில் மிகச்சிலர்தான் வெற்றிபெறுவார்கள், மற்றவர்கள் கொஞ்சநாள் சமாளித்துவிட்டுக் காணாமல்போய்விடுவார்கள். அதேநேரத்தில், அமேசான் (இன்னும்) நுழையாத பிற நாடுகளில், குறிப்பாக, வளரும் சந்தைகளில் அதற்கு இன்னும் பலப்பல க்ளோன்கள் முளைக்கும். இவர்களிலும் ஓரிருவர்தான் வெற்றியடைவார்கள். ஆனால் இதெல்லாம், அமேசான் அந்தச் சந்தையில் நுழைகிறவரைக்கும்தான். ஒரிஜினல் வந்துவிட்டபிறகு க்ளோனுக்கு என்ன மரியாதை?

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட பல மின்வணிகத் தளங்கள் தட்டுத்தடுமாறி முன்னேறிக்கொண்டிருந்த நேரம். அவை எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் 'அமேசான்' இணையத்தளத்தின் க்ளோன்கள்தாம். பின்னர், அமேசானே இந்தியாவுக்கு வந்தது. அந்த இணையத்தளங்கள் இனியும் அமேசானின் க்ளோனாக இருக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. அவை ஏதேனும் ஒரு புதுமையை, வித்தியாசத்தைக் காண்பிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இங்கே அமேசான் என்பது ஓர் உதாரணம்தான். எந்தவொரு தொழில் யோசனையும் இதுபோல 'க்ளோன்' செய்யப்படலாம்.

யோசித்துப்பாருங்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை 'ஆர்கானிக் காய்கறி' என்று ஒரு தனிப்பிரிவு இருந்ததா? சிலர் அதனை அறிமுகப்படுத்தி வெற்றியடைந்ததும், 'நாங்களும் ஆர்கானிக்தான்' என்று வந்து வண்டியில் ஏறியவர்கள் எத்தனை பேர்!

இப்படி நம்மைச்சுற்றிப் பார்த்தால் பலப்பல க்ளோன்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு தரத்தில், விலையில் தங்களுடைய பொருள்கள், சேவைகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்; கௌரவமாகவோ, தட்டுத்தடுமாறியோ முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால், 'க்ளோன்' என்பது சோம்பேறிகளின் வேலை. யாரோ போட்டுவைத்த பாதையில் சவுகர்யமாகச் சென்றுவருவதைப்போல. இன்னொரு கோணத்தில் பார்த்தால், இந்த உலகில் புதிய யோசனை என்று ஏதாவது உண்டா? இதற்குமுன் யாரோ கண்டுபிடித்துவிட்டார்கள் என்பதற்காக நாம் அதைச் செய்யக்கூடாது என்று எப்படிச் சொல்லமுடியும்?

இன்றைக்கு செல்ஃபோன் விற்பனையில் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கிற சாம்சங், செல்போனைக் கண்டுபிடிக்கவில்லை. இணையத்தில் தேடல் என்றாலே கூகுள்தான் என்கிற அளவுக்குப் பெயர்பெற்ற கூகுள் நிறுவனத்துக்கு முன்பாகவும் இணையத்தில் தேடல் இயந்திரங்கள் இருந்தன, லட்சக்கணக்கானோர் ராத்திரி பகலாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிற பேஸ்புக்குக்கு முன்பாகவே சமூக வலைதளங்கள் இருந்தன... இப்போது பெருவெற்றி பெற்றிருக்கும் இந்நிறுவனங்களை வெறுமனே 'க்ளோன்'கள் என்று சொல்லிவிடமுடியுமா?

சில நிறுவனங்கள், 'க்ளோன்'களாகவே இயங்கத் தொடங்குகின்றன. ஆனால், இந்த விளையாட்டு நெடுநாள் நீடிக்காது என்று புரிந்துகொண்டு, தங்களுக்கென்று ஒரு புதுமையான சேவையை வழங்குகின்றன. அதன்மூலம் அந்தத்துறையில் புகழ்பெற்று வெற்றியடைகின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு நடிகர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார். முதல் படத்தில் ஒரு பெரிய நட்சத்திரத்தைப் பிரதியெடுத்து நடிக்கிறார். அதற்கு ஓரளவு வெற்றி கிடைக்கிறது, அடுத்தடுத்த படங்கள் வருகின்றன. இப்போதும் அவர் அதே பெரிய நட்சத்திரத்தைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தால், விரைவில் காணாமல்போய்விடுவார். தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு, தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டால் நிலைத்து நிற்பார்.

புதிய நிறுவனங்களுக்கும் அதே கதைதான். சரியான யோசனை கிடைக்காமலோ, கட்டாயத்தாலோ, வேறு காரணங்களாலோ அவர்கள் இன்னொரு வெற்றிபெற்ற நிறுவனத்தை 'க்ளோன்'செய்யவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிடுகிறது. அதன்பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக அதிலிருந்து வெளிவருகிறார்கள்; தங்களுக்கான அடையாளத்தைக் கண்டறிந்து வெற்றியடைகிறார்கள்.

இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, Coupang.

இந்நிறுவனத்தின் பெயரைக்கூட நிறைய பேர் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். தென்கொரியாவில் இயங்கிவரும் மின்வணிக நிறுவனம் இது. அமேசானுக்கெல்லாம் தண்ணிகாட்டுமளவு பிரமாதமான சேவை வழங்கி அசத்துகிறார்கள். அதற்காக, Coupangஐ அமேசானின் க்ளோன் என்று நினைத்துவிடவேண்டாம். அப்படிப்பார்த்தால், உலகிலுள்ள அனைத்து மின்வணிக நிறுவனங்களையும் அமேசானின் க்ளோன்களாக அறிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், தொடங்கப்பட்ட புதிதில் Coupang ஒரு க்ளோனாகதான் இருந்தது. அமேசானின் க்ளோனாக இல்லை, Groupon என்கிற இன்னோர் இணையச்சேவையின் க்ளோனாக. அதைப்பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், Coupang நிறுவனரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

போம்சியோக் கிம், இதுதான் Coupang நிறுவனரின் பெயர். செல்லமாக 'போம் கிம்' என்கிறார்கள். இவர் பிறந்தது தென்கொரியாவில்தான்; ஆனால், ஏழு வயதிலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதன்பிறகு, வளர்ந்தது, படித்தது எல்லாமே அமெரிக்காவில். அவ்வப்போது தென்கொரியாவுக்கு வந்துபோவதோடு சரி.

அமெரிக்காவில் கிம் பிரமாதமாகப் படித்தார். அவர் வழக்கறிஞராக வரவேண்டும் என்று அவருடைய பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் கிம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டுப் பத்திரிகை ஆரம்பிக்கப்போனார், பிறகு அங்கிருந்து இணையசேவை நிறுவனத்தில் வந்து நின்றார். நியூ ரிபப்ளிக் என்ற ஊடக நிறுவனத்தில் பயிற்சிபெற்ற கிம், 'தி கரன்ட்' என்ற பெயரில் மாணவர் இதழொன்றைத் தொடங்கி நடத்தினார். பின்னர், அதனை ஒரு பெரிய ஊடக நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அதன்பிறகு, '02138' என்ற பெயரில் இன்னொரு பத்திரிகையைத் தொடங்கினார் கிம். அது சரியாக வெற்றிபெறவில்லை. அதை இழுத்துமூடிவிட்டு, அடுத்து என்ன என்று யோசித்தபோதுதான், தென்கொரியாவில் ஒரு மின்வணிகச்சேவை நிறுவனத்தைத் தொடங்குகிற யோசனை வந்தது. 

தொடங்குவதுதான் தொடங்குகிறார், பணம் கொழிக்கிற அமெரிக்காவிலேயே தொடங்கிவிடலாமே. ஏன் தென்கொரியா? முதல் காரணம், தென்கொரியா ஏற்கெனவே கிம்முக்குப் பழக்கமான நாடு. அவர் பிறந்த நாடு. சொந்த ஊரில் தொழில் தொடங்கி வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம் எல்லாருக்குமே இருக்குமல்லவா? இரண்டாவது காரணம், அந்நாட்டின் மக்கள்தொகை குறைவு. சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அங்கே சுமார் ஐந்து கோடி மக்கள்தான் வாழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டைவிடக் குறைவு! 

அட, அப்படியானால் அங்கே இணையக்கடை ஆரம்பித்து என்ன லாபம் என்று யோசிக்கக்கூடாது. மக்கள்தொகை குறைவாக இருந்தாலும், அந்த மக்கள் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள், இணையம், மொபைல் போன்றவை தென்கொரியாவில் அதிவேக வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருந்தன. ஆனால், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் இன்னும் தென்கொரியாவுக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் வேறு சந்தைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

கிம் இதையெல்லாம் கூட்டிக்கழித்து யோசித்தார், 'தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்கிற இந்தச் சிறிய நாட்டில், பொருள்களை விரைவாகக் கொண்டுசேர்ப்பது எளிதாக இருக்கும். அதன்மூலம் மக்களை அசத்திவிட்டால், அதன்பிறகு நம்மிடமே எல்லாவற்றையும் வாங்குவார்கள்.' இந்த எண்ணத்துடன் 2010ல் கிம் தன்னுடைய புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் முதலீடு செய்தவர்கள் அமெரிக்கர்கள்தான். ஆனால், நிறுவனம் தென்கொரியாவில் செயல்பட்டது. பெயர், Coupang. பெயரைக்கேட்டதும், அந்தத்தளத்தில் அப்போது என்ன இருந்தது என்பது புரிந்துவிடும்; ஆம், கூப்பன்கள் தந்தது அந்த இணையதளம்!

உணவகங்கள், மசாஜ் பார்லர்கள் தொடங்கிப் பல்வேறு தயாரிப்புகள், சேவைகளைச் சலுகைவிலையில் பெறுவதற்கான கூப்பன்கள் இந்தத்தளத்தில் கிடைத்தன. அப்போது சர்வதேச அளவில் சிறந்துவிளங்கிய Groupon என்ற 'சலுகை'த்தளத்தின் க்ளோன்தான் அது. 

புது நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தென்கொரியா வந்த கிம், அதற்கான அலுவலகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு புரோக்கர் கிம்மை ஏற இறங்கப்பார்த்து, 'சார், நல்லா இங்கிலீஷ் பேசறீங்களே, உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? பேசாம ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலையாப் பார்த்துகிட்டு, நிம்மதியா செட்டிலாகவேண்டியதுதானே!' என்றாராம். தென்கொரிய மக்கள் அப்படித்தான். அவர்களைப் பொறுத்தவரை, எங்கேயும் வேலை கிடைக்காதவர்கள்தான் சொந்தத்தொழில் தொடங்குவார்கள்.

கிம் அமெரிக்காவில் படித்து, வளர்ந்தவர் என்பதால், இதைப்பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. தன்னுடைய நிறுவனத்தை எப்படி வளர்க்கலாம் என்பதை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தார். ஆனால், எல்லா வேலைகளையும் அவரே செய்யமுடியாதல்லவா? Coupangக்கான ஊழியர்களைத் தேடத்தொடங்கினார் கிம்.

இங்கேயும், தென்கொரியாவின் கலாசாரம் அவரை முறைத்தது. புதிய நிறுவனத்தில் வேலைக்குச்சேர்ந்து ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை. எந்தப்பக்கம் திரும்பினாலும் ஏமாற்றம். எப்படியோ ஓர் இணையதள வடிவமைப்பாளரைப் பிடித்தார் கிம். 'உங்க ஓய்வுநேரத்துல எங்க இணையதளத்தை வடிவமைச்சுக்கொடுங்க' என்று கேட்டுச் சம்மதிக்கவைத்தார். அதன்பிறகு, இணையத்தில் வேலைதேடுவோரையெல்லாம் வடிகட்டத்தொடங்கினார். அதிலிருந்து சில நல்ல நபர்களைப் பிடித்துப்போட்டார். ஒருவழியாக, Coupang இணையதளம் இயங்கத் தொடங்கியது. சலுகைகளைப் பட்டியலிட்டுவிட்டு, யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்தார் கிம்.

அதன்பிறகுதான், நிஜமான தேர்வு தொடங்கியது. அதுவரை தனக்குச் சரி என்று தோன்றியதை Coupang இணையதளத்தில் வெளியிட்ட கிம், இப்போது தன் வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், தன் தளத்தில் எதை வாங்க விரும்புகிறார்கள், அதில் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன, அவற்றை எப்படிச் சரிசெய்யலாம் என்று யோசித்தார். இதன் அடிப்படையில் Coupang தளத்தில் இடம்பெறும் விஷயங்களும், அதுசார்ந்த சேவைகளும் மாற்றியமைக்கப்பட்டன.

குறிப்பாக, இந்த இணையதளத்தில் பொருள்களை வாங்குவதே ஒரு நல்ல அனுபவமாக இருக்கவேண்டும், யார் எதை வாங்கினாலும் அதை மிகவிரைவாக அவர்களுக்குக் கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்றெல்லாம் கிம் யோசித்தார். மற்றவர்கள் சிலநாள்களில் கொடுத்த பொருள்களை இவர் ஓரிரு நாள்களில் கொடுத்தார். வந்துசேர்ந்த பொருளில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக மாற்றித்தந்தார். வாடிக்கையாளர்களை எல்லாவிதத்திலும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.

இப்போது, அவர் இன்னொரு நிறுவனத்தின் க்ளோனாக இயங்க வேண்டியதில்லை. கொஞ்சம்கொஞ்சமாக அதிலிருந்து வெளியேவந்து, Coupangஐ ஒரு தனித்துவமான நிறுவனமாகக் கட்டமைத்துவிட்டார் கிம். அவருடைய முயற்சிகளுக்கெல்லாம், வாடிக்கையாளர்கள் தோள்கொடுத்தார்கள். அவர்களுடைய ஆதரவுடன் Coupangன் சந்தைமதிப்பு அதிவேகமாக உயர்ந்தது. 

இப்போது, Groupon வகைத் தயாரிப்புகள் Coupangல் ஒரு சிறுபகுதிமட்டுமே. மற்றபடி பெருமளவு கிம் தன்னந்தனியே உருவாக்கியவை. சுருக்கமாகச்சொன்னால், ஒரு க்ளோன், கதாநாயகனாகிவிட்டான்!

(தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles