ஒற்றைக்கொம்பன்கள் 8

Wednesday, March 1, 2017

சேகரிப்புப் பழக்கத்தை டிஜிட்டல்மயமாக்கிய 'Pinterest'
சிறுவயதில் நீங்கள் எதையேனும் சேகரித்ததுண்டா? சிலர் தபால்தலைகளைச் சேகரிப்பார்கள், சிலர் பிடித்த நடிகர் மற்றும் நடிகையரின் புகைப்படங்களைச் சேகரிப்பார்கள், சிலர் இலைகளைச் சேகரிப்பார்கள், சிலர் மலர்களைச் சேகரித்து நோட்டுப்புத்தகத்தில் அழுத்திவைப்பார்கள், சிலர் வெளிநாட்டு நாணயங்களைச் சேகரிப்பார்கள், பேருந்துப் பயணச்சீட்டுகள், ஐஸ்க்ரீம் குச்சிகளைச் சேகரிப்பவர்கள் கூட உண்டு.

சிறுவயதில் தொடங்கும் இந்தப்பழக்கத்தைச் சிலர் வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறார்கள். இதற்காகப் பெரும் உழைப்பையும் பணத்தையும், முக்கியமாக, நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, 'இதிலென்ன இருக்கிறது?' என்று தோன்றும். ஆனால், சேகரிப்பாளர்களுக்கு அது ஓர் அலாதியான மகிழ்ச்சியைத் தருகிறது. தாங்கள் சேகரித்துள்ள விஷயங்களைப் பிறரிடம் காண்பிப்பதும், ஒத்த கருத்துள்ளவர்களுடன் அந்தச் சேகரிப்புகளைப் பகிர்ந்துகொள்வதும், அதிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதும் ஒரு சுவையான விளையாட்டைப் போலாகிவிடுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒருவர் பழைய பத்திரிகைகளைச் சேகரிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் சென்று, '1940கள்ல தமிழ்ல குழந்தைன்னு ஒரு பத்திரிகை வந்தது, தெரியுமா?' என்று (கற்பனையாகக்) கேட்டுவிட்டால் போச்சு, ஒரே நேரத்தில் அவர் கண்ணில் மகிழ்ச்சியும் வருத்தமும் தென்படும். 'அட, நாம் சேகரிக்க ஒரு புதுப்பத்திரிகை' என்று மகிழ்வார், 'அடடா, இந்தப் பத்திரிகை என்னுடைய சேகரிப்பில் இல்லையே' என்று வருந்துவார்.

அதேபோல், விதவிதமான மலர்களைச் சேகரிக்கும் ஒருவர் அம்மலர்களை ஒரு கண்காட்சியாக வைக்கிறார். அதற்குப் பலர் வந்துசெல்கிறார்கள். 'இப்படியெல்லாம் ஒரு பூ இருக்கா? கேள்விப்பட்டதே இல்லை சார்!' என்று வியப்பதையும், அவர்களுடைய பாராட்டுகளையும் மகிழ்வோடு பார்க்கிறார் அவர். பின்னர் மலர்களைப்பற்றி ஆய்வுசெய்கிறவர்கள் அவரைத் தேடி வருகிறார்கள், தங்களுடைய தேவையைச்சொல்லி அவரிடம் பதில் பெறுகிறார்கள். 'இந்தத்துறையில் இவர் பெரிய ஆள், எந்தக் கேள்வியென்றாலும் இவரைக் கேட்கலாம்' என்று வியப்போடு பார்க்கிறார்கள்.

ஆக, விதவிதமான பொருள்களைச் சேகரிப்பதென்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது ஒருவருடைய அடையாளமாக, அவரது செயல்பாடுகளை, மகிழ்வை, திருப்தியைத் தீர்மானிக்கும் காரணியாக, அவருக்குப் பாராட்டைப் பெற்றுத்தரும் ஒன்றாக மாறக்கூடும். ஆனால், அவர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்துத் தங்களுடைய சேகரிப்பைத் தொடங்குவதில்லை, விளையாட்டாக ஆரம்பிக்கிறார்கள், பின்னர் அது படிப்படியாகத் தானே வளர்ந்துகொள்கிறது.

இப்படிதான் அயோவாவில் பென் சில்பெர்மன் என்ற சிறுவன், பூச்சிகளையும் தபால்தலைகளையும் சேகரிக்கத்தொடங்கினான். தான் சேகரித்தவற்றையெல்லாம் ஒரு கனமான அட்டையில் குத்திவைத்தான். பென்னின் தந்தை, தாய் இருவருமே மருத்துவர்கள்; அவனும் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் படித்துக்கொண்டிருந்தான். ஆனால் ஏனோ, அவனுடைய ஆர்வம் மருத்துவத்துறையில் செல்லவில்லை. தொழில்நுட்பத்தைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினான் அவன். அதற்காக, கூகுளில் வேலைக்குச் சேர்ந்தான்.

'அடடே, கூகுளா?' என்று நினைக்கவேண்டாம். கூகுளில் பென் எந்தப் புரட்சியையும் செய்துவிடவில்லை. அங்கே அவருக்குத் தரப்பட்டிருந்த வேலை: வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது. ஆமாம், கால் சென்டர் வேலைதான். ஆனால், பென் அதை இழிவாகக் கருதவில்லை. என்ன இருந்தாலும் கூகுள் வேலையல்லவா! அத்துடன், பலவிதமான வாடிக்கையாளர்களுடன் தினந்தோறும் பேசுகிற அனுபவம் அவருக்குப் பிடித்திருந்தது. இந்த அனுபவம், பின்னர் அவர் சொந்தத்தொழில் தொடங்கியபோது நன்கு உதவியது.

சொந்தத்தொழிலா? கூகுளில் வேலை இருக்கும்போது எதற்கு அதெல்லாம்? 'கைநிறையச் சம்பளம்' என்கிற விஷயம் தரும் பாதுகாப்புணர்வைப் பல சமூகங்கள் முக்கியமாகக் கருதுகின்றன; ஆனால் வேறு சில சமூகங்கள், அதிலிருந்து வெளியே வந்து, நாம் சிலருக்குச் சம்பளம் தருகிறவர்களாக வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஊக்குவிக்கின்றன. கூகுள் இதில் இரண்டாவது வகை. இங்கே வேலைசெய்துவிட்டு வெளியே வந்த பலர், சொந்தத்தொழில் தொடங்கி முன்னேறியிருக்கிறார்கள் அல்லது இழுத்துமூடிவிட்டு மறுபடியும் சம்பளவேலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

இங்கே வெற்றி, தோல்விகூட இரண்டாம்பட்சம்தான். முயன்று பார்க்கவேண்டும் என்கிற துணிச்சல் இருக்கவேண்டும், எதை முயன்றுபார்ப்பது என்கிற தெளிவு இருக்கவேண்டும், அதன்பிறகு, ஆடிப்பார்த்துவிடலாம்.

பென்னுக்குக் கூகுள் மிகவும் பிடித்திருந்தது. தன்னைச்சுற்றிப் புத்திசாலிகள் எந்நேரமும் ஆர்வத்துடன் எதையேனும் செய்துகொண்டிருக்கிறார்கள், உலகை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வியப்போடு பார்த்தார், தன்னாலும் அவ்வாறு செய்ய இயலும் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்தது. ஆனால், கூகுளில் அவர் பார்த்த வேலை சாதாரணமானது, அங்கே அவரால் எதையும் பெரிதாகச் செய்துவிடமுடியாது. ஆகவே, அவர் அங்கிருந்து வெளியேறத் தீர்மானித்தார். தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

அடுத்து என்ன செய்வது?

அதுதான் தெரியவில்லை. சிலநாள் பொறுமையாக ஏதேதோ முயன்றுபார்த்தார். பால் ஸ்கியாரா என்ற நண்பருடன் இணைந்து சில இணையத்தளங்கள், மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கினார், ஒன்றும் சரிப்படவில்லை. அந்த நேரத்தில் அவர் இணையத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அங்கே இல்லாத ஒரு விஷயத்தைத் தான் உருவாக்கினால் அது வெற்றியடையும் என்று நம்பினார். அப்போதுதான், அவருடைய இளவயதுச் சேகரிப்புப் பழக்கம் அவரது நினைவுக்கு வந்தது. 'இப்படியொன்று இணையத்தில் இல்லையே!' என்று குதூகலமானார்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் தபால்தலைகளைச் சேகரிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இணையத்தில் ஏதோ படித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு புதிய தபால்தலையைப் பார்க்கிறார், அது அவருடைய சேகரிப்பில் இல்லை. சட்டென்று அவர் அந்தத் தபால்தலையைத் தன் சேகரிப்பில் இணைக்க விரும்புவார்.

இப்படிக் கொஞ்சம்கொஞ்சமாகச் சேகரித்த தபால்தலைகளையெல்லாம் அவர் பிறரிடம் பெருமையுடன் காண்பிக்க விரும்புவார். இதேபோன்ற ஆர்வம் கொண்ட மற்றவர்களுடன் உரையாட விரும்புவார், அவர்களுடைய சேகரிப்புகளைப் பார்க்க விரும்புவார், தன்னிடம் இல்லாத தபால்தலைகள் அவர்களிடம் இருந்தால், அவற்றைச் சேகரிக்க விரும்புவார், அவர்களிடம் இல்லாத தபால்தலைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புவார்... இதற்கெல்லாம் ஓர் இணையத்தளம் அன்றைக்கு இல்லை. தான் அதை உருவாக்கலாமே என்றெண்ணினார் பென்.

'இதற்கெல்லாம் ஓர் இணையத்தளம் தேவையா?' என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆரம்பத்தில் பலரும் அப்படிதான் நினைத்தார்கள். குறிப்பாக, முதலீட்டாளர்கள் 'இதெல்லாம் சரிப்படாது' என்று ஒதுங்கிச்சென்றார்கள். ஆனால், பென் நம்பிக்கை இழக்கவில்லை. பால் ஸ்கியாரா, எவான் ஷார்ப் ஆகியோருடன் இணைந்து Pinterest என்ற பெயரில் அந்த இணையத்தளத்தை உருவாக்கினார். மூவரும் அதனை மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள்.

முன்பு கூகுளில் பணியாற்றியபோது பலவிதமான வாடிக்கையாளர்களிடம் பேசிய அனுபவத்தைப் பெற்றிருந்த பென், இப்போது பின்ட்ரெஸ்ட் இணையத்தளத்தைப் பிரபலமாக்குவதற்கும் அதே வழிமுறையைப் பயன்படுத்தத் தீர்மானித்தார். அதாவது, வாடிக்கையாளர்களை நேரடியாக அணுகுவது, தங்கள் தளத்தின் பயன்பாட்டைப்பற்றிச்சொல்வது, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது, அதன்மூலம் இணையத்தளத்தையும் மேம்படுத்தலாம், அவர்களுடைய நண்பர்களையும் எளிதில் சென்றடையலாம்.

இதற்காக, சுமார் ஐந்தாயிரம் பேரிடம் நேரடியாகப் பேசினார் பென். அவர்களிடம் தன்னுடைய மொபைல் எண்ணைக் கொடுத்து அழைக்கச்சொன்னார். அவர்கள் இத்தளத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அறிந்துகொண்டார், அதன்மூலம், தாங்கள் சரியான திசையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என உறுதியானார்.

பின்ட்ரெஸ்ட் தளம் அடிப்படையில் மிக எளிமையானது: உங்களுக்குப் பிடித்த படங்களைச் சேகரிக்கலாம், அவற்றைத் தனித்தனித் தலைப்புகளில் தொகுத்துவைக்கலாம், அவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம், பிறருடைய சேகரிப்புகளைப் பின்பற்றலாம். அதாவது, அவர்கள் புதிய படங்களைச் சேகரிக்கையில் அவற்றை உடனுக்குடன் பார்க்கலாம். அவ்வளவுதான்.

மறுபடியும், 'இதற்கு ஓர் இணையத்தளமா?' என்று தோன்றுகிறதுதானே? பென் தொடர்புகொண்ட பலரும் இப்படிதான் நினைத்தார்கள். பெரும்பாலானோர் அவருடைய மின்னஞ்சலில் இருந்த இணைப்பை ’க்ளிக்’ செய்யக்கூட இல்லை. ஆனால், அப்படி க்ளிக் செய்து பின்ட்ரெஸ்ட் இணையத்தளத்துக்கு வந்தவர்களுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. பென் எப்படிச் சிந்தித்து அந்த இணையத்தளத்தை உருவாக்கியிருந்தாரோ, அதேபோல் அவர்கள் அதனைப் பயன்படுத்தினார்கள்.

காரணம், நம் எல்லாருக்குள்ளும் 'சேகரிக்கிற' ஆசை இருக்கிறது. நிஜமாகப் பொருள்களைச் சேகரித்து ஒட்டிவைப்பதற்குப்பதிலாக, இணையத்தில் படங்களைத் தொகுக்கிறோம், அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி சேகரித்தல், பிறரிடம் காண்பித்துப் பெருமைப்படுதல், பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய விருப்பங்கள் எல்லாருக்கும் உண்டு.

பின்ட்ரெஸ்ட் இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஓர் எளிய வடிவமைப்பில் சேகரிப்புகளை அழகாகக் காண்பித்துப் பயனாளர்களைக் கவர்ந்தார்கள். அவர்களும் அங்கே லட்சக்கணக்கில் படங்களைத் தொகுக்கத்தொடங்கினார்கள்.

இன்றைக்கு, பின்ட்ரெஸ்ட் உலகின் மிகப்பெரிய படச்சேகரிப்பாகத் திகழ்கிறது. வீடு கட்டுகிறவர்கள் 'எப்படி ஜன்னல் வைக்கலாம்?' என்று யோசித்தாலும் சரி, திருமணம் செய்துகொள்கிறவர்கள், 'அழைப்பிதழை எப்படி வடிவமைக்கலாம்?' என்று யோசித்தாலும் சரி... பின்ட்ரெஸ்டில் வந்து தேடினால் ஆயிரக்கணக்கில் படங்களைப் பார்க்கலாம், இவை அனைத்தும், உலகெங்கும் உள்ள பின்ட்ரெஸ்ட் உறுப்பினர்கள் சேகரித்தவை. இப்படிச் சேகரிக்கிறவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைக்கிறார்கள், இவர்களுடைய சேகரிப்புகளை ரசித்துப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள். காசு கொடுத்து வாங்குகிறார்கள்.

கணினியில் மட்டுமின்றி செல்போன் வழியேயும் சேகரிக்கிற வசதிகள் வந்ததால், இன்னும் அதிகப்பேர் பின்ட்ரெஸ்டை ஆர்வத்துடன் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பல்வேறு தலைப்புகளில் விதவிதமான படங்கள் சேகரிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள், பெரிய நிறுவனங்கள்வரை எல்லாரும் பின்ட்ரெஸ்டில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ரசிகர்களைப் பார்த்துதான் முதலீட்டாளர்கள் விழித்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் 'இதெல்லாம் சரிப்படாது' என்று ஒதுக்கப்பட்ட பின்ட்ரெஸ்டின் சந்தைமதிப்பு படிப்படியாக அதிகரித்தது. அதற்கேற்ப பின்ட்ரெஸ்ட் பயனாளர்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் பழைய 'சேகரிப்பு'ப் பழக்கம், டிஜிட்டல் வடிவில் பின்ட்ரெஸ்ட்க்குப் பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

(தொடரும்)

என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles