ஒற்றைக்கொம்பன்கள் - 12

Wednesday, May 31, 2017

மனிதன் எப்போது முதன்முதலாக ஆவணமெழுத ஆரம்பித்திருப்பான்?

எழுத்துகளோடு, ஏன், அதற்கு முன்பாகவே ஆவணங்கள் பிறந்துவிட்டன என்றுகூட வாதிடலாம். ஆதிமனிதனின் குகையோவியங்களை அவனுடைய வரலாற்றுப்பதிவுகளாக, அவன் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பிய விஷயங்களாகக் கருதலாம்.

அதன்பிறகு, மத விஷயங்கள், சொத்துகளை வாங்கி, விற்றல், அரசர்களின் வெற்றிகள், நன்கொடைகள், புதிய தொடக்கங்கள் என்று பலவும் ஆவணமாக்கப்பட்டன. மனிதன் எழுதுவதற்காகப் பயன்படுத்திய குகைச்சுவர்கள், துணி, தோல், ஓலைச்சுவடி, களிமண் பலகைகள், பாறைகள், காகிதங்கள், கணினி என அனைத்திலும் ஆவணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
 
ஆனால், கணினி அறிமுகமாகிப் பல ஆண்டுகளுக்குப்பிறகும், முக்கியமான ஆவணங்கள் காகிதத்திலேயே எழுதப்பட்டன, அல்லது, கணினியில் எழுதிக் காகிதத்தில் அச்சிடப்பட்டன. குறிப்பாக, வணிக ஒப்பந்தங்கள், சொத்து விவரங்கள் போன்றவற்றுக்குக் காகிதம்தான் பெரிதும் நம்பப்பட்டது. காரணம், அந்த ஒப்பந்தத்தின் கீழ்ப்பகுதியிலிருக்கிற கையெழுத்து!
 
பேனா பிடித்துக் கையெழுத்துப்போடவோ, மையில் விரலை ஒற்றிக் கைநாட்டு வைக்கவோ காகிதம்தானே வசதி? கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
 
குப்புசாமிக்கும் கந்தசாமிக்கும் ஓர் ஒப்பந்தம் என்றால், அதை ஒரு காகிதத்தில் எழுதி இருவரும் கையெழுத்திடவேண்டும்; அதன் பிரதிகளை ஆளுக்கொன்றாக வைத்துக்கொள்ளவேண்டும்; இதுதான் நடைமுறை.
 
நாளைக்கே அந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை என்றால், அவர்களில் ஒருவர் நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அவர்கள் அந்தக் காகித ஆவணத்தைப் படித்துப்பார்த்து, அதில் இருக்கும் கையெழுத்துகள் சரியாக உள்ளனவா என்று உறுதிப்படுத்தி, அதன் அடிப்படையில் பிரச்னையைத் தீர்த்துவை
ப்பார்கள். இந்தச் சட்ட வசதிக்காகவே ஆவணங்கள் தாளில் எழுதப்பட்டன, கையெழுத்திடப்பட்டன. ஒப்பந்தம், ஆவணம் என்றவுடன் அது ஏதோ தொழிலதிபர்கள் விஷயம் என்று நினைக்கவேண்டாம். நாம் ஒவ்வொருவரும் பலருடன் ஒப்பந்தங்களைச் செய்துகொள்கிறோம், அதற்காக ஆவணங்களில் கையெழுத்திடுகிறோம்.
 
அதிகம் வேண்டாம், செல்ஃபோனுக்கு சிம் கார்ட் வாங்குவதற்காக ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்துப்போடுகிறோமல்லவா? அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், அது ஒரு சட்டப்பூர்வமான ஒப்பந்தமாகிவிடுகிறது. உங்களுடைய செல்ஃபோன் நிறுவனம் அதனைப் பத்திரப்படுத்திவைக்கும்; ஏதாவது சட்டப்பிரச்னை என்றால் அதை வெளியில் எடுக்கும்.
 
இப்படி உலகெங்கும் எத்தனை நிறுவனங்கள், எத்தனைத் தனிநபர்கள், அவர்களிடையே எத்தனைவிதமான ஒப்பந்தங்கள், அவற்றுக்கு எத்தனைத் தாள்கள் செலவாகும் என்று யோசித்துப்பாருங்கள். இத்துடன் அந்தத் தாள்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கான செலவு வேறு. அட, செலவு கிடக்கிறது. நேரப்பிரச்னையைச் சொல்லுங்கள். ஆவணத்தை எழுதி, கையெழுத்திட்டு, அனுப்பி, பத்திரப்படுத்தி... இதனால் எல்லா வேலைகளும் தாமதமாகிவிடுகின்றனவே!
 
என்ன செய்ய? ஆவணங்களின் சட்டப்பாதுகாப்பும் முக்கியமாயிற்றே. ஆவணமில்லாமல், கையெழுத்தில்லாமல் எல்லாரும் இஷ்டப்படி பணியாற்ற ஆரம்பித்தால் குழப்பமல்லவா வரும். ஆவணமில்லாமல், கையெழுத்தில்லாமல் வாழச்சொல்லவில்லை. அதற்குக் காகிதமும் பேனாவும் எதற்கு என்றுதான் யோசிக்கிறோம்.
 
காகிதம், பேனா இல்லாமல் ஆவணம் எப்படி?
 
பல ஆண்டுகளுக்குமுன்னால் இதைப்பற்றி ஒருவர் சிந்தித்திருக்கிறார். கணினியின் துணைகொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஆவணங்களில் கையெழுத்திடுகிற வழியொன்றை உருவாக்கியிருக்கிறார். அவர் பெயர், மிர் ஹஜ்மிராகா. இந்தத் தொழில்நுட்பத்துக்காகக் காப்புரிமை பெற்ற அவர், இதனைச் சந்தைப்படுத்துவதற்காக DocuTouch என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினார்.
 
1998ல் தொடங்கப்பட்ட DocuTouch பெரிய அளவில் வெற்றியடையவில்லை. காரணம், மிர் உருவாக்கிய தொழில்நுட்பம் வலுவாக இருந்தபோதும், அதனை வாடிக்கையாளர்கள் எளிதில் பயன்படுத்துகிற நிலை இல்லை. சந்தையும் இப்படியொரு மாற்றத்துக்குத் தயாராக இல்லை. சில வருடங்கள் கழித்து, DocuTouch தொழில்நுட்பத்தை NetUpdate என்ற நிறுவனம் வாங்கிவிட்டது. அவர்களும் அதைப் பெரிதாகப் பயன்படுத்தவில்லை. ஓரமாகப் போட்டுவைத்திருந்தார்கள்.
 
NetUpdate நிறுவனமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. ஆனால், அதன் நிறுவனரான டாம் கோன்ஸெருக்கு DocuTouch தொழில்நுட்பம் மிகவும் பிடித்துவிட்டது. 'இதைக் கொஞ்சம் சரிசெய்தால் வெற்றி நிச்சயம்' என்று யோசித்தார். ஆகவே, 2003ம் ஆண்டு அவர் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். DocuTouch தொழில்நுட்பங்களைத் தானே வாங்கிக்கொண்டார். DocuSign என்ற பெயரில் ஒரு புதிய சேவையாக அதனை உருவாக்கத்தொடங்கினார்.
 
அப்போதும், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கையெழுத்துக்குத் தயாராக இல்லை. 'காகிதத்தில் கையெழுத்துப்போட்டு வங்கி லாக்கரில் வைப்பதுதான் பாதுகாப்பு' என்றார்கள். டாம் அவசரப்படவில்லை. ஒருபக்கம் அவர்களுக்கு டிஜிட்டல் ஆவணங்கள், கையெழுத்திடலின் நன்மைகளை விளக்கத்தொடங்கினார்; இன்னொருபக்கம், அவர்களுடைய சந்தேகங்கள், குழப்பங்கள், கவலைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப DocuSignஐ மேம்படுத்த ஆரம்பித்தார்.
 
முதலில், DocuSign ஆவணங்களை ஏற்கிற, வழங்குகிற, பாதுகாக்கிற பகுதிகள் வலுப்படுத்தப்பட்டன. எப்பாடுபட்டாலும் அவற்றை யாரும் உடைத்துப் படித்துவிடமுடியாதபடி, நினைத்தாற்போல் மாற்றங்கள் செய்ய இயலாதபடி பத்திரப்படுத்தினார்கள். காரணம், டிஜிட்டல் கையெழுத்து என்பது சும்மா காகிதத்துக்குப்பதில் கணினி என்கிற மாற்றமல்ல. பல நிறுவனங்கள் தங்களுடைய முக்கிய ஆவணங்களையெல்லாம் DocuSignஐ நம்பித் தரவேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவர்களுடைய தொழிலே காலி.
 
ஆகவே, அவர்களுக்கு DocuSignமீது நம்பிக்கை வரவேண்டுமென்றால், டிஜிட்டல் ஆவணங்கள், கையெழுத்துகள் ஆகியவற்றைச் சேமிக்கிற தொழில்நுட்பம் மிகப் பாதுகாப்பாக இருக்கவேண்டும். உரிய நபர்களைத்தவிர மற்ற யாரும் அந்த ஆவணங்களைப் பார்க்கமுடியாது என்கிற உறுதியைப் பெறவேண்டும்.
 
இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், நாளைக்கே DocuSignல் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் ஒரு பிரச்னை என்று நீதிமன்றம் விசாரித்தால், அந்த ஆவணம் எப்படி, எப்போது, யாரால் உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி அதன்பிறகு நடந்த ஒவ்வொரு விவரமும் விரல்நுனியில் இருக்கவேண்டும். ஏதாவது தில்லுமுல்லு நடந்தால் அதை உடனே கண்டறிகிற வசதி வேண்டும். அப்போதுதான் இந்த ஆவணங்கள் சட்டப்படி செல்லும்.
 
DocuSign அடித்தளத்தை வலுவாக்குகிற அதே நேரத்தில், அதன் பயனாளர்பகுதி மிக எளிமையாக்கப்பட்டது. யார்வேண்டுமானாலும் எளிதில் ஆவணங்களை உருவாக்குகிற, கையெழுத்துக்கு அனுப்புகிற, கையெழுத்திடுகிறவண்ணம் இது அமைக்கப்பட்டது. அதற்குமுன், டிஜிட்டல் கையெழுத்துகள் என்றாலே தலைவலிதான். ஏதேதோ மென்பொருள்களை நிறுவவேண்டும். ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்துகளைச் சேர்ப்பதற்குப் பல சிக்கலான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதன்பிறகு, அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும்.
 
இவை அனைத்தையும் DocuSign மாற்றிப்போட்டது. 'நீங்கள் எந்த மென்பொருளையும் நிறுவவேண்டியதில்லை. உங்களுடைய ஆவணத்தில் கையெழுத்திடுகிறவரும் எந்த மென்பொருளையும் நிறுவவேண்டியதில்லை. உங்கள் ஆவணத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கத் தனியிடம் தேடவேண்டியதில்லை. எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றார்கள். அதாவது, உங்களிடம் இணையமும் அதை அணுகுவதற்கான Browser மென்பொருளும் இருந்தால் போதும். ஆவணங்களை வலையேற்றலாம், பாதுகாப்பாக அனுப்பலாம், கையெழுத்திடலாம், சரிபார்க்கலாம். அன்றைய தேதிக்கு இது ஒரு மிகப்பெரிய புரட்சி. காகிதத்தில் ஆவணங்களை அச்சிட்டு அனுப்பும் முறையைவிட, டிஜிட்டல் கையெழுத்திடல் பலமடங்கு வேகமானது, பாதுகாப்பானது, கூடுதல் வசதிகளை வழங்குவது.
 
எடுத்துக்காட்டாக, ஒருவர் எரிவாயு இணைப்புப் பெற விரும்புகிறார், அதற்கான விண்ணப்பத்தைப் பேனா கொண்டு பூர்த்தி செய்து கையெழுத்துப்போடுகிறார், அதனை உள்ளூர் எரிவாயுச் சேவை அலுவலகத்தில் சமர்ப்பிக்கிறார், அவர்கள் அதனைத் தங்கள் தலைமையலுவலகத்துக்கு அனுப்பிவைக்கிறார்கள், அங்கே அந்தக் கையெழுத்து உறுதிப்படுத்தப்பட்டு இணைப்பு வருவதற்குச் சில நாள்கள் ஆகிறது.
 
அதற்குப்பதிலாக, அந்த எரிவாயுச் சேவை நிறுவனம் டிஜிட்டல் கையெழுத்திடலைப் பயன்படுத்தினால்:
 
* எரிவாயுச் சேவை நிறுவனம் வாடிக்கையாளருக்கு ஒரு டிஜிட்டல் ஆவணத்தை அனுப்பிவைக்கிறது
* அவர் தன்னுடைய கணினியில் அல்லது செல்ஃபோனில் உள்ள மின்னஞ்சலில் அதை க்ளிக் செய்து படிக்கிறார். தேவையான விவரங்களை நிரப்புகிறார்
* கையெழுத்திடவேண்டிய இடத்தில் க்ளிக் செய்து கையெழுத்திடுகிறார் (அதாவது, தன் பெயரைத் தட்டச்சு செய்கிறார், அல்லது, கணினியின் மவுஸ்/செல்ஃபோனின் தொடுதிரையைப் பயன்படுத்தி நிஜமான கையெழுத்தைப்போலவே கையொப்பமிடுகிறார்)
* மறுகணம், ஆவணம் சேமிக்கப்படுகிறது. இதை இனி யாராலும் மாற்ற இயலாது
* அடுத்த சில நிமிடங்களில், அவருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது
 
இந்த இரு வழிமுறைகளையும் ஒப்பிட்டுப்பாருங்கள். சில நாள்களில் நடக்கவேண்டிய விஷயம் சில நிமிடங்களில் நடந்துவிடுகிறது. பிழைகள் குறைவு. ஆவணம் டிஜிட்டல்மயமாகி இணையத்தில் பத்திரப்படுத்தப்படுகிறது. அதை உரிய நபர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
 
இப்படிப் பலவிதங்களில் DocuSignஐ மெருகேற்றிய டாம் தனது வாடிக்கையாளர்களைச் சந்தித்து இதுபற்றிப் பேசத்தொடங்கினார். டிஜிட்டல்மயமாக்கல் எப்படி அவர்களுடைய நிறுவனத்துக்கு உதவும் என்று விளக்கினார். அவர்களைக் கொஞ்சம்கொஞ்சமாக டிஜிட்டல் ஆவணங்கள், கையெழுத்திடலுக்கு மாற்றினார். ஆரம்பத்தில் இதனைக் கொஞ்சம் சந்தேகத்துடனே அணுகிய நிறுவனங்கள், விரைவில் இதன் நன்மைகளைப் புரிந்துகொண்டன. குறிப்பாக, காகித ஆவணங்களுடன் ஒப்பிடும்போது இதிலிருக்கும் கூடுதல் வசதிகளைக் கண்டபிறகு, அவர்களால் ஒருபோதும் பழைய வழிக்குத் திரும்பச்செல்ல இயலவில்லை.
 
இதனால், DocuSign மளமளவென்று வளரத்தொடங்கியது. ஆனால், அவர்கள் அதனால் திருப்தியடைந்து அமர்ந்துவிடவில்லை. தொடர்ந்து தங்களுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார்கள். பல நாடுகளின் சட்டங்களை வாசித்துப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் தங்கள் மென்பொருளை வலுவாக்கினார்கள். பல புதுமையான சந்தைப்படுத்துதல் உத்திகளின்மூலம் ஏராளமான தனிநபர்கள், நிறுவனங்களைச் சென்றுசேர்ந்தார்கள். இப்படிப் பலவழிகளில் DocuSign வளர்ந்து பெருவெற்றியடைந்தபோதும் இதனை ஒரு நல்ல தொடக்கம் என்றுமட்டுமே கூற இயலும். இதுவரை அவர்களால் பத்தில் ஓர் ஆவணத்தைக்கூட டிஜிட்டல்மயமாக்க இயலவில்லை. பெரும்பான்மை மக்கள் இன்னும் பழைய வழிகளையே நம்பியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சென்றுசேர்வதுதான் DocuSignனின் அடுத்த இலக்கு.
 
இதற்காக, அவர்கள் பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். காகிதப் படிவங்களையெல்லாம் இணையத்துக்கு டிஜிட்டல்வடிவில் கொண்டுவருகிறார்கள். அவற்றைக் கையொப்பத்துடன் ஆவணமாக்குகிறார்கள். அந்த ஆவணத்துடன் தொடர்புடைய பிற தொழிற்செயல்முறைகளையும் எளிதில் பயன்படுத்தும்படி இணையத்தில் சேர்க்கிறார்கள். இதன்மூலம் பெரிய நிறுவனங்களைக் கவர்கிறார்கள். இதனால், வெறும் டிஜிட்டல் கையெழுத்து என்பதிலிருந்து மாறி, நவீன வணிகப் பரிமாற்றங்களைக் கையாள்கிற சேவையாக DocuSign மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே அவர்கள் வெல்வதற்கு ஒரு மிகப்பெரிய சந்தையே உள்ளது!

(தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles