ஒற்றைக்கொம்பன்கள் - 15

Friday, July 14, 2017

இந்தியாவுக்குத் தொலைக்காட்சி அறிமுகமான புதிதில், ஒரே ஒரு சானல்தான் இருந்தது. அதுவும் அரசாங்க சானல். ஆகவே, அவர்கள் ஒளிபரப்புகிற நிகழ்ச்சிகளைதான் மக்கள் பார்க்க வேண்டும். எட்டு மணிக்குச் செய்திகள் என்றால், மற்ற வேலைகளையெல்லாம் தூரப்போட்டுவிட்டுத் தொலைக்காட்சி முன்னே வந்து உட்கார வேண்டும். ஒருவேளை மறந்து விட்டால், மறுபடி எப்போது செய்திகள் வரும் என்று காத்திருக்க வேண்டியதுதான்.

பின்னர், ஒரு சானல் இருந்த இடத்தில் நான்கைந்து சானல்கள் வந்தன; தனியார் சானல்களும் போட்டிக்கு வந்தன; தொலைக்காட்சிச் சூழல் மாறத்தொடங்கியது. இன்றைக்கு, செய்திகளுக்கு மட்டும் பல சானல்கள் இருக்கின்றன. இவற்றில் நாள்முழுக்கச் செய்திகள் ஒளிபரப்பாகின்றன. ஒன்றை மறந்துவிட்டாலும் இன்னொன்றில்  பார்த்துக் கொள்ளலாம்.

செய்திகளுக்கு மட்டுமில்லை, திரைப்படங்களுக்கு, நகைச்சுவைக்கு, விளையாட்டுக்கு, ஆன்மிகத்துக்கு, சமையலுக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சானல்கள்; விரும்பியதை விரும்பியபோது பார்க்கலாம். மிகுந்த முதலீடு தேவைப்படுகிற தொலைக்காட்சி ஊடகத்திலேயே நிலைமை இப்படியென்றால், இணையத்தளங்களை யோசித்துப்பாருங்கள். நினைத்தால் யார் வேண்டுமானாலும் ஓர் இணையத்தளத்தைத் தொடங்கிச் செய்திகளை, கட்டுரைகளை வெளியிடலாம், ஆடியோ, வீடியோ பதிவுகளைப் பிரசுரிக்கலாம்.

இப்படித் தனிநபர்களும் நிறுவனங்களுமாக ஏராளமானோர் நிமிடத்துக்கு நிமிடம் புதுப்புது விஷயங்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனாலும் மக்களுடைய அறிவுப்பசி தீரவில்லை; படிப்பதற்கு இன்னும் இன்னும் விஷயங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். குறிப்பாக, செல்ஃபோன்கள் பரவலாகப் புழக்கத்துக்கு வந்தபிறகு, மக்களின் செய்தியார்வம் பலமடங்கு அதிகரித்துவிட்டது. பேருந்துக்குக் காத்திருக்கும்போது, பேருந்தில் ஏறி அமர்ந்தபிறகு, அலுவலகத்துக்கு நடக்கும்போது, லிஃப்டில் காத்திருக்கும்போது, காஃபி, சாப்பாட்டின்போது என எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இத்தனை பேர் இத்தனைவிதமாக வாசிக்கிறார்கள் என்றால், ஊடக நிறுவனங்கள் சந்தோஷப்படவேண்டும். ஆனால் அவர்களோ பெரும் கவலையில் இருக்கிறார்கள். முன்பு ஒரே ஒரு தொலைக்காட்சி சானல் இருந்தபோது, அதில் ஒரு நல்ல நிகழ்ச்சி வெளியானால் சட்டென்று வெளிச்சம் கிடைக்கும். பலரும் அதைப் பார்ப்பார்கள், அதைப்பற்றிப் பேசுவார்கள், அதுபோன்ற பல நிகழ்ச்சிகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் இப்போது பலப்பல தொலைக்காட்சி சானல்கள் வந்துவிட்டதால், எந்தச் சானலில் எதைப் பார்த்தோம் என்று யாருக்கும் நினைவிருப்பதில்லை; கிடைப்பதைப் பார்க்கிறார்கள்; அவ்வளவுதான். எதுவும் மனதில் நிற்பதில்லை. இதனால், ஊடகவியலாளர்களுக்கு எது சரி, எது தவறு, எது மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதே புரிவதில்லை. கடும் போட்டிக்கிடையில் தங்களுடைய தனித்தன்மையைக் காட்ட இயலாமல் திகைக்கிறார்கள்.

இதே பிரச்னைதான் இணையத்தளங்களுக்கும். பிரபல செய்தித்தாள்கள், பத்திரிகைகளின் இணையத்தளங்களில் தொடங்கித் தனிநபர்கள் நடத்தும் வலைப்பதிவுகள், தனியார் வலைத்தளங்கள்வரை ஏராளமானோர் ஏராளமான விஷயங்களைத் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டே இருப்பதால், யார் எதைப் படிக்கிறார்கள் என்பதே புரிவதில்லை; சரியான பதிவுகள் சரியான நபர்களைச் சென்றுசேர்வதில்லை; அதைவிட மோசம், தவறான பதிவுகள் திரையில் தோன்றி அவர்களுக்கு எரிச்சலூட்டுகின்றன. 

சுருக்கமாகச் சொன்னால், ஏராளமான இணையத்தளங்கள் பதிவுசெய்துகொண்டிருக்கிற ஏராளமான செய்திகளை வாசகர்களின் விருப்பத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தித்தரவேண்டும்; அப்போதுதான் தரமான செய்திகளுக்கு வரவேற்பு இருக்கும்; வாசகர்களும் மகிழ்ச்சியாவார்கள்; இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமானமும் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தைப்பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். அங்கே உங்களுக்குத் தெரிந்த, தெரியாத நண்பர்கள், நிறுவனங்கள் நாள்முழுக்க ஏதேதோ எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று சொல்லமுடியாது, ஆனாலும் தொடர்ந்து பார்க்கிறீர்கள்; ஒருமணிநேரம்கழித்து, உங்களுக்கு ஒரு திருப்தியே இல்லை, 'இந்த ஃபேஸ்புக்கே நேர விரயமோ?' என்று யோசிக்கிறீர்கள்.

அதற்குப்பதிலாக, ஃபேஸ்புக் உங்களுடைய விருப்பங்களைத் தெரிந்துகொண்டு, அதுதொடர்பான பதிவுகளைமட்டும் காட்டினால் எப்படியிருக்கும்? அதாவது, நீங்கள் சமையல் தொடர்பான விஷயங்களை விரும்பிப் படிக்கிறவர் என்றால், அதையெல்லாம் முன்னால் காட்டவேண்டும், உங்கள் நண்பருக்கு விளையாட்டில்தான் விருப்பம் என்றால், அவருக்கு விளையாட்டுச் செய்திகள் முன்னால் வரவேண்டும், மற்றவற்றைப் பின்னால் தள்ளிவிடவேண்டும்.

ஆனால், உங்களுடைய விருப்பங்கள் ஃபேஸ்புக்குக்கு எப்படித் தெரியும்?

நீங்கள் பார்க்கிற பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை 'லைக்' செய்வீர்கள்தானே? கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் அப்படி எந்தெந்தப் பதிவுகளை 'லைக்' செய்திருக்கிறீர்கள் என்கிற புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தால், அந்தப் பதிவுகள் எப்படிப்பட்டவை என்பதைக் கவனித்தால், இதைக் குத்துமதிப்பாகக் கண்டுபிடித்துவிடலாமில்லையா? அதன் அடிப்படையில் நீங்கள் 'லைக்' செய்யக்கூடிய பதிவுகளை அதிகமாகக் காட்டலாமில்லையா?

இப்படிப் பதிவுகளை உங்கள் விருப்பத்தின்படி ஒழுங்குபடுத்துவதால், உங்களுக்கு நேரம் மிச்சமாகும், நல்ல விஷயங்களைப் படித்தோம் என்கிற திருப்தி கிடைக்கும்; நீங்கள் அவற்றைப் படித்து 'லைக்' போடும்போது, அந்தப் பதிவுகளை எழுதிய அந்த நண்பர்களுக்கும் மகிழ்ச்சி; இப்படி நீங்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் மகிழ்ச்சி, கூடுதல் வருமானம்.

இப்போது, இதே விஷயத்தை ஃபேஸ்புக்குக்கு வெளியே அமர்ந்து யோசிப்போம்: பல இணையத்தளங்கள் பலவிதமான செய்திகளை வெளியிடுகின்றன; அவற்றைச் சும்மா உங்கள்முன்னே குவித்துவைக்காமல், உங்களுடைய விருப்பங்களைத் தெரிந்துகொண்டு சரியானவற்றைக் காண்பித்தால், நீங்கள் விரும்பிப் படிப்பீர்கள். அந்தச் செய்திகளை எழுதிப் பதிப்பித்தவர்களும், அவை சரியான வாசகரிடம் சென்றுசேர்ந்தன என்று மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால், இந்த வேலையை யார் செய்வார்கள்?

News Aggregators அல்லது Content Aggregators எனப்படும் செய்தி/உள்ளடக்கத் தொகுப்பு நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன. அதாவது, பல இடங்களிலிருந்து செய்திகளை, சுவையான பதிவுகளைத் திரட்டிவருகிறார்கள்.

வழக்கமான செய்தித்தளங்களுக்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசம்?

நம் வீட்டில் செய்தித்தாள் வாங்குவதற்கும் நூலகத்துக்குச் சென்று படிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்! செய்தித்தளம் என்றால், வீட்டில் செய்தித்தாள் வாங்குவதைப்போல. அங்கே பதிவாகியிருக்கிற செய்திகளை, பார்வைகளைத்தான் படிக்கமுடியும். அதற்குமேல் எதுவும் கிடைக்காது. ஆனால், நூலகம் அப்படியில்லை. பல செய்தித்தாள்கள் அங்கே கிடைக்கும். ஒவ்வொன்றாகப் படிக்கலாம்; இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று படிக்கலாம்; ஒப்பிடலாம். அதுபோல, இந்தச் சேகரிப்புத்தளங்கள் பல செய்தித்தளங்களிலிருந்து விதவிதமான செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்துத்தருகின்றன.

இப்போது, ஒரு படி மேலே செல்வோம்; அந்த நூலகத்தில் ஒரு நூலகர். அவர் காலை எழுந்தவுடன் எல்லாச் செய்தித்தாள்களையும் படித்துவிடுகிறார். அதன்பிறகு, அங்கே வருகிற மக்களுடைய ரசனைக்கேற்ப, 'நீங்க இந்தச் செய்தியைப் படிங்க, நீங்க அந்தச் செய்தியைப் படிங்க' என்று பரிந்துரைக்கிறார்.

வியப்பான விஷயம், 'எனக்கு இந்தவகைச் செய்திகள் பிடிக்கும்' என்று யாரும் அவரிடம் சொல்லவில்லை. நூலகத்துக்கு வருகிறவர்களைப் பார்த்துப்பார்த்து அவரே அதைப் புரிந்துகொள்கிறார், அதற்கேற்ப அவர்களுக்கு நல்ல செய்திகளை அறிமுகப்படுத்துகிறார்.

இந்த வேலையைத்தான் Toutiao என்ற இணையத்தளம் செய்யத்தொடங்கியது. இங்கே அல்ல, சீனாவில்.

Content Aggregation, அதாவது, உள்ளடக்கத் தொகுப்புத் தளங்கள் மிகப் பழையவை. அந்தப் பழைய தொழில்நுட்பத்தில் ஒரு புதுமையைச் சேர்த்தது Toutiao. Machine Learning/ Artificial Intelligence எனப்படும் இயந்திரக் கற்றல்/செயற்கை அறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாசகர்களுக்கு விருப்பமான செய்திகள், பிற பதிவுகளை அடையாளம் கண்டது. யாருக்கு எது பிடிக்குமோ அதை அதிகமாகத் தந்து ஈர்த்தது.

இதனால், பல்லாயிரக்கணக்கான சீனர்கள் வாரந்தோறும் பல மணிநேரம் இந்த இணையத்தளத்தில் மூழ்கியிருக்கிறார்களாம். அவர்கள் படிக்கப்படிக்க இன்னும் சுவையான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்தச் சேவையின் வெற்றிக்குக்காரணம், இந்த இணையத்தளம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக (Personalized) இருப்பதுதான், அதாவது, ஒருவரைப்போல் இன்னொருவருக்கு இருக்காது. எடுத்துக்காட்டாக, உங்களுடைய செய்திப்பக்கமும் என்னுடைய செய்திப்பக்கமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். நீங்கள் அதிகம் விரும்பி வாசிக்கக்கூடிய விஷயங்கள்  மட்டுமே அதில் தோன்றும்; மற்றவை தானாகக் காணாமல் போய்விடும்; நீங்கள் மேலும் மேலும் வாசிக்க வாசிக்க, Toutiaoக்கு உங்களைப்பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துவிடும், இன்னும் சிறப்பான விஷயங்களை வாசிக்கத்தரும், அந்தக் கற்பனை நூலகரைப்போலவே!

2012ம் ஆண்டு, சரியாகச் சீனாவில் மொபைல் புரட்சி அதிவேகமாகப் பரவத்தொடங்கிய நேரத்தில், Toutiaoவைத் தொடங்கியவர் ஜாங்க் யிமிங். கன்னாபின்னாவென்று செய்திகள் குவிகின்ற சூழ்நிலையில் சரியான செய்திகளைப் பொருத்தமாக வடிகட்டித்தரும் ஒரு தனித்துவமான சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று அவர் அன்றைக்குப் போட்ட கணக்கு, இப்போது நல்ல பலன் தருகிறது. ஐந்தே வருடங்களுக்குள் மிகப் பிரபலமான, நல்ல வருவாயைக் குவிக்கிற நிறுவனமாகிவிட்டது Toutiao.

இதனால், தனியே நிருபரோ ஆசிரியர் குழுவோ அமைக்காமல், இணையத்தின் மிகப்பெரிய செய்தித்தளங்களில் ஒன்றாக Toutiao உருவெடுத்திருக்கிறது. அதாவது, மற்றவர்களுடைய செய்திகளை ஒழுங்குபடுத்தித்தந்தே சம்பாதிக்கிறார்கள். அதில் அவர்களுக்கும் ஒரு பங்கு தந்துவிடுகிறார்கள்.

அடுத்தபடியாக, தனிநபர்கள், நிறுவனங்கள் Toutiaoலேயே வந்து செய்திகளை எழுதவும் வசதிகளைச் செய்துதந்திருக்கிறார்கள். அந்தச் செய்திகளை எந்த அளவு அதிகம்பேர் வாசிக்கிறார்களோ, அந்த அளவு இவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் விவசாயத்தில் நிபுணர் என்றால், அதுதொடர்பான செய்திகளை அவரே எழுதிப் பிரசுரிக்கலாம். அச்செய்திகளை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு Toutiao காட்டுகிறது. செய்தி எழுத்தாளர்களை வாசகர்களோடு இணைக்கிறது. செய்திகள்மட்டுமல்ல, வருங்காலத்தில் எல்லாமே இப்படித் தொகுக்கப்படும் சூழ்நிலை வரப்போகிறது, அல்லது, ஏற்கெனவே வந்துகொண்டிருக்கிறது. மக்கள் பத்துப் பதினைந்து தளங்களுக்குச் சென்று வேண்டியதைப் பெறுவதைவிட, தங்களுடைய விருப்பத்துக்கேற்ப சரியானவற்றைத் தானே துல்லியமாகக் கண்டறிந்து தருகிறவர்களைதான் அதிகம் விரும்புவார்கள்.

Toutiaoவின் வெற்றி, இதுபோன்ற பல Aggregator சேவைகளைத் தொடங்கிவைக்கப்போகிறது. அவற்றுள் நிஜமாகவே பயனுள்ளவற்றைச் சரியாகத் தொகுத்துத் தருகிறவர்கள் பெரிய அளவில் வெல்வார்கள்!

- (தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles