ஒற்றைக்கொம்பன்கள் - 14

Friday, June 30, 2017

ஆசைகள், எதிர்பார்ப்புகளுக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருப்பது, வசதி என்கிற சுவர். மகனைப் பெரிய பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கவேண்டும் என்று நினைக்கிறவர், பொருளாதாரக் காரணங்களுக்காகக் கிடைத்த பள்ளியில் சேர்க்கிறார். இதேபோல் பிடித்த கல்லூரி, பிடித்த வேலை, பிடித்த மாப்பிள்ளை, பெண், பிடித்த வீடு, பிடித்த வாகனம் என ஒவ்வொன்றையும் நிஜமாக்குவதும் பொய்யாக்குவதும் அவரவர் வசதிதான்.
 
 

கனவுகளுக்கும் எதார்த்தத்துக்கும் நடுவிலிருக்கிற இந்த இடைவெளியை நிரப்பத்தான் மனிதன் கடன் வாங்கும் பழக்கத்தைக் கண்டுபிடித்தான். இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் வாங்குகிறார்கள்; அதற்கு நன்றியாக, அந்தப் பணத்தைத் திரும்பத்தரும்போது கூடுதலாக ஒரு தொகையைச் சேர்த்து வட்டியும் முதலுமாகத் தருகிறார்கள்.
 
ஆரம்பத்தில் வீடு, படிப்பு, திருமணம் என்று அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்கப்பட்டது; ஆனால் இப்போது, சும்மா ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும் பெரிய தொலைக்காட்சிப்பெட்டி வாங்குவதற்கும்கூடக் கடன் கிடைக்கிறது. சிலர் இதைப்பார்த்து முகம் சுளிக்கிறார்கள், 'கடன் வாங்குவது தவறு; இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வோம்' என்பது இவர்களுடைய கட்சி.
 
இன்னொருதரப்பினர், குறிப்பாக இளைஞர்கள், 'நம்மால திருப்பித்தரமுடியும்ன்னு நம்பிக்கை இருந்தா கடன் வாங்கலாமே. என்ன தப்பு?' என்கிறார்கள். 'இது நமக்குக் கிடைக்கலையேன்னு ஏங்கிக் காத்திருக்கறதைவிட, இந்தச் சவுகர்யத்தைப் பயன்படுத்திகிட்டு அதை உடனே அனுபவிக்கறதுதான் சிறப்பு. அதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கடனைத் திரும்பக்கட்டிடப்போறோமே. அப்புறமென்ன?
 
சொல்லப்போனால், கடன் வாங்காமல் இருக்கிறவர்களைவிட, கடன் வாங்குகிறவர்கள்தான் அதிக வேகத்தோடு உழைக்கிறார்கள் என்பது இவர்களுடைய வாதம். 'எதுக்காக இல்லைன்னாலும், மாசத்தவணை கட்டணுமே, அதுக்காகவாச்சும் கஷ்டப்பட்டு வேலைபார்ப்போம், சம்பாதிப்போம், முன்னேறுவோம்’ என்கிறார்கள் இவர்கள், ‘ஊர்முழுக்கச் சின்ன, பெரிய நிறுவனங்களெல்லாம் புதுத்தொழில் ஆரம்பிக்கறதுக்குக் கடன் வாங்கறாங்க. அவ்வளவு ஏன், நம்ம நாடே நலப்பணிகளுக்காகக் கடன் வாங்குதே.'
 
இந்த விவாதம் ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்க, இன்னொருபக்கம் உள்ளூர், வெளிநாட்டு வங்கிகள் பலப்பல கடன் திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு வலைவிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். பலருடைய சம்பளத்தில் கணிசமான பகுதி கடனைத் திரும்பச்செலுத்துவதற்குதான் செல்கிறது. தகுதிக்கு மீறிக் கடன் வாங்கிவிட்டுத் திகைக்கிறவர்களும் அதிகமாகிவிட்டார்கள்.
 
'நாளைய பணத்தில் இன்றைக்கு மகிழ்ச்சியாக வாழலாம்' என்கிற இந்தத் தலைமுறையின் மனோநிலையை வங்கிகள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன; அதனைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்னும் எளிதாக்குகிற, பரவலாக்குகிற முயற்சிகள் பெருகியிருக்கின்றன.
 
எடுத்துக்காட்டாக, முன்பெல்லாம் கடன் வாங்கவேண்டுமென்றால் கட்டுக்கட்டாக ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பம் எழுதித்தந்துவிட்டுக் காத்திருக்கவேண்டும். ஆனால் இப்போது, இணையத்தில் சென்று நான்கைந்து க்ளிக்கில் விண்ணப்பித்துவிடலாம். அதுவும் ஒரு வங்கியில் அல்ல, ஒரே நேரத்தில் ஏழெட்டு வங்கிகளின் திட்டங்கள், வட்டி விகிதங்கள், நிபந்தனைகள், கட்டணங்களையெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்து ஒன்றாகவே விண்ணப்பம் அனுப்பலாம்.
 
இப்படி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றனவா மறுக்கப்படுகின்றனவா என்று தெரிந்துகொள்ள வாரக்கணக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை. சில நாட்கள், ஏன், சில நிமிடங்களில் கடன் கிடைத்துவிடும் என்கிறார்கள்!
 
இணையத்தில் ஏதேனும் ஒரு பெரிய பொருளை வாங்கலாமா என்று யோசித்தால், 'பட்ஜெட் உதைக்குதுன்னு யோசிக்காதீங்க பாஸ், உடனடிக் கடன் வசதி உண்டு' என்று ஆசைகாட்டுகிறார்கள். நிஜவுலகிலும் பெரிய சூப்பர் மார்க்கெட்கள், எலக்ட்ரானிக் கடைகளிலெல்லாம் வருகிறவர்கள், போகிறவர்களுக்குச் சில நிமிடங்களில் கடன் தருவதற்கு ஆட்கள் காத்திருக்கிறார்கள்.
 
ஆனால், இதெல்லாம் வங்கிகளுக்கு ஆபத்தில்லையோ? கடன் வாங்குகிறவர் யார், அவருடைய சம்பளம் என்ன, அவரால் கடனைத் திரும்பச் செலுத்தமுடியுமா என்றெல்லாம் யோசிக்காமல் சட்டென்று கடனைத் தூக்கிக்கொடுத்துவிட்டால் அது ஒழுங்காகத் திரும்ப வருமா?
 
இங்கேதான் தொழில்நுட்பம் வங்கிகளுக்குக் கை கொடுக்கிறது. முன்பு பல நாட்கள் நிதானமாகச் செய்த அலசலையெல்லாம் இப்போது சில நிமிடங்களில் கணினிகளின் உதவியோடு செய்துவிடுகிறார்கள். யாருக்குக் கடன் தரலாம், யாருக்குத் தரக்கூடாது என்பதில் தொடங்கி, என்ன வட்டிவிகிதம் நிர்ணயிக்கலாம் என்பதுவரை அனைத்தையும் இவை கச்சிதமாகக் கணக்கிடுகின்றன. இதனால், கடன் என்பது முன்புபோல் சிக்கலான விஷயமில்லை. பெரிய வங்கிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல, பொதுஜனங்கள்கூடத் தேவையுள்ளவர்களுக்குக் குறுங்கடன்களை வழங்கலாம். அவற்றை உரிய நபர்களிடம் சேர்ப்பிப்பது, மாதாமாதம் தவணை வசூலிப்பது என அனைத்தையும் கடன் வழங்கும் தளங்கள் பார்த்துக்கொள்கின்றன.
 
ஆக, ஒருபக்கம் கடன் வேண்டுபவர்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள், இன்னொருபக்கம் கடன் தரத் தயாராக இருக்கிறவர்களும் பெருகியுள்ளார்கள், யாருக்குக் கடன் தரலாம் என்று உறுதிசெய்கிற தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. இனி மீதமிருப்பது ஒரு விஷயம்தான்: கடன் தேவை உள்ளவர்களையும், கடன் தருமளவு பணம் வைத்திருப்பவர்களையும் இணைக்கின்ற ஒரு தளம்!
 
அப்படியொரு தளத்தைத்தான் டேவிட் ஜாலிக் உருவாக்கினார். பணத்தேவை உள்ளவர்களை, அவர்களுக்குப் பணத்தேவை ஏற்படுகிற இடத்திலேயே பிடித்து வங்கிகளுடன் இணைக்கின்ற ஒரு மொபைல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வண்ணமடிக்க விரும்புகிறார். அதற்காக ஒரு வண்ணம்பூசுபவரை வரவழைக்கிறார். அவரும் வீட்டை அளந்துபார்த்துவிட்டு இத்தனை ஆயிரம் ரூபாய் ஆகும் என்று சொல்கிறார். அதைக்கேட்டதும், வீட்டுக்காரர் முகம் மாறிவிடுகிறது. காரணம், அவரிடம் இப்போது அவ்வளவு பணம் இல்லை. ஆகவே, 'அப்புறம் பார்த்துக்கலாம்' என்கிறார்.
 
ஏன் அப்படிச் சொல்லவேண்டும்? அவர் அந்தத் தொகையைக் கடனாகப் பெறலாமே.
 
பெறலாம்தான். ஆனால் அவருக்கு இதுமாதிரி சிறிய தேவைகளுக்கெல்லாம் கடன் வாங்குகிற பழக்கம் இல்லையே. அதனால்தான் பணம் கிடைத்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்.
 
இந்த மனிதர்தான் உலகெங்கும் உள்ள வங்கிகளின் மிகப்பெரிய சந்தை: அவருக்கு ஒரு தேவை உள்ளது; அதைப் பூர்த்தி செய்யப் பணம் தேவை; ஆனால், அவரிடம் இப்போது அவ்வளவு பணம் இல்லை; அதை யாராவது தந்தார்களென்றால் விரைவில் ஒழுங்காக (வட்டியுடன்) திருப்பிச் செலுத்திவிடுவார். வண்ணம்பூசுகிற வேலையை ’அப்புறம் பார்த்துக்கலாம்' என்று அவர் சொல்கிற அந்தக் கணத்தில், வங்கிகள் அவருடைய காதருகே வந்து, 'கவலைப்படாதீங்க, உங்களுக்கு நாங்க கடன் தர்றோம்' என்று சொன்னால் எப்படியிருக்கும்!
 
இந்த இணைப்பைத்தான் டேவிட் ஜாலிக்கின் 'GreenSky' தொழில்நுட்பம் சாத்தியமாக்குகிறது. உலகெங்கும் பணத்தேவை உள்ள, ஆனால் அதற்காகக் கடன் வாங்கலாமா என்று யோசிக்காத பலரை வங்கிகளுடன் இணைத்துக் கடன் பெற்றுத்தருகிறது. ஒவ்வோராண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்கள் இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் வழங்கப்பட்டுவருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இதைவிடச் சிறப்பான ஒரு நிதித்தொழில்நுட்பம் இல்லவே இல்லை என்று வியக்கிறார்கள் நிபுணர்கள்.
 
அப்படி என்னதான் செய்கிறது GreenSky?
 
கடனைப்பற்றி யோசிக்காதவர்களுக்குப் பணத்தேவை ஏற்படும்போது பக்கத்தில் இருப்பது யார் என்று யோசித்தார் டேவிட் ஜாலிக். அவர்களை முன்வைத்து ஒரு மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கடன் வழங்குதலில் ஒரு பெரிய மாற்றத்தையே கொண்டுவந்துவிட்டார். அதாவது, ஒருவர் தன் வீட்டுக்கு வண்ணம்பூசலாம் என்று நினைக்கும்போது, 'ஆனா, பட்ஜெட் இடிக்குதே' என்று யோசிக்கும்போது அருகே இருப்பது, அந்த வண்ணம்பூசுகிறவர்தானே? அவரை வைத்து இவரை வளைத்தால் என்ன?
 
வண்ணம்பூசுகிறவர் தன்னுடைய சேவைக்கான தொகையைச் சொன்னதும், வீட்டுக்காரர் யோசிக்கிறார். 'அப்புறம் பார்க்கலாம்' என்கிறார். உடனே, அந்த வண்ணம்பூசுகிறவர், 'இந்தத் தொகைக்கு உங்களுக்கு உடனடிக் கடன் கிடைக்கும். நான் ஏற்பாடு பண்றேன்' என்கிறார்.
 
'உடனடிக்கடனா? அது எப்படி?'
 
'சொல்றேன், கொஞ்சம் உங்க டிரைவிங் லைசன்ஸைக் கொடுங்க.'
 
வீட்டுக்காரர் தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தைத் தருகிறார். வண்ணம்பூசுகிறவர் தன்னுடைய மொபைல்ஃபோனைத் திறந்து அதில் GreenSky அப்ளிகேஷனைத் திறக்கிறார். வீட்டுக்காரரின் ஓட்டுநர் உரிமத்தைப் புகைப்படம் எடுக்கிறார். இன்னும் சில விவரங்களைச் சேர்க்கிறார். 'இவருக்கு இவ்வளவு ரூபாய் கடன் தேவை' என்று அறிவிக்கிறார்.
 
உடனே, GreenSky தொழில்நுட்பம் அந்த வீட்டுக்காரர் சார்பாகப் பல வங்கிகளைத் தொடர்புகொண்டு கடன் கேட்கிறது. சில நிமிடங்களுக்குள் கடன் வழங்கப்பட்டுவிடுகிறது. அவர் தன்னுடைய வீட்டுக்கு வண்ணம்பூசத் தொடங்கலாம். மொபைல், இணைய வசதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தால், சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே லாபம்: வீட்டுக்காரர் தன்னுடைய வீட்டை விரைவில் அழகாக்கலாம், வண்ணம்பூசுகிறவருக்கு ஒரு நல்ல வேலைவாய்ப்பு உடனே கிடைக்கிறது, வங்கிக்கு ஒரு புதிய வாடிக்கையாளர் கிடைக்கிறார், இவர்களை இணைத்துவைக்கும் GreenSkyக்கும் வருவாய் உண்டு.
 
இங்கே வண்ணம்பூசுவது ஓர் எடுத்துக்காட்டுதான். இதுபோல் சிறிய, நடுத்தர வேலைகளைச் செய்யும் பலருக்கு GreenSky உதவுகிறது. அவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் பேசும்போது, யாரும் பணத்தைக் காரணம்காட்டி மறுக்கமாட்டார்கள். கைவசம் உடனடிக் கடன் இருக்கிறதே!
 
இதனால், ஏராளமான உழைப்பாளிகளின் தொழில் வளரும்; அவர்களால் GreenSkyயும் வளரும். 
 
'எங்கள் பணி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்கிறார் டேவிட் ஜாலிக். 'இன்னும் பல லட்சம் பேரை நாங்கள் சென்றுசேரவேண்டியிருக்கிறது. இனி, பொருளாதாரக் காரணங்களுக்காக எந்தப் பணியையும் யாரும் கைவிடவேண்டியதில்லை.’
 
(தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles