ஒற்றைக்கொம்பன்கள் - 6

Tuesday, January 31, 2017

பல மடங்கு பாதுகாப்புக்கு Tanium இருக்கவே இருக்கு..!

இருபது வருடங்களுக்கு முன்னால் எதேச்சையாக உருவான கூட்டணி அது.

ஓரியனுக்கு அப்போது பதினேழு வயது, பள்ளி மாணவர், அவ்வப்போது நேரம் கிடைக்கையில் தன்னுடைய தந்தை டேவிட்டின் அலுவலகத்துக்குச் சென்றுவருவார். டேவிட் BigFix என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார். அங்கேதான் ஓரியன் கணினி நிரலெழுதக் கற்றுக்கொண்டார்.

கொஞ்சநாள்கழித்து, ஓரியன் கல்லூரிக்குச் சென்றார், அதன்பிறகும், ஓய்வுநேரமெல்லாம் தந்தையின் அலுவலகமே கதி என்று கிடந்தார். அங்கே அவர் கற்றுக்கொண்ட விஷயங்களெல்லாம், கல்லூரிப்பாடங்களைவிடச் சுவையாக இருந்தன. 'எதுக்குக் கஷ்டப்பட்டு காலேஜுக்குப் போய்ப் படிக்கணும்?' என்று யோசிக்கத் தொடங்கினார் ஓரியன்.

நியாயமான கேள்விதானே, சிரமப்பட்டுக் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கியபிறகு, இப்படி ஏதோ ஒரு நிறுவனத்தில் சேர்ந்து உழைக்கத்தான் போகிறோம், அந்த வாய்ப்பு இப்போதே கைக்கு வந்திருக்கிறது, விடுவானேன்? இப்படி யோசித்த ஓரியன், கல்லூரிக்குச் செல்வதையே நிறுத்திவிட்டார், முழுநேரமாகக் கணினிகளோடு விளையாட ஆரம்பித்தார். இதனால், ஓரியனின் தாய்க்கு வருத்தம், 'இவ்ளோ தூரம் வந்தாச்சு, அந்தப் படிப்பையும் ஒழுங்கா முடிச்சுப் பட்டம் வாங்கியிருக்கலாமே' என்று ஆதங்கப்பட்டார்.

ஆனால், இந்த விஷயத்தில் ஓரியனின் தந்தை, மகனின் கட்சி. 'நீ வாடா ராஜா, உனக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்க நானாச்சு' என்று செல்லம் கொஞ்சினாரோ என்னவோ!

அரசியல், சினிமாவிலெல்லாம் வாரிசுகள் மேலே வருவதுபோலதான் தொழில்துறையிலும். தந்தை தொடங்கிய நிறுவனத்தை மகனோ, மகளோ ஏற்று நடத்துவார்கள். இதற்கு உலகம் முழுக்க ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு.

ஆனால், மற்ற துறைகளைப்போலின்றி, தொழில்துறையில் வெறுமனே 'வாரிசு' என்ற தகுதி மட்டும் போதாது, நிஜமாகவே தொழிலைத் தெரிந்துகொள்ள வேண்டும், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும், சக ஊழியர்களை அரவணைத்துச்செல்லத் தெரியவேண்டும். விற்பனை, மார்க்கெட்டிங், திறமைசாலிகளை அணிசேர்ப்பது, பலரைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது, சரியான விஷயங்களில் முதலீடு செய்வது, நிதி நிர்வாகம் என்று ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் 'வாரிசு'களுக்கு யார் சொல்லித்தருவார்கள்?

இதற்காகவே, தங்கள் தந்தை உச்சத்தில் இருக்கும்போதே வாரிசுகளும் அதே நிறுவனத்தில் சேர்ந்துவிடுவார்கள்; அவர்களைப் பார்த்துத் 'தொழில் கற்றுக்கொள்'வார்கள். இதில் இன்னொரு வசதி, தந்தைக்கு ஆதரவாக இருக்கும் அடுத்தகட்ட நிர்வாகிகள், நிபுணர் குழுவினருடன் வாரிசுகளும் பழகும் சூழ்நிலை இயல்பாக ஏற்பட்டுவிடும், அவர்களுக்கிடையே நல்லுறவு உண்டாகும். பின்னர் அந்த வாரிசு தனித்துச் செயல்படவேண்டிய நேரத்தில், இவர்கள் கைகொடுப்பார்கள்.

ஆனால், ஓரியன் விஷயத்தில் இவ்வளவு தூரம் சிரமப்படவேண்டிய அவசியமே இருக்கவில்லை. அவருடைய தந்தை டேவிட்டே நேரடியாகக் களத்திலிறங்கி, மகனுக்கு எல்லாவற்றையும் சொல்லித்தர ஆரம்பித்தார்.

'தொழில்நுட்ப விவகாரங்களில் ஆரம்பித்து, விற்பனை நுட்பங்கள், நிறுவனத்தை நடத்தும் திறமைகள் என அனைத்தையும் ஓரியனுக்குக் கற்றுத்தந்துவிட வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்' என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட டேவிட், 'நான் எவ்வளவு உயரம் சென்றேனோ, அதைவிட அதிக உயரத்துக்கு என் மகன் செல்லவேண்டும்!' என்றார்.

டேவிட் ஹிண்டவி பிறந்தது ஈராக்கில். அவருக்கு ஏழு வயதானபோது, குடும்பத்துடன் இஸ்ரேல் வந்தார், அந்நாட்டில் சிறிதுகாலம் ராணுவத்தில் வேலை செய்தார், பிறகு அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். அங்கே ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். BigFix அவருடைய இரண்டாவது முயற்சி.

BigFixல் ஓரியன் இணைந்தபோது, அவர் ஒரு டீனேஜ் இளைஞர்தான். ஆனால், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் நிறைய இருந்தது. ஒருபக்கம் தொழில்நுட்பத்தைப் பழகிக்கொண்டார், மென்பொருள் எழுதும் கலையைக் கற்றுக்கொண்டார், இன்னொருபக்கம் தந்தையுடன் ஊர் ஊராகச் சென்று வியாபார நுட்பங்களைப் பழகிக்கொண்டார்.

'பத்து வருடங்களுக்குள், ஓரியன்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை வந்துவிட்டது' என்கிறார் டேவிட். அதன்பிறகு, தைரியமாக அவருக்குப் புதிய பொறுப்புகளைத் தரத்தொடங்கினார். தந்தை, மகன் என்கிற வேறுபாட்டையெல்லாம் மறந்து இருவரும் ஒன்றாக வேலைசெய்தார்கள், இருவருக்குமிடையே இருந்த முப்பத்தைந்து வயது வித்தியாசம் கொஞ்சம்கொஞ்சமாகக் காணாமலே போனது. ஓரியன் மிக வேகமாகக் கற்றுக்கொண்டார், BigFixன் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது.

2007ம் வருடம், டேவிட்டும் ஓரியனும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்கள், அதன் பெயர், Tanium. 'சைபர்செக்யூரிட்டி' எனப்படும் கணினிப் பாதுகாப்புக்கான மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் இது.

Taniumக்கு முன்பாகவே, சந்தையில் பல கணினிப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் இருந்தன. நம்மைப்போன்ற பொதுமக்களின் கணினிகளில் தொடங்கி, பெரிய நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்கள், வியாபாரத்தைப் பற்றிய கோடிக்கணக்கான விவரங்களைச் சேமித்து வைத்திருக்கும் பெரிய வழங்கி(Server)கள்வரை அனைத்துக்கும் இந்தத் தொழில்நுட்பங்கள் தேவைப்பட்டன.

குறிப்பாக, இணையம் எங்கும் பரவிக்கொண்டிருந்த புதிய மொபைல் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், பாதுகாப்பு ஒரு மிகமுக்கியமான தேவையாகியிருந்தது. கையில் கிடைத்த கணினிகளையெல்லாம் போட்டுத்தாக்கும் வைரஸ்களில் ஆரம்பித்து, முக்கியத் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும் கணினிகளைக் குறிவைத்துத் தாக்கும் கில்லாடிகள்வரை அனைத்தையும் சமாளிக்கவேண்டியிருந்தது. அதற்காக, பாதுகாப்பு மென்பொருள்கள் மிகக்கவனமாக உருவாக்கப்பட்டன.

ஆனால், இதெல்லாம் போதவில்லை. காவலர் ஒருபடி முன்னேறினால், திருடன் நான்குபடி முன்னேறுகிற சூழல், ஒவ்வொரு நாளும் புதுப்புது வைரஸ்கள், தாக்கும் நுட்பங்கள் அறிமுகமாகிக்கொண்டிருந்தன, ஒன்றிலிருந்து தப்பித்து நிமிர்வதற்குள் இன்னொன்று தாக்கியது. அன்றைய பாதுகாப்பு அமைப்புகள் இதையெல்லாம் நன்கு கையாண்டன. ஆனால், அதற்கு அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம்தான் கொஞ்சம் பழையது.

இதனால், ஒரு பெரிய பிரச்னை முளைத்தது: வேகம்!

ஒரு நிறுவனத்தில் கணினிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவற்றினிடையிலான இணைப்புகளும் அதிகரிக்கின்றன, அவற்றை எதிரிகள் தாக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கின்றன. ஆகவே, இந்தப் பாதுகாப்பு அமைப்புகள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது. இது அந்த அமைப்புகளை மெதுவாக இயங்கச் செய்கிறது.

அதற்காக என்ன செய்யமுடியும்? பாதுகாப்பு முக்கியமாயிற்றே, பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிக்கவேண்டியதுதான்!

விமானநிலையத்துக்குச் செல்கிறோம், வாசலில் பெரிய வரிசை நிற்கிறது, எல்லாரும் பாதுகாப்புப் பரிசோதனைக்காகக் காத்திருக்கிறார்கள். அத்தனை பேரையும் தாண்டி நம்முடைய முறை வருவதற்கு அரை மணிநேரமாகிவிடுகிறது. இந்தப் பிரச்னையை எப்படிச் சரிசெய்வது? இரண்டு பரிசோதனை அதிகாரிகளுக்குப் பதிலாக நான்கு பேரை நியமிக்கலாம். ஆனால், நாளைக்கே விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மறுபடி இதேபோன்ற பிரச்னைதானே வரும்! ஆக, எண்ணிக்கையைமட்டும் மாற்றிப் பயனில்லை, அதனால் பிரச்னை முழுமையாகத் தீரப்போவதில்லை.

ஆனால், அன்றைய கணினிப் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனங்களெல்லாம் இதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். பெரிய அமைப்புகள், சிக்கலான, நவீன முறைகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பை உறுதிசெய்தார்கள். ஆனால், அடிப்படை மட்டும் மாறவில்லை. இதனால், பாதுகாப்பு அமைப்புகள் மேலும் மேலும் மெதுவாகிக் கொண்டிருந்தன.

இங்கேதான் Tanium வித்தியாசமாகச் சிந்தித்தது. பழைய சிந்தனையைப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்து மற்றவர்களோடு போட்டியிடுவதைவிட, ஒரு புதிய வழியில் கணினிகளை, மொபைல் போன்கள், தொடுகணினிகள்போன்ற பிற அமைப்புகளைப் பாதுகாத்தால் என்ன என்று யோசித்தார்கள்.

 

அதென்ன புதிய வழி?

வழக்கமான பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும், Servers எனப்படும் வழங்கிகளை மையத்தில் கொண்டிருக்கும். அவைதான் அந்த வலைப்பின்னலில் இருக்கும் எல்லாக் கணினிகளையும் கருவிகளையும் கண்காணிக்கும், வேண்டிய மாற்றங்களைச் செய்யும். Taniumலும் Servers உண்டு. ஆனால், எல்லாக் கணினிகளும் கருவிகளும் அதை மட்டுமே சார்ந்திருக்காது, அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும், பாதுகாப்பு விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளும், தேவைப்படும்போது மட்டும் Serverகளுடன் பேசும்.

கொஞ்சம் எளிமையான உதாரணத்துடன் விளக்குவதென்றால், ஊரில் திருட்டைக் குறைப்பதற்கு மேலும் மேலும் அதிகக் காவலர்களை வேலைக்குச் சேர்ப்பதைவிட, மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்ததல்லவா? அப்போதும் காவலர்கள் தேவைப்படுவார்கள், ஆனால், முன்புபோல் அதிக எண்ணிக்கையில் தேவைப்படமாட்டார்கள், அவர்கள் இல்லாத இடங்களிலும்கூட மக்களின் விழிப்புணர்வு காரணமாகப் பாதுகாப்பு நிலைநாட்டப்படும்.

கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சிந்தனையோடு Tanium தொழில்நுட்பம் உருவானது. மற்ற பாதுகாப்பு அமைப்புகளோடு ஒப்பிடும்போது இதன் வேகம் பலமடங்கு சிறப்பாக இருந்தது, பிரச்னைகளை உடனுக்குடன் கண்டறியவும் சரிசெய்யவும் முடிந்தது.

இப்படி உருவான Taniumஐ டேவிட்டும் ஓரியனும் பல பெரிய நிறுவனங்களிடம் இயக்கிக் காட்டினார்கள். அவர்கள் அமைதியாகப் பார்த்துவிட்டு, 'எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா, இது வெறும் ட்ரெய்லர்தானே? உண்மையான சாப்ட்வேரை எழுத எவ்ளோ நாளாகும்?' என்று கேட்டார்கள்.

'ஐயா, சாப்ட்வேர் ஏற்கெனவே எழுதியாச்சு, அதைத்தானே உங்களுக்கு இப்போ இயக்கிக்காட்டினோம்!'

'போங்க சார், விளையாடாதீங்க, இது சும்மா பொம்மை!' என்று அந்தப் பெரிய அதிகாரிகள் சிரித்தார்கள், 'நீங்க பாட்டுக்கு ஏதோ தட்டறீங்க, சட்டுசட்டுன்னு விடையெல்லாம் வந்து கொட்டுது, இதென்ன கூகுளா?'

ஆமாம். கூகுளைப்போல் பாதுகாப்பு விஷயங்களைச் சட்டென்று கண்டறியக்கூடிய, திருத்தக்கூடிய ஒரு மென்பொருளைதான் டேவிட்டும் ஓரியனும் உருவாக்கியிருந்தார்கள். பல ஆண்டு அனுபவத்தைக் கொட்டி உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பம், அதிவேகமாகவும் துல்லியமாகவும் இயங்கியது. அந்த வேகம், அதுவரை எந்தப் பாதுகாப்பு மென்பொருளிலும் இல்லாத அதிசயம். அதற்குக் காரணம், அவர்களுடைய புதிய சிந்தனை.

இதனால், ஆரம்பத்தில் நம்பமுடியாமல் பார்த்த நிறுவனங்களெல்லாம் இப்போது Taniumஐத் தேடிவந்தார்கள். தங்களுடைய அதிமுக்கியமான கணினிகளை, பிற அமைப்புகளை அவர்களுடைய பொறுப்பில் ஒப்படைத்தார்கள்.

இன்றைய தேதிக்கு, அமெரிக்காவின் மிகப்பெரிய நூறு நிறுவனங்களைப் பட்டியல் போட்டால், அதில் ஐம்பது பேராவது Taniumன் வாடிக்கையாளர்கள், மீதமிருக்கிறவர்களும் விரைவில் வந்துவிடுவார்கள்.

தந்தையும் மகனும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனம், இன்றைக்கு உலகுக்கே காவலனாகியிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சி!

- (தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles