ஒற்றைக்கொம்பன்கள் - 5

Friday, January 13, 2017

பல நிறுவனங்களை ஒரே இடத்தில் இயங்கவைக்கும் 'WeWork'

உங்கள் அலுவலகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது?

அலுவலகத்தில் என்ன இருக்கும்? மேசை, நாற்காலி, பேரேடுகள், சில இடங்களில் கணினி, அச்சு இயந்திரம்... இவ்வளவுதானே?

இப்படிக் கேட்டீர்கள் என்றால், நீங்கள் சென்ற தலைமுறை என்று பொருள். இன்றைய அலுவலகங்கள் எப்படியெப்படியெல்லாமோ மாறிவிட்டன.

உதாரணமாக, சில அலுவலகங்களுக்குள்ளேயே தூங்கும் இடங்களெல்லாம் இருக்கின்றனவாம், ரொம்பத் தூக்கக்கலக்கமாக இருந்தால் அங்கே போய் ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு வரலாமாம்.

இதேபோல், அலுவலகத்துக்குள்ளே பளபளா காபிக்கடை, உள்/வெளி விளையாட்டு அரங்கங்கள், நூலகம், தொலைக்காட்சிகள், உடற்பயிற்சி நிலையம் என என்னென்னவோ வந்துவிட்டது. பொழுதுபோக்கு ஏற்பாடுகளுடன், ஊழியர்கள் சமைத்துச் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகள், அவர்களுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான மையங்கள் முதலிய கூடுதல் வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை அலுவலகத்தில் இருந்தாக வேண்டும், வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போடவேண்டும் என்பதுபோன்ற விதிமுறைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. விரும்பிய நேரத்தில் வரலாம், விரும்பிய நேரத்தில் செல்லலாம், வீட்டிலிருந்தேகூட வேலை செய்யலாம்... ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முறையாகச் செய்துமுடித்தால் போதும், அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதில் முழுச் சுதந்தரம்!

இதெல்லாம் எதற்காக?

ஊழியர்கள் மகிழ்ச்சியாக வேலை பார்க்கவேண்டும், 'அலுவலகத்துக்குச் செல்வதே போர்' என்கிற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது. இந்தவிஷயத்தில், பழைய, பெரிய நிறுவனங்கள், புதிய, சிறிய நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டியிருக்கிறது. வருவாயிலோ லாபத்திலோ அல்ல, நிறுவனக் கலாசாரத்தில்.

ஒருகாலத்தில் பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்வதையே மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் விரும்பினார்கள். நிறைய சம்பளம், நிலையான வேலை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்கள்.

ஆனால் இப்போது, சம்பளத்தைக்காட்டிலும் மகிழ்ச்சியான வேலையைதான் பெரும்பாலானோர் உயர்வாகக் கருதுகிறார்கள். அதாவது, செய்கிற வேலையை விரும்பிச் செய்யவேண்டும், அதில் திருப்தி ஏற்படவேண்டும்.

பெரிய நிறுவனங்களில் என்னதான் மற்ற வசதிகள் கிடைத்தாலும், சுதந்தரம் இருக்காது, நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. இத்தனை மணிக்கு அலுவலகம் வரவேண்டும் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட நேரடியான, மறைமுகமான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கும், அவற்றுக்கு இணங்கிதான் வேலை பார்க்கவேண்டும்.

இவை எல்லாமே சிறுநிறுவனங்களில் தலைகீழாக இருக்கின்றன. பெரிய வருவாயோ வசதிகளோ இருக்காது. அதேசமயம், நினைத்ததைச் செய்யலாம், யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், இப்படியிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமா? ஏதாவது சொதப்பிவிட்டால்?

அதற்கும் இன்றைய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள், ஒரு விஷயம் சொதப்பினால் தூக்கி எறிந்துவிட்டு அடுத்த விஷயத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். ஒரே வருடத்தில் நான்கு நிறுவனங்களுக்கு மாறுவது, ஏன், நான்கு நிறுவனங்களை ஆரம்பித்து ஊத்திமூடுவதுகூட இன்றைக்குச் சர்வசாதாரணம்.

முந்தைய தலைமுறையினருக்கு இதைக்கேட்டால் பகீரென்று இருக்கும். காரணம், அவர்கள் சம்பளம், சேமிப்பு, மேலாளர்மேல் மரியாதை, நிறுவனத்தின்மீது விசுவாசம், கட்டுப்பாடு, கௌரவம் என்ற உலகத்தில் வாழ்கிறவர்கள், தோல்வியைக் கெட்டவார்த்தையாக, அவமானமாகக் கருதுகிறவர்கள்.

இன்றைய தலைமுறை வேறுவிதமாகச் சிந்திக்கிறது, தனக்குத் திருப்தி ஏற்படுவதற்காகதான் வேலை, மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம் என்று நினைக்கிறார்கள், பிறருக்காகத் தங்களை எந்தவிதமாகவும் மாற்றிக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை, 'நான் நினைக்கிறாற்போல் என்னால் வாழமுடியவில்லை என்றால், எவ்வளவு பணம், புகழ் சம்பாதித்து என்ன பிரயோஜனம்?' என்று கேட்கிறார்கள்.

இந்த மனோபாவம் பல இளைஞர்கள் மத்தியில் பரவிக்கொண்டிருப்பதால், சிறிய நிறுவனங்கள் ஏராளமாக உருவாகின்றன, 'Startupல வேலைபார்க்கறேன்' என்பது பெருமையுடன் சொல்லிக்கொள்கிற விஷயமாகிவிட்டது.

ஆகவே, பெரிய நிறுவனங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதற்கேற்ப மாறவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் திறமைசாலி இளைஞர்கள் இந்தப்பக்கம் வராமல் அந்தப்பக்கம் சென்றுவிடுவார்களே!

அலுவலக மாற்றங்களின் அரசியல் இதுதான்: அலுவலகத்துக்கு வருகிறவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும், வேலை இனிமையாக நடக்கவேண்டும், அதற்கேற்ப பணிச்சூழலை மாற்றியமைத்தால் ஊழியர்கள் இன்னும் திறமையாகச் செயல்படுவார்கள்.

Shared Office Spaces எனப்படும் அதிநவீன அலுவலகங்களை இந்த உணர்வின் ஒரு நீட்சியாகப் பார்க்கலாம். இந்தியா உள்படப் பல நாடுகளிலும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் விரும்பிப் பின்பற்றுகிற இந்த வசதியை, இப்போது எல்லா நிறுவனங்களுமே பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

அதென்ன Shared Office Space?

அலுவலகம் என்றாலே ஒரு நிறுவனம்தான், அதன் ஊழியர்கள்தான் என்று என்ன கட்டாயம்? ஒரே கட்டடத்துக்குள் பல நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஒன்றாக வேலைபார்த்தால் என்ன?

யோசித்துப்பாருங்கள்: இப்போது அலுவலகம் என்பது ஒரு பெரிய குடையின்கீழ் பல விசுவாசிகள் வாழ்கிற அமைப்பாக இருக்காது, ஒத்த சிந்தனையுள்ள பலர், வெவ்வேறு நிறுவனங்களில், வெவ்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒன்றுதிரண்டு வேலைபார்க்கிறார்கள், சிரிக்கிறார்கள், விளையாடுகிறார்கள், சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள், மறுபடி வேலைபார்க்கிறார்கள்... கிட்டத்தட்ட ஒரு கல்லூரி ஹாஸ்டல்போலதான், ஜாலியான வாழ்க்கை, ஆனால் வேலையும் முடிந்துவிடும், சம்பளமும் வந்துவிடும்.

இந்தக் கற்பனைக்குப்பின்னால், ஒரு பெரிய கலாசார மாற்றமே இருக்கிறது: வேலை என்பது மகிழ்வான விஷயம், பளு அல்ல!

Shared Office Spacesன் இன்னொரு நன்மை, இதன்மூலம் சிறிய நிறுவனங்கள்கூட, குறைந்த செலவில் தங்களுடைய ஊழியர்களுக்கு மிக நல்ல வசதிகளை வழங்கலாம், அவர்களைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டலாம்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இதை விரும்பக் காரணம், இதிலிருக்கும் நெகிழ்வுத்தன்மை. தற்போது ஐந்து பேர் வேலை செய்கிற இடத்தில், நாளைக்கே ஐம்பது பேரைச் சேர்க்கலாம், அல்லது, இரண்டு பேராகக் குறைக்கலாம், இந்த இடம் பிடிக்கவில்லையென்றால் இன்னோர் இடத்துக்கு மாறலாம், ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென்று தனியே கட்டடம் கட்டி வாடகை கொடுத்துக்கொண்டிருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லையல்லவா?

இப்போது இயல்பாகத் தோன்றுகிற இந்த விஷயம், அறிமுகமான புதிதில் எப்படிப்பட்ட அதிர்ச்சியைச் சந்தித்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் அதிர்ச்சியைதான் ஆதம் நியூமன் 2001ல் அனுபவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆதம், பணம் பண்ணவேண்டும் என்கிற நோக்கத்துடன் அமெரிக்காவுக்கு வந்தார். தன்னுடைய சகோதரியுடன் ஓர் அடுக்ககத்தில் தங்கினார்.

ஒருநாள், அவரும் அவருடைய சகோதரியும் லிப்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அதே லிப்டில் அவர்களுடன் இன்னும் சிலரும் இருந்தார்கள். ஆனால், யாரும் யாருடனும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இது ஆதமுக்குப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது, 'நீங்கல்லாம் பக்கத்துல பக்கத்துல வாழறவங்கதானே?' என்று வியப்புடன் கேட்டார்.

'ஆமா, அதுக்கென்ன?' என்றார் அவருடைய சகோதரி.

'அப்புறம் ஏன் பேசிக்க மாட்டேங்கறீங்க?'

'இங்கே அப்படிதான்!'

ஆதமுக்கு இந்த பதில் பிடிக்கவில்லை. 'நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி. இந்த அபார்ட்மென்ட்ல ஒவ்வொரு மாடியிலயும் ஒரு நண்பரைக் கண்டுபிடிச்சுப் பேசிப் பழகணும், சரியா?' என்றார்.

அடுத்த சில வாரங்களில், அவர்கள் இருவருக்கும் அந்த அடுக்ககத்தில் பல நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். அதன்பிறகு, அந்த வாழ்க்கை முன்பைவிட இனிமையாகிவிட்டது. யாரோ தெரியாதவர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை, இயந்திரத்தனம் குறைந்தது.

'இப்படி ஒவ்வோர் அடுக்ககத்திலும் வாழ்கிற மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து பழகுகிறவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்!' என்று யோசித்தார் ஆதம். அந்தச் 'சமூக அடுக்ககம்' யோசனையை பிஸினஸ் திட்டமாகத் தயாரித்து ஒரு போட்டிக்கு அனுப்பிவைத்தார்.

அந்தத் திட்டம் சென்ற வேகத்தில் நிராகரிக்கப்பட்டுத் திரும்பிவந்தது. 'ஏன்?' என்று கேட்டபோது, 'இந்த முட்டாள்தனமான திட்டத்தில் யாரும் முதலீடு செய்யமாட்டார்கள்' என்று பதில் கிடைத்தது.

அப்போதும் ஆதம் நம்பிக்கையிழக்கவில்லை. அந்தத் திட்டத்தை மூளையின் ஒருபக்கத்தில் போட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சில மாதங்கள் கழித்து, அவர் வசித்துக்கொண்டிருந்த பகுதியில் ஒரு பெரிய கட்டடம் காலியானது. அங்கே யாரும் வாடகைக்கு வரவில்லை.

அந்தக் கட்டடத்தைப் பார்த்த ஆதமுக்கு ஒரு யோசனை, 'அந்தச் சமூக அடுக்கக யோசனையைக் கொஞ்சம் மாத்தி, ஒரு சமூக அலுவலகமாச் செஞ்சா என்ன?'

உடனே, அந்தக் கட்டடத்தின் உரிமையாளரான ஜோஷ்வா கட்மனைப் பார்த்துப் பேசினார் ஆதம். 'இந்த இடத்தை ஓர் அலுவலகமாக மாற்றி, அதனைப் பல நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம்' என்று விளக்கினார், 'இது வெறும் ரியல் எஸ்டேட் யோசனை அல்ல, இதைச் சரியாகச் செய்தால், மக்கள் மகிழ்ச்சியோடு வந்து பணிபுரிகிற இடமாக மாற்றினால், நாம் பலமடங்கு சம்பாதிக்கலாம்' எனப் புரியவைத்தார்.

உதாரணமாக, அந்தக் கட்டடத்துக்கு மாத வாடகை பத்தாயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரே நிறுவனத்துக்குத் தந்தால், மாதம் பத்தாயிரம்தான் கிடைக்கும், மிஞ்சிப்போனால் பதினைந்தாயிரம், அதற்குமேல் வராது.

அதற்குப்பதிலாக, நாமே ஐம்பது இருக்கைகளை அமைக்கிறோம், நல்ல வசதிகளை, பணிச்சூழலை உருவாக்குகிறோம். பின்னர் அந்த இருக்கைகளை ஏழெட்டு நிறுவனங்களுக்குப் பிரித்துத் தருகிறோம். ஓர் இருக்கைக்கு மாதம் 1000 ரூபாய் என்று வாடகை வசூலிக்கிறோம்.

அந்தச் சிறிய நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தக் கட்டடமும் தேவையில்லை, அவர்களால் அவ்வளவு வாடகை தரவும் இயலாது. அதற்குப்பதிலாக, தங்களுக்கு வேண்டிய இருக்கைகளை மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொள்வார்கள், அதற்குரிய பணத்தைச் செலுத்திவிடுவார்கள்.

ஆனால், அந்தக் கட்டடத்தை இயக்குகிறவர்களுக்கு ஐம்பது இருக்கைகளுக்கு மாதம் ஐம்பதாயிரம் கிடைக்கும். சில இருக்கைகள் நிரம்பாவிட்டாலும், பதினைந்தாயிரம் கிடைத்த இடத்தில் முப்பதாயிரமாவது கிடைக்குமே!

இப்படி அவர் விளக்கியதும், ஜோஷ்வா இதனை ஏற்றுக்கொண்டார். அவரும் ஆதமும் மிகுவெல் மெக்கெல்வெ என்ற வடிவமைப்பு நிபுணருடன் சேர்ந்து, GreenDesk என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அந்தக் கட்டடத்தைப் பிரமாதமான அலுவலகமாக்கி, அதனைப் பலரிடம் கொண்டுசென்றார்கள்.

GreenDesk பெரிய அளவில் வெற்றியடைந்தது, ஆதமுக்கு அது பெரிய ஊக்கம் தந்தது. இன்னும் பெரிதாகச் சிந்திக்கத்தொடங்கினார்.

பின்னர் ஒருகட்டத்தில், அவர்கள் GreenDeskஐ விற்பனை செய்துவிட்டார்கள். அதன்பிறகு, ஆதமும் மிகுவெலும் சேர்ந்து WeWork என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள், பகிர்ந்துகொள்ளப்படும் அலுவலக இடங்கள் என்கிற கொள்கையைப் பிரபலப்படுத்தினார்கள்.

இதற்காக அவர்கள் பெரிதாக மெனக்கெடக்கூட இல்லை. WeWork அலுவலகங்களில் வேலைசெய்தவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு அதைப் பரப்பினார்கள், சிறந்த சேவையே நல்ல விளம்பரமானது.

ஆதமின் 'சமூக' நம்பிக்கை, மிகுவெலின் வடிவமைப்புத்திறன் இரண்டும் சேர்ந்து WeWorkஐப் பெரிய அளவில் வளர்த்தன. போட்டிக்குப் பல புதிய நிறுவனங்கள் இதே துறையில் குதித்தாலும், இவர்களுடைய அலுவலகங்கள் தனித்துவத்தோடு திகழ்ந்தன. அரைமடங்கு வாடகையை எளிதில் இருமடங்கு வாடகையாக மாற்றமுடிந்தது, லாபத்துக்கு லாபம், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி.

இன்றைக்கு, WeWork நிறுவனம் அமெரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா, கனடா, சீனா என்று 11 நாடுகளில் இயங்கிவருகிறது, நாளுக்கு நாள் அதன் சந்தை மதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தப் பணமதிப்பையெல்லாம் ஆதம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை, 'வேலைக்குப் போவது என்றாலே அது சுமைதான்' என்கிற உலகக் கருத்தை மாற்றவேண்டும், அதனை ஒரு களிப்பான அனுபவமாக மாற்றவேண்டும், அதன்மூலம் வேலையும் சிறக்கவேண்டும், திருப்தியும் பெருகவேண்டும், உலகை இன்னும் சிறந்த இடமாக்க வேண்டும். இந்தக் கனவோடுதான் WeWork இயங்கிவருகிறது, இயந்திரப் புரட்சிபோல், இது அலுவலகச்சூழல் புரட்சி! 

- (தொடரும்)

என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles