ஒற்றைக்கொம்பன்கள் - 7

Thursday, February 16, 2017

இணையத்திற்கு இசையை இழுத்துவந்த 'Spotify' !வீட்டிலோ அலுவலகத்திலோ ஒரு முக்கியமான வேலை, அதைப் பதற்றமின்றிச் செய்ய வேண்டுமென்றால், பின்னணியில் சில பாடல்களை ஓடவிடவேண்டும். அதிகாலை நடையா, வெளியூர் செல்கிறோமா, காதுக்குள் நல்ல இசை ஒலிக்கவேண்டும்.

அலுவலகத்துக்கு நெடுந்தூரம் காரை ஓட்டிச்செல்ல வேண்டியிருக்கிறதா, விதவிதமான பாடல்களைச் சத்தமாகக் கேட்டபடி சென்றால்தான் சுகமாயிருக்கிறது. திருவிழாவா, திருமணமா, பிறந்தநாள் விழாவா, நண்பர்களுடன் பார்ட்டியா, அங்கெல்லாம் பாடல்கள்தான் முக்கியக் கொண்டாட்டம். சூப்பர் மார்க்கெட்டில் மளிகைசாமான் வாங்கும்போதும் சரி, ஷாப்பிங் மாலில் ஆடைகளைப் புரட்டும்போதும் சரி, பின்னணியில் வாத்திய இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த இசை எங்கிருந்து வருகிறது?

இது தத்துவார்த்தக் கேள்வியல்ல, எதார்த்தமாகவே யோசிப்போம், இத்தனை இசையும் எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது?

ஆரம்பத்தில் பென்னம்பெரிய இசைத்தட்டுகளில் பாடல்களை வாங்கினோம், பின்னர் கேஸெட்கள் எனப்படும் ஒலிநாடாக்களில் அவற்றை வாங்கிப் பலமுறை கேட்டோம், சிடிக்கள் எனப்படும் குறுந்தகடுகள் மற்றும் யுஎஸ்பி குச்சிகளில் வாங்கிப் பத்திரப்படுத்தினோம், இப்போது அந்தப் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன.

கவனியுங்கள், 'வாங்கினோம்' என்பது போய், 'கிடைக்கின்றன' என்றாகிவிட்டது. யூட்யூபில் தொடங்கிப் பலப்பல தளங்களில் இந்தப் பாடல்கள் எளிதாகக் கிடைக்கின்றன, அவற்றை விருப்பம்போல் தரவிறக்கம் செய்து கணினியில், செல்பேசியில் கேட்கிறோம். இதற்காக நாம் ஒரு பைசா செலவழிப்பதில்லை, எல்லாமே இலவசம்தான்.

ஆனால், இப்படி எல்லாரும் பாடல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொண்டால், இந்தப் பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், பாடகர்கள், இவற்றை வெளியிடும் நிறுவனங்களுடைய நிலைமை என்னவாகும்?

அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? திரைப்படங்கள்கூட வெளியான தினத்தன்றே இணையத்தில் இலவசமாகக் கிடைத்துவிடுகிறபோது, பாடல்களெல்லாம் எம்மாத்திரம்!

சமீபத்தில் ஒரு பெரிய திரைப்படத்தின் வெளியீட்டுக்குச் சிலநாள் முன்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தைக் கண்டபடி வசைபாடினார், 'இவர்கள் எங்கள் பிழைப்பைக் கெடுக்கிறார்கள்' என்பதுதான் அவருடைய பேச்சின் சாரம். அவர் சொல்வது சட்டப்படி சரிதான். ஆனால், ஆச்சர்யமான விஷயம், மக்களில் யாரும் அவர்பக்கம் நிற்கவில்லை, அவரைப்பார்த்துச் சிரித்தார்கள், அந்த இணையதளத்துக்கு வாழ்த்துகள் குவிந்தன.

சாலையில் ஒருவருடைய கைப்பையை இன்னொருவன் பிடுங்கிச்சென்றால் நாம் அந்தத் திருடனை வாழ்த்துவோமா? 'திருட்டுப்பயலே' என்று திட்டமாட்டோமா? பிடித்துக் காவல்துறையில் ஒப்படைக்கமாட்டோமா? இதுவும் அதுபோன்ற திருட்டுதானே? நூறு ரூபாய் திருடியவனுக்குத் தர்ம அடி போடுகிற சமூகத்தில், ஒருவர் கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கிற படத்தைத் திருடி வெளியிடுபவர்களுக்கு இப்படியோர் ஆதரவா!

கேட்டால், திரையரங்குகளில் கட்டணம் அதிகம், பாப்கார்ன் விலை அதிகம், சினிமாக்காரர்கள் வெளிநாட்டுப் படங்களைத் திருடுகிறார்கள் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்கிறார்கள். அதெல்லாம் உண்மையென்றால் படம் பார்க்காமல் இருந்துவிடலாமே, ஏன் திருடவேண்டும், ஏன் திருட்டை ஊக்குவிக்கவேண்டும்? அந்த அளவுக்கு நாம் அநியாயவாதிகளாகிவிட்டோமா?

கஷ்டப்பட்டு உழைத்து ஒரு படைப்பை உருவாக்கியவர், 'இதைத் திருடாதீர்கள்' என்று சொல்லும்போது நாம் அவரைப்பார்த்துச் சிரிக்கிறோம் என்றால், படைப்பாளிகள் நிலைமை என்னவாகும்? இனி யார்தான் படைக்க முன்வருவார்கள்? இன்றைக்குத் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சந்திக்கிற இதே சவாலை தான், பல ஆண்டுகளுக்குமுன் இசைத்தயாரிப்பாளர்கள் சந்தித்தார்கள், அவர்கள் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கிய இசைத்துணுக்குகளெல்லாம் பலப்பல இணையத்தளங்களில் இலவசமாக வெளியிடப்பட்டன, ஏராளமானோர் அதைத் தரவிறக்கம் செய்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதனால், இசை நன்றாகப் பரவியது, பல புதிய ரசிகர்கள் வந்தார்கள், இசையைக் கேட்டு அனுபவித்தார்கள். ஆனால், அவர்கள் விரும்பிக்கேட்ட இசையை உருவாக்குபவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, இசைநிறுவனங்கள் இணையத்தைத் தங்களுடைய விரோதியாகவே நினைக்கத் தொடங்கின, அங்கே ஒரு பாடல் வெளியானால், அதனால் சிடி விற்பனை குறையும், தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று கருதினார்கள்.

ஆனால் இன்றைக்கு, நிலைமை தலைகீழ். ஒவ்வொரு புதுப்பாடலும் முதலில் இணையத்தில்தான் வெளியாகிறது, திருட்டுப்பிரதி அல்ல. அந்தப் பாடலைத் தயாரித்த, விநியோகிக்கும் நிறுவனமேதான் அதனை இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது, அதுவும் இலவசமாக! அதன்பிறகு, இதே இசை நிறுவனங்கள் 'எல்லாரும் இங்கே வந்து இந்தப் பாடலை இலவசமாகக் கேளுங்கள்' என்று ரசிகர்களை ஊக்குவிக்கின்றன, 'எங்கள் பாடலை இத்தனை லட்சம்பேர் கேட்டுள்ளார்கள்' என்று பெருமையோடு சொல்லிக்கொள்கின்றன.

அதெல்லாம் சரி, அத்தனை லட்சம் பேரிடமிருந்து ஒரு ரூபாயாவது கிடைக்குமா? ம்ஹூம், கிடைக்காது. அவர்கள் சிடி வாங்கப்போவதில்லை, சொல்லப்போனால், பல படங்களுக்கு சிடி வெளியாவதே இல்லை, 'எல்லாம் நெட்ல இருக்கு, வாட்ஸாப்ல வரும், கேட்டுக்கோங்க' என்று சொல்லிவிடுகிறார்கள்.

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இணையத்தைத் தங்களுடைய விரோதியாக நினைத்து ஒதுங்கிய இசைநிறுவனங்கள், இன்று அதில் தங்களுடைய பாடல்களை வெளியிடத் துடிக்கிறார்களே, ஏன்?

ஆரம்பத்தில், ரசிகர்கள் இசையை(அதாவது, கேஸட், சிடியை)க் காசுகொடுத்து வாங்கினால்தான் இசைநிறுவனங்களுக்கு வருமானம் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் இப்போது, அந்த இசையை இலவசமாகக் கொடுத்துவிட்டு, அதைவைத்து வேறுவழிகளில் சம்பாதிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு புதிய படத்தின் பாடலை இணையத்தில் கேட்கிறோம், அதற்குமுன்னே ஒரு சிறு விளம்பரம் ஒலிக்கிறது, அந்த இணையப்பக்கத்தின் மேலே, கீழே, இடப்பக்கம், வலப்பக்கம் விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன, இந்த விளம்பரங்களை வெளியிட்டோர் அந்த இணையதளத்துக்குக் காசு தருகிறார்கள், அதில் ஒரு பகுதி அந்த இசைநிறுவனத்துக்கு, இசைக்கலைஞர்களுக்குச் செல்கிறது.

உண்மையில், இது ஓர் அற்பத்தொகையாகவே இருக்கும், ஆனால் இப்படி லட்சக்கணக்கானோர், கோடிக்கணக்கானோர் அப்பாடலைப் பார்க்கும்போது, அதன்மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் கணிசமாக இருக்கும், இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் வருகிற தொகையைத் தொகுத்துப்பார்த்தால் இசைநிறுவனங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வருவாய். கஷ்டப்பட்டு சிடி விற்றுச் சம்பாதிப்பதைவிட இது எளிதல்லவா?

அதேபோல், இசை கேட்கும் இணையதளங்களில் கூடுதல் சவுகர்யங்களுக்காகப் பலர் உறுப்பினர்களாகச் சேர்கிறார்கள், இவர்கள் தரும் பணத்தை அந்த இணையதளங்கள் இசைநிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. ஆக, இணையதளங்களில் இசை இலவசம்தான், ஆனால் அதைக்கொண்டு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கலாம், அதில் ஒரு பகுதி இசைநிறுவனங்களுக்குச் செல்கிறது, இன்றைக்கு இது அவர்களுக்கு ஒரு முக்கியமான வருவாய்மூலம்.

இந்த மாற்றத்தை உருவாக்கிய முன்னோடி இணையதளங்களில் ஒன்று, Spotify! 

இணையத்தில் எத்தனையோ தளங்கள் இருக்கின்றன, அவற்றிலெல்லாம் பலப்பல பாடல்கள் இலவசமாகக் கிடைக்கின்றன, Spotifyயும் அவற்றைப்போல்தானே, இதிலென்ன விசேஷம் என்று கேட்கிறவர்கள், அநேகமாக இந்தத்தளத்தைப் பயன்படுத்தியிருக்கவே மாட்டார்கள். பாடல்களின் எண்ணிக்கை, வீச்சு, ஒலித்தரம், செலவு என அனைத்திலும் Spotify சிறந்து விளங்குகிறது. ஆனாலும், அதன் சிறப்பம்சத்தை விளக்குவது, சொற்களால் விவரிப்பது சிரமம். அப்படியொரு தனித்துவமான இசை கேட்கும் அனுபவத்தைத் தந்து ரசிகர்களை ஈர்த்துவைத்திருக்கிறார்கள்.

அட, ரசிகர்களை விடுங்கள், ஆரம்பத்தில் இசைநிறுவனங்களுக்கே இந்த விஷயம் புரியவில்லை!

பல வருடங்களுக்குமுன்னால், Spotify தொடங்கப்பட்ட புதிதில், 'எங்கள் இணையதளத்துக்காக உங்கள் பாடல்களைக் கொடுங்கள்' என்று இந்த இசைநிறுவனங்களை அணுகியிருக்கிறார்கள், அப்போது அவர்கள் யாரும் சரியாகப் பிடிகொடுத்துப் பேசவில்லையாம், 'பார்க்கலாம், பார்க்கலாம்' என்றுதான் எல்லாரும் தட்டிக்கழித்தார்களாம், 'இவங்களும் மத்தவங்களைப்போல்தானே' என்று அலட்சியப்படுத்தினார்களாம், எல்லா இணையதளங்களையும் போல் இவர்களையும் விரோதமாகவே பார்த்தார்களாம்.

பொறுமையிழந்துபோன Spotify, 'எங்க கெத்தைக் காட்டறோம் பாரு' என்று களத்தில் இறங்கினார்கள், அந்த இசைநிறுவனங்களின் பாடல்களில் சிலவற்றை (திருட்டுத்தனமாக) எடுத்துத் தங்களுடைய இணையத்தளத்தில் சேர்த்துவிட்டார்கள். பின்னர், அந்தத் தளத்தை அதே நிறுவனங்களுக்கு இயக்கிக்காட்டினார்கள்.
அதன்பிறகுதான், அந்த இசைநிறுவனங்களுக்கு விஷயமே புரிந்தது, இந்தத் தளத்தின் வழியே தங்களுடைய பாடல்கள் வெளியாவது ரசிகர்களை எந்த அளவு ஈர்க்கும் என்று தெரிந்துகொண்டார்கள், 'இவங்ககிட்ட ஏதோ வித்தியாசம் இருக்கு' என்று அவர்களுடன் கைகோத்துக்கொண்டார்கள், Spotify அதிவேகமாக வளரத்தொடங்கியது.

Spotifyயின் நிறுவனர் பெயர் டேனியல் எக். மிகச்சிறிய வயதிலிருந்தே இசையும் தொழில்நுட்பமும்தான் இவருடைய பிரியங்கள், அவை இரண்டும் சேர்ந்த ஒரு வாழ்க்கை இவருக்கு அமைந்திருப்பது பெரிய அதிசயம்தான். டீனேஜ் பருவத்தில் இணையத்தளங்களை வடிவமைப்பது, அவற்றைத் தன்னுடைய கணினியிலிருந்து இயக்குவது என தனித்தொழில் தொடங்கி நிறைய சம்பாதித்தார் டேனியல். அதன்பிறகு, சில தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார், இவரே தொடங்கி நடத்திய நிறுவனங்களும் உண்டு.

இப்படி ஏகப்பட்ட பணம் சம்பாதித்தபோதும், அவருக்கு நிம்மதியில்லை. இசை, தியானம் என்று மனத்தைத் திருப்பப்பார்த்த நேரத்தில், மார்ட்டின் லோரென்ட்ஜன் என்ற நண்பரின் அறிமுகம் கிடைத்தது. மார்ட்டினிடமும் பணம் இருந்தது, ஆனால் மகிழ்ச்சி இல்லை. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இப்படிப் பணத்தைப்பற்றி அக்கறையே இல்லாத இருவர் சேர்ந்து தொடங்கிய நிறுவனம்தான் Spotify. வருவாயைவிட, இந்தத்துறையைப் புரட்டிப்போடவேண்டும் என்ற ஆர்வம்தான் அவர்களைச் செலுத்தியது.

Google நிறுவனர்கள் தங்களுடைய நிறுவனத்துக்கு Googol என்றுதான் பெயர்சூட்ட எண்ணியிருந்தார்களாம், பின்னர் ஒரு தவறால் அது Google என்று மாறிப்போனதாம்.

Spotifyயின் கதையும் அப்படிதான். புதிதாக ஒரு நிறுவனம் தொடங்கவேண்டும் என்று தீர்மானித்த டேனியல், மார்ட்டின் இருவரும் ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொல்லி யோசித்துக்கொண்டிருந்தார்கள், அப்போது மார்ட்டின் சொன்ன ஒரு பெயர் டேனியலின் காதில் Spotify என்று விழுந்திருக்கிறது. 'ஆஹா, புதுசா இருக்கே' என்று அதையே பதிவு செய்துவிட்டார்.

அன்றைக்கு மார்ட்டின் சொன்ன உண்மையான பெயர் என்னவோ, யாருக்கும் தெரியவில்லை, இப்போது Spotify என்றால் எல்லாருக்கும் தெரியும், அப்படியோர் அதிவேக வளர்ச்சி, உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் Spotifyயில்தான் பாட்டு கேட்போம் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதனால் இசைத்துறையில் Piracy எனப்படும் திருட்டுவேலை கணிசமாகக் குறைந்துள்ளது.

அப்படி என்ன செய்தது Spotify?

பாடலைக் கேட்கிற எல்லாருமே அதனைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். 'ச்சே, என்னமா இருக்கு இந்தப் பாட்டு' என்கிற எளிய பாராட்டில் தொடங்கி, 'மச்சி, நீ இந்தப் பாட்டை அவசியம் கேட்கணும்' என்று பரிந்துரைப்பது வரை அவர்களுக்குப் பல தனித்துவமான தேவைகள் உண்டு. இவை அனைத்தையும் Spotify புரிந்துகொண்டது. அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டது, இதனால், 'எல்லாரும் சேர்ந்து நல்ல இசையைக் கேட்டுக் கொண்டாடும் ஒரு தளம்' என்ற பெயரைத் தொடக்கத்திலிருந்தே பெற்றுவிட்டது.

ஆரம்பத்தில் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் இயங்கத்தொடங்கிய Spotify, படிப்படியாக உலகம் முழுமைக்கும் பரவியது. ஒருபக்கம் ரசிகர்கள், இன்னொருபக்கம் இசைநிறுவனங்கள் என இருவரையும் திருப்திப்படுத்தும்வகையில் தன்னை உருவாக்கிக்கொண்டது. இன்றைக்கு இணையத்தில் ஏராளமான இசைத்தளங்கள் இருக்கின்றன. பெரிய தலைகளெல்லாம் இதில் நுழைந்திருக்கிறார்கள். எல்லாத்தளங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கின்றன, கிட்டத்தட்ட ஒரே இசையைத்தான் ஒலிபரப்புகின்றன.

இந்தப் போட்டிக்கிடையே, Spotify போன்ற முன்னோடிகளின் பணி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. இணையம் இசைநிறுவனங்களுக்கு எதிரியல்ல, தோழன் என்று நிரூபித்து, இசைநிறுவனங்களுக்கு வருவாய் ஈட்டித்தந்த Spotify இத்துறையின் அடுத்தடுத்த முன்னேற்றங்களைக் கூர்ந்து கவனித்து, கணித்து, முன்னேறிக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles