ஒற்றைக்கொம்பன்கள் - 17

Monday, August 21, 2017

ஒரு ட்வீட், ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போடமுடியுமா?
வெறும் 140 எழுத்துகள். அதை எழுதி ஒருவர் கோடீஸ்வரரானார். இந்த நூற்றாண்டில்மட்டுமே நிகழக்கூடிய அதிசயம் இது. உண்மையில் ஒரு ட்வீட்டால் யாரும் கோடீஸ்வராக இயலாதுதான். அந்த ட்வீட்டை எழுதியவர் அதன்பிறகு நிறைய உழைத்துதான் பெரிய நிலைக்கு வந்தார். ஆனாலும், அந்த ஒரு ட்வீட் அவருடைய பணிவாழ்க்கையைத் திருப்பிப்போட்டது உண்மை.

அவர் பெயர் ரயான் க்ரேவ்ஸ். 2010ல் அந்தப் புகழ்பெற்ற ட்வீட்டை எழுதியபோது அவருக்கு வயது இருபத்தேழுதான். அப்போது அவர் ஏதோ ஒரு நிறுவனத்தில் ஒரு சிறிய வேலையில் இருந்தார், நல்ல திறமைசாலிதான், ஆனால், அதை நிரூபிப்பதற்கு நல்ல வாய்ப்பு ஏதும் அமைந்திருக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் ரயான் அந்த ட்வீட்டைப் பார்த்தார்:

'ஒரு புதிய நிறுவனம், இடம் அடிப்படையிலான சேவை, இன்னும் சந்தைக்கு வரவில்லை, ஆனால், இதில் பெருந்தலைகள் முதலீடு செய்திருக்கிறார்கள். இதை ஏற்று நடத்த ஒரு நல்ல மேலாளர் தேவை. யாராவது ஆட்டத்துக்கு வருகிறீர்களா?'

இங்கே ஓரளவு தூய்மையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற இந்த ட்வீட், உண்மையில் கொச்சையான ஆங்கிலத்தில்தான் இருந்தது. போதாக்குறைக்கு, எஸ்.எம்.எஸ். சுருக்கமொழி வேறு. பொதுவாக வேலைக்கு ஆள் தேவை என்று எழுதுகிறவர்கள் பந்தாவான மொழிநடையைப் பயன்படுத்துவார்கள். அப்போதுதான் திறமைசாலி ஆட்கள் புருவத்தை உயர்த்துவார்கள், நம் நிறுவனத்தைத் தேடி வருவார்கள் என்று நினைப்பார்கள்.  ஆனால், அதுபோன்ற எதிர்பார்ப்புகளெல்லாம் இன்றைய தலைமுறையில் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த ட்வீட்டை எழுதிய ட்ராவிஸ் கலானிக் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சாதாரணமாக, 'அந்த சினிமா செம போர் மச்சி' என்று எழுதுவதுபோல் இதையும் எழுதிவிட்டார்.

அதைப் படித்த ரயானும் இளைஞர். ஆகவே, மொழியைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அந்த ட்வீட்டுக்குப் பதில் எழுதினார். 'எனக்கு ஆர்வமுண்டு. மின்னஞ்சலில் பேசுவோம். விரைவில், ட்ராவிஸும் ரயானும் பேசினார்கள். ட்ராவிஸ் தொடங்கி நடத்திவந்த நிறுவனத்தில் ரயான் இணைந்தார். அவர் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்த 'சேவை'யை மேம்படுத்தத்தொடங்கினார். இங்கே 'சேவை' என்ற சொல்லை மேற்கோள்குறிக்குள் குறிப்பிடக் காரணமுண்டு. பொதுவாக இந்தச் சொல்லைத் தன்னலம் எதிர்பாராத பணி என்கிற பொருளில்தான் நாம் பயன்படுத்துகிறோம். 'சமூக சேவை' என்கிறோம், 'சேவை செய்யும் நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தார்' என்கிறோம்.

தொழிலுலகத்தில் 'சேவை' என்பதன் பொருள், 'பணி' என்பதுதான். அதற்காகக் காசு பெற்றுக்கொண்டாலும், அதன்மூலம் லாபம்பார்த்தாலும், அது சேவைதான். எடுத்துக்காட்டாக: தொலைபேசிச்சேவை, இணையச்சேவை, விமானச்சேவை. ஆக, எந்தவொரு நிறுவனமும் இரண்டுவிதங்களில் சந்தைக்கு வரலாம்: தயாரிப்புகளை வழங்கலாம், அல்லது, சேவைகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேனாக்களை விற்கிறார் என்றால், அவர் 'தயாரிப்பு'களின்மூலம் தொழில் செய்கிறார் என்று பொருள். இவற்றை Product-based Companies என்பார்கள். 

மாறாக, கண்ணால் பார்க்கமுடியாத, கையால் தொட்டுப்பார்க்கமுடியாத பணிகளின்மூலம் தொழில் செய்கிறவர்களை Service-based Companies என்பார்கள். எடுத்துக்காட்டாக, தையல்காரர் எந்தப் பொருளையும் விற்பதில்லை, தைத்தல் என்கிற சேவையைதான் விற்கிறார். ட்ராவிஸ் தொடங்கி நடத்திவந்த நிறுவனமும் இந்தச் சேவை வகையில்தான் வரும். அவர்கள் டாக்ஸி சேவையை விற்கத் திட்டமிட்டிருந்தார்கள். அதாவது, ஒருவர் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குச் செல்லவேண்டுமென்றால், தெருவில் இறங்கி ஒரு டாக்ஸியைக் கை நீட்டி நிறுத்தவேண்டும். அதற்குப்பதிலாக உட்கார்ந்த இடத்திலிருந்து டாக்ஸியை அழைத்தால் எப்படியிருக்கும்?

ட்ராவிஸின் அந்த ட்வீட்டிலிருந்த 'இடம் அடிப்படையிலான சேவை' என்ற சொற்றொடருக்கு இப்போது பொருள் புரிந்திருக்கும். ஒருவர் எந்த இடத்தில் (GPS Location) இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கேயே டாக்ஸியை அனுப்பக்கூடிய புதுமையான சேவை இது. ஆரம்பத்தில் இதற்கு ரொம்பச் செலவானது. சாதாரண டாக்ஸியைவிட இதற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கவேண்டியிருந்தது. அதேசமயம், இருக்கும் இடத்திலிருந்து டாக்ஸியை அழைக்கலாம் என்கிற சவுகர்யத்துக்காக மக்கள் அந்தக் கூடுதல் தொகையைத் தருவார்கள் என்று நினைத்தார் ட்ராவிஸ்.

அதற்குமுன் ஓரிரு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் ட்ராவிஸுக்கு உண்டு. அவற்றில் ஒரு நிறுவனம் அவரை நீதிமன்றத்துக்கே இழுத்துச்சென்றது; இன்னொரு நிறுவனத்தில் ஓரளவு சம்பாதித்தார்; அந்தத் தைரியத்தில்தான் இந்தப் புதிய முயற்சியில் இறங்கியிருந்தார். உண்மையில் இது ட்ராவிஸின் யோசனையே இல்லை. அவரோடு சேர்ந்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த கார்ரெட் காம்ப் என்பவருடைய யோசனைதான். ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, கார்ரெட்டும் அவருடைய நண்பர்களும் ஒரு காரை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அதற்கு ஏகப்பட்ட செலவாகிவிட்டது.

அப்போதிலிருந்து, 'இந்த டாக்ஸிக் கட்டணத்தைக் குறைக்க ஏதாவது வழி உண்டா?' என்று யோசித்துக்கொண்டிருந்தார் கார்ரெட். 'ஒரு காரில் பல பேர் செல்லும்போது ஆளாளுக்குக் கொஞ்சம்கொஞ்சம் பணம் தந்தால் எல்லாருக்கும் செலவு குறையுமே' என்று ஒரு யோசனை கிடைத்தது. இதுதான் பின்னர் வேறுவிதமாக மாறி 'ஊபர்கேப்' என்ற பெயரில் புதிய சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் அந்தப்பெயர் இன்னும் சுருங்கி ‘ஊபர்’ என்றானது.

'ஊபர்' டாக்ஸியின் கட்டணம் தொடக்கத்தில் அதிகமாக இருந்தபோதும், மக்கள் இதனை விரும்புவார்கள் என்று பலரும் நினைத்தார்கள். அந்த நிறுவனத்தில் முதலீடுசெய்ய முன்வந்தார்கள். அதேசமயம், இந்தச் சேவை வெற்றிபெறவேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் மிக எளிதாக ஓர் ஊபர் டாக்ஸியைப் பதிவுசெய்ய இயலவேண்டும், அவர்கள் க்ளிக் செய்கிற நேரத்தில் சட்டென்று ஒரு டாக்ஸி கிடைக்கவேண்டும், அது சரியாக அவர்கள் வீட்டு வாசலுக்கே வந்து நிற்கவேண்டும், அந்த டாக்ஸிக்கு அவர்கள் எளிதில் பணம் செலுத்துகிற சவுகர்யங்கள் வேண்டும்... இவை அனைத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்துகொண்டிருந்தார் ரயான்.

ஊபருக்கு வசதியாக, ஸ்மார்ட்ஃபோன்கள், அதிவேக இணையம், கூகுள் மேப்ஸ் என்னும் வரைபடச்சேவையின் துல்லியம் என அனைத்துமே இந்தக் காலகட்டத்தில் மேம்பட்டன. இதன்மூலம் முன்பு எப்போதுமில்லாத ஒரு சேவையை அவர்களால் வழங்க இயன்றது.

2011ம் ஆண்டு, ஊபரின் சேவை முதன்முதலாக சான்ஃப்ரான்சிஸ்கோவில் அறிமுகமானது. அதன்பிறகு, படிப்படியாக மற்ற நகரங்கள், நாடுகளுக்குச் சென்றார்கள்.

ஆனால், இப்படிப் புதிய சந்தைகளுக்குச் செல்லச்செல்ல, புதிய பிரச்னைகளும் வந்தன. ஊபரின் வருகை தங்களுடைய வருவாயைப் பாதிப்பதாகப் பலரும் நினைத்தார்கள். அவர்களுக்குப் போட்டியாகப் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. சில இடங்களில் ஊபர் நுழையமுடியாதபடி, அப்படியே நுழைந்தாலும் லாபகரமாக இயங்கமுடியாதபடி நெருக்கடிகள் தரப்பட்டன. ஊபர் தன்னுடைய ஓட்டுநர்களைச் சரியாக விசாரித்துச் சேர்ப்பதில்லை, இதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்று சர்ச்சைகள் எழுந்தன.

இன்றைக்கும் ஊபர்பற்றி நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் பலவற்றில் ஊபர்மீது தவறு இருக்கக்கூடும். அதேசமயம் டாக்ஸி சேவை என்கிற துறையை அவர்கள் புரட்டிப்போட்டது உண்மை. இனி அந்தத்துறை பழைய நிலைக்குச் செல்லவேமுடியாது. ஊபர் இல்லாவிட்டால் இன்னொருவர் இந்தப் புதிய சவுகர்யங்களை வழங்கியே தீரவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்புவரை டாக்ஸி என்றாலே அது பணக்காரர்கள்மட்டும் பயன்படுத்துகிற விஷயம் என்கிற நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, எல்லாரும் டாக்ஸியை அழைக்கலாம், ஒரு ஸ்மார்ட்ஃபோனும் இணையவசதியும் இருந்தால் நம் இருப்பிடத்துக்கே டாக்ஸியை வரவழைக்கலாம், செல்லவேண்டிய இடத்துக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் சென்றுசேரலாம். ஒரே காரைப் பலர் பகிர்ந்துகொள்ளும் வசதியைப் பயன்படுத்தினால் செலவு இன்னும் குறையும்.

ஆனால், இந்த வசதி வாடிக்கையாளர்களுக்குப் பலன் தந்ததைப்போல் ஓட்டுநர்களுக்கு, கார் உரிமையாளர்களுக்குப் பலன் தந்திருக்கிறதா? அவர்கள் லாபம்சம்பாதிக்கிறார்களா? மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

இந்தக் கேள்விக்கு நிச்சயமான பதிலைக் கண்டறிவது சிரமம். ஏராளமானோர் புதிய கார்களை வாங்கி ஊபர்போன்ற சேவைகளில் இணைந்திருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் நன்கு சம்பாதிப்பதாகவும் சொல்கிறார்கள். இன்னொருபக்கம், 'இதெல்லாம் நமக்குச் சரிப்படாது' என்று கார்களை விற்றுவிட்டுச் செல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்றைக்கு ஊபர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை இதுதான்: டாக்ஸி ஓட்டுநர்களை, உரிமையாளர்களை மகிழ்ச்சியாக வைத்தபடி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த செலவில் எளிதாக டாக்ஸி சேவையைத் தருவது எப்படி? இந்தப் புதிரைத் தீர்த்தால்தான் அவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்ல இயலும்.

இந்தவிஷயத்தில் தொழில்நுட்பம் அவர்களுக்கு உதவக்கூடும். வருங்காலத்தில் ஓட்டுநரில்லாத கார்கள் அறிமுகமாகும் என்கிறார்கள். ஊபர்போன்ற நிறுவனங்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு செலவைக்குறைக்கலாம், சேவையை மேம்படுத்தலாம். ஊபர் ஏற்கெனவே இதுபோன்ற தொழில்நுட்பங்களை ஆராயத்தொடங்கிவிட்டது. ஒரு சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட ஊபர் இன்றைக்கு உலகிலேயே மிக அதிக மதிப்புகொண்ட நவீன நிறுவனமாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அறுநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவரும் ஊபரின் இப்போதைய சந்தைமதிப்பு கிட்டத்தட்ட எழுபது பில்லியன் டாலர்.

இதன் பொருள், மக்களுக்குத் தேவையுள்ள ஓர் இடைவெளியைக் கண்டறிந்து, தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிரப்பி, அந்தத் தீர்வைச் சரியானமுறையில், சரியானவிலையில் சந்தைக்குக் கொண்டுசென்றால், அதைத் தொடர்ந்து மேம்படுத்திவந்தால், எத்தகைய போட்டிக்கு மத்தியிலும் நிச்சயம் வெற்றிபெறலாம்!

(நிறைவடைந்தது)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles