மொபைல் அப்ளிகேஷன் விமர்சனம்: AyurCare

Friday, March 31, 2017

முன்னெப்போதுமில்லாத அளவு ஆரோக்கியத்தைப்பற்றிய பார்வையும் ஆர்வமும் அதிகரித்திருக்கும் சூழ்நிலை இன்று. காரணம், இயற்கையிலிருந்து நாம் வெகுவாக விலகிச்சென்றுவிட்டோம் என்பது நமக்கே தெரிகிறது. திரும்பிவருவதற்கு நேரமும் வாய்ப்பும் இருக்குமா என்று பதற்றம்வருகிறது.

சாப்பிடுகிற அரிசியில் தொடங்கி அக்கம்பக்கத்திலிருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று யாரையும் நம்பமுடிவதில்லை. அலுவலகமும் சரி, வீடும் சரி, இயந்திரமயமாதல் அதிவேகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒண்ணாங்கிளாஸ் பையன்கள்முதல் எல்லாருக்கும் ஏதாவதொரு டென்ஷன்.

இத்தனைக்கும் நடுவே, உடலை எப்படிக் கவனித்துக்கொள்வது? ஒரு சின்னத் தலைவலி வந்தால்கூட, அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ என்று கவலைப்படுகிறார்கள் மக்கள்.

'எல்லாவற்றுக்கும் எங்களிடம் பதிலுண்டு' என்கிறது ஆங்கில மருத்துவம். விதவிதமான மாத்திரைகள், திரவங்கள், சிகிச்சைகள்... ஆனால் இவற்றால் கிடைக்கும் நிவாரணம் நிலையானதா? இவையெல்லாம் பாதிக்கப்பட்டோரைக் குணமாக்குகின்றனவா, அல்லது, அவர்களுக்கு நிரந்தரவாடிக்கையாளர்களாக்கிவிடுகின்றனவா?

இந்தக் குழப்பத்தால், நம் மக்கள் பலர் மாற்று மருத்துவமுறைகளைக் கவனிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். 'நம்ம முன்னோர் அப்படிதானே வாழ்ந்தாங்க?' என்பது இவர்களுடைய வாதம். உடல்நலக்குறைபாடுகளை சரிசெய்வதற்கும், இயல்பாக உடலை நன்முறையில் கவனித்துக்கொள்வதற்கும் இந்த மாற்று மருத்துவமுறைகளின் உதவியை நாடுகிறார்கள்.

இன்னொருபக்கம், அவற்றைக் கேலிசெய்கிறார்கள் பலர். 'இதெல்லாம் பழைய நம்பிக்கை' என்கிறார்கள், 'அறிவியல்பூர்வமா நிரூபிக்கப்படாதவிஷயங்களை நம்பக்கூடாது' என்று பயமுறுத்துகிறார்கள்.

நடுவிலிருக்கும் மக்கள் என்னசெய்வார்கள்? மாற்று மருத்துவமுறைகளை நம்புவதா, வேண்டாமா?

மருத்துவர் கௌதமனின் 'AyurCare' மொபைல் அப்ளிகேஷனைப் பார்த்தபோது, இந்தக்கேள்விகளெல்லாம்தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. பலகாலமாக ஆயுர்வேதம், ஆரோக்கியம்பற்றிய கருத்துகளையும் விழிப்புணர்வுக்கட்டுரைகளையும் எழுதிவரும் இவர், இப்போது அவற்றை இந்தப்பெயரில் தொகுக்கத்தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் வலைத்தளமாக வெளிவந்த இக்கருத்துகள் இப்போது எளிதில் வாசிக்கவல்ல மொபைல் அப்ளிகேஷனாகக் கிடைக்கின்றன.

இதில் என்னவெல்லாம் இருக்கிறது?

2016 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, வாரந்தோறும் சில பக்கங்களாக மருத்துவர் கௌதமன் எழுதிவருகிறார். அவற்றை இதழ்வாரியாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கும்வகையில் இந்த மொபைல் அப்ளிகேஷன் அமைந்துள்ளது.

'ஆயுர்வேதம்சம்பந்தப்பட்ட நிறைய மூடநம்பிக்கைகள் நம்மிடம் பரவியிருப்பதைப் பார்க்கமுடிகிறது' என்கிறார் மருத்துவர் கௌதமன், 'இந்த மூடநம்பிக்கைகளை அகற்றித் தெளிவுபடுத்துவதற்கான கருத்துகளைப் பல்வேறு தலைப்புகளில் இந்த அப்ளிகேஷன்வழியாகப் பகிர்ந்துகொள்கிறேன்.'

எடுத்துக்காட்டாக, முதல் இதழில் மூட்டுவலி, தசைவலி ஆகியவற்றைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்தப்பிரச்னைகளைச் சரிசெய்ய வழக்கமாகப் பரிந்துரைக்கப்படும் மருத்துவங்கள், அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள், அதற்கு மாற்றாக ஆயுர்வேதத்தில் என்ன பரிந்துரைக்கப்படுகிறது, அந்தச் சிகிச்சை எந்த அடிப்படையில் அமைந்தது என்பதையெல்லாம் இக்கட்டுரைகள் சிறப்புற விளக்குகின்றன.

இதேபோல், சர்க்கரையை எந்த அளவு சாப்பிடலாம், எளிய உடற்பயிற்சிகள், இருக்கைகளில் அமரும்விதம், நோய்எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துதல் என்று வாரந்தோறும் வெவ்வேறு தலைப்புகள், ஒவ்வொன்றிலும் எளிய ஆங்கிலத்தில் விரிவான கட்டுரைகள்.

உடல்நலப்பிரச்னைகளோடு, மனநலப்பிரச்னைகளும் அலசப்படுகின்றன. வாழ்க்கைமுறை மாற்றங்களின்மூலம் அவற்றை எப்படி சமாளிக்கலாம் என்று சொல்லித்தரப்படுகிறது.

இக்கட்டுரைகள் வாரந்தோறும் வெளியிடப்படுவதால், அந்த நேரத்துக்கேற்ற கட்டுரைகளும் இணைந்துகொள்கின்றன. எடுத்துக்காட்டாக, தேர்வுகள் தொடங்கும் நேரத்தில், 'தேர்வுகளால் ஏற்படும் பதற்றத்தைக் குறைப்பது எப்படி' என்றொரு கட்டுரை வருகிறது. இக்கட்டுரையில் ஆயுர்வேதம்பற்றிய கருத்துகள் அதிகமில்லை. ஆனால், பதற்றப்பிரச்னைகளைக் கையாள்வதுபற்றி நன்கு தெரிந்துகொள்ளஇயலுகிறது.

வாரந்தோறும், வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு கௌதமன் பதிலளிக்கிறார். இதேபோல் நமக்கிருக்கக்கூடிய சந்தேகங்களையும் எழுதியனுப்பலாம்.

அச்சிதழ்களோடு ஒப்பிடும்போது, இதுபோன்ற மொபைல் இதழ்களில் பல்லூடகச்சாத்தியங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கேற்ப, ஒவ்வோர் இதழிலும் மருத்துவர் கௌதமனின் வீடியோவும் இடம்பெறுகிறது.

ஒவ்வொரு வார இதழும், ஒரு தனிப்புத்தகத்தைப்போல் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்டைப்படம்போல் ஓர் அழகிய புகைப்படம், அதற்குள்ளிருக்கும் கட்டுரைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. பிடித்த கட்டுரையை க்ளிக் செய்து வாசிக்கலாம். எழுத்துகளை நம் விருப்பம்போல் பெரிதுபடுத்திக்கொள்ளலாம், சிறிதாக்கிக்கொள்ளலாம். புத்தக வடிவில் வாசிக்க விரும்பாதவர்கள் ஒரே க்ளிக்கில் அதை இணையப்பக்கத்தைப்போல் மாற்றிக்கொண்டு வாசிக்கலாம்.

இக்கட்டுரைகளை வாசிக்கத் தொடர்ச்சியான இணையவசதியும் தேவையில்லை. ஒவ்வோர் இதழாகத் தரவிறக்கம் செய்துகொள்கிற வசதியைத் தந்திருக்கிறார்கள். அதை க்ளிக் செய்துவிட்டால், இணையம் இல்லாத இடத்திலும் வாசிக்கலாம்.

கிட்டத்தட்ட எண்பது கட்டுரைகள், ஏராளமான கேள்வி-பதில்கள் என ஆயுர்வேதக் கலைக்களஞ்சியத்தைப்போலவே அமைந்திருக்கிற இந்த அப்ளிகேஷன் ஆங்கிலத்தில் இருப்பதுதான் சிறு குறை. என்னதான் எளிய ஆங்கிலமாக இருப்பினும், வீடியோக்கள் தமிழில் இருப்பதால் இந்த மொபைல் அப்ளிகேஷன் யாருக்காக என்கிற ஒரு குழப்பம் வருகிறது. இக்கட்டுரைகள் தமிழிலும் பிற இந்தியமொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டால், இன்னும் பலரை சென்றுசேரும்.

அதேபோல், கட்டுரைகளை வாசிக்கும்போது நமக்குப்பிடித்த பகுதிகளைக் குறித்துவைத்துக்கொண்டு பின்னர் வாசிக்கும் Favorites/BookMarks வசதி இடம்பெற்றிருந்தால் அருமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, முதுகுவலிபற்றி நான் வாசித்த ஒரு நல்ல கட்டுரை எந்த இதழில் வெளியானது என்று தெரியாததால், ஒவ்வோர் இதழையும் க்ளிக்செய்து பார்க்கவேண்டியிருந்தது.

அதேபோல், எந்தெந்த இதழ்களை வாசித்துவிட்டோம், எவற்றை வாசிக்கவில்லை என்கிற குழப்பமும் ஏற்படுகிறது. ஒவ்வோரிதழையும் நாம் எத்தனை சதவிகிதம் வாசித்திருக்கிறோம் என்கிற விவரத்தை அங்கேயே திரையிட்டுக்காட்டினால் வாசிக்காதவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம்.

இத்தகைய மிகப்பெரிய அப்ளிகேஷனுக்குத் தேடல் வசதியும் அவசியம். இன்னும் சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இதில் சேர்ந்தபிறகு, ஒரு குறிப்பிட்ட மூலிகையைப்பற்றி அல்லது ஓர் உடல்நலப்பிரச்னையைப்பற்றி மருத்துவர் கௌதமன் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தத் தேடல்வசதி நன்கு பயன்படும்.

அடுத்து, கட்டுரைகளின் பயனுள்ள பகுதிகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிற வசதியைத் தரலாம். எடுத்துக்காட்டாக, உணவுக்குமுன்னால் தண்ணீர் குடிப்பதுபற்றிய கட்டுரையொன்றை என் அலுவலகத்தோழர் ஒருவருடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஆனால், அதற்கு இங்கே வழியில்லை. இந்த அப்ளிகேஷன் முழுவதையும் இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வழிசெய்துள்ளார்கள். ஆனால், அதுபோதாது. தனிக்கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்ளும் வசதி இருந்தால், அவரவர்க்கு எதெது பொருந்தும் என்று யோசித்துப் பகிர்ந்துகொள்ளலாம், அதன்மூலம் இந்த மொபைல் அப்ளிகேஷனுக்கு வாசகர்களும் அதிகரிப்பார்கள்.

கட்டுரைகளை இதழ்வாரியாகப் பிரிப்பதுபோலவே, தலைப்புவாரியாகவும் பிரித்துத்தரலாம். எடுத்துக்காட்டாக, உணவுபற்றிய கட்டுரைகள், உடற்பயிற்சிபற்றிய கட்டுரைகள், பெண்களுக்கான கட்டுரைகள், வீடியோக்கள் என்று பிரித்துத்தந்தால் இன்னும் எளிதாக வாசிக்கலாம்.

வாசகர்கள் கேள்விகளைக் கேட்கலாம் என்று மருத்துவர் கௌதமன் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஆனால், அதற்குரிய வசதி இல்லை. அங்கேயே ஒரு சிறு Form வெளியிட்டிருந்தால் கேள்விகளை உடனுக்குடன் அனுப்பலாம். அதற்கு இப்போது வழியில்லாததால், Feedback அல்லது Contact பக்கத்தைதான் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

இன்றைய 'சோஷியல்மீடியா' வாசகர்கள் ஒவ்வொரு கட்டுரையுமே ரசிக்க, பகிர்ந்துகொள்ள, அதுபற்றிக் கருத்துரைக்க விரும்புவார்கள். அதற்கு இந்த அப்ளிகேஷனுக்குள்ளேயே வழிசெய்யப்பட்டிருந்தால், இதுபற்றி நல்ல உரையாடலைத் தொடங்கிவைக்கலாம். (தற்சமயம் இந்த அப்ளிகேஷனில் இருந்தபடி மருத்துவர் கௌதமனின் ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் பக்கங்களுக்குச் செல்லும் வசதி தரப்பட்டிருக்கிறது.)

மொபைல் கருவிகளின் வீடியோ வசதியைப் பயன்படுத்தியதுபோலவே, அங்கிருக்கும் ஆடியோ, விவரப்படங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கலாம். இன்றைக்கு வாசிப்புப்பழக்கம் அருகிவருகிறது. பலரும் குரல்வழிப்பதிவுகளைக் கேட்பதில் ஆர்வம்காட்டுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுத்துகளைக் குரலாக்கித்தரும் தொழில்நுட்பம் நன்கு முன்னேறியுள்ளது. ஆகவே, இக்கட்டுரைகளை ஒரு க்ளிக்கில் ஒலிவடிவாக மாற்றிக்கேட்கும் வசதியைச் சேர்த்தால், உடற்பயிற்சியின்போது, காரோட்டும்போதெல்லாம் இக்கட்டுரைகளை மக்கள் கேட்டுப் பயன்பெற இயலும்.

படங்களைப்பொறுத்தவரை, Infographics எனப்படும் விவரப்படங்களின் உதவியுடன் பல சிக்கலான விஷயங்களைக்கூட எளிதில் விளக்கலாம். குறிப்பாக, மருத்துவம்சார்ந்த விஷயங்களை இம்முறையில் சொல்வது எளிது. அதனைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதும் எளிது. இதுபோன்ற முயற்சிகள் இளம்தலைமுறையினரை இத்தலைப்புகளை வாசிக்க ஈர்க்கும்.

இப்படிப் பல சாத்தியங்களை அடுக்கினாலும், ஆயுர்வேதம்பற்றிய இத்துணைக் கருத்துகளை ஒரே இடத்தில் வாசிக்கமுடிகிற ஒரு மொபைல் அப்ளிகேஷன் என்கிறவிதத்தில் இது ஓர் அருமையான தொடக்கம். இதனைச் சாத்தியமாக்கியிருக்கும் மருத்துவர் கௌதமன், Ajax Media Tech நிறுவனங்களுக்கு நன்றி. இங்கே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கூடுதல் வசதிகள் இந்த மொபைல் அப்ளிகேஷனின் சாத்தியங்களை இன்னும் பலமடங்கு அதிகரிக்கக்கூடியவை. இவற்றை இனிவரும் பதிப்புகளில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

இதேபோல் மற்ற மாற்று மருத்துவமுறைகளின் கட்டுரைகளையும் தொகுக்கலாம். இவற்றுக்கான எதிர்வினைகளையும் (சண்டையாக அல்லாமல், விவாதமாக) சேர்த்துத்தரலாம். இதுபற்றிப் பலர் பேசத்தொடங்கும்போதுதான் தெளிவு பிறக்கும்.

'AyurCare' இலவச அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய:

iOS கருவிகளில்: https://itunes.apple.com/in/app/ayur-care./id1138736199?mt=8

ஆண்ட்ராய்ட் கருவிகளில்: https://play.google.com/store/apps/details?id=com.ayurcare&hl=en

- என். ராஜேஷ்வர்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles