தமிழோடு விளையாடு - தமிழ்த்தளம் அறிமுகம்: தமிழ்ப்பெயர்கள்

Monday, October 31, 2016

குழந்தைக்குத் தமிழில் பெயர் சூட்டவேண்டுமா!

'ஐயா, எனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று இனிப்போடு வருகிற எல்லாரிடமும் நாம் கேட்கிற முதல் கேள்வி, 'பையனுக்கு என்ன பேர் வெச்சிருக்கீங்க?'

முன்பெல்லாம் குழந்தைக்குத் தாத்தா, பாட்டியின் பெயரை வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, புதுமையானதொரு பெயர் வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெடுகிறார்கள். சுருக்கமாக, கூப்பிடுவதற்கு எளிதாக, அதேசமயம் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள். இத்துடன், அந்தப் பெயர் த, தி, து, ப போன்ற எழுத்துகளில்தான் தொடங்க வேண்டும் என்கிற ஜோதிட நிபந்தனைகள் வேறு!

சிலர், நல்ல தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், எது தமிழ்ப்பெயர், எது வடமொழிப்பெயர் என்றே தெரியாத அளவுக்கு நம் ஊரில் எல்லாம் கலந்துவிட்டதே!

இந்தப்பின்னணியில் பார்க்கும்போது, 'தமிழ்ப்பெயர்கள்' (http://www.peyar.in) தளம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இங்கே ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அழகழகான நல்ல தமிழ்ப்பெயர்களை எழுத்துவாரியாகப் பட்டியலிட்டுள்ளார்கள். உதாரணமாகச் சில: அகக்கோ, அகனழகன், பிச்சி, பிறைசூடி, கிள்ளைமொழி...

நட்சத்திர அடிப்படையில் பெயர்சூட்ட விரும்புகிறவர்களுக்காக, எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எந்தெந்த எழுத்துகளில் தொடங்கும் பெயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற விவரங்களும் இங்கே உள்ளன. குழந்தையின் பெயரில் ஒரு குறிப்பிட்ட சொல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்காகத் தேடல் வசதியும் இருக்கிறது.

இத்துடன், ஒவ்வொரு பெயரின் பொருள், இலக்கியப் பயன்பாடு போன்றவற்றையும் சேர்த்தால் நன்றாக இருக்கும். தங்கள் குழந்தைக்கு இந்தத் தளத்திலிருந்து ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துச் சூட்டிய பெற்றோர் அதைப் பிறருக்கு மகிழ்ச்சியோடு அறிவிக்கும்வண்ணம் பகிர்தல் வசதியையும் தரலாம்.

- (தொடரும்)

-  என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles