நுட்பவெப்பம் 16

Monday, October 31, 2016

எலக்ட்ரானிக் முறையில் வாக்களிக்கத் தயங்கும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவில் தேர்தல் வரப்போகிறது. அதையொட்டி உலகமெங்கும் பரபரப்பு. அடுத்த அதிபர் யார் என்றுதான் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். காரணம், அனைத்து நாடுகளும் ஏதோ ஒருவிதத்தில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கின்றன. அங்கே வரப்போகும் புதிய அதிபரின் கொள்கைகள் இவர்களை நேர்விதமாகவோ, எதிர்விதமாகவோ பாதிக்கலாம்.

ஆனால், இத்துணை பெரிய பதவி, உலகிலேயே அதிகாரம் மிகுந்த பதவிக்கு வரப்போகிறவர் யார் என்று தேர்ந்தெடுக்கும் இந்த முக்கியமான தேர்தல், வாக்குச்சீட்டுமுறையில்தான் நடைபெறுகிறதாம். மக்கள் எலக்ட்ரானிக் இயந்திரங்களைக் கொண்டு வாக்களிக்கப் போவதில்லையாம்.

அட, நாமெல்லாம் எப்போதோ எலக்ட்ரானிக்குக்கு மாறியாச்சே. அமெரிக்கர்கள் இன்னுமா மாறவில்லை?

ஆச்சர்யம்தான். உலகத் தொழில்நுட்பத்தில் பெரும்பகுதி அமெரிக்காவில்தான் தொடங்குகிறது. மிகப்பெரிய தொழிலதிபர்கள், அறிவியல் மேதைகளெல்லாம் அங்கே இருக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு மட்டும் பழைய வாக்குச்சீட்டுகளா? அவர்களால் ஏன் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை?

பயன்படுத்த இயலாமலில்லை, காரணமாகத்தான் அதைப் பயன்படுத்தாமலிருக்கிறார்கள். முதலில், தேர்தல் தொழில்நுட்பம் என்றாலே வாக்களிக்கும் இயந்திரங்கள்தான் என்று எண்ணிவிட வேண்டாம். அங்கே தொழில்நுட்பம் பலவிதங்களில் பயன்படுகிறது. உதாரணமாக, வாக்காளர்களின் விவரங்கள் முன்பெல்லாம் எழுத்துவடிவில் பாதுகாக்கப்பட்டிருந்தன, தேவைப்படும்போதெல்லாம் பிரதியெடுத்துப் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இப்போது, அவை அனைத்தும் டிஜிட்டல்மயமாகிவிட்டன. அதுவும் பொதுமக்களே காணும்படி இணையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய விவரங்களைத் தேடிப்பார்க்கலாம். பிழைகள் இருந்தால் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இதேபோல், வாக்காளர்கள் ஒவ்வொருவரும் எங்கே சென்று வாக்களிக்கவேண்டும் என்கிற விவரம் முன்பு கையில் எழுதப்பட்டு வீடுவீடாகத் தரப்பட்டது. இப்போது அதனை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவிடுகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்திலும் தொழில்நுட்பம் தூள் கிளப்புகிறது. வாக்குறுதிகள், எதிர்க்கட்சிக்கான கேள்விகள், விளக்கங்கள் என அனைத்தும் டிஜிட்டல் வடிவில் பரிமாறப்படுகின்றன. தேர்தல் அறிக்கையை PDFஆக வெளியிடுகிறார்கள், அதையே சிறு வீடியோக்களாகப் பிரித்து யூட்யூபில் வைரலாக்குகிறார்கள். 'உங்கள் வாக்கு எங்களுக்கே' என்று பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிடுகிறார்கள்...

இதற்குத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டுமா? உலகெங்கும் எல்லா அரசியல் கட்சிகளும் பேஸ்புக்கில், ட்விட்டரில் நுழைந்துவிட்டார்கள். பெரும்பாலான தலைவர்கள் இணையத்தில் தொண்டர்களுக்குக் காலைவணக்கம் சொல்லுவதில் ஆரம்பித்துக் கட்சிக்கொள்கைகளை விளக்குவதுவரை நிகழ்கிறது.

இந்தியாவில் சென்ற பாராளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டன. இதன்மூலம் தலைவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வதற்கான தேவை கணிசமாகக் குறைந்தது.

அமெரிக்காவில் இணையம், தொழில்நுட்பங்களின் பயன்பாடு இன்னும் அதிகம் என்பதால், அந்த ஊர்த் தேர்தல் பிரசாரமும் 'ஹைடெக்'காகவே இருக்கிறது. போட்டியிடுகிற இருவரும் தொலைக்காட்சியில் விவாதிக்கிறார்கள் என்றால், உடனுக்குடன் அது இணையத்திலும் ஒளிபரப்பாகிறது, இருவர் சொல்வதும் சரியா, தவறா என்கிற விவாதங்கள் பரவலாக நிகழ்கின்றன, வேட்பாளர்கள் பேசுபவை ஆயிரம் சொற்கள் என்றால், அவர்கள் 'நன்றி, வணக்கம்' சொல்வதற்குள் இணையத்தில் அதைப்பற்றி லட்சக்கணக்கான சொற்கள் பேசப்பட்டுவிடுகின்றன, பல்லாயிரம் விவாதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.

இதற்கெல்லாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிற அமெரிக்கர்கள், வாக்களிப்பதற்கு மட்டும் காகிதத்தை நாடுவதேன்? பல கோடிப்பேர் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால் எவ்வளவு காகிதம் வீணாகும்! அத்தனையையும் எண்ணி முடிப்பதற்கு எவ்வளவு நேரமாகும்! இதையெல்லாம் இவர்கள் யோசிக்கமாட்டார்களா?

ஆனால், எலக்ட்ரானிக் முறையில் வாக்களிப்பதென்றால், இதையெல்லாம்விடப் பெரிய ஆபத்தொன்று இருக்கிறது: பாதுகாப்பு.

வாக்குச்சீட்டு முறையில் மட்டும் என்ன பெரிய பாதுகாப்பு? நம் ஊரில் எத்தனையோ தேர்தல்களின்போது ரௌடிகள் வாக்களிக்கும் இடத்துக்கே சென்று வாக்குபெட்டிகளைக் கடத்திச் சென்றதாகப் படித்திருக்கிறோமே!

ஆனால், அப்படி எங்கேயாவது வாக்குப்பெட்டி கடத்தப்பட்டால், அந்த விஷயம் வெளிப்படையாகத் தெரிந்துவிடும், சட்டென்று அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் தேர்தலை ரத்துசெய்துவிட்டு மறு வாக்குப்பதிவு நடத்திவிடலாம்.

அதேபோல், வாக்குபெட்டிகளைக் கடத்தியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கும் பல வழிகள் உள்ளன. ஆகவே, ஒருவேளை மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்கிற அச்சத்தில் ரௌடிகள் இதுபோன்ற வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். கட்சிகளைச் சார்ந்தவர்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தங்கள் பெயர் கெட்டுப்போகுமோ என்று யோசிப்பார்கள்.

இவை அனைத்தும் எலக்ட்ரானிக் முறையில் தலைகீழ். வாக்குவிவரங்கள் திருடப்பட்டால், அந்த விஷயமே எளிதில் வெளியே தெரிந்துவிடாது. அப்படியே தெரிந்தாலும்கூட, யார் திருடினார்கள் என்பதைக் கண்டறிவது சிரமம்.

சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்திச் சிறிய தேர்தல் ஒன்றை நடத்த முயன்றார்கள். ஆனால், அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. காரணம், அலெக்ஸ் ஹால்டெர்மன் என்கிற பேராசிரியர்தான்.

இத்தனைக்கும் இவர் அந்தத் தேர்தல் நடந்த இடத்திலேயே இல்லை. வேறு எங்கேயோ அமர்ந்தபடி, தன்னுடைய மாணவர்கள் சிலரது உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார். இதற்காக, அவர் அதிகம் மெனக்கெடக்கூட இல்லையாம். சில நிமிடங்களில் தேர்தலையே கேலிக்கூத்தாக்கிவிட்டார்.

ஒரு பேராசிரியர் இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா?

அலெக்ஸ் ஹால்டெர்மன் போன்றோரின் நோக்கம், வாக்கு எண்ணிக்கையில் சில்மிஷம் செய்து ஆட்சியைப் பிடிப்பதல்ல. எலக்ட்ரானிக் முறையில் தேர்தல் நடத்துமளவுக்கு நம்முடைய தொழில்நுட்பம் இன்னும் பாதுகாப்பாகவில்லை என்று நிரூபிப்பதுதான். இங்கே எல்லாமே ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது, ஓர் இடத்தில் சிறிய ஓட்டை இருந்தாலும் போதும், மொத்தமும் பொத்தலாகிவிடும்.

ஒருவேளை, அமெரிக்கத்தேர்தல் எலக்ட்ரானிக் முறையில் நடந்தால், அந்த வாக்குப்பதிவு விவரங்களில் கைவைப்பதற்குப் பலரும் முனைவார்கள். அதிகாரிகள் எத்தனை மடங்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தாலும் சரி, அதையும் கடந்து உள்ளே நுழையப் பார்ப்பார்கள்.

உதாரணமாக, சமீபத்தில் இந்தியாவில் பல லட்சம் டெபிட்கார்ட் விவரங்கள் திருடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதேபோல் உலகெங்கும் இன்னும் பல பெரிய நிறுவனங்களெல்லாம் வாடிக்கையாளர்களின் விவரங்களைத் திருட்டுக் கொடுத்துவிட்டு விழிக்கிறார்கள்.

அந்த வங்கிகள், நிறுவனங்களெல்லாம் ஏமாந்தவர்களா? அவர்களிடம் பாதுகாப்பு நிபுணர்கள் இல்லையா? சரியான கணினி வன்பொருள், மென்பொருள் இல்லையா?

எல்லாம் இருக்கிறது. ஆனால் அத்தனைக்கும் நடுவே தென்படுகிற சிறு பாதுகாப்பு ஓட்டையைப் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெரிய கூட்டமே இருக்கிறது. இவர்கள் இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், கொஞ்சம் அசந்தாலும் விளையாடிவிடுவார்கள்.

அப்படி ஒருவேளை அமெரிக்க வாக்குப்பதிவு விவரங்கள் இந்தத் திருடர்கள் கையில் சிக்கிவிட்டன என்று வைத்துக்கொள்வோம். அதன்பிறகு என்ன ஆகும்? முதலில், வாக்குப்பதிவு விவரங்கள் திருடப்பட்டிருக்கும் விவரமே சட்டென்று தெரியவராது. அப்படியே தெரிந்தாலும், அதை எப்படிச் சரிசெய்வது?

காகிதத்தில் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டுத் தேர்தல் நடத்தினால், வாக்கு எண்ணிக்கைக்குப்பிறகு அந்தச் சீட்டுகளைப் பத்திரமாக வைத்திருக்கலாம், தோற்றுப்போன ஒரு வேட்பாளர் 'வாக்கு எண்ணிக்கையில் ஏதோ ஊழல் நடந்திருக்கிறது' என்று குற்றம்சாட்டினால், மீண்டும் அந்தச் சீட்டுகளை எடுத்து எண்ணலாம். ஒருவேளை எண்ணிக்கையில் தவறிருந்தால், அதைத் திருத்திக்கொள்ளலாம்.

எலக்ட்ரானிக் முறையில் இந்தப் ’பப்பு’ வேகாது. அங்கே ஒரு திருடன் உள்ளே நுழைந்துவிட்டான் என்றால், இருக்கிற எல்லா விவரங்களையும் தலைகீழாக மாற்றிவைத்துவிட்டுதான் வெளியேறுவான். அதன்பிறகு எத்தனைமுறை எண்ணினாலும் அதே முடிவுகள்தான் வரும்.

இதனால், தேர்தலில் தோற்ற வேட்பாளர் உண்மையாகவே மக்களின் ஆதரவை இழந்திருந்தாலும்கூட, வாக்குப்பதிவு இயந்திரங்களில் அல்லது வாக்குகளைச் சேமிக்கும் கணினிகளில் பிரச்னை என்றுதான் சொல்வார், அவருடைய குற்றச்சாட்டில் நியாயமில்லை என்று நிரூபிக்க இயலாது.

அதுபோன்ற நேரங்களில், மக்களும் தேர்தல்முறையின் மீதே நம்பிக்கையிழக்கக்கூடும். நிஜமாகவே தாங்கள் செலுத்திய வாக்குகள்தான் வெற்றியாளரைத் தீர்மானித்திருக்கின்றனவா என்று அவர்களுக்குச் சந்தேகம் வரக்கூடும், அது மிகப்பெரிய பிரச்னையாகிவிடும்.

இதனால், வாக்குபதிவுபோன்ற விஷயங்களுக்கு எலக்ட்ரானிக் முறையைப் பயன்படுத்தவே கூடாது என்று வாதிடுகிறவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். இவர்கள் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் இல்லை, யாராலும் ஊடுருவ முடியாத அளவுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை வலுவாக்க வேண்டும், அதன்பிறகுதான் அதனை இதுபோன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்பது இவர்களுடைய கட்சி.

அதேசமயம், தொழில்நுட்ப சவுகர்யத்துக்குப் பழகிவிட்ட இன்றைய பொதுஜனத்துக்கு இதெல்லாம் புரியாது, 'எல்லாத்துக்கும் மொபைல் அப்ளிகேஷன் வந்துடுச்சு, ஆனா தேர்தலுக்கு மட்டும் வாக்குச்சாவடிக்குப் போகணுமா?' என்பார்கள். மற்ற துறைகளிலெல்லாம் தொழில்நுட்பம் எல்லாமட்டங்களிலும் நுழைந்திருப்பதுபோல, தேர்தலிலும் பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?

* வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டியதே இல்லை. பிறப்புப்பதிவேட்டை வைத்து ஒருவருக்குப் பதினெட்டு வயதானதும், தானாக அவர் ஒரு வாக்காளராகப் பதிவு செய்யப்படுவார்

* அவருடைய விரல் ரேகையானது பதிவுசெய்யப்பட்டு, கள்ளவோட்டு தவிர்க்கப்படும்

* கூடுதல் பரிசோதனையாக, அவர் தன்னுடைய முகத்தையும் காண்பிக்க வேண்டும். நவீன கணினி மென்பொருள்கள் அந்த முகத்தைத் தங்கள் கோப்பில் உள்ள முகத்தோடு ஒப்பிட்டு வந்திருப்பவர் சரியான நபர்தானா என்று தீர்மானிக்கும்

* உங்களுக்கு வாக்குச்சாவடிக்கு வர விருப்பமில்லை என்றால், வீட்டிலிருந்தபடி மொபைல்மூலம் வாக்களிக்கலாம். அதற்கு நீங்கள் உங்களையே ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும், அந்தப் படம் வாக்காளர் பட்டியலில் உள்ள படத்தோடு ஒப்பிடப்படும், அதன்பிறகு நீங்கள் வாக்களிக்கலாம்

* ஐந்து மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், வெற்றிபெற்றவர் யார் என்பது அடுத்த நிமிடமே தெரிந்துவிடும்

இதையெல்லாம் கேட்பதற்கு நன்றாகதான் இருக்கிறது. ஆனால் இதற்காக, ஒரு தேர்தலின் அடிப்படைத் தேவைகளான நம்பகத்தன்மை, பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, ஒவ்வொருவருடைய வாக்கும் ரகசியமாக வைக்கப்படுதல், எண்ணிக்கையில் குழப்பம் நேர்ந்தால் சரிபார்த்தல் போன்றவற்றில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக்கூடாது. அதுதான் சரியான 'தொழில்நுட்ப'த் தேர்தல்.

அப்படியொரு நாள் வரும், அதை மக்கள் விரும்புவார்கள். ஆனால், கட்சிகள் அதை விரும்புமா என்பது சந்தேகமே!  இத்துடன் 'நுட்பவெப்பம்' தொடர் நிறைவடைகிறது. அடுத்த இதழில் இன்னொரு வித்தியாசமான தொடர்பகுதியுடன் சந்திப்போம்.. 

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles