தமிழோடு விளையாடு - தமிழ்த்தளம் அறிமுகம்

Saturday, October 15, 2016

தமிழ்த்தளம் அறிமுகம்: http://www.thamizham.net/kal/tamil.htm தமிழர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் குறைந்து கொண்டேயிருக்கிறது.

ஆங்கிலக்கல்வி, வெளிமாநில, வெளிநாட்டுப் படிப்பு / வேலைவாய்ப்பு என்று இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், ஒரு தலைமுறையே தமிழ் வாசிக்கத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருப்பது வருந்த வேண்டிய விஷயம்தான். பல பெற்றோர் இதை எண்ணி வேதனைப்படுகிறார்கள். ஆனால், இதற்கு தாங்கள் என்ன செய்ய இயலும் என்று தெரியாமல் குழம்புகிறார்கள்.

இந்நிலையில், 'தமிழைச் சொல்லித்தரப் பள்ளிக்கூடமே தேவையில்லை. நீங்களே வீட்டில் சொல்லித்தரலாம்' என்கிறது தமிழம் என்ற இணையத்தளம். இதற்காக, இங்கே முப்பத்திரண்டு பாடங்களைக் கொண்ட எளிய பயிற்றுமுறை ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பாடங்கள் ஆனா, ஆவன்னா என்று தொடங்குவதில்லை. அதற்குப் பதிலாக ட, ப போன்ற எளிமையான, குழந்தைகள் சுலபத்தில் அடையாளம் காணத்தக்க எழுத்துகளைதான் முதலில் சொல்லித்தருகின்றன. அங்கிருந்து படிப்படியாக மற்ற எழுத்துகளுக்குச் செல்கிறார்கள். எழுத்துகளோடு சொற்களும் பழக்கப்படுத்தப்படுவதால், சில வாரங்களுக்குள் குழந்தைகள் சொற்களை வாசிக்கும் நிலைக்கு வருகிறார்கள். பின்னர் அங்கிருந்து வாசகங்களுக்குச் செல்லலாம். 

’இதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கு?’ என்று யோசிக்க வேண்டாம். தினமும், சுமார் அரைமணிநேரம் இதற்காகச் செலவிட்டால் போதும்.

இம்முறையில் படிக்கும் குழந்தைகள் சில வாரங்களுக்குள் தாங்களே அறிவிப்புப்பலகைகள், செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகள், பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளின் பெயர்கள், திரைப்படச் சுவரொட்டிகள் என்று தமிழ்ச்சொற்களைப் படிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும், சுமையாக இல்லாமல் ஒரு விளையாட்டைப்போல ஆர்வத்துடன் தமிழை வாசிக்கிறார்கள்; அதைப்பார்த்துப் பெற்றோர் மகிழ்கிறார்கள்.

’என் பையன் ஏற்கெனவே அஞ்சாங்கிளாஸ் வந்துட்டான், இனிமே எப்படித் தமிழ் ஆரம்பிக்கறது?’ என்றெல்லாம் தயங்காமல், இந்த இலவசப்பாடங்களை உங்கள் குழந்தைக்குச் சொல்லித்தாருங்கள். வீட்டருகே இருக்கும் இன்னொரு குழந்தைக்கும் சொல்லித்தந்தால், மேலும் மகிழ்ச்சி. 

- (தொடரும்)

-  என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles