நுட்பவெப்பம் - 15

Saturday, October 15, 2016

Virtual Classroom தொழில்நுட்பத்தில் எல்லாமே சாத்தியம்!  முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு திண்ணை இருக்கும். வழிப்போக்கர்கள் அவற்றில் அமர்ந்து ஓய்வெடுத்துச்செல்வார்கள். சில திண்ணைகள் ஓய்வெடுக்க மட்டுமல்ல, கல்வி கற்கவும் உதவும். நம்முடைய தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் பலரும் இந்தத் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் படித்துதான் அறிவை வளர்த்துக்கொண்டார்கள்.

இப்படித் தொடங்கிய பள்ளிகள், அதன்பிறகு இன்னும் பெரிதாக வளர்ந்தன. பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது, அவர்களுடைய கல்விமுறையும் நமக்குப் பழகியது. அரசுப்பள்ளிகள், தனியார்பள்ளிகள் என்று வளர்ந்து, இன்றைக்கு வீதிதோறும் பள்ளிகள் இருக்கின்றன. படிக்காதவர்கள் சதவிகிதம் மிகக்குறைவு என்று அளவுக்கு, நாம் முன்னேறியிருக்கிறோம்.

 

நம் வாழ்வின் எல்லாப்பகுதிகளையும் வளமாக்கிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம், பள்ளிகளுக்குள்ளும் நுழைந்திருக்கிறது. எளிதாகவும் சிறப்பாகவும் கற்பதற்கு, கற்பிப்பதற்குப் பல புதிய வழிகளை உருவாக்கி, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவிக்கொண்டிருக்கிறது.

 

உதாரணமாக, வரலாற்று ஆசிரியர் சோழர்களின் சரித்திரத்தைப் பற்றிப் பாடம் நடத்துகிறார். புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு வளவளவென்று படித்துப் போரடிக்காமல், அன்றைய காலகட்டத்தைச்சேர்ந்த சரித்திரச்சின்னங்களின் புகைப்படங்கள், வீடியோக்களைச் சுவரில் திரையிட்டுக் காட்டுகிறார்; அவற்றை விளக்குகிறார்.

 

அப்போது, மூன்றாவது வரிசையில் ஒரு பையன் தூங்கி வழிகிறான். வகுப்பின் உச்சியிலிருக்கும் கேமெரா அதைப்பார்த்து அவருடைய காதில் கிசுகிசுக்கிறது. 'ஐயா, அந்தக் கோவாலைக் கொஞ்சம் கவனிங்க!'

 

ஆசிரியர் சிரித்தபடி அச்சிறுவனைத் தட்டியெழுப்புகிறார். 'சோழர் வகுப்புன்னா சோளாபூரி சாப்பிட்டமாதிரி தூங்கறியே, ஒழுங்கா பாடத்தைக் கவனிடா!' என்கிறார்.

 

அப்போது இன்னொரு மாணவன் எழுந்து நிற்கிறான், 'இந்தியநாடு தெரியும், அதுல தமிழ்நாடு தெரியும், சோழநாடுன்னு சொன்னாப் புரியலையே ஐயா' என்கிறான்.

 

சட்டென்று கணினியில் வரைபட மென்பொருளைத் திறக்கிறார் ஆசிரியர். அதில் சோழர்கள் ஆட்சிசெய்த பகுதிகளை வரைந்துகாட்டி விளக்குகிறார், முக்கியமான நகரங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றின் இப்போதைய பெயர், அங்கே பார்க்க வேண்டிய விஷயங்கள் போன்றவற்றைச் சொல்கிறார்.

 

நிறைவாக, சோழர்களைப் பற்றிய மூன்று முக்கியமான கட்டுரைகளை வாசிக்க வேண்டுமென்று அவர்களுக்கு வீட்டுப்பாடம் தருகிறார். ஒரே க்ளிக்கில், அந்த மூன்று கட்டுரைகளையும் அந்தந்த மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுகிறார் ஆசிரியர்.

 

அன்று இரவு தூங்கச் செல்லுமுன், அவர் தன்னுடைய மொபைல்போனிலிருக்கும் ஒரு விசேஷ அப்ளிகேஷனைத் திறந்து பார்க்கிறார். அவர் அனுப்பிய கட்டுரைகளை எத்தனை மாணவர்கள் படித்துவிட்டார்கள், யாரெல்லாம் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்கள், அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு எத்தனை பேர் சரியான பதில் சொல்லியிருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்களைப் பார்க்கிறார். அந்த மாணவர்களுக்கெல்லாம் அங்கிருந்தபடியே ஒரு 'சபாஷ்' சொல்கிறார், மற்ற மாணவர்களுக்கு ஒரு நினைவூட்டல் மின்னஞ்சலையும் அனுப்பிவைக்கிறார்.

 

ஒரு மாணவன் சில சந்தேகங்களைக் கேட்டிருக்கிறான். ஆசிரியர் அதற்குப் பதில் எழுதுகிறார் அல்லது தன்னுடைய செல்போனின் கேமெரா வசதியைப் பயன்படுத்தி அந்தச் சந்தேகங்களுக்கான விளக்கத்தைச் சிறு வீடியோவாகப் பதிவுசெய்கிறார். மறுகணம் அந்த வீடியோ எல்லா மாணவர்களுக்கும் சென்றுவிடுகிறது.

 

மறுநாள், அதே ஆசிரியர் வேறொரு வகுப்பில் காந்தியைப் பற்றிப் பாடம் நடத்த வேண்டும். ஆனால், அவர் புத்தகத்தைத் திறக்கவில்லை. கணினியைத்திறக்கிறார், தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் காந்தியைப்பற்றி நடத்திய பாடத்தை ஒளிபரப்புகிறார், அவர் பேசப்பேசக் கீழே தமிழ் மொழிபெயர்ப்பும் வருவதால், மாணவர்கள் பாடத்தை நன்கு புரிந்துகொள்கிறார்கள்.

 

வீடியோ ஒளிபரப்பானதும், அவர்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்கிறார்கள், ஆசிரியர் அவற்றைத் தெளிவுபடுத்துகிறார்.

 

சரியாக பதினொரு மணியானதும், வகுப்பின் முன்னே இருக்கிற ஒரு கேமெராவை இயக்குகிறார் ஆசிரியர். சில நிமிடங்களில், அவர்கள் முன்னே காந்தி பிறந்த போர்பந்தர் விரிகிறது. அது சாதாரணக் கேமெராவால் பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சி அல்ல. நிஜமாகவே, இப்போது ஓர் ஆசிரியர் போர்பந்தரில் இருக்கிறார், அவர் அணிந்திருக்கும் விசேஷக் கண்ணாடியின்மூலம் மாணவர்கள் இங்கிருந்தபடி போர்பந்தரைப் பார்க்கிறார்கள்.

 

அந்த ஆசிரியர் காந்தியைப்பற்றிப் பேசியபடி நடக்கிறார், போர்பந்தரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் காட்டுகிறார். அனைத்தும் கண்ணாடி வழியே இங்கே தெரிகின்றன, ஒட்டுமொத்த வகுப்பும் போர்பந்தருக்குச் சென்று திரும்பியதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.

 

அட, போர்பந்தர்கூடப் பரவாயில்லை. ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து ரயிலைப் பிடித்தால், ஓரிருநாளில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பலாம். ஆனால், எரிமலையின் உள்ளே என்ன இருக்கிறது என்று பாடம் நடத்தும் ஓர் ஆசிரியர், அதை மாணவர்களுக்குக் காட்ட முடியுமா? கடலின் அடியாழத்தில் உள்ள தாவரங்களைச் சுட்டிக்காட்டி விளக்க முடியுமா? விண்வெளிக்கப்பலினுள் என்னவெல்லாம் இருக்கும் என்று காண்பிக்க முடியுமா? இவையெல்லாம் இந்த Virtual Classroom/conference தொழில்நுட்பத்தால் சாத்தியம்.

 

மாணவர்கள் புத்தகத்தில் எழுத்துகளாகப் படிப்பதைவிட, இப்படி நேருக்கு நேர் பார்த்தால் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள், மறக்கமாட்டார்கள்.

 

விலங்கியல் ஆசிரியர் பறவைகளைப் பற்றிப் பாடம் நடத்துகிறார். பறவைகளின் அலகு, கண்கள், இறகு, கால்கள் போன்றவற்றை வைத்து அவற்றை அடையாளம் காண்பது எப்படி என்று சொல்லித்தருகிறார்.

 

மறுநாள், அந்த வகுப்பிலிருந்த ஒரு பையன் ஒரு புதிய பறவையைப் பார்க்கிறான். ’அட, நம்ம பாடப்புத்தகத்துல பார்த்த ஒரு பறவையைப் போலவே இருக்கே!’ என்று யோசிக்கிறான். ஆனால், ’அந்தப் பறவைதானா இது’ என்று அவனுக்குத் தெரியவில்லை. என்ன செய்யலாம்?

 

அந்தப் பறவையைப் புகைப்படம் எடுத்து, ஆசிரியரிடம் காட்டுவது பழைய பாணி. அதை இணையத்தில் வலையேற்றி 'இந்தப் பறவையின் பெயர் என்ன?' என்று கேட்பது புதிய பாணி. இன்னும் புதிதாக வேண்டுமென்றால் Augmented Reality கருவிகளைப் பயன்படுத்தலாம்.

 

Augment என்ற சொல்லுக்கு, எதையேனும் சேர்த்தல், பெரிதாக்குதல், விரிவாக்குதல் என்று பொருள் சொல்லலாம். நிஜவாழ்க்கையில் நாம் காணும் விஷயங்களோடு கூடுதல் விவரங்களைச் சேர்த்து அந்த அனுபவத்தை விரிவாக்குவதால்தான் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அப்படியொரு பெயர்.

 

உதாரணமாக, அந்த மாணவன் அப்பறவையைப் பார்த்ததும், தன்னுடைய மொபைல்போனை எடுத்து அதைப் படம்பிடிக்கிறான், மறுகணம், அந்தப் பறவையைப்பற்றிய விவரங்கள் திரையில் தோன்றுகின்றன. அந்தப் பறவையின் விலங்கியல் பெயரில் தொடங்கி, அது என்ன சாப்பிடும், எத்தனை முட்டைபோடும் என்று சகலத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்கிறான்.

 

கணிதவகுப்பில் ஆசிரியர் ஒரு கடினமான சூத்திரத்தை விளக்குகிறார். அதனை எப்படிக் கணக்கீடுகளில் பயன்படுத்துவது என்று விரிவாகக் கரும்பலகையில் எழுதுகிறார். ஆனால், அவர்முன்னே அமர்ந்திருக்கும் மாணவர்கள் யாரும் அந்தக் கணக்கைக் குறித்துக் கொள்ளவில்லை. நாளைக்கு இதை இவர்கள் எப்படிப் படிப்பார்கள்?

 

கவலைவேண்டாம். அந்தக்கணக்கைப் போட்டு முடித்தவுடன், அப்பலகையிலுள்ள ஒரு பொத்தானை அழுத்துகிறார் ஆசிரியர். அதுவரை அவர் போட்ட கணக்கு முழுவதும் படமாக மாற்றப்பட்டு மாணவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது.

 

அடுத்தவகுப்பு, அறிவியல். மனிதனின் முதுகெலும்பைப் பற்றிப் பாடம் நடத்துகிறார் ஆசிரியர்.

 

வழக்கமாக, இதுபோன்ற வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் ஓர் எலும்புக்கூடு மாதிரியைக் கொண்டுவருவார்கள். ஆனால் இந்த ஆசிரியர் மிகவும் நவீனமானவர், முப்பரிமாண அச்சியந்திரம் ஒன்றைப் பயன்படுத்துகிறார். அதில் அவர் பாடம் நடத்துகிற முதுகெலும்புப்பகுதி மட்டும் அச்சிடப்பட்டு வெளியே வருகிறது. அதை மாணவர்கள் தொட்டுப்பார்த்துப் புரிந்துகொள்கிறார்கள்.

 

வகுப்பெல்லாம் மாறிவிட்டது, வீட்டுப்பாடமும் மாறுமா?

 

பின்னே? மாணவர்கள் கையில் பேனாபிடித்து எழுதுவதற்குப் பதிலாக, டேப்லெட் கணினிகளில் விரலால் தொட்டு எழுதுகிறார்கள். அவை உடனுக்குடன் எழுத்துகளாக மாற்றப்பட்டுச் சேமிக்கப்படுகின்றன.

 

இப்போது, ஒவ்வொரு மாணவனின் வீட்டுப்பாடத்தையும் ஆசிரியர் வாசிக்க வேண்டியதில்லை, மதிப்பெண் போட வேண்டியதில்லை. மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே ஒரு மென்பொருள் அதைத் திருத்திவிடுகிறது. இலக்கணப்பிழைகள், எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறது, 'இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைச்ச ஆண்டு 1946ன்னு எழுதியிருக்கியே' என்று செல்லமாகக் கண்டிக்கிறது.

 

இதனால், இனி வீட்டுப்பாடம் என்பது சும்மா எழுதிச் சமர்ப்பிக்கிற விஷயமாக இருக்கப்போவதில்லை, அதுவும் கற்பதற்கான ஒரு வாய்ப்பாகிறது.

 

ஆனால், மாணவர்கள் ஆர்வத்தோடு வீட்டுப்பாடம் செய்வார்களா?

 

அதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு மாணவன் வீட்டுப்பாடத்தில் 80% முடித்துவிட்டு, 'மீதத்தை நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைக்கிறான், அதை மூடிவைக்கப் போகிறான். அப்போது அவன்முன்னே ஒரு செய்தி பளிச்சிடுகிறது, 'உங்கள் வகுப்பில் யாரும் இன்னும் வீட்டுப்பாடம் முடிக்கவில்லை, நீதான் முதலாவது, அந்த வாய்ப்பை இழக்கப்போகிறாயா?'

 

உடனே, அவனுக்கு ஓர் ஆர்வம் பிறக்கிறது. விறுவிறுவென்று மீதமுள்ள 20%ஐ முடித்துவிடுகிறான்.

 

சிலர் இதுபோன்ற தூண்டல்களுக்கு மசியமாட்டார்கள். அவர்களுக்கு வேறுவிதமான செய்தியைக் காட்டலாம், 'அந்தக் கணேசன் உனக்குமுன்னாடி வீட்டுப்பாடத்தை முடிச்சுடுவான்போலிருக்கே' என்று சொல்லி ஆரோக்கியமான போட்டியுணர்வைத் தூண்டலாம்.

 

தினமும் வீட்டுப்பாடத்தைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு டிஜிட்டல் ரோஜாப்பூ தரலாம். ஒவ்வொரு மாதமும் இப்படி அதிக ரோஜாப்பூ வாங்கும் மாணவர்களுக்குத் தலைமையாசிரியரின் பாராட்டுக்கடிதம் அனுப்பிவைக்கலாம்.

 

வீட்டுப்பாடம் போலவே, நாளைய தேர்வுகளும் மாறிவிடும். வினாத்தாள்கள் கருப்பு வெள்ளையில் போரடிக்காமல், கணினித்திரையில் வண்ணமயமான படங்கள், அனிமேஷன், வீடியோக்களோடு மலரும். அவற்றுக்கு மாங்குமாங்கென்று உட்கார்ந்து பதிலெழுத வேண்டியிருக்காது, சிறிய கேள்விகளுக்கான பதில்களை க்ளிக் செய்து அனுப்பிவிடலாம், கொஞ்சம் பெரிய பதில்களைப் பேசினாலே போதும், அவை உடனுக்குடன் எழுத்தாக மாற்றப்பட்டுவிடும். ஆங்காங்கே படங்களை வரைந்து சேர்க்கலாம், செயல்முறை விளக்கங்களை வீடியோவாகப் பதிவுசெய்து சேர்க்கலாம்...

 

இதனால், கேள்விக்கு மனப்பாடம் செய்து பதில் சொன்னால்தான் மதிப்பெண் என்கிற நிலைமை மாறும். வேறுவிதமான திறமைகளும் வெளிப்படுவதற்கான வாய்ப்பு அமையும்.

 

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமைசாலி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து செயல்படுவதற்கான சூழலைத் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தருகிறது. இதன்மூலம் உலகமே ஒரு பள்ளிக்கூடமாகிவிடும் என்று நம்பலாம்!

 - என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles