ஒற்றைக்கொம்பன்கள் - 1

Tuesday, November 15, 2016

ஒரு நிறுவனத்தின் மதிப்பை எது தீர்மானிக்கிறது?
அவர்கள் தயாரிக்கின்ற பொருள்கள் அல்லது சேவைகள் எந்த அளவு பிரபலமாக இருக்கின்றன என்பதை வைத்து ஒரு நிறுவனத்தைப் பெரியது அல்லது சிறியது என்று வரையறுக்கலாமா? அந்தப் பொருள்கள் எந்த அளவு விற்பனையாகின்றன என்பதைக் கவனிக்கலாமா? மொத்த வருவாயை விடுத்து லாபத்தை மட்டும் கணக்கில்கொள்ளலாமா?

அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனை பேருக்கு வேலை தருகிறார்கள் என்பதைப் பார்க்கலாமா? அந்த நிறுவனத்தின் சமூகசேவைகளைக் கருத்தில்கொள்ளலாமா? அவர்களுடைய தயாரிப்புகளால் சமூகம் எந்த அளவு பலன்பெறுகிறது என்பதை நோக்கலாமா? சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் எப்படி ஆதரவளிக்கிறார்கள் என்று பார்க்கலாமா? பெரிய பிரபலங்களில் யாரெல்லாம் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று கணக்கிடலாமா? அவர்களுடைய பேஸ்புக் பக்கத்துக்கு எத்தனை லைக் விழுந்திருக்கிறது, அவர்கள் வெளியிட்ட சமீபத்திய வீடியோ எந்த அளவு வைரலாகியிருக்கிறது என்றெல்லாம் கண்காணிக்கலாமா?

 

இப்படிப் பல 'காரணி'கள் இருந்தாலும், அவற்றை எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இதனால், ஒருவருக்குப் பெரியதாகத் தோன்றுகிற நிறுவனம், இன்னொருவருக்கு மிகச் சாதாரணமானதாகத் தோன்றலாம். இவர் பெரிதாக மதிக்கிற நிறுவனத்தை அவர் ஏற்க மறுக்கலாம்.

 

ஆகவே, இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம்; மதிப்பு என்பதைவிட, சந்தைமதிப்பு என்பதைப் பார்க்கலாம்.

 

ஒரு நிறுவனத்தை சந்தை எப்படி மதிக்கிறது? அந்த நிறுவனத்துக்கு அவர்கள் எத்தனை டாலர் மதிப்பெண் போடுகிறார்கள்?

இங்கே சந்தை என்பது எப்படி வேலை செய்கிறது, அங்கே ஒரு நிறுவனத்தின் மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது, அது ஏன் டாலர்களில் குறிப்பிடப்படுகிறது, அது ஏன் அவ்வப்போது ஏறி இறங்குகிறது என்பது போன்ற தொழில்நுட்பக் கேள்விகளுக்குள் போகவேண்டாம். ஒரு பேச்சுக்கு, இந்தச் சந்தைமதிப்புதான் அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பு என்று வைத்துக்கொள்வோம்.

இப்படிச் சந்தையால் ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலர் அல்லது அதற்குமேல் மதிப்பிடப்படும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு பிஸினஸ் உலகம் ஒரு செல்லப்பெயர் வைத்திருக்கிறது: Unicorn!

யுனிகார்ன் என்பது, ஒரு பழங்காலக் கற்பனை மிருகம். அதன் நெற்றியில் ஒரு கொம்பு முளைத்திருக்கும். அதனைத் தூய்மை, அழகின் சின்னமாகவே சொல்வார்கள்.

நம் ஊரிலும் 'ஒற்றைக்கொம்பன்' என்ற பயன்பாடு உண்டு. ஒற்றைத்தந்தம் கொண்ட விநாயகருக்கும் இந்தப்பெயரைச் சொல்வார்கள், மூக்கிலே கொம்புள்ள காண்டாமிருகம், ஒரே ஒரு தந்தமுள்ள யானை ஆகியவற்றையும் இப்படிக் குறிப்பிடுவார்கள். இதனால், பிஸினஸ் உலகம் 'யுனிகார்ன்' என்றழைக்கும் இந்தச் சிறிய, ஆனால் பெரிய நிறுவனங்களை நாம் 'ஒற்றைக்கொம்பன்'கள் என்று கொண்டாடலாம்.

 

ஒற்றைக்கொம்பனாக இருப்பதில் என்ன பெருமை?

புதிதாகத் தொழில்தொடங்குகிற எல்லாருக்குமே, தங்கள் நிறுவனம் ஒரு பெரிய நிலைக்கு உயர வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதற்காக இரவுபகலாக உழைப்பார்கள், தரமான தயாரிப்புகளை/சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் வாங்குவார்கள், சிறந்த நபர்களை வளைத்துப்போட்டு நிறுவனத்தை மேம்படுத்துவார்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்களையெல்லாம் அறிமுகப்படுத்திக்கொண்டு நெட்வொர்க்கைப் பெருக்குவார்கள்.

 

ஆனால், இந்தப் பந்தயத்தில் தாங்கள் ஜெயித்துவிட்டோம் அல்லது ஜெயித்துக்கொண்டிருக்கிறோம், சரியான திசையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்றெல்லாம் அவர்கள் அறிவது எப்படி?

 

ஓட்டப்பந்தயத்தில் ஏழு பேர் ஓடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு முன்னே ஒரு ரிப்பன் கட்டப்பட்டிருக்கிறது அல்லது நீளமான கோடொன்று வரையப்பட்டிருக்கிறது. அந்த இலக்கை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அவர்கள் ஓடிவருகிறார்கள், அதைத் தொடவேண்டும் என்ற துடிப்புடன் முன்னேறுகிறார்கள்.

 

அதுவே நெடுந்தூர ஓட்டப்பந்தயம் என்றால், இலக்கு பல கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும், ஓடும்போது அதைப் பார்க்க இயலாது.

 

ஆகவே, ஒவ்வொரு கிலோமீட்டரிலும் ஓர் அறிவிப்புப்பலகையோ, கொடியோ பொருத்தியிருக்கிறார்கள். ஓடிவருகிறவர்கள் அதைப்பார்த்துத் தாங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம், இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்று தெரிந்துகொள்கிறார்கள்.

 

ஒருவேளை அப்படி எந்த அறிவிப்புப்பலகையும் இல்லாவிட்டால், ஓடுகிறவர் தன் மொபைலில் ஏதோ ஓர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தித் தான் ஓடிய தூரத்தைத் தெரிந்துகொள்கிறார். அதுவும் இல்லையென்றால், தன் மனத்துக்குள்ளாவது ஒரு கணக்கு போட்டுக்கொண்டுதான் ஓடுகிறார்.

 

இத்தனைக்கும் காரணம், முன்னேற்றம் என்பது நமக்குக் கண்ணெதிரே தெரியவேண்டும், அப்போதுதான் நாம் ஊக்கத்துடன் ஓடுவோம்.

 

மாறாக, எவ்வளவுதூரம் ஓடியிருக்கிறோம் என்பதும் தெரியாமல், இன்னும் எவ்வளவுதூரம் ஓடவேண்டும் என்பதையும் சொல்லாமல் ஓடச்சொன்னால் சலிப்புதான் வரும். நாம் முன்னேறுகிறோம் என்பதை நாமே உணர்ந்தால்தான் ஓட்டத்தில் சுவாரஸ்யமிருக்கும்.

 

சொந்தமாகத் தொழில் தொடங்குகிறவர்கள், சிறு நிறுவனங்களில் தங்கள் உழைப்பை முதலீடு செய்கிறவர்கள் எல்லாருக்கும் இது ஓர் அவசியத்தேவை. தாங்கள் சரியான திசையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்வதன் மூலம் அவர்கள் இன்னும் முனைப்புடன் உழைக்கிறார்கள்.

 

'ஒற்றைக்கொம்பன்' என்பது அப்படிப்பட்ட ஓர் அங்கீகாரம்தான். வேறு யாரோ அல்ல, சந்தையே சொல்லிவிட்டது, 'உன் மதிப்பு ஒரு பில்லியன் டாலர், நீ ஒரு யுனிகார்ன்!'

 

இதைக்கேட்டு மகிழ்ந்துபோய், அவர்கள் அங்கேயே நின்றுவிடப்போவதில்லை. இரண்டு பில்லியன், மூன்று பில்லியன் என்று முன்னேறிச்செல்லவே விரும்புவார்கள். ஆனால் அப்போதும், அந்த முதல் பில்லியன் மறக்காது.

 

சிறு நிறுவனங்களில் பணிபுரிகிற எல்லாருமே, 'யுனிகார்ன்' அடையாளத்தைப் பெரிய கௌரவமாகக் கருதுவது இதனால்தான். பல நேரங்களில் அவர்களுடைய உழைப்புக்கு முதல் பெரிய அங்கீகாரம் அதுதான்.

 

இன்றைக்கு உலக அளவில் பல 'யுனிகார்ன்'கள் இருக்கின்றன. 'அவற்றில் பல நிறுவனங்கள் உண்மையில் யுனிகார்ன்களே அல்ல, அவற்றின் மதிப்பு ஊதிப் பெரிதுசெய்யப்பட்டிருக்கிறது' என்று விமர்சனமும் இருக்கிறது. அந்தப் பிரச்னை முதலீடு செய்கிறவர்களுடையது, நாம் கொஞ்சம் ஒதுங்கிநின்று, இந்த நிறுவனங்களை யுனிகார்ன்களாக ஆக்கியது என்ன என்று பார்ப்போம்.

 

'ஸ்டார்ட்டப்கள்' எனப்படும் தொடக்கநிலை நிறுவனங்கள் எல்லாப்பக்கங்களிலும் குவிந்துகொண்டிருக்கிற நேரம் இது. இதற்கு அதிக முதலீடு தேவையில்லை, பெரிய அலுவலகமோ, கோட், சூட்டோ அவசியமில்லை, பெரிய நகரங்கள், வளர்ந்த நாடுகளில்தான் வசிக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை, நுனிநாக்கு ஆங்கிலம் தேவையில்லை... நல்ல யோசனையும் உழைக்கிற ஆர்வமும் இருந்தால், யார் வேண்டுமானாலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தலாம் என்கிற சூழ்நிலை.

 

ஆனால், இப்படி ஆர்வத்துடன் தொடங்கப்படுகிற நிறுவனங்களில் பலவும் முதலாண்டைக்கூடத் தாண்டுவதில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். பத்தில் ஒரு நிறுவனம் பிழைத்து முன்னேறினாலே அதிகம்.

 

இந்த நேரத்தில், சில நிறுவனங்கள் மட்டும் 'யுனிகார்ன்'களாக வளர்கின்றன என்றால், அவற்றில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டுமல்லவா? அது, அவற்றைத் தொடங்கியவர்களின் லட்சியவெறியாக இருக்கலாம், அவர்களோடு இணைந்தவர்களின் தெம்பூட்டும் உழைப்பாக இருக்கலாம், அவர்கள் தேர்ந்தெடுத்த தயாரிப்பு/சேவையின் சிறப்பாக இருக்கலாம், அதனை சந்தைக்குக் கொண்டுவரப் பயன்படுத்திய உத்திகளாக இருக்கலாம், விலையைத் தீர்மானித்த நுட்பமாக இருக்கலாம், மக்களுடைய சிந்தனைமாற்றமாக இருக்கலாம், இவை அனைத்தும் கலந்த இன்னொன்றாகவும் இருக்கலாம்... ஒவ்வொரு யுனிகார்னும் நமக்கொரு கதையைச்சொல்கிறது.

 

ஒரு யுனிகார்ன் ஜெயிக்கிறது என்றால், இன்னொரு பக்கம் பல நூறு நிறுவனங்கள் தோற்கின்றன; அவற்றிடமும் நாம் கற்றுக்கொள்வதற்கான பாடங்கள் இருக்கும். ஆனால், முதலில் ஜெயித்தவர்களைப் பார்ப்போமே!

 

வெவ்வேறுதுறைகளில் தொடங்கப்பட்டு அதிவிரைவாக யுனிகார்ன் நிலையை எட்டிய நிறுவனங்கள் எப்படி ஜெயித்தன? அவற்றைத் தொடங்கியவர்கள் என்னமாதிரி பின்னணியிலிருந்து வந்தவர்கள், இப்படியொரு நிறுவனத்தைத் தொடங்கவேண்டும் என்கிற யோசனை அவர்களுக்கு எப்படி வந்தது, இதுதான் அவர்களுடைய முதலாவது தொழில்முயற்சியா அல்லது இதற்குமுன் வேறு ஏதேனும் முயன்று வென்றிருக்கிறார்களா, தோற்றிருக்கிறார்களா? அந்த வெற்றி, தோல்வியை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்? திடீரென்று அவர்கள்மீது புகழ்வெளிச்சமும் பணமும் வந்து குவியும்போது அவர்களுடைய மனநிலை எப்படி மாறியது, அவர்களைச் சுற்றியிருக்கிறவர்கள் எப்படிப்பார்த்தார்கள், இந்த வெற்றிக்கு உதவியவர்கள், வழியில் அவர்களது காலை வாரிவிட்டவர்கள் யார் யார்... ஒற்றைக்கொம்பன்களின் கதையை வாசிக்க வாசிக்கப் பிரமிப்பு அதிகரிக்கிறது.

 

இத்தனைக்கும் இந்தச் சிறு நிறுவனங்களைப்போல் பலமடங்கு வெற்றிபெற்ற மிகப்பெரிய நிறுவனங்களெல்லாம் அதே ஊரில், அதே துறையில் இருக்கின்றன. ஆனால், அவர்கள் இருபது, முப்பது ஆண்டுகளாகச் சிரமப்பட்டு அடைந்த வெற்றியை, இந்த நவீன நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்குள் எட்டிவிடுகின்றன. சிலர் மட்டுமே வேலை செய்கிற நிறுவனங்களெல்லாம் பில்லியன் கணக்கைத் தாண்டி முன்னேறுகின்றன என்றால், இந்தத் தலைமுறையின் மேலேயே ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. 'இவங்ககிட்ட ஏதோ இருக்கு' என்று பெரிய நிறுவனத்தினர்கூட எட்டிப்பார்க்கிறார்கள், அவர்களைக் காப்பியடித்துத் தங்களுடைய பிஸினஸ் நடைமுறைகளையும் மாற்றிக்கொண்டு 'நாங்களும் யூத்துதான்' என்கிறார்கள்.

 

இதனால், இப்போது படித்துக்கொண்டிருக்கும் அடுத்த தலைமுறையினரின் சிந்தனைக்கோணமும் மாறியிருக்கிறது. பலர் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று எண்ணுவதற்குப்பதிலாக, 'நாம ஒரு நிறுவனம் ஆரம்பிச்சு நாலு பேருக்கு வேலை கொடுக்கணும்' என்று நினைக்கிறார்கள். காரணம், அவர்கள் கண்ணெதிரே பார்த்த ஒற்றைக்கொம்பன்களின் வளர்ச்சிதான். ஒவ்வொருநாளும் நம் வாழ்க்கையைத் தொட்டுக்கொண்டிருக்கிற இந்த ஒற்றைக்கொம்பன்களை ஒவ்வொன்றாக அருகே சென்று பார்ப்போம், புரிந்துகொள்வோம், கற்றுக்கொள்வோம்!
(தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles