தமிழ் அப்ளிகேஷன் விமர்சனம்

Friday, July 29, 2016

மொபைல் அப்ளிகேஷன்கள் பொதுமக்களுக்கான நிலையிலிருந்து துறைசார்ந்த நிலைக்கு நகரத் தொடங்கியிருக்கும் நேரம் இது. ஆசிரியர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வங்கிப்பணியிலுள்ளோர், விற்பனைப் பிரதிநிதிகள் என்று பலதரப்பட்டோருக்கான அப்ளிகேஷன்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.
 

தமிழில் பல நிறுவனங்களும் தனிநபர்களும் இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். அவ்வகையில் ஒரு முக்கியமான அப்ளிகேஷன் ‘விவசாயம்’. https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

 

சமீபத்திய செய்திகள், உதவிக் கட்டுரைகள், நிறைய படங்கள், அழகான வடிவமைப்பு என்று இந்த அப்ளிகேஷன் சிறப்பாக செயல்படுகிறது. செய்திகள் எளிய,  மொழியில் உள்ளன. கண்ணுக்கு சிரமமில்லாத வடிவமைப்பால் இவற்றை நன்கு வாசிக்க இயலுகிறது.

 

இத்துடன், செய்திகளை இயற்கை உரம், இயற்கை விவசாயம், காய்கறி வகைகள், கால்நடை, சந்தை, தொழில்நுட்பம் என்று பலவகைகளில் பிரித்து வைத்துள்ளார்கள். ஆகவே, நமக்கு வேண்டியதைத் தேடி வாசிப்பது எளிது. சொற்களை இட்டுத்தேடும் வசதியும் தந்திருக்கிறார்கள். ஆனால் அது ஏனோ, எனக்கு வேலை செய்யவில்லை.

 

இந்த அப்ளிகேஷனுக்குள்  'கடை' என்கிற பகுதியும் உள்ளது. அங்கே பல்வேறு விவசாயப் பொருள்களை வாங்கும் வசதி இருக்கிறது. அவ்வப்போது '1 டன் வெண்டைக்காய் தேவை, தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்....' என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன.

 

குறைகள் என்று பார்த்தால், இதிலுள்ள செய்திகள் பல்வேறு ஊடகங்களிலிருந்து திரட்டப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் அவ்வூடகங்களுக்குச் செல்வதற்கான இணைப்புகள் எவையும் தரப்படுவதில்லை. ஆகவே, இந்தச் செய்திகளைத் தொகுத்து வெளியிட முறைப்படி காப்புரிமை பெறப்பட்டதா என்கிற குழப்பம் எழுகிறது.

 

அதேபோல், திடீரென்று முழுத்திரையையும் நிரப்பும் விளம்பரங்கள் எரிச்சலூட்டுகின்றன. இதுபோன்ற இலவச அப்ளிகேஷன்களுக்கு விளம்பர வருவாய் அவசியம் என்று புரிகிறது. அதேசமயம் அது பயன்பாட்டைப் பாதிக்கும்படி இருக்கலாகாது.

 

இதுபோன்ற சிறு குறைகளைக் களைந்துவிட்டால், விவசாயம் பல உழவர்களின் துணைவனாகும்! (தொடரும்)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles