நுட்பவெப்பம் - 8

Friday, July 29, 2016

இந்த மாதம் உங்கள் மொபைல் போன் பில் எவ்வளவு? இப்படிக் கேட்டால் பலரும் "அதை ஏன்யா கேட்கறே 'என்றுதான் சலித்துக் கொள்வார்கள். '3ஜிக்கும் 4ஜிக்கும் பணம் 100ஜி வேகத்துல செலவாகுது!' 
மொபைல் போன் வழியே பயன்படுத்தும் 3ஜி, 4ஜி தரவு (Data) இணைப்புகளோடு ஒப்பிடும்போது, WiFi இணைப்புகளின் வேகம் அதிகம், செலவு குறைவு. ஆனால், செல்லும் இடத்திலெல்லாம் WiFi இருக்காதே, என்ன செய்ய?
 
 

இன்ஸ்டாபிரிட்ஜ் (InstaBridge) என்ற நிறுவனம் ஒரு புதுமையான மொபைல் அப்ளிகேஷன் உதவியுடன் இந்தப் பிரச்னையைத் தீர்க்கிறது. 'எங்கள் உறுப்பினர்களுக்குச் சென்ற இடமெல்லாம் WiFi' என்பதே இவர்களுடைய வாக்குறுதி. 

 

இது எப்படிச் சாத்தியம்?

பொதுவாக நாம் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, பொது இடங்களில் இருக்கும் இலவச WiFi இணைப்புகளைப் பயன்படுத்தி செல்போன் தரவுக் கட்டணத்தை மிச்சப்படுத்த முனைவோம். ஆனால், ஒவ்வோர் இடத்திலும் WiFi தரவுச்சொல்லை விசாரித்துப் பிழையில்லாமல் உள்ளிட்டுப் பயன்படுத்துவது கடினம். அதற்குச் சிரமப்பட்டுக்கொண்டு, பலர் செல்போனிலிருக்கும் இணையத்தையே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், இதெல்லாம் உள்நாட்டில்தான். வெளிநாட்டுக்குச்சென்று சர்வதேச ரோமிங்கில் இணையம் பயன்படுத்தினால், பலமடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.உள்நாடோ, வெளிநாடோ, நாம் எந்த இடத்துக்குச் சென்றாலும், அங்குள்ள இலவச WiFi இணைப்புகளின் விவரங்கள் அனைத்தும் நமக்கு உடனுக்குடன் தெரியவந்தால் எப்படியிருக்கும்! 
 
இதைத்தான் இன்ஸ்டாபிரிட்ஜ் செய்கிறது. இதில் உறுப்பினர்களாக இருக்கிறவர்கள், ஆங்காங்கே தங்களுக்குத் தெரிந்த WiFi இணைப்புகளின் விவரங்களை இந்தத் தளத்தில் ஏற்றுகிறார்கள். அதன்பிறகு, வேறு யாராவது அந்த இடங்களுக்கு வந்தால், 'இங்கே ஒரு WiFi இணைப்பு உள்ளது' என்று அதுவே காட்டுகிறது. அவர்களுடைய மொபைல்போனை இலவசமாக WiFi இணையத்தில் இணைத்துவிடுகிறது. 

 

ஒருவேளை அந்த WiFi இணைப்பு இப்போது வேலை செய்யாவிட்டால்?

அதையும் இன்ஸ்டாபிரிட்ஜ்  பார்த்துக்கொள்கிறது. எந்தெந்த இணைப்புகள் வேலை செய்கின்றன என்பதைக் கவனித்து, அந்தச் செல்லாத இணைப்புகளை அவ்வப்போது நீக்கிவிடுகிறது. ஆகவே, எப்போதும் வேலை செய்கிற ஓர் இணைப்பு நமக்குக் கிடைக்கும், அதுவும் பைசா செலவில்லாமல். 
 
இதற்காக இன்ஸ்டாபிரிட்ஜ்  பணம் ஏதும் வசூலிப்பதில்லை, "மச்சி, அங்கே ஓசியில பிரியாணி போடறாங்க" என்று பொதுநல நோக்கத்தோடு விவரம் சொல்லும் நண்பனைப்போல்தான், இது செயல்படுகிறது. ஆனால், எத்தனை நாளைக்கு இந்தச் சேவையை இலவசமாக வழங்க முடியும் என்பது தெரியவில்லை. வருங்காலத்தில் பல கூடுதல் சவுகர்யங்களுடன் இன்ஸ்டாபிரிட்ஜ் கட்டணச்சேவையும் அமலுக்கு வரலாம் அல்லது வேறுவிதத்தில் இவர்கள் பணம் பண்ண முயலலாம். எதற்கெடுத்தாலும் பணமா என்று கோபிக்கக்கூடாது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை யோசிக்காமல் ஒரு திட்டத்தை முன்வைத்தால், அது என்னதான் பயனுள்ளதாக இருப்பினும் நெடுநாள் நிற்காது.
 
அதிகம் வேண்டாம். தெருவோரமாக ஐந்தாறு மரங்களை (அதாவது, செடிகளை) நடுகிறோம் என்றால்கூட, அவற்றுக்கு யார் நீர் ஊற்றுவார்கள் என்று யோசிக்க வேண்டும். 'மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்' என்று தத்துவம் பாடினால் போதாது. அக்கம்பக்கத்தில் சிலரைக் கூப்பிட்டு "இந்தச் செடிகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்ற முடியுமா?" என்று கேட்க வேண்டும், அவர்கள் அமைதியாக, 'What's In It For Me?" (இதைச் செய்வதால் எனக்கு என்ன பயன்?) என்று கேட்பார்கள்.
 
மரம் வளர்ந்தால் மழை பொழியும், ஊர் பசுமையாகும், உங்கள் சந்ததிகள் வளமாக வாழ்வார்கள் என்றெல்லாம், அவர்களுக்கு விளக்கலாம்தான். ஆனால், அதைத்தாண்டி வேறு ஏதாவது ஓர் உடனடிப் பலன் இருந்தால் இன்னும் சுறுசுறுப்பாக வேலை நடக்கும்.
 
உதாரணமாக, அந்தச் செடிகளுக்கு யார் தண்ணீர் ஊற்றினாலும் அவர்களுக்கு ஒரு பொற்காசு (சரி, ஐம்பது கிராம் கடலை பாக்கெட்) கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம், அப்போது, தினமும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றப் பலர் முன்வருவார்கள். இதற்கெல்லாமா பிரதிபலன் எதிர்பார்ப்பார்கள் என்று எண்ண வேண்டாம். ஓட்டு போடவே காசு கேட்கிற ஊர் இது. 
 
இப்படித்தான் மும்பையிலுள்ள ஒரு ரயில்நிலையத்தில் வித்தியாசமான குப்பைத்தொட்டியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதில் பிளாஸ்டிக் பாட்டில்களை நுழைத்தால், 'பரிசு' கிடைக்குமாம்.
 
 

என்ன பரிசு?

அந்த பாட்டிலின் மதிப்புக்கேற்ற ஒரு சிறு தொகையை மொபைல் ரீசார்ஜாகப் பெறலாம் அல்லது ஒரு சேவை நிறுவனத்துக்கு அதனை நன்கொடையாகக் கொடுத்துவிடலாம். இல்லாவிட்டால், ஏதாவது ஒரு கடையில் தள்ளுபடிக் கூப்பன் பெறலாம். அவ்வளவுதான். அந்த ரயில்நிலையத்தில், இனி பிளாஸ்டிக் பாட்டில்களே இராது. தண்ணீர் குடிப்பவன் கீழே போட்டால்கூட, இன்னொருவன் பொறுக்கியெடுத்து காசு பார்த்துவிடுவான். ரயில்நிலையம் சுத்தமாகிவிடும்!

 

சரி, இதனால் அரசாங்கத்துக்கு நஷ்டமாகிவிடாதா?

ஓர் அறக்கட்டளை இந்த இயந்திரத்தை இலவசமாகத் தந்திருக்கிறது, இயந்திரத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களின்மூலம், அரசுக்கு வருமானம் வருகிறது. இதில் போடப்படும் பாட்டில்களை மறுசுழற்சிக்குத் தந்து, புதிய பொருட்களை உருவாக்கலாம்.

 

மக்களுக்கு உடனடிக்காசு, அரசுக்குச் சுத்தமான ரயில்நிலையங்கள், வணிக நிறுவனங்களுக்கு விளம்பரம், சமூகத்தைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம் என்று, எல்லாருடைய 'What's In It For Me?'க்கும் பதில் கிடைத்துவிட்டது. இதுபோன்ற திட்டங்கள்தான் நீடித்துநின்று வெல்லும். அதேசமயம், இப்படிப்பட்ட இயந்திரங்களெல்லாம் இல்லாமல், மக்கள் தாங்களே குப்பைபோடும் எண்ணத்தைத் தவிர்த்தால், அது இன்னும் பெரிய வெற்றியாக இருக்கும்.

 

இதற்கு உதாரணம் இருக்கிறது, என் நண்பர் ஒருவருடைய மகன். பத்து வயதுதான் ஆகிறது. எந்நேரமும் செல்போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருப்பவன். அவனுடைய தாயும் தந்தையும் மிரட்டி, அதட்டி, கெஞ்சிக்கூடப் பார்த்துவிட்டார்கள், பலன் இல்லை. 

 

"இந்த வயசுல இவனுக்கு எதுக்கு செல்போன்? பிடுங்கி வெச்சுட்டா பிரச்னையே இல்லையே" என்றேன். 

 

"பையனை தினமும் ஸ்கூல்பஸ்ல அனுப்பறோம். ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட எட்டுமணி நேரம் எங்களைப் பிரிஞ்சுதான் இருக்கான். ஏதாவது அவசரம்னா பேசறதுக்கு ஒரு போன் தேவைப்படுதே! அதுக்காகதான் செல்போன் வாங்கிக்கொடுத்தேன், அதனால இப்படியொரு பிரச்னை வரும்னு எதிர்பார்க்கலை!" என்றார் அவர். நண்பர் சொல்லும் காரணம் நியாயமானதுதான். ஆனால், அதற்கு அவர் ஒரு சாதாரண செல்போனை வாங்கியிருக்கலாம். காசு இருக்கிறது என்பதற்காக, இண்டர்நெட், கேம்ஸ் வசதியுடன் கூடிய அதிநவீன செல்போனை வாங்கிக் கொடுத்தால் அது இப்படிப்பட்ட பிரச்னைகளைக் கொண்டு வருகிறது.
 
சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களே இந்த வலையில் சிக்கித் தவிக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பலர் ஸ்மார்ட்போனை வீசி எறிந்துவிட்டு, ஆயிரம் ரூபாய்க்குப் பழைய நோக்கியா போன் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் வேலை செய்ய இயலுகிறதாம். முக்கியமாக, பேட்டரி வாரக்கணக்கில் வருகிறதாம்!
 
குழந்தைகளுக்காகவே, டினிடெல் (tinitell)என்ற செல்போன் கைக்கடிகாரம் ஒன்றும் வந்திருக்கிறது. இதை வாங்கிப் பிள்ளைகளின் கையில் கட்டிவிட்டால், பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் அவர்களுடன் பேசலாம். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று ஜி.பி.எஸ். மூலம் அறியலாம்.

 

இது எப்படி இயங்குகிறது?

 

Tinitell கைக்கடிகாரத்திலேயே சிம்கார்ட் பொருத்துவதற்கான துளை உள்ளது. ஆகவே, இது வெறும் கடிகாரமல்ல. இதுவே ஒரு செல்போன். 2ஜி வசதியுள்ள எந்தவொரு சிம்கார்டிலும், இது வேலைசெய்யும்.
ஆனால், மற்ற செல்போன்களைப்போல் இதில் திரை கிடையாது. எண்களைத் தட்டி அழைக்க இயலாது. இணையம் பார்ப்பது, வாட்ஸாப்பில் செய்தி அனுப்புவது, கேம்ஸ் விளையாடுவது என்று எதுவும் கிடையாது. பெற்றோர் ஏற்கெனவே பதிவு செய்துள்ள எண்களைமட்டும்தான் அழைத்துப்பேசலாம். அதுபோல, யாராவது அழைத்தால் பதில்சொல்லலாம்.
 

இந்த கைக்கடிகாரத்திலேயே மைக், ஸ்பீக்கர் இரண்டையும் அமைத்திருக்கிறார்கள். ஆகவே, மணிக்கட்டை வாயருகே கொண்டுவந்துவிட்டால் ஒரே க்ளிக்கில் பேசலாம், கேட்கலாம். Tinitell அணிந்துள்ள பிள்ளைகளின் பெற்றோர், இதற்கென்று ஒரு விசேஷ அப்ளிகேஷனைத் தங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிக்கொள்ளலாம். அதைக்கொண்டு, தங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
 

ஜேம்ஸ்பாண்ட் கதைபோல் இருக்கிறது. ஆனால், இன்றைய தொழில்நுட்பத்தில் இதைச்செய்வது மிக எளிது. சொல்லப்போனால், அன்றைக்குத் திகைப்பை உண்டாக்கிய பல அறிவியல் புனைகதைகள், த்ரில்லர்கள், ஏன், குடும்பக்கதைகளைக்கூட இன்றைக்குப் படித்தால் பெரிய பரவசம் உண்டாவதில்லை. சீதையை ராமன் சிரமப்பட்டுத் தேடினார் என்றால், 'ஒரு போன் போட்டுக் கேட்டிருக்கலாமே' என்று இளைஞர்கள் கலாய்க்கிறார்கள். ஆனால், அன்றுமுதல் இன்றுவரை கதைகளின் அடிப்படைக்கருக்கள் மாறவே இல்லை என்று ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பலநூறு நாவல்களை ஆராய்ந்து பார்த்து, அவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருக்கிறார்கள்.
 

வெர்மன்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த ஆய்வின்படி, இதுவரை எழுதப்பட்ட எல்லாக்கதைகளிலும் ஆறுவிதமான உணர்வுகள்தான் திரும்பத்திரும்ப வருகின்றனவாம்:

  1. கீழ்நிலையில் இருப்பவன் உயர்வது (சந்தோஷக்கதை)
  2. உயர்ந்தநிலையில் இருப்பவன் விழுவது (சோகக்கதை)
  3. ஒருவன் விழுந்து, பின் உயர்வது
  4. ஒருவன் உயர்ந்து, பின் விழுவது
  5. உயர்ந்து, விழுந்து, மீண்டும் உயர்வது
  6. விழுந்து, உயர்ந்து, மீண்டும் விழுவது

 

சுற்றிச்சுற்றி யோசித்தால் நம்முடைய கதைகள் அனைத்தையும் இந்த ஆறு வகைகளுக்குள் அடக்கிவிடலாமாம்.  குறிப்பாக, கதாபாத்திரங்கள் உயர்ந்து, தாழ்ந்து, மீண்டும் உயர்ந்து, தாழ்கிற ஏற்ற இறக்கங்களைக் கொண்ட கதைகள்தான் அதிகம் விரும்பப்படுகின்றனவாம்.மெகா சீரியல்களின் வெற்றிக்குக் காரணம் இதுதானோ?

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles