ஒற்றைக்கொம்பன்கள் 4

Saturday, December 31, 2016

இணையத்தில் கோப்புகளைச் சேமிக்க.. 
’ட்ராப் பாக்ஸ்’ பயன்படுத்துங்க..!

கடைசியாக ஒரு சிடி அல்லது டிவிடியை எப்போது பயன்படுத்தினீர்கள் என்று நினைவிருக்கிறதா?

சில ஆண்டுகளுக்கு முன்னால் சிடி, டிவிடி வியாபாரம் தூள்பறந்தது. அதிகாரப்பூர்வமாகக் கடைகளில் விற்கப்பட்ட குறுந்தகடுகளில் தொடங்கி, தெருவோரம் விற்ற திருட்டுச்சரக்குகள் வரை உலக, உள்ளூர்த் திரைப்படங்களும் பாடல்களும் சொற்பொழிவுகளும் பள்ளிப்பாடங்களும் இன்னும் பலவும் பரவலாகக் கிடைத்துக்கொண்டிருந்தன.

அதன்பிறகு, Thumb drive எனப்படும் USB குச்சிகள் சிறிதுகாலம் உலகை ஆண்டன. குறுந்தகடுகளைப்போலவே இங்கேயும் திரைப்படங்கள், பாடல்கள்தான் முக்கியமாகப் பரிமாறப்பட்டன. ஆனால், இவற்றில் ஒரு கூடுதல் வசதி; சிடி, டிவிடிகளைப்போலன்றி, இவற்றை எந்தக் கணினியிலும் செருகி இஷ்டம்போல் கோப்புகளைச் சேர்க்கலாம், நீக்கலாம். கீறல் விழாது, கெட்டுப்போகாது.

இதனால், அலுவலகக் கோப்புகள், தனிநபர் விவரங்கள் போன்றவற்றுக்கு இவற்றைப் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். முக்கியமான கோப்புகளையெல்லாம் ஒரு USB குச்சியில் போட்டு பாக்கெட்டில், அல்லது சூட்கேஸில் வைத்துக்கொள்வது ஒரு கட்டாயப் பழக்கமானது. பெரிய நிறுவனங்கள் விசிட்டிங் கார்ட் போல் தங்களுடைய சுயவிவரங்கள் நிரப்பிய USB குச்சியை விநியோகிக்க ஆரம்பித்தார்கள்.

இன்னொரு பக்கம், External Hard Drives எனப்படும் USB செங்கல்கள் பிரபலமாயின. நம்முடைய முக்கியமான கோப்புகளையெல்லாம் இவற்றில் போட்டு வைத்துக்கொண்டுவிட்டால் பாதுகாப்பு என்று எல்லாரும் சொன்னதால், மக்கள் வேலைமெனக்கெட்டு இவற்றை வாங்கி, கல்யாண வீடியோ, வருடாவருடம் ஊர்சுற்றிய படங்கள், டவுன்லோட் செய்து எப்போதும் வாசிக்காத மின்புத்தகங்கள், அனிமேஷன் சித்திரங்களையெல்லாம் உள்ளே குவித்துவைத்தார்கள்.

ஆனால் இன்றைக்கு, குறுந்தகடுகளோ, USB குச்சிகளோ, செங்கல்களோ அதிகம் கண்ணில் படுவதே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் இவற்றைப் பயன்படுத்தினாலும், பெரும்பாலானோர் தங்களுடைய தினசரி வேலைகளுக்கு, தனிப்பட்ட, அலுவல் விஷயங்களுக்கு இவற்றை நம்பியிருப்பதில்லை.

அப்படியானால், அந்த 'முக்கியமான' கோப்புகளெல்லாம் என்ன ஆகின? எங்கே போயின?

அவை இன்னும் பத்திரமாகதான் இருக்கின்றன. ஆனால் தகட்டில், குச்சியில், செங்கல்லில் அவற்றைச் சுமந்து திரியவேண்டியதில்லை, நினைத்த நேரத்தில் எங்கிருந்தும் அவற்றை அணுக வசதியாக, மக்கள் அவற்றை இணையத்தில் பத்திரப்படுத்தி வைத்துவிடுகிறார்கள்.

உதாரணமாக, மகேந்திரன் அலுவலகத்தில் நாள்முழுக்க ஓர் ஆவணத்தை எழுதுகிறார். அதை வீட்டில் சென்று தொடர விரும்புகிறார்.

இதற்கு அவர் ஒரு USB குச்சியை எடுத்து அந்த ஆவணத்தைப் பதிவுசெய்து சிரமப்படவேண்டியதில்லை. அவருடைய கணினியில் இருக்கும் ஒரு விசேஷ மென்பொருளை இயக்கி, அதற்குள் இந்தக் கோப்பைப் பதிவுசெய்துவிட்டால் போதும், அது பத்திரமாக இணையத்துக்குச் சென்றுவிடுகிறது.

அதன்பிறகு, அவர் வீடு திரும்பும் வழியில், தன்னுடைய மொபைல் போனில் அந்த ஆவணத்தைப் பார்க்கலாம், திருத்தலாம், கூடுதல் விஷயங்களைச் சேர்க்கலாம். வீட்டுக்குத் திரும்பியவுடன், விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடரலாம்.

அதுமட்டுமல்ல, மகேந்திரனின் சக பணியாளர்களும் அதே ஆவணத்தில் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்யலாம்; குழப்பம் வந்தால் அங்கேயே உரையாடி அதைச் சரிப்படுத்தலாம். அனைவரும் கூட்டுச்சேர்ந்து உழைத்து, ஒரு சிறந்த ஆவணத்தை உருவாக்கலாம்.

இவை அனைத்தையும் சாத்தியமாக்கியிருப்பது, Cloud File Storage எனப்படும் மேகக் கோப்புச் சேமிப்பகங்கள். Google, Microsoft, Apple என்று பல நிறுவனங்களும் துண்டு போட்டு இடம் தேடிக்கொண்டிருக்கிற இத்துறையில் முதலிடத்திலிருப்பது ஒரு சின்னஞ்சிறு நிறுவனம், DropBox!

இங்கே 'சின்னஞ்சிறு' என்று சொல்வது, அந்த நிறுவனத்தின் அளவை மனத்தில் வைத்துதான். மற்றபடி பயனாளர் எண்ணிக்கை, தினந்தோறும் அதில் சேர்க்கப்படும் கோப்புகளின் எண்ணிக்கை, அளவு, அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்றவை மிக அதிகம். முக்கியமாக, அதன் வளர்ச்சி சதவிகிதத்தை மனத்தில் வைத்துப் பார்க்கும்போது, ட்ராப்பாக்ஸ் ஒரு மிகப்பெரிய நிறுவனம் தான்!

ட்ராப்பாக்ஸைத் தொடங்கி நடத்திக்கொண்டிருப்பவர் பெயர் ட்ரூ ஹௌஸ்டன், கம்ப்யூட்டர் காதலர், இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் வெறியர்.

எந்த அளவு வெறியர் என்றால், சிறுவயதில் எப்பப்பார் கம்ப்யூட்டரோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கடுப்பான இவருடைய தாய் அதைப் பிடுங்கி வைத்துவிட்டாராம், 'வெளியே போ, ஊரைச் சுத்திப்பாரு, நாலு பேரோட பழகு, புதுசா ஏதாவது ஒரு மொழி கத்துக்கோ... அதையெல்லாம் விட்டுட்டு எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டிருந்தா என்ன அர்த்தம்?'

ஹௌஸ்டனின் தாய் ஒரு நூலகர். அதுவும் ஏதோ ஒரு நூலகம் அல்ல, ஹௌஸ்டன் படித்த அதே பள்ளியின் நூலகம். இதனால், ஹௌஸ்டன் தன் தாயை ஏமாற்றிவிட்டு எதுவும் செய்துவிட முடியாது!

‘என் பரீட்சை மார்க்கெல்லாம் எனக்கு முன்னால் அவருக்குத் தெரிந்துவிடும்' என்று சிரிப்போடு ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஹௌஸ்டன், 'அதனால், தேர்வு முடிவுகள் வரும்போதெல்லாம் ரகசியமாக நூலகத்துக்குச் சென்று அம்மா முகத்தைப் பார்ப்பேன். அவர் கடுகடுவென்று இருந்தால் அன்று எனக்குச் செம உதை விழப்போகிறது என்று அர்த்தம்!'

ஹௌஸ்டனின் தந்தை ஓர் எலக்ட்ரானிக் பொறியாளர். ஆகவே, மிக இளம் வயதிலேயே ஹௌஸ்டனுக்குக் கம்ப்யூட்டர்கள் அறிமுகமாகிவிட்டன. அப்பாவிடமே ப்ரொக்ராம் எழுதக் கற்றுக்கொண்டார், பிறகு கொஞ்சம்கொஞ்சமாகத் தானே பல விஷயங்களைப் படித்து, பயிற்சியெடுத்துத் தெரிந்துகொண்டார்.

பத்து வயதில் அவருக்குக் கம்ப்யூட்டர் கேம்ஸ் மீது காதல் பிறந்தது. எந்நேரமும் விதவிதமான விளையாட்டுகளில் மூழ்கியிருந்தார்.

அதேசமயம், அவர் விளையாடுவதோடு நிறுத்திவிடவில்லை. ஒவ்வொரு விளையாட்டையும் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்று பின்னால் சென்று ஆராய்ந்தார், அதனை மாற்றிப்பார்த்தார், தன் விருப்பத்துக்கேற்ப அதை வளைத்து மகிழ்ந்தார்.

அப்போது, கம்ப்யூட்டர் கேம்ஸ் எழுதும் ஒரு நிறுவனம் அவரை அழைத்தது, 'நாங்க எழுதற புது விளையாட்டுகள் சந்தைக்குப் போறதுக்கு முன்னாடி அதையெல்லாம் விளையாடிப் பார்க்கணும், ஏதாச்சும் பிரச்னை இருந்தா எங்களுக்குச் சொல்லணும்' என்றது.

கப்புச்சினோ குடிக்கக் கூலியா? ஹௌஸ்டன் ஒப்புக்கொண்டார். புதுப்புது விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்தார்.

அதேசமயம், அவருடைய வேகத்துக்கு அந்த நிறுவனத்தால் புதிய கேம்களை எழுதமுடியவில்லை. இது ஹௌஸ்டனுக்குச் சலிப்பை உண்டாக்கியது.

பொழுதுபோகாமல், அவர் அந்த கேம்களின் பின்னணியில் இருக்கும் ப்ரொக்ராம்களை அலசினார், அதில் இருக்கும் பிழைகள், பாதுகாப்புப் பிரச்னைகளை கண்டறிந்து அவர்களுக்கே அனுப்பிவைத்தார், 'என்னய்யா ப்ரொக்ராம் எழுதறீங்க? கொஞ்சம் உள்ளே இறங்கிப் பார்த்தா ஓராயிரம் ஓட்டை!'

அந்த நிறுவனத்தார் குஷியாகிவிட்டார்கள், 'தம்பி, நீ பெரிய திறமைசாலிபோலத் தெரியுது, பேசாம எங்ககிட்டயே வேலைக்கு வந்துடேன்' என்றார்கள். 'நீ உங்க வீட்லேர்ந்தே வேலை பார்க்கலாம், நல்ல சம்பளம் தர்றோம்!'

இது ஒரு சிறிய உதாரணம்தான், இப்படி ஹௌஸ்டன் சென்ற இடமெல்லாம் அவருடைய அபார தொழில்நுட்ப அறிவுக்கு மரியாதை கிடைத்தது.

இன்னொருபக்கம், ஹௌஸ்டன் தானே சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்கிற ஆர்வத்திலும் இருந்தார், பல முயற்சிகளிலும் ஈடுபட்டார், ஒன்றும் சரிப்படவில்லை.

இந்த நேரத்தில்தான், அவர் ஏதோ வேலை விஷயமாக நியூயார்க்குக்குப் பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. நான்கு மணிநேரப் பயணத்தை வீணாக்க வேண்டாமே என்று லாப்டாப்பைத் தூக்கிக்கொண்டு சென்றார் ஹௌஸ்டன்.

ஆனால், பஸ்ஸில் ஏறி அமர்ந்தபிறகுதான் அவருக்கு ஞாபகம் வந்தது, ‘அடடா, USB குச்சியை மறந்துவிட்டேனே!’

அவரிடம் லாப்டாப் இருந்ததேயன்றி, அவர் வேலைசெய்யவேண்டிய கோப்புகள் எவையும் இல்லை. ’விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். நான்குமணிநேரம் வீண்!’ என்ற எண்ணம் முளைத்தது. 

எரிச்சலான ஹௌஸ்டன் யோசித்தார், 'இந்தக் குச்சியை எப்பப்பார் தூக்கிக்கொண்டு திரியவேண்டுமா? நாம் நினைத்த நேரத்தில் நினைத்தபடி நம் கோப்புகளைப் பயன்படுத்த ஏதும் வழி இல்லையா?'

அன்றைய இணையத்தில் கோப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்குப் பல வழிகள் இருந்தன. ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பிரச்னை!

இந்தப் பிரச்னைகளெல்லாம் இல்லாதபடி, எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்தக் கருவியில் வேண்டுமானாலும் நம் கோப்புகளைச் சுலபமாகத் திறந்து பயன்படுத்தும்படி ஒரு ப்ரொக்ராம் எழுதினால் என்ன?

ஆரம்பத்தில் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காகதான் ஹௌஸ்டன் இந்த ப்ரொக்ராமை எழுதத்தொடங்கினார். பின்னர், இது எல்லாருக்கும் பயன்படுமே என்று யோசித்தபோது, ட்ராப்பாக்ஸ் பிறந்தது.

இந்த நேரத்தில், ஹௌஸ்டனுடன் ஆரஷ் ஃபெர்டௌஸி என்பவரும் இணைந்துகொண்டார். இருவரும் சேர்ந்து ட்ராப்பாக்ஸைத் தொடங்கினார்கள். கோப்புகளை எங்கும் அணுகலாம், பயன்படுத்தலாம் என்கிற ஒற்றை நோக்கத்துடன் மிகச்சிறப்பான ஒரு மென்பொருளை, அதுசார்ந்த சேவையை உருவாக்கினார்கள். ஒவ்வொரு வசதியையும் பார்த்துப்பார்த்துக் கோத்தார்கள், வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை ஊகித்து, கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்குமேல் செய்துதந்தார்கள்.

ஆரம்பத்திலிருந்தே, ட்ராப்பாக்ஸை இலவசமாகப் பயன்படுத்துகிறவர்கள்தான் அதிகம். அதேசமயம், அப்படி ஓசியில் கோப்புகளைச் சேமிக்க எண்ணி வருகிறவர்களில் பலர், பின்னர் பணம்கொடுத்து உறுப்பினர்களாவதும் தொடர்கிறது. இதற்கு முக்கியமான காரணம், ட்ராப்பாக்ஸ் சேவையில் இருக்கும் அபார எளிமை தான்.

ஹௌஸ்டன் ட்ராப்பாக்ஸைத் தொடங்குவதற்கு முன்னால், கோப்புகளை இணையத்தில் சேமிப்பது என்பது மிகச்சிக்கலான ஒரு விஷயமாக இருந்தது. அதை யார்வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு விஷயமாக, அதற்கென்று தனியே மெனக்கெடவேண்டிய அவசியமே இல்லாதபடி மிக இயல்பானதாக மாற்றியதுதான் ட்ராப்பாக்ஸின் வெற்றிக்கு அடிப்படை.

கிட்டத்தட்ட இதே நேரத்தில் இணையமும் உலக அளவில் அதிவேகமாகப் பரவியது, கோப்புகளை இணையத்தில் ஏற்றுகிற, இறக்குகிற செலவு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தை நெருங்கிவிட்டது.

இதனால், உலகெங்கும் பல தனிநபர்களும் ஏராளமான நிறுவனங்களும் ட்ராப்பாக்ஸின் விசுவாசிகளாக இருக்கிறார்கள். தங்களுடைய கோப்புகள் அனைத்தையும் இந்நிறுவனத்தை நம்பி ஒப்படைக்கிறார்கள்.

தொடக்கம் முதல் இன்று வரை ட்ராப்பாக்ஸ் தன்னுடைய இலக்கிலிருந்து சிறிதும் விலகவில்லை. அதனால்தான் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் அதில் புதிதாக இணைந்தவண்ணம் இருக்கிறார்கள். வாரத்துக்கு வாரம் அதில் சேரும் கோப்புகளின் அளவும் முக்கியத்துவமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து, அந்நிறுவனத்தை மிகமுக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக்கியிருக்கிறது.

இன்றைக்கு, ட்ராப்பாக்ஸுக்குப் பல போட்டியாளர்கள். எனினும், தொடர்ச்சியான தொழில்நுட்ப மேம்பாடு, எளிமை, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வடிவமைப்பு, பல மென்பொருள்களோடு கைகோத்துச் செல்லும் வியூகம் ஆகியவற்றால் ட்ராப்பாக்ஸ் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது!

(தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles