ஒற்றைக்கொம்பன்கள் 3

Friday, December 16, 2016

கொஞ்சநாள் கழிச்சுத் தானா அழிஞ்சிரும் ஸ்னாப்சாட்! 

'கொட்டிட்டா அள்ளமுடியாது!' சொற்களைப்பற்றி இப்படியொரு வாசகம் சொல்லப்படுவதுண்டு. யாரைப்பற்றியாவது ஒரு வார்த்தை தவறாகச் சொல்லிவிட்டாலோ, அவர்களுடைய மனம் புண்படும்படி ஒரு விஷயம் பேசிவிட்டாலோ, அது நிரந்தரமாக அவர்கள் மனத்தில் பதிந்துவிடும். நம்மாலும் அதை மறக்கமுடியாது, உறுத்திக்கொண்டே இருக்கும்.

டிஜிட்டல் உலகம் இதை இன்னும் மோசமாக்கிவிடுகிறது. என்றைக்கோ யாரிடமோ சொன்ன ஒரு விஷயம் என்றென்றைக்குமாக இணையத்தில் பதிந்திருக்கிறது, நாளைக்கு எதையாவது தேடும்போது அது எதிர்ப்பட்டு நம்மைக் கூசவைக்கிறது. 'நானா இப்படியெல்லாம் எழுதினேன்' என்றோ, 'நானா இப்படியெல்லாம் நடந்துகிட்டேன்?' என்றோ வெட்கப்படச்செய்கிறது.

இந்த இயல்பான மனிதவுணர்ச்சியை அடிப்படையாக வைத்து ஒரு பெருநிறுவனம் உருவாகி வளர்ந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா?

விஷயம் இதுதான்: நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், அது நிரந்தரமாக எங்கேயும் தங்கி உங்களை அவமானப்படுத்தாது, சிறிதுநேரத்தில் தானே அழிந்துவிடும்.

அதாவது, தகவல் பரிமாற்றம் சாத்தியம். ஆனால், எதுவும் நிரந்தரமல்ல, பேசுகிற சொற்கள் காற்றில் கரைந்து மறைந்துவிடுவதைப்போல, இந்தத் தகவல்களும் மறைந்துவிடும். ஆகவே, எப்போதோ யோசிக்காமல் செய்த பழைய பிழைகள் என்றைக்காவது வெளிப்பட்டுவிடுமோ என்கிற பயம் இல்லை.

இந்த எளிய மாற்றத்தை ஒரு தலைமுறை கொண்டாடியது, அந்த வசதியைத் தந்த அப்ளிகேஷனை உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது. அதன் பெயர் ஸ்னாப்சாட்.

'ஸ்னாப்சாட்'டை உருவாக்கியவர்கள் மூன்று பேர்.

ம்ஹூம், இரண்டு பேர்.

இல்லை, மூன்று பேர்தான்.

இந்தச் சிறிய விஷயத்தில் இத்தனை குழப்பம் வரக்கூடாதுதான். ஆனால், இணையம், மொபைல் சார்ந்த நவீன அப்ளிகேஷன்கள் கோடிக்கணக்கில் பணமும் புகழும் சம்பாதித்துத் தரக்கூடியவை என்பதால், இதுபோன்ற விஷயங்களில் குடுமிப்பிடிச் சண்டையைத் தவிர்க்க முடிவதில்லை. பேஸ்புக்கில் தொடங்கி அநேகமாக எல்லா நிறுவனங்களிலும் இப்படி ஒரு சர்ச்சை இருக்கிறது. 'நானும்தான் எல்லா வேலையும் செஞ்சேன், ஆனா, பணத்தையெல்லாம் அவங்க அள்ளிக்கிட்டாங்க' என்று ஓரிருவர் முறைக்கிறார்கள்.

இவர்கள் பேச்சில் நியாயம் உண்டா, இல்லையா என்று உறுதியாகத் தீர்மானிப்பது மிகவும் சிரமம். காரணம், இந்த நிறுவனங்களின் வளர்ச்சி அதிவேகமானது, ஆரம்பத்தில் அவர்கள் செய்த சிறிய வேலைகூட, மிகப்பெரிய பங்களிப்பாக அமைந்திருக்கலாம், அதேசமயம், அந்நிறுவனங்களின் இப்போதைய நிலைமையோடு ஒப்பிடும்போது, அது ஒரு சாதாரணமான பங்களிப்பாகவும் தோன்றலாம்.

ஒருவர் பெரிய பிரபலமானதும், 'நான் அவருக்குச் சின்ன வயசுல டீ வாங்கிக் கொடுத்திருக்கேன்' என்று சொல்லிக்கொண்டு சிலர் சொந்தம் கொண்டாட வருவார்கள். இன்னும் சிலர், நிஜமாகவே அவருக்குச் சிறுவயதில் உதவியவர்களாக இருப்பார்கள். இந்த இருவரையும் வித்தியாசப்படுத்துவது கஷ்டம்தான்!

இதற்குச் சிறந்த உதாரணமாக, 'ஸ்னாப்சாட்'டின் கதையையே எடுத்துக்கொள்வோம், அதன் நிறுவனர்கள் இருவரா, மூவரா என்று பார்ப்போம்.

'ஸ்னாப்சாட்'டின் இன்றைய தலைவர் எவான் ஸ்பீகல் வசதியான வீட்டுப்பிள்ளை. சிறுவயதிலிருந்தே தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் அதிகம், 'பள்ளியில் என்னுடைய மிகச்சிறந்த நண்பர், என் கம்ப்யூட்டர் வாத்தியார்தான்' என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர்.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எவான் படித்துக்கொண்டிருந்தபோது, பாபி மர்ஃபி என்பவருடன் பழகத்தொடங்கினார். இருவரும் இணைந்து சில விஷயங்களை முயன்றுபார்த்தார்கள், அதில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

நம் ஊரைப்போல அமெரிக்கக் கல்லூரி மாணவர்கள் வேலை, சம்பளம் போன்றவற்றை மட்டும் எதிர்காலமாக நினைத்துக் கொண்டிருப்பதில்லை. ஒருபக்கம் அந்தச்சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்தான், ஆனால் இன்னொருபக்கம் ஏதாவது புதிதாகச் செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள், சிலர் உடனே வெற்றிபெறுவார்கள், பலர் தோற்றுப்போவார்கள், அதைப்பற்றிக் கவலைப்படாமல் மறுபடி முயற்சி செய்வார்கள்.

எவானும் அப்படிதான், அந்த வயதிலேயே அவருக்குள் தெளிவான சிந்தனைகள் இருந்தன, சரியான வாய்ப்புதான் அமையவில்லை.

Intuit என்ற புகழ்பெற்ற நிறுவனத்தைத் தோற்றுவித்த ஸ்காட் குக் அப்போது ஸ்டான்ஃபோர்ட் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அங்கே சொற்பொழிவாற்றிய அவர் ஏதோ ஒரு கேள்வி கேட்க, அதற்கு எவான் பதில் சொன்னார்.

எவான் சொன்ன பதில் ஸ்காட்டுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது, 'பையன் நல்ல புத்திசாலிதான்' என்று பாராட்டினார். அவருக்கொரு வேலை போட்டுக்கொடுத்தார்.

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வேலைகளைப் பார்த்தபடி எவான் படித்துக்கொண்டிருந்தார். அதேநேரம், தன்னுடைய ஆர்வத்துக்குத் தீனி போடும்படியான ஒரு நல்ல யோசனையைத் தேடிக்கொண்டுமிருந்தார்.

இந்த நேரத்தில்தான் ஃப்ராங்க் ரெஜினால்ட் ப்ரௌன் (சுருக்கமாக, 'ரெக்கி') என்றொரு நண்பர் எவானைப் பார்க்க வந்தார். அவர் மிகவும் பதற்றத்தோடு காணப்பட்டார்.

'என்னாச்சு?' என்று விசாரித்தார் எவான்.

'நான் அந்த போட்டோவை அனுப்பியிருக்கக்கூடாது!' என்றார் ரெக்கி.

'எந்த போட்டோ? என்ன பிரச்னை? கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.'
 
ரெக்கிக்கும் அன்றைக்குக் 'கொட்டிட்டா அள்ளமுடியாது' பிரச்னைதான். ஏதோ ஒரு புகைப்படத்தை யாருக்கோ அனுப்பித்தொலைத்திருக்கிறார், அதை நினைத்து இப்போது வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார். 'ச்சே, நாம அனுப்பற போட்டோல்லாம் கொஞ்சநாள் கழிச்சுத் தானா அழிஞ்சுபோற மாதிரி இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்!'

அவர் இப்படிச் சொன்னபோது, எவானுக்குள் விளக்கு எரிந்தது, 'இது ஒரு மில்லியன் டாலர் யோசனை' எனத் தோன்றியது.

அன்றைக்கு(2011)ச் சந்தையில் பல 'செய்தியனுப்பும்' மென்பொருள்கள் இருந்தன. ஆனால், அவை அனைத்திலும் செய்தியை அனுப்பத்தான் முடியும், அழிக்கமுடியாது.

மாறாக, அனுப்பிய செய்தி சிறிதுநேரத்தில் தானே அழிந்துவிடுகிறாற்போல் ஒரு மென்பொருளை உருவாக்கினால் என்ன? இதுதான் எவானின் சிந்தனை.

கேட்டவுடனே சிரிப்பு வருகிறதல்லவா? எல்லாரும் செய்தியைப் பாதுகாத்து வைக்கத்தானே ஆசைப்படுவார்கள், அதை அழிக்கிற ஒரு மென்பொருளை யார் பயன்படுத்துவார்கள்?

அட, நீங்க வேற, இதுமாதிரி விஷயங்களையெல்லாம் பாதுகாத்து வைக்க நினைக்கிறவர்களைவிட, அழிக்க நினைக்கிறவர்கள்தான் அதிகம் என்றார் எவான். உடனே அந்த மென்பொருளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். ரெக்கி, பாபி இருவரும் அவரோடு சேர்ந்துகொண்டார்கள்.

ஆரம்பத்தில் அந்த மென்பொருள் கணினிக்காகதான் உருவாக்கப்பட்டது. பின்னர் அதனை மொபைல்போனோடு இணைத்துப்பார்த்தபோது, அதன் சாத்தியங்கள் பிரமாண்டமாகத் தெரிந்தன. அதற்கு 'Picaboo' என்று பெயர் சூட்டினார்கள்.

அப்போது, எவானின் வகுப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. அதற்குச் சில முதலீட்டாளர்களெல்லாம் வந்திருந்தார்கள். அவர்கள் முன்னே தன்னுடைய Picaboo-வை இயக்கிக்காட்டினார் அவர். பின்னர், ஆர்வத்தோடு அவர்களுடைய முகங்களைப் பார்த்தார்.

ம்ஹூம், ஒருவரும் சிரிக்கவில்லை. கையைப்பிடித்துக் குலுக்கி, 'இந்தாங்க அஞ்சு மில்லியன் டாலர்' என்று செக் புத்தகத்தைத் திறக்கவில்லை. அட, அதெல்லாம் இருக்கட்டும், ஒரு 'ஆல் தி பெஸ்ட்'கூடச் சொல்லவில்லை.

ஆனாலும், எவானுக்குத் தன்னுடைய அப்ளிகேஷன்மேல் நம்பிக்கை இருந்தது. அதனைப் பொதுவில் அறிமுகப்படுத்தினார்.

எவான் எவ்வளவோ முயன்றும், Picabooவைப் பிரபலப்படுத்தமுடியவில்லை. மிகச்சிலர்தான் அதை டவுன்லோட் செய்தார்கள், அவர்களும் அதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

'இதுவும் சொதப்பல்தானா' என்று எவான் யோசிக்கத்தொடங்கிய நேரம், Picaboo என்ற பெயரில் ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருந்த இன்னொரு நிறுவனம் அவரைத் தொடர்புகொண்டது, 'உடனடியாக உங்கள் நிறுவனத்தின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால்...'

'அடப்போய்யா, எவனும் டவுன்லோட் செய்யாத அப்ளிகேஷனுக்கு எந்தப் பேரை வெச்சா என்ன?' என்று எவான் மனத்துக்குள் நினைத்தாரோ என்னவோ, தன்னுடைய அப்ளிகேஷனின் பெயரை 'Snapchat' என மாற்றிவிட்டார்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில், Snapchatக்கு ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கினார்கள். பல இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் இதனை விரும்பிப் பயன்படுத்தினார்கள், தங்களுடைய நண்பர்களுக்கும் சொன்னார்கள், மற்ற சமூக வலைத்தளங்களில் 'பெரிசு'கள் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், இங்கே ரகசியமாக அரட்டையடிப்பதை அவர்கள் விரும்பினார்கள், அந்த உரையாடல்கள் உடனுக்குடன் அழிக்கப்பட்டுவிடுவது அவர்களுக்குப் பிடித்திருந்தது.

இதனால், மிக விரைவில் Snapchat பிரபலமானது. ஏராளமானோர் அதில் இணைந்தார்கள், ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் அதன்மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இதைப்பார்த்த முதலீட்டாளர்கள் எவானைத் தேடிவந்தார்கள்.

இதனிடையே, எவான், பாபிக்கும் ரெக்கிக்கும் சண்டை. காரணம், ஸ்னாப்சாட்டில் ரெக்கி 30% பங்குகளை எதிர்பார்த்தார், மற்ற இருவரும், 'நீ என்ன பெரிய வேலை செஞ்சுட்டே? அவ்வளவு பங்கெல்லாம் தரமுடியாது!' என்றார்கள்.

இத்தனைக்கும் அப்போது ஸ்னாப்சாட்டின்மூலம் ஒரு பைசா லாபம் வரவில்லை. ஆனாலும், வருங்காலத்தில் வருமல்லவா, ஆகவே, அந்தச் சண்டை மும்முரமாக நடைபெற்றது. ரெக்கி அந்நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கடுப்பான ரெக்கி தன்னுடைய பங்கைக் கோரி வழக்குத்தொடுத்தார். அதன்பிறகு, விஷயம் நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக முடித்துவைக்கப்பட்டது.

இப்போதும், ஸ்னாப்சாட்டின் நிறுவனர் பட்டியலில் ரெக்கி சேர்க்கப்படுவதில்லை, ஆனால், 'நாம அனுப்பற போட்டோல்லாம் கொஞ்சநாள் கழிச்சுத் தானா அழிஞ்சுபோறமாதிரி இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்!' என்கிற அவருடைய புலம்பல்தான் இந்தப் பெரிய நிறுவனத்தையே தோற்றுவித்தது உண்மை.

ஸ்னாப்சாட்டின் அதிவேக வளர்ச்சி பலரை உறுத்தியது. அவர்களும் ஸ்னாப்சாட்போன்ற அப்ளிகேஷன்களைத் தயாரிக்க முயன்றார்கள். ஆனால், அவர்களால் வெல்லமுடியவில்லை.

காரணம், 'ஸ்னாப்சாட்' வெறுமனே ஒற்றை யோசனையைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. அதைச்சுற்றிப் பல புதுமைச்சிந்தனைகளைக் கோத்து, தனது வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது; அதனால், உலக இளைஞர்களின் ஆதரவோடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது! (தொடரும்)

- என். சொக்கன்

மேலும் படிக்க:

ஒற்றைக்கொம்பன்கள் - 2
ஒற்றைக்கொம்பன்கள் - 1

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles