ஒற்றைக்கொம்பன்கள் - 2

Thursday, December 1, 2016

வாடகை கொடுக்க முடியாதவர்கள் கோடீஸ்வரர்கள் ஆன கதை!

வாடகைதரக் காசில்லை. என்ன செய்யலாம்? நண்பர்களிடம் கடன் வாங்கலாம், ஏதாவது விலைமதிப்புள்ள பொருளை விற்கலாம், அடகு வைக்கலாம், வீட்டுச்சொந்தக்காரரிடம் இன்னும் பத்து நாள் நேரம் கேட்கலாம், எதுவும் சரிப்படாவிட்டால், வீட்டைக் காலி செய்துவிட்டு இன்னொரு வீடு பார்க்கலாம்.

 

இப்படி வாடகையைத் தர இயலாமல் சிரமப்படுவது, அவமானகரமான விஷயம்தான். ஆனால் என்ன செய்ய? வீடில்லாமல் வாழமுடியுமா? உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத் தேவைகளில் அதுவும் ஒன்றாயிற்றே!

 

ப்ரயன், ஜோ இருவரும் யோசித்தார்கள். எப்படியாவது இந்த வாடகைப் பிரச்னையைத் தீர்த்தாக வேண்டும், அதுவும் உடனே.

 

அப்போது அவர்கள் ஊரில் (சான் ஃப்ரான்சிஸ்கோ) ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கம் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகப் பல நகரங்களைச் சேர்ந்தவர்கள் அங்கே வந்து குவிந்திருந்தார்கள், எல்லா விடுதிகளும் 'ஹவுஸ் ஃபுல்'. அதாவது, 'ஹோட்டல் ஃபுல்'. இதைக் கவனித்தபோது, அவர்களுக்கு ஒரு யோசனை பிறந்தது, 'நம்ம வீட்ல ஒரு அறை சும்மாதானே இருக்கு, அதை வாடகைக்கு விட்டா என்ன?'

 

'வாடகைக்கா?'

 

'ஆமா, ஒரே ஒருநாள் மட்டும் வாடகை, ராத்திரி தங்கிக்கலாம், காலையில டிபனும் உண்டு, சாப்பிட்டுட்டுக் கிளம்பிடவேண்டியதுதான். வாடகை எண்பது டாலர்.'

'இத்தனூண்டு அறைக்கு எண்பது டாலரா, எவன் கொடுப்பான்?'

'ஊர்ல எல்லா ஹோட்டலும் நிரம்பியிருக்கு, இந்தக் கருத்தரங்குக்கு வர்றவங்கள்ல தங்கறதுக்கு அறையில்லாம தவிக்கறவங்க பலர் இருப்பாங்க. அவங்கள்ல சிலர் இங்கே வரலாமே!'

'வருவாங்களா?'

'முயற்சிசெஞ்சு பார்ப்போமே!'

'சரி.'

அவர்கள் இருவரும் மளமளவென்று வேலையில் இறங்கினார்கள். அந்த அறையில் தங்கப்போகிறவர்களுக்காக மூன்று காற்று மெத்தைகளை எடுத்துப்போட்டார்கள். அதைப் புகைப்படம் பிடித்தார்கள், அந்தப் புகைப்படத்தை வைத்து ஓர் இணையதளத்தை உருவாக்கினார்கள், 'எங்கள் அறையில் தங்க வாருங்கள்' என்று அறிவித்தார்கள். யாராவது வருவார்களா என்று காத்திருந்தார்கள்.

உடனடியாக, மூன்று மெத்தைகளும் நிரம்பிவிட்டன. அதாவது, மூன்றுபேர் (அவர்களில் ஒருவர் இந்தியர்) அவர்களுடைய வீட்டில் தங்க விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ப்ரயனும் ஜோவும் அவர்களை வரவேற்று, உபசரித்து அனுப்பினார்கள். தலைக்கு எண்பது டாலர் பெற்றுக்கொண்டார்கள்.

அவர்களுக்கு ஒருபக்கம் 'அட, சும்மாக்கிடந்த அறைக்கு இவ்வளவு பணமா' என்று ஆச்சர்யம். இன்னொருபக்கம், இதனால் வாடகைப்பிரச்னை தீர்ந்த நிம்மதி!

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் யோசித்தபோது, அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது: இந்த அறை நமக்குதான் 'சும்மா', வேறு ஊரிலிருந்து இங்கே வருகிறவர்களுக்கு இது ஓர் அவசியத்தேவை.

எல்லாரும் பெரிய விடுதிகளில் தங்க விரும்புவதில்லை, கொஞ்சம் சிக்கனமாக, ஒரு ராத்திரிக்கு மட்டும் தூங்கி எழுவதற்கு ஓர் இடம் இருந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் பலர். அப்படிப்பட்டவர்களுக்கு நம்முடைய வீட்டை அடிக்கடி வாடகைக்கு விட்டால் என்ன?

அதோடு நிறுத்துவானேன்? சான் ஃபிரான்சிஸ்கோவைப்போல் உலகம் முழுக்கப் பல நகரங்கள் இருக்கின்றன, அங்கெல்லாம் பல மக்கள் தினமும் வருகிறார்கள், அவர்களுக்குத் தங்குவதற்குச் சிக்கனமான இடங்கள் தேவை. அதே நகரங்களில், பல மக்கள் பெரிய வீடுகளில் தங்கியிருக்கிறார்கள், அந்த வீடுகளில் ஓரிரு கூடுதல் அறைகள் இருக்கின்றன.

இந்தக் காலி அறைகளையும், அறை தேடும் மனிதர்களையும் இணைத்தால் என்ன? ஒருபக்கம் 'கொஞ்சம் கூடுதல் வருமானம் வந்தால் பரவாயில்லை' என்று நினைக்கும் வீட்டுக்காரர்கள், இன்னொருபக்கம் 'இன்று இரவு சிக்கனமாக எங்கேயாவது தங்கினால் கொஞ்சம் காசு மிச்சமாகுமே' என்று நினைக்கும் பயணிகள், இவர்கள் இருவரையும் யாராவது அறிமுகப்படுத்தி இணைத்துவைத்தால் எப்படியிருக்கும்!

வழக்கமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் விடுதி அறையில் ஒரு நாளைக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழிக்கிற ஒருவர், இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் தந்து ஒரு வீட்டில் தங்கிக்கொள்கிறார். அவருக்கு நான்காயிரம் ரூபாய் மிச்சம். அதேசமயம், அந்த வீட்டின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் லாபம்.

இப்படி இவர்கள் இருவரையும் இணைத்துவைத்து, பணத்தை மிச்சப்படுத்தித் தருகிற நிறுவனத்துக்கு அவர்கள் நூறு ரூபாய் கமிஷன் தரமாட்டார்களா என்ன? அதுதான் அவர்களுடைய திட்டம்!

கேட்பதற்கு நன்றாகதான் இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் சாத்தியமா? மக்கள் அப்படி முன்பின் தெரியாதவர்களுடைய வீட்டில் வந்து தங்குவார்களா?

ஏன், இப்போது மூன்றுபேர் நம்முடைய இணையதளத்துக்கு வந்து தேடவில்லையா? நம் வீட்டுக்கு வந்து தங்கவில்லையா? சுளையாகக் காசை எண்ணிக்கொடுக்கவில்லையா? இதுபோலப் பலரும் நினைத்தால் நம்முடைய தொழில் எங்கேயோ போய்விடுமே!

நன்றாக யோசித்தபிறகு, அவர்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள்: பலவிதங்களில் பலருக்குப் பயன்படக்கூடிய இணையதளம் இது. ஆகவே, இதைத் தொடங்கிவைப்போம், அதன்பிறகு மக்களின் ஆதரவைப்பொறுத்து, ‘பைசா வருகிறதா, இல்லையா’ என்பதைப் பொறுத்து, அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கலாம்.

இந்த இணையதளத்தை உருவாக்குவதற்காக, அவர்கள் நதான் என்ற இளைஞரைப் பிடித்தார்கள். அவர் சின்ன வயதிலிருந்தே இதுபோன்ற விஷயங்களில் கில்லாடி என்பதால், தளம் பிரமாதமாக அமைந்துவிட்டது.

இணையதளத்துக்கு அவர்கள் சூட்டிய பெயர், airbedandbreakfast.com அதாவது, காற்றுமெத்தையும் காலை உணவும்.

கொஞ்சம் வேடிக்கையான பெயர்தான். ஆனால், அதற்கொரு சுவையான காரணம் உண்டு. முதன்முதலாக அவர்கள் தங்களுடைய வீட்டின் ஒரு பகுதியை மற்றவர்களுக்குத் தங்கக் கொடுத்தபோது, அங்கே ஒரு காற்றுமெத்தையைப் போட்டு அவர்களுக்குக் காலை உணவும் கொடுக்கத் தீர்மானித்தார்களல்லவா? அதுவே இணையதளத்தின் பெயராகவும் மாறிவிட்டது.

இணையதளம் சரி, இனி அதை இன்னும் மேம்படுத்தவேண்டும், பயனுள்ள வசதிகளைச் சேர்க்க வேண்டும், பலரிடம் கொண்டுசென்று பிரபலமாக்க வேண்டும், அதற்கெல்லாம் காசு வேண்டும்!

அவர்கள் மூவரிடமும் துடிப்பு இருந்த அளவுக்குத் துட்டு இல்லை! முதலீட்டுக்கு என்ன செய்வது?

2008ம் வருடம் அது, அமெரிக்காவில் குடியரசுத்தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்த நேரத்தில் இப்படியோர் இணையதளத்தைப் பிரபலப்படுத்தினால் நல்ல வரவேற்பு இருக்கும், பிரசாரக்கூட்டங்களுக்கு வருகிறவர்களையெல்லாம் வளைத்துப்போடலாம்.

ஆனால், அதற்குக் கொஞ்சம் ஆரம்ப முதலீடு தேவைப்படுமே. என்ன செய்யலாம்?

இந்தத் தேர்தலையே முதலீடாக வைத்து ஒரு சிறிய தொழில் செய்யத் தீர்மானித்தார்கள் ப்ரயனும் ஜோவும். அந்தத் தொழிலில் வரும் பணத்தை வைத்துத் தங்களுடைய இணையதளத்தைப் பிரபலப்படுத்த எண்ணினார்கள்.

இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த சிறிய தொழில், காலை உணவு விற்பது!

காலை உணவு என்றால் இட்லி, தோசை சுட்டுப் பிழைக்கவில்லை. அந்த ஊரில் கார்ன்ஃப்ளேக்ஸ்போன்ற சீரியல் உணவுகள்தானே பிரபலம்! அவற்றை நிறைய வாங்கி, அழகாக வடிவமைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகளில் அடைத்து விற்றார்கள்.

ஊரில் பல சீரியல்கள் இருக்குமே, இவர்களுடைய சீரியலை யார் வாங்குவார்கள்?

அங்கேதான் ப்ரயன், ஜோவின் குறும்பும் கலைத்திறனும் தெரிந்தது. அவர்கள் சீரியல் பெட்டிகளை உணவாக விற்கவில்லை, நகைச்சுவையுணர்வோடு வடிவமைக்கப்பட்ட கலைப்பொருள்களாகச் செய்து வெளியிட்டார்கள்.

அந்த அட்டைப்பெட்டிகளை அவர்கள் 2008 அமெரிக்கக் குடியரசுத்தலைவர் தேர்தலோடு கச்சிதமாகச் சம்பந்தப்படுத்தியிருந்தார்கள், அதில் போட்டியிட்ட பராக் ஒபாமா, ஜான் மெக்கெயின் இருவரின் பெயரிலும்தான் இந்த சீரியல்கள் வெளியாகின.

'ஒபாமா ஓ' என்ற முதல் பெட்டியில் ஒபாமாவின் ஓவியம், அவருடைய தேர்தல் பிரசார வாசகங்களான 'Hope', 'Change' போன்றவற்றைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருந்தார்கள். 'கேப்டன் மெக்கெயின்' என்ற இன்னொரு பெட்டியும் இதேபோல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்தப் பெட்டிகள் ஒவ்வொன்றும் நாற்பது டாலருக்கு விற்கப்பட்டன. அவ்வளவு காசு கொடுத்துப் பொதுமக்கள் வாங்கினார்களோ, கட்சிக்காரர்கள்தான் அள்ளிக்கொண்டுபோனார்களோ, ப்ரயன், ஜோ எதிர்பார்த்தபடி நூற்றுக்கணக்கான பெட்டிகள் விற்றன, அந்தப்பணம்தான் airbedandbreakfast.com இணையதளத்தைப் பிரபலப்படுத்துவதற்கான ஆரம்ப முதலீடு.

தொடக்கத்திலிருந்தே இவர்களுடைய இணையதளத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்துகொண்டுதானிருந்தார்கள். வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் காலியறைகளைப் பற்றிய விவரங்களை இதில் பதிவு செய்தார்கள், அந்த நகரங்களுக்கு வருகிறவர்கள் அவற்றைத் தேடித் தங்களுக்குப் பிடித்த இடங்களில் சென்று தங்கிக்கொண்டார்கள். கொஞ்சம்கொஞ்சமாக, வெளியூர்போனால் விடுதியில் இடம் தேடுவதற்குப்பதில் 'Airbnb'(airbedandbreakfastன் சுருக்கம்)யில் தேடுவது பலருக்குப் பழக்கமாகிப்போனது.

இதனை அடுத்தநிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்றால், பல புதிய நகரங்களில் இவ்வசதியை அறிமுகப்படுத்த வேண்டும், இணையதளத்தில் கூடுதல் சவுகர்யங்களைத் தரவேண்டும், அதற்கெல்லாம் இன்னும் அதிக முதலீடு தேவைப்பட்டது.

ஆகவே, ப்ரயனும் ஜோவும் பல பெரிய நிறுவனங்கள், முதலீட்டாளர்களைச் சந்தித்தார்கள்; Airbnb கனவை விளக்கினார்கள்.

பலர் அவர்களை நம்பவில்லை, பலர் அவர்களுடைய திட்டத்தை நம்பவில்லை, சிலர் மட்டுமே முதலீடு செய்தார்கள், அதைக்கொண்டு நிறுவனம் வளர்ந்தது.

அடுத்த சில ஆண்டுகளுக்குள், Airbnb ஓர் அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்தது. உலகெங்கும் நூற்றுக்கணக்கான நகரங்களில் ஆயிரக்கணக்கான அறைகளைப் பட்டியலிட்டு 'பட்ஜெட்' பிரியர்களையும், 'வித்தியாசமான பயணம் தேவை' என்று விரும்புகிறவர்களையும் கவர்ந்திழுத்தது. வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தங்களுடைய சேவையை இன்னும் மேம்படுத்தினார்கள்.

இந்தக் காலகட்டத்தில்தான் உலகெங்கும் மொபைல் தொழில்நுட்பம் பிரபலமானது. அதையும் Airbnb நன்கு பயன்படுத்திக்கொண்டது. ஒருகட்டத்தில், வழக்கமான விடுதிகளைவிட அதிக அறைகளைப் பதிவு செய்கிற சேவையாக வளர்ந்தது.

இதனால், பங்குச்சந்தை Airbnbயின் மதிப்பு அதிகரித்தது. பெரிய நட்சத்திர விடுதிகளுக்கெல்லாம் இல்லாத மரியாதை, இந்த இணையதளச்சேவைக்குக் கிடைத்தது இன்றைய இன்டர்நெட் உலகின் அதிசயம்தான்.

அதேசமயம், மனிதர்களுக்கு இருக்கும் தேவைகளைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்த்துவைக்கும்போது, நிச்சயம் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கைதான் Airbnbயின் அடிப்படை. அந்தத் தேவையையும் தீர்வையும் அடையாளம் கண்டவர்கள், வாடகை தரக் காசில்லாமல் தவிக்கும் நிலையிலிருந்து உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் வரை உயர்ந்தார்கள்.

(தொடரும்)

என். சொக்கன்

 

மேலும் படிக்க:

ஒற்றைக்கொம்பன்கள் - 3

ஒற்றைக்கொம்பன்கள் - 1

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles